Wednesday, 27 July 2016

நமக்கென்ன என்றால் நாளை என்பதே யாருக்கும் இல்லை!

தொலைக்காட்சியில் பழையப் படங்களை பார்க்கும் போது பெரும்பாலான படங்களில், கதாநாயகன் வில்லனை காவல்துறையில் ஒப்படைப்பதாக, அல்லது இறுதியில் காவல்துறை வந்து கைது செய்வதாகவே இருந்திருக்கிறது!

பின் ஏதோ ஒரு காலகட்டத்தில் வில்லனைக் கொன்றுவிட்டு சிறைக்குச் செல்பவன் கதாநாயகன் என்றாகி, தற்காலத்தில் கத்தியையும் தூப்பாக்கியையும் தூக்கி எளிதாய் யாரையும் கொல்பவனும், காவல்துறையின் அவசியமே இன்றி, அச்சமும் இன்றி யாரையும் கொன்று விட்டு, பிண்ணனி இசை முழங்க வீறு நடை போடுபவனும்தான் கதாநாயகன் என்றும் மாறியிருக்கிறது! 

திரைக்கதை உண்மையை ஒட்டியே எடுக்கப்படுகின்றன என்றால், காவல்துறை வெட்கப்பட வேண்டும்!

திரை என்பது கற்பனைக் கதைகளே என்றால், சுதந்திரத்தில் பங்காற்றிய ஒரு கலையை இத்தகைய இழிந்த மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் ஒரு கலையாக மாற்றியதற்கு திரைத்துறையினர் வெட்கப்பட வேண்டும்!

இது எதுவுமே உண்மையில்லை, தனி மனித வக்கிரத்தின் வடிகாலாக இருக்கும் கட்டற்ற காட்சியமைப்புகளை, வருங்கால சந்ததிகளின் மனநிலையை சிதைக்கும் படங்களை, காட்சிகளை நாம் வரவேற்று ரசித்துப் பார்க்கிறோம் என்றால், அதற்காக நாமும் வெட்கப்பட வேண்டும்!

கவர்ச்சியான விளம்பரங்களில் வரும் பொருட்களையெல்லாம், பகட்டுக்காவும், வேலை செய்ய சோம்பல் பட்டும், குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுத்து பின் மருத்துவர்களுக்கு செலவழிக்கும் பெற்றோர்களைப் போல, ஒவ்வொன்றிலும் குற்றவாளிகளை மிகைப்படுத்தி கதாநாயகன் தோற்றம் தரும் மீடியாக்களும், எழுத்தாளர்களும், தினந்தோறும் கட்டற்ற வன்முறைகளை தடுக்க முடியாமல் திணறும் காவல்துறையும், பணம் பதவி என்ற போதையில் இதையெல்லாம் ஆதரிக்கும் அரசியல்வாதிகளும், ஒரு வித மந்தமான நிலையில் இருக்கும் சமூகமும், வெளியில் எரியும் நெருப்பு வீட்டுக்குள் எரியும் போது பதட்டம் கொள்கிறது, அப்போது நீதியில்லை நியாயமில்லை என்று வேதனைப்படுகிறது!

சமூகம் என்பது சாக்கடையானால் சந்தனத்திலும் நாற்றமே எடுக்கும்!
நமக்கென்ன நமக்கென்ன என்றால் நாளை என்பதே யாருக்கும் இல்லை!

பெண்ணாய் நீ பிறக்கும்வரை!

உனக்கு சிறந்தவளாய்
என்னை மாற்றுகிறாய்
உன் சிறுமைகளை மட்டும்
உன் உரிமையென அடைகாக்கிறாய்
உன் கருத்துக்கினியவளாய்
என்னை செதுக்குகிறாய்
என் கருத்துகளை மட்டும்
கருக்கலைப்புச் செய்கிறாய்
உன் சுவைக்கு
என்னை விருந்தாக்குகிறாய்
என் உணர்வுகளை மட்டும்
சிதைத்து நகர்கிறாய்
உன் விருப்பமென நேசிக்கிறாய்
என் விருப்பங்களை மட்டும்
அலைகழித்து அழிக்கிறாய்
உன் சிரிப்பில்
என்னை மகிழச் சொல்கிறாய்
என் கண்ணீரை மட்டும்
நடிப்பென்று கேலிச் செய்கிறாய்
உன் நேரத்துக்கு
என்னை கடிகாரமாக்குகிறாய்
என் வாழ்க்கைநொடிகளை
கவனிக்க மறுக்கிறாய்
உனக்கு சிறந்தவளாய்
என்னை மாற்றுகிறாய்
உன் சிறுமைகளை மட்டும்
உன் உரிமையென
அடைகாக்கிறாய்
உன்னுடைய சுயத்தை
நீ எழுப்புவது
என்னுடைய கல்லறையில்
என்பதை மட்டும்
எப்போதும் நீ உணரமாட்டாய்
ஒரு பெண்ணாய்
நீ பிறக்கும்வரை!

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...