Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Monday, 20 February 2023

குருட்டுப்பூனைகள்

 

அவர்கள் வியாபாரம் செய்ய வந்தார்கள்
இவர்கள் முழுக்கவே வியாபாரிகள்
 
அவர்கள் நம் நாட்டைச் சுரண்டினார்கள்
இவர்களும் பொதுத்துறைகளை விற்று
தனியார் கடன்களை தள்ளுபடி செய்து
அதையே செய்துக்கொண்டிருக்கிறார்கள்
 
அவர்கள் பிரிவினைகளை வளர்த்தார்கள்
இவர்கள் பிரிவினைகளில்தான் செழிக்கிறார்கள்
அவர்கள் கொத்துக்கொத்தாக 
மக்களை கொன்றார்கள்
இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக
உதவாத திட்டங்களின் மூலம்
பிரிவினை அரசியல் மூலம் 
மக்களை கொல்கிறார்கள்
 
அவர்கள் வரலாற்றில் கொஞ்சமே கொஞ்சம்
அறிவுடன் செயல்பட்டார்கள்
இவர்கள் மறைகழண்ட அறிவோடு 
நிறைய ஆணவத்தோடு 
நாளும் வரலாற்றை திரிக்கிறார்கள்
 
அவர்களின் அரசி பெண்
பெண்ணுரிமை பேணினார்கள்
இவர்கள் தலைமை நடிகர்கள்
நாளும் வன்கொடுமைகளை மறைத்து
பாலியல் குற்றவாளிகளுக்கு துணை நிற்கிறார்கள்
 
அவர்கள் சுயநலத்துக்கேனும் நாட்டின்
கட்டமைப்பை பலப்படுத்தினார்கள்
இவர்கள் வியாபாரிகளின் சுயநலத்துக்காக
இருக்கும் வளங்களை 
அழித்துக்கொண்டிருக்கிறார்கள்
 
அவர்களிடமும்
இந்த நாட்டின் எட்டப்பன்கள் கட்சி மாறி
மதம் மாறி கொள்கை மாறி
பிறர் ரத்தத்தை உறிஞ்சினார்கள்
இவர்களிடமும் மாநிலத்துக்கு மாநிலம்
எட்டப்பன்கள் பதவிக்காக பணத்திற்காக
பல்லிளிக்கிறார்கள் 
 
சொந்த மண்ணின் மொழி, உரிமை
அழிக்கிறார்கள்
அவர்கள் மொத்தமாய் சுரண்டி 
ஓடிவிட்டார்கள்
இவர்கள் மொத்தமாய் சுருட்டிக்கொண்டு
நம்மை தேச விரோதி என்று விரட்டுகிறார்கள்
 
அவர்களும் கொள்ளையர்கள்தான்
இவர்களும் கொடூரர்கள்தான்
அவர்களிடமிருந்து விடுபட 200 ஆண்டுகளானது
இவர்களிடமிருந்து விடுபட 
சூடும் சுரணையும் மிகும் ஆண்டு வரவேண்டும்
 
எதை வேண்டுமானாலும் செய்
எனக்கு பதவியைக் கொடு என்று அடிபணிகிறார்கள்
சாதித்தலைமைகள் மதப்போர்வையில்
இவர்களை நம்பும் மக்களோ
உரிமைகளை பறிகொடுத்து ஒரு கேடுகெட்ட வரலாற்றை
வருங்காலத்திற்காக விட்டு வைக்கிறார்கள்
அவர்களும் இவர்களும் யாரென்று உலகுக்குத் தெரியும்
ஆனாலும் குருட்டுப்பூனைகளாய் மக்கள்
விடியல் வரும் காலமே உண்மையானச் சுதந்திரம்!

ஒரு_மொழி_அழிப்பின்_பின்னே_உள்ள_அரசியல்

 

வடக்கில் அவரவரின் தாய்மொழியை அழித்து, ஆங்கிலம் மறுத்து இந்தியை திணித்து, பிழைப்பைக்கெடுத்து, கல்வியை எட்டாக்கனியாக்கியதால், தெற்கில் பிழைப்புத்தேடி குவியுது கூட்டம், வடக்கில் சொன்ன பொய்களைப் போல் தெற்கிலும் சொல்ல இந்தி தேவைப்படுகிறது, ஏற்கனவே மூளை மழுங்கிய இந்திக்கூட்டம் இங்கே வாழ ஒரே ரேஷன் தேவைப்படுகிறது, தெற்கு மூளையை மழுங்கடிக்க ஆங்கில மறுப்பு தேவைப்படுகிறது, இருக்கும் கொஞ்ச நஞ்ச சூடு சுரணையை அழிக்க தாய்மொழி அழிப்பு தேவைப்படுகிறது, இத்தனையும் முடித்தப்பிறகு, “ஒன் நேஷன் வொய் எலெக்‌ஷன்?” (One nation why election?) என்று சட்டமும் இயற்றிக்கொள்ளலாம், மொத்தத்தில் ஆங்கிலேய அடிமைத்தனத்துக்கு பிறகு, ஒரு மாநில வியாபாரிகளின் ஏகாதிபத்தியம் நிலவுகிறது, அதை நிலைபெற வைக்கவே சில ஏஜேண்டுகள் பதவிகள் கொடுத்து அலங்கரிக்கப்படுகிறார்கள்

சில மருத்துவ சம்பவங்கள்

 

சில மருத்துவ சம்பவங்கள்;
 
ஒரு குழந்தைக்கு வயிற்றுப்போக்கு, ஒரு பெரிய குழந்தைகள் நல மருத்துவமனை, ஒரு மருத்துவர் குழந்தைக்கு மருந்துகள் பரிந்துரை செய்கிறார், குழந்தைக்கு வயிற்றுப்போக்கு நிற்கவில்லை, உடனே எம் ஆர் ஐ, ஸ்கேன், எக்ஸ் ரே, இன்ன பிற பரிசோதனைகள் நடக்கிறது, மேலும் ஒரு வாரம் கடக்க, இப்போது இரண்டு மருத்துவர்கள் சேர்ந்து கொள்கிறார்கள், குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து, அறுவை சிகிச்சை வரை முறைகள் பேசி, குழந்தையின் பெற்றவரை பயமுறுத்துகிறார்கள், பெற்றவர்களுக்கு சந்தேகம் வர, நண்பர்களின் பரிந்துரை பேரில் வேறு ஒரு குழந்தைகள் நல மருத்துவரை சந்திக்கிறார்கள், அவர் ஆய்வு கூட முடிவுகளை பார்த்து, அதில் என்ன பிரச்சனை என்று விளக்கி, ஒரு சாதாரண ஆன்டி பையோட்டிக் கொடுத்து குழந்தையின் பிரச்னையை இரண்டு நாட்களில் சரிசெய்கிறார், குழந்தை நலம்! 
 
மீண்டும் அதே மருத்துவமனை, எட்டு வயது பெண் குழந்தையின் பிறப்பு உறுப்பு சேர்ந்து கொள்கிறது, அடைப்பு ஏற்படுகிறது, மருத்துவர்கள் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார்கள், குழந்தையின் தந்தை, நண்பர்களின் பரிந்துரை பேரில் வேறு ஒரு மருத்துவரிடம், வேறு ஒரு மருத்துவமனையில் காண்பிக்கிறார், அந்த குழந்தை நல மருத்துவர், அந்த குழந்தையின் பிரச்னையை ஒரு சாதாரண மருந்தின் மூலமும், சில பல இயற்கை வழிமுறைகளின் மூலமும், நாலு நாட்களில் அறுவை சிகிச்சையின்றி சரி செய்கிறார். 
 
வேறு ஒரு பகுதியில் வேறு ஒரு தனியார் கிளினிக், ஒரு வயது குழந்தைக்கு சளி இருமல் என்று அம்மா அழைத்துச் செல்கிறார், மருத்துவர் குழந்தைக்கு ஆஸ்துமா, வாழ்க்கை முழுவதும் மருந்து சாப்பிடவேண்டும் என்று பரிந்துரை செய்கிறார், அம்மா வேறு ஒரு மருத்துவரிடம் செல்கிறார், மருத்துவர் இது ஒரு சாதாரண சளி காய்ச்சல் என்று மருந்து தந்து குழந்தையின் உடல்நிலையை சரிசெய்கிறார். 
 
வேறு ஒரு பகுதியில் வேறு ஒரு மருத்துவமனை, 12 வயது பெண் குழந்தை பள்ளியில் நடக்கும்போது வழுக்கி விழ, கையில் எலும்பு முறிவு. பள்ளி நிர்வாகம் உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள், புகழ் பெற்ற ஒரு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர், உடனடியாக குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்ல, குழந்தையின் தாய் குழந்தை எப்படியாவது சரியாக வேண்டும் என்ற மனநிலையில் நிற்க, தந்தை மருத்துவரிடம் நேரம் கேட்கிறார், வேறு ஒரு மருத்துவரை கலந்தாலோசிக்க, அவர், "சிறு குழந்தை, ஒரு எம் ஆர் ஐ எடுத்து விட்டு, ஒரு கட்டு போட்டால் சேர்ந்து விடும் பிறகு பிசியோதெரபி செய்து கொள்ளலாம்", என்கிறார், அதன்படியே குழந்தைக்கு அறுவை சிகிச்சையின்றி கை சரியாகிறது. 
 
வேறு ஒரு புகழ் பெற்ற எலும்பு சிகிச்சை நிபுணர், கால்வலி என்று ஒருவர் வர, இரண்டு மூட்டுகளிலும் தேய்மானம், உடனடியாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார், செய்யவில்லை என்றால் நீங்கள் நடக்கவே முடியாது என்கிறார், சிகிச்சைக்கு வந்தவர் பிசியோதெரபி செய்து பிரச்னையை சரி செய்து கொள்கிறார், எந்த அறுவை சிகிச்சையும் இன்றி சிறப்பாக எப்போதும் போல் இயங்குகிறார். 
 
வேறு ஒரு மருத்துவர், குழந்தைக்கு சளி காய்ச்சல் என்று அழைத்துச்செல்ல, குழந்தைக்கு என்ன வென்று சொல்லாமேலேயே, குழந்தைக்கு டி பி மருந்துகளை மாத கணக்கில் பரிந்துரை செய்கிறார், பிறகு சில மாதங்கள் குழந்தைக்கு அந்த மருந்தை கொடுக்கிறார்கள், குழந்தையின் உடல் நிறம் மாறி உபாதைகள் ஏற்படுகிறது, மருந்து தீர்ந்து, கடையை நாட, அவர் இது டி பி மருந்து என்கிறார், பிறகு வேறு ஒரு மருத்துவரை நாட, சாதாரண மருந்தில் சளி சரியாகிறது. 
 
வேறு ஒரு தனியார் மருத்துவமனை, ஒரு வயது குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை ஏற்பட, மூச்சு திணறி இருக்கிறது, இறந்த குழந்தையை சில மணி நேரம் உயிரோடு இருப்பதாக சொல்லி, ஒரு பெரிய தொகையை கட்டணமாக வசூலிக்கிறது. 
 
வேறு ஒரு எலும்பு சிகிச்சை மருத்துவமனை, கீழே விழுந்த ஒருவர் கைவலி என்று வர, இரண்டு லட்சம் கட்டணம் உடனடியாக செலுத்தி அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்படுகிறது, அவர் வேறு ஒரு அரசாங்க மருத்துவமனைக்கு செல்ல, அது ஒன்றும் இல்லை பிஸியோதெரபி போதும் என்று அறிவுறுத்தப்பட்டு சரி ஆகிறது. 
 
வேறு ஒரு தனியார் கிளினிக், சளி காய்ச்சல் என்று வரும் மக்களுக்கு, மருத்துவர் தவறாது நான்கு ஆன்டி பையோட்டிக் மருத்துவர் எப்போதும் பரிந்துரை செய்வார், இன்னொருவர் அதிக வீரியம் உள்ள மருந்தை பரிந்துரை செய்வார், கேள்வியின்றி மக்கள் மருந்தை விழுங்க நிரந்தர நோயாளிகளாக மாறுவர்.
 
இதெல்லாம் சில சம்பவங்கள் மட்டுமே, இன்னமும் பல பெற்றவர்களுக்கு மருத்துவர் சொல்வதே வேதம் என்ற மனநிலைதான், காய்ச்சல் என்பது வியாதி அல்ல, அது ஒரு அறிகுறி என்பதும், பரசிட்டமோல் மாத்திரையை மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்து விழுங்க கூடாது, காய்ச்சலின் மூல காரணியை கண்டறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்பது கூட தெரியவில்லை, தொடர்ந்து மாத்திரையை விழுங்க அது கல்லீரலை பாதிக்கும் என்பதை அறியவும் இல்லை அதை நவீன வியாபார மருத்துவர்கள் சொல்வதும் இல்லை, மூல காரணியை கண்டறிய ஒரு ரத்த பரிசோதனை செய்யும்போது, எல்லா சோதனையையும் செய்யவும் சொல்வதில்லை, டெங்குவுக்கு ஒரு தரம், பிறகு சிக்கன் குனியாவா, இல்லை மலேரியாவா, டைபாய்டு காய்ச்சலா இப்படி ஒவ்வொரு முறையும் பரிசோதனைகளை இழுக்கும் மருத்துவமனைகளும் உண்டு, எவ்வளவு நாள் இருக்கிறீர்களோ அவ்வளவு கட்டணம். அதுவும் காப்பீடு என்றால் ஒருவித கட்டணம், பணமாக தந்தால் ஒரு கட்டணம். 
 
இருவேறு மருத்துவர்கள் இருக்கிறார்கள், மருத்துவமனைகள் இருக்கின்றன, கட்டணம் அதிகம் என்றாலும் எப்படியாவது உயிரை காப்பாற்றி விட வேண்டும் என்ற மருத்துவமனைகள் இருக்கின்றன, உயிரை பற்றி கவலையில்லை, முடிந்தவரை கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடித்துவிட வேண்டும் என்று சில மருத்துவமனைகள் இருக்கின்றன, எனக்கும் குழந்தைகள் உண்டு, நியாய தர்மம் உண்டு என்று நோயாளிகளை சிரத்தையாய் காக்கும் மருத்துவர்கள் இருக்கிறார்கள், குடும்பம் வேறு தொழில் வேறு, நியாய தர்மம் இல்லை என்ற ரீதியில் செயல்படும் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.
 
சிறப்பான பல மருத்துவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இருக்கிறார்கள், சிறப்பான மருத்துவம் அரசு மருத்துவமனையிலும் உண்டு, மாபெரும் வித்தியாசம் என்ன வென்றால், செவிலியர்களின் பணி தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலும் சிறப்பாக இருக்கும், அரசு மருத்துவமனைகளில், ஆள் பற்றாக்குறை அல்லது வேறு காரணம் சொல்லி அந்த செவிலியர் பணிகளை நம் உடன் இருப்பவரே செய்ய வேண்டும், கழிவறை சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் மாபெரும் கேள்விக்குறி சில அரசு மருத்துவமனைகளில். ஆனால் மருத்துவர்களை நிச்சயம் நம்பலாம்.
மொத்தத்தில் நல்லவர்கள் நியாயமற்றவர்கள் எல்லா துறைகளிலும் உண்டு, மக்களுக்கு ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க வைக்க வைக்கும் கல்வி அவசியம், குறிப்பாக பெண் கல்வி மிக அவசியம். மருத்துவர்கள் சொல்வது எல்லாம் வேதம் இல்லை, மாறி வரும் சுற்றுப்புற சூழலில், மருத்துவம் பெரும் வியாபாரமாகி நிற்கிறது, இதில் நம்முடைய ஆரோக்கியத்தை, குழந்தைகளின் ஆரோக்கியத்தை நம்மை சார்ந்தவர்களின் ஆரோக்கியதாய் பேணுவது அவசியமாகிறது, வண்ணமயமான விளம்பரங்களில், உணவுகளை வண்ணமயாக மாற்றிக்கொள்வது கேடையே விளைவிக்கும். மருத்துவரை நாடினால் கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தி கொள்வதில் தவறில்லை, அறுவை சிகிச்சை என்று வரும்போது, நாட்பட்ட சிகிச்சை நீண்டுகொண்டே போனாலோ, வேறு ஒரு மருத்துவரை கலந்து ஆலோசிப்பது அவசியம்.
எல்லாத் துறையையும் போல இன்று மருத்துவத்துறையும் மாறி இருக்கிறது, நல்லது கேட்டது என்பதை நாமே அலசி ஆராய வேண்டும், நெருங்கிய உறவுகளின் சிகிச்சையில் உணர்வுகளைக் கொண்டு முடிவெடுப்பதை விட்டுவிட்டு (கொஞ்சம் சிரமம்தான்), கொஞ்சம் புத்தியை கொண்டு கேள்விகள் கேட்டு தெளிந்து முடிவெடுப்பது நல்லது!
வாழ்க வளமுடன்!
 

Thursday, 16 April 2020

காய்ச்சல் காலம்

அவ்வப்போது பல குழந்தைகளுக்கு கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் என்று மருத்துவ உதவிக்கேட்டு வரும்போது விசாரித்துவிட்டு இயன்ற அளவில் உதவி செய்வது வழக்கம், அந்தக்குழந்தைகளின் உடல்நலனை தொடர்ந்து விசாரிப்பதும் வழக்கம், அப்படி கல்லீரல் செயலிழந்து போன குழந்தை ஒன்றுக்கு சென்னை குழந்தைகள் நல மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்ததில், தொடர்ந்து பராசிட்டாமல் மாத்திரைகள் கொடுத்ததன் விளைவாக கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கண்டறிந்து சரி செய்திருக்கிறார்கள்!

பல மாதங்களுக்கு முன்பு “காய்ச்சல் காலம்” என்ற தலைப்பில் காய்ச்சலை பற்றியும், இதுபோன்று பராசிட்டாமல் மருந்து மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் உபயோகிப்பது, விளைவுகள் பற்றி நண்பர்கள் வட்டத்தில் இருக்கும் மருத்துவ நண்பரிடம் கலந்தாலோசித்து எழுதியிருந்தேன், அதிலிருந்து சுருக்கமாக சில கருத்துகள்:
1. காய்ச்சல் என்பது வியாதியல்ல, அது வேறு உடல் பாதிப்பின் அறிகுறியே!

2. காய்ச்சல் என்பது உடல் அதிகபட்ச வெப்பம் ஏற்படுத்தி, பாதிப்பில் இருந்து தன்னைத்தானே மீட்டெடுக்கும் முயற்சியும் கூட

3. காய்ச்சல் கண்டால் அதன் காரணம் அறிந்து அதாவது, சளி, வயிற்றுப்போக்கு வேறு ஏதேனும் இருந்தால் மருத்துவரை கலந்தாலோசித்து அதற்கான சிகிச்சையை செய்ய வேண்டும்

4. பெரியவர்களோ குழந்தைகளோ, மருத்துவரை கலந்தாலோசிக்காமல் உடல்வலி, காய்ச்சல் என்று தன் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மருந்துகளை எடுத்துக்கொள்வதையோ குழந்தைகளுக்கு தருவதையோ தவிர்க்க வேண்டும்!

5. பராசிட்டாமல் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது அதிக கவனம் தேவை, குறைந்தது நான்கு மணி நேர இடைவெளிக்கூட இல்லாமல் அடுத்தடுத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதோ, 2-3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து உபயோகிப்பதோ காலப்போக்கில் கல்லீரலை பதம் பார்க்கும்!

6. நிறைய நீர் பருகி, அவ்வப்போது நீரினால் உடல்துடைத்து விட்டு சூட்டைத்தணிப்பது அவசியம்!

7. காய்ச்சல் நேரத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளையே (ரசம், அரிசிக்கஞ்சி, இட்லி) எடுத்துக்கொள்ளுதல் நலம்!

8. முடிந்தவரை வெள்ளை சர்க்கரை, ரீபைண்ட் எண்ணெய் வகைகள், கடைகளில் கவர்களில் அடைத்து விற்கப்படும் தின்பண்டங்கள், பிராய்லர் இறைச்சி வகைகள், குளிர்பானங்கள், மைதா, மற்றும் மைதா நிறைந்த பிஸ்கட், கேக், பரோட்டா வகையறாக்களை எப்போதும் தவிர்த்து விடுதல் உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும்!

9. குழந்தைகள் வெளியே விளையாடினால் பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும், உங்களின் மேற்பார்வையில் வெளியே விளையாட விடுவதே நலம்

10.எந்நேரமும் கையில் மொபைல் போன்களை திணித்துவிட்டு,
தின்பண்டங்களை திணித்துவிட்டு, அல்லது டிவி முன் உட்கார வைத்துவிட்டு, பசித்தால் சுவிஃகி ஸோமட்டோ உபேரில் ஆர்டர் செய்துவிட்டு பசி போக்குவதெல்லாம் ஆரோக்கிய தலைமுறைக்கான அடையாளம் இல்லை!
வாழ்க நலமுடன்!

கண்காணிப்பும்_எதிர்வினையும்

#கண்காணிப்பும்_எதிர்வினையும்
1. 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி ஆட்டோ டிரைவர்கள் பாலியல் பலாத்காரம், கண்காணிப்பு கேமரா மூலம் இரண்டு டிரைவர்கள் கைது, மேலும் சிலரை காவல்துறை தேடுகிறது

2. எலியட்ஸ் பீச்சில் பிறந்தநாள் கொண்டாடி, நடைபாதையை அசுத்தமாக்கிய இளைஞர்களை கண்காணிப்புக் கேமரா மூலம் கண்டுபிடித்து சாஸ்திரி நகர் காவல்துறையை சேர்ந்த காவலர் ஒருவர் அவர்களை வைத்தே நடைபாதையை சுத்தப்படுத்தி நூதனமாக தண்டனை தந்திருக்கிறார்

3. சேலத்தில் பள்ளி வளாகத்தில் நடந்துக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை பின் நோக்கி வந்த பள்ளி வாகனம் கொன்றிருக்கிறது!

இந்த மூன்று செய்திகளிலும் முக்கியமான விஷயம் “கண்காணிப்புத்தான்”. காவல்துறை நகரெங்கும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி வருகிறது, ஆனால் போக்குவரத்து காவல்துறையின் இருப்பும் நடமாட்டமும் குறைந்து வருகிறது (தேர்தலுக்கு பல மாதங்கள் முன்பிருந்தே), கேமராக்களை நிறுவிவிட்டு, அதை தொடர்ந்து கண்காணித்து குற்றத்தை தடுக்காமல், வெறும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மட்டும் பயன்படுத்திய குறைபாட்டின் உதாரணம் தான் முதல் செய்தி, அதற்கு மேலும் சொல்ல வேண்டுமென்றால் நகரம் முழுக்க சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் நிகழ்கிறது, அதிலும் அரசுப்போக்குவரத்து வாகனங்களை காட்டிலும் அதிக விதிமீறல்களை உபேர், ஃசுவிங்கி, சோமேட்டோ போன்ற நிறுவன ஊழியர்கள் செய்கிறார்கள், “ப்ச் கேமராதானே?” அவ்வளவுதான் இந்தக் கேமராக்களின் மீதான கணிப்பு! ஆன்லைனில் கேமராக்களை கண்காணிக்க ஒரு குழுவை அமைத்துப் பார்த்திருந்தால் அந்தச் சிறுமியை குற்றம் நிகழும்முன்னே காப்பாற்றியிருக்கலாம்தானே?
இரண்டாவது செய்தியில், குப்பையைப்போட்டவரை மெனக்கெட்டு கண்காணிப்பு கேமரா மூலமும் குப்பையில் கிடந்த கேக் பெட்டியின் முகவரி வைத்து கண்டுபிடித்து, நூதனமாய் தண்டனை வழங்கி திருத்தியதில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டிருக்கிறது, மற்றவர்கள் அலட்சியமாய் கடக்கும் விஷயத்தை சிரத்தை எடுத்து சீர்செய்யும் இதுபோன்றவர்களால் தான் நாட்டில் இனி மாற்றம்
மெல்ல சாத்தியமாகும்!

மூன்றாவது செய்தியிலும், முக்கிய பங்கு கண்காணிப்புத்தான், பள்ளிக்கு குழந்தைகள் வரும்போது, ஒன்று பெற்றவர்கள் வகுப்புவரை சென்றுவிட வேண்டும் அல்லது அதை அனுமதிக்காத பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்கு பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும், பள்ளி வேன்களில், ஆட்டோக்களில் செல்லும் பிள்ளைகளின் பாதுகாப்பு பெரும்பாலும் கேள்விக்குறிதான், நம்முடைய நாட்டில் பாதுகாப்பு என்பது ரியாக்டிவ்(reactive) தான், எதிர்வினைதான், அதாவது எதுவும் நிகழ்ந்த பின்னரே வருத்தப்பட்டு செயலாற்றுவது, 250 கிலோ வெடிபொருட்களை கொண்டுவந்து இராணுவ வீரர்களை கொல்லும்வரை தூங்கிவிட்டு பின் எதிர்வினையாற்றுவதும் ஒரு நல்ல உதாரணம்! அங்கே தொடங்கி சாலையில் குழந்தைகளை கடத்துவது வரை நம் கண்காணிப்பு என்பது எதிர்வினையாற்ற மட்டுமே!

அதுதான் ஓட்டுப்போடுவதிலும் நிகழ்கிறது, ஓட்டுப்போடும் போது பணத்துக்காக கண்ணைமூடிக்கொண்டு அதைச் செய்துவிட்டு,பின் 5 வருடம் குத்துதே குடையுதே என்று அவதியுற்று மீண்டும் அதையே செய்கிறோம்!
எதிர்வினையோ இல்லை முன்கூட்டியே யோசித்து செயல்படுவதோ, எதையும் சிறப்புற செய்தால் மட்டுமே நம் எதிர்கால தலைமுறை வாழும்!

Wednesday, 15 April 2020

சுவாதியும்_ராஜலெட்சுமியும்

#சுவாதியும்_ராஜலெட்சுமியும்
சுவாதி கொலை வழக்கில் ஊரே பொங்கியது, நீதிமன்றம் தானாய் வழக்கை தொடர்ந்தது, பாஜக இந்துத்துவா அலைவரிசையில் கொதித்தது, நடிகர்கள், பிரபலங்கள், அறிஞர்கள் என்று எல்லோரும் கருத்துமுழக்கமிட்டார்கள், செய்தித்தாள்கள், மீடியாக்கள் ஓயாமல் கதறின, அப்போது என்ன நினைத்திருப்போம்? அடடா இந்தச் சமூகத்தில் மனிதம் சாகவில்லை, நீதி செத்துவிடவில்லை, எல்லா துறைகளிலும் மனிதர்கள் நியாயத்துக்காக முழக்கமிடுகிறார்கள், ஜனநாயகத்தின் முக்கிய தூணான பத்திரிக்கைகள் தீயாய் வேலை செய்கிறார்கள் என்றுதானே?
ஆனால், நந்தினி, அனிதா, ஹாசினி, ஹாசீபா, ராஜலெட்சுமி, இன்னமும் பெயர் தெரியாத பல குழந்தைகள், பொள்ளாச்சியின் 7 ஆண்டுகால வன்முறையில் தற்கொலை செய்து இறந்தப்பெண்கள், சமூகத்தால் கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் பெண்கள், வாய் பேச முடியாத இறந்துபோன அயனாவர குழந்தை, பெரிய பள்ளியில் பாலியல் வியாபாரத்திற்கு ஆளாக்கப்பட்ட மழலைகள், இப்போது இந்த ஆறு வயது சிறுமி, சமூகத்தின் அவமதிப்பு தொடங்கி, பாலியல் பசிக்கு வரை ஆசிட் வீசப்பட்ட, கொடூரமாய் சிதைக்கப்பட்ட இவர்களுக்கு என்ன நீதி கிடைத்தது? எத்தனை வழக்குகளில் குற்றவாளிகள் பிடிப்பட்டார்கள்? எத்தனையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது?

ஞாபகம் இருக்கிறதா சரவணபவனின் ராஜகோபால்? 2001 ஆண்டு தொடங்கி, வாய்தா, வழக்கு, மேல்முறையீடு என்று ஆண்டுகள் பல ஓடி இறுதியாக 2019 ல் உச்சநீதிமன்றம் ஆயுள்தண்டனையை உறுதி செய்திருக்கிறது, இதற்கிடையில் குற்றவாளி தான் செய்ய வேண்டியதை, வாழ வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்ட பெண் எத்தகைய மன உளைச்சலை, போராட்டங்களை எதிர்கொண்டிருக்கக்கூடும்?

பொள்ளாச்சி வழக்கில் சம்பந்தபட்ட அரசியல்வாதிகளின் பிள்ளைகளை இன்னமும் ஏன் கைது செய்ய முடியவில்லை? ஆறு வயது குழந்தையின் மரணத்திற்கு போராடக்கூட தேர்தல் காலம் அனுமதி மறுக்கிறது, ஆனால் பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு இங்கே அனுமதி மறுப்பில்லை, 22 நாளேயான பிறந்தக்குழந்தைத்தொடங்கி, 90 வயது முதியவள் வரை பாலியல் வன்புணர்ச்சியில் சிதைக்கப்படுகிறார்கள், நாய்குட்டிகள், கன்றுக்குட்டிகள் கூட தப்பவில்லை!

உயர்சாதியில் பிறந்த சுவாதி சிந்தியது மட்டும்தான் ரத்தமா, துடிதுடிக்க மழலைகள் சிதைக்கப்பட்டபோது வந்ததென்ன சாக்கடையா? பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாய் பேசினவன் பாதுகாப்போடு வலம் வந்தான், பொள்ளாச்சி வழக்கிலும் அடிப்பது போல ஒரு வீடியோவை பரப்பிவிட்டு “ஆகா சட்டம் கடுமையாய் நடந்துக்கொள்கிறது!” என்று மக்களை நம்ப வைத்து மறக்க வைத்தார்கள்!

இப்போது இந்த ஆறு வயது குழந்தையின் வலியும், தன்னைக்காப்பாற்ற யாரும் வரமாட்டார்களா என்ற கடைசி நிமிட தவிப்பும் இனி கானலாய் போகும், அடுத்து நமக்கு ஐபிஎல், தேர்தல் இருக்கிறது, மறந்துபோவோம்!
“இறந்துபோன பெண்கள், குழந்தைகளுக்கு என்ன நீதி?” என்று ஓட்டுக்கேட்க வரும் ஆட்சியாளர்களை கேளுங்கள்,

“நாங்களும் இந்துதானே என்ன நீதி?” என்று அந்த நாலு தொகுதிகளிலும் பாஜக வை கேளூங்கள்,

ஒரு சீட் கூட கொடுக்கவில்லை என்று வருத்தப்படும், எங்கள் இனப்பெண்களை போல் பெண்கள் முழுதாய் போர்த்திக்கொள்ள வேண்டும் என்று கலாச்சார பாடம் எடுத்த முஸ்லீம் லீக்கிடம் “குழந்தை ஆசிபா செய்த தவறென்ன?” என்று கேளுங்கள்,

தலித், பிற்படுத்த மக்கள் என்று அரசியல் செய்யும் கட்சிகளிடம் “ராஜலெட்சுமிக்கு என்ன நீதி?” என்று கேளூங்கள்,
“இறந்துபோன வன்னிய பெண்களுக்கு மாற்றம் முன்னேற்றம் ஏமாற்றத்திடம் என்ன நீதி?” என்று கேளூங்கள்,

கொங்கு நாட்டுச்சிங்கம் எங்கள் தங்கம் என்று நீங்கள் கொண்டாடும் எடப்பாடியிடம் “பொள்ளாச்சிப்பெண்களுக்கு என்ன நீதி?” என்று கேளுங்கள்,
ஆறு வயதுக்குழந்தையின் தாயோடு மாவட்ட ஆட்சியாளார் முன்பு உட்கார கூட வைக்கப்படாமல் நின்றுக்கொண்டிருந்த மகளிர் ஆணையத்திடம், “இப்படியே இன்னும் எத்தனை காலத்துக்கு பிள்ளைகளை பலி கொடுப்பது?” என்று கேளுங்கள்!

எதை கேட்டாலும், “பெண் பிள்ளைகளின் ஒழுக்கம், ஆடை, மயிரு மட்டை” என்று பேசினால் அவர்களை பார்த்து காறீத்துப்புங்கள், ஒருவேளை கேட்க தோன்றாமல், டிடிவி தினகரன் பரிசுப்பெட்டியைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால், கண்ணாடி முன் நின்று நீங்களே “கர்ர் தூ” துப்பிக்கொள்ளுங்கள்!

பிள்ளைகளை_வளர்க்கும்_ஆண்ட்ராய்டுகள்!

#பிள்ளைகளை_வளர்க்கும்_ஆண்ட்ராய்டுகள்!
சில வருடங்களுக்கு முன்பு இங்கே ஒரு பெண், ஒரு பதிவில், தன் நான்கு வயது பிள்ளையை விடுதியில் சேர்த்துவிட்டதாகவும், வீட்டில் சும்மா இருக்கிறேன், போர் அடிக்கிறது, என்ன செய்யலாம் என்று ஒரு கைவினைக்கான பதிவில் போட்டு இருந்தார், வீட்டில் சும்மா இருப்பவர்களுக்கு ஏன் குழந்தையை விடுதியில் சேர்க்க தோன்றுகிறது என்று கேட்டுவிட்டு வந்துவிட்டேன், குழந்தை வளர்ப்பு என்பது இப்போது ஸ்மார்ட் போன்களையும், வீடியோ கேம்களையும், நொறுக்குத்தீனிகளையும் கொடுத்துவிட்டால் போதும் என்ற நிலைக்கு வந்திருக்கிறது!

14 வயது வரை குழந்தைகளுக்கு காது மூக்கு தொண்டை வளர்ச்சியென்பது இந்தக் கைபேசியின் கதிர்வீச்சில் பாதிக்கும் என்று அறிக்கை இருக்கிறது, ஆனால் “தொல்லையில்லாமல்” இருந்தால் போதும் என்று கைபேசியில் எல்லா கேம்களையும் போட்டுவிட்டு ஆடு என்று விட்டுவிட்டு, பின் குழந்தை படிப்பில் சரியில்லை, உணவு சரியாக உண்பதில்லை என்ற குறை வேறு! பேப்பரில் வரையும் குழந்தைக்கும், ஐபேடில் வரையும் குழந்தைக்குமான சோதனையில் அதிக நிறைவாற்றலும், புத்திசாலித்தனமும் வண்ணங்களை தாள்களில் அல்லது கரும்பலகையில் வரையும் குழந்தைகளுக்கு அதிகம் என்று ஒரு ஆய்வில் நிரூபித்து இருக்கின்றனர்!

ஒரு குழந்தை சாப்பிடவில்லை என்றால், என் மகன் மகள் சாப்பிடவே மாட்டான், அவனுக்கு கணக்கு வராது, எந்நேரமும் வீடியோ கேம்ஸ்தான் என்று பிள்ளைகள் எதிரிலேயே குறையோ பெருமையோ பேசும் பெற்றோர்கள் அதிகம், அதுதான் அவர்களே சொல்லிவிட்டார்களே என்று பிள்ளைகளும் சரியாக சாப்பிடாதவர்களாக, கணக்கில் பலகீனமானவர்களாக, எப்போதும் வீடியோ கேம்களில் முழ்கியவர்களாக மாறிப்போகிறார்கள்! பதினெட்டு வயது கூட நிரம்பாத பிள்ளைகளுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம எதற்கு? குழ்ந்தையின் உணவில் கூட அக்கறை செலுத்த முடியாத பெற்றவர்கள், ஸ்மார்ட் போன்களை வாங்கிக்கொடுத்து எத்தகைய அன்பை பொழிகிறார்கள்?

ஆபாசமான வீடியோக்கள், கருத்துகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன, குழந்தை பருவம், விடலை, வளர் பருவம் என்று எல்லா காலக்கட்டத்திலும் பிள்ளைகள் இணையத்தில் செலவழித்தால், பிள்ளைகளை நல்வழிப்படுத்துவதில் பெற்றோர்களாகிய உங்களின் பங்கு என்ன?

இதன் விளைவுகள்தான், சிறுவன் ஒருவன் சக மாணவிக்கு தாலிக்கட்டியது, ப்ளூ வேல் கேம்கள் போன்ற ஆபத்தான விளையாட்டுகளில் உயிரை விட்டது, பள்ளியில் சக மாணவனை சாதிப்பெருமை பேசி அடிப்பது, கொல்வது பின் வருங்காலத்தில் குற்றவாளிகளாக ஆண்பிள்ளைகள் உருவெடுப்பதும், மனதளவிலும் உடலளவிலும் பெண் பிள்ளைகள் பலகீனமானவர்களாக மாறி, படிக்க வேண்டிய பருவத்தில் யாரையோ நம்பி ஏமாறுவதும் பின் தற்கொலை செய்து கொள்வதும் நிகழ்கிறது!

குழந்தைகள் நம் வாழ்வை அழகாக்க பிறந்தவர்கள், அவர்களுக்கு நாம் தரும் வெகுமதி நம் நேரமே, அவர்கள் ஆரோக்கியத்திலும், மனதின் உடலின் வளர்ச்சியிலும் பெற்றோர்களை தவிர வேறு யாரும் அக்கறை எடுத்துக்கொள்ள முடியாது, தனிமையில், ஸ்மார்ட் போன்களில் உழலும் பிள்ளைகள் பாவப்பட்ட ஜீவன்கள், பெற்றுவிட்டு விடுதியிலோ கண்காணாத காட்டில் உள்ள பள்ளியிலோ தள்ளுவதற்கும், டிவி, மொபைல் போன்கள், வீடியோ கேம்களிடமும் பிள்ளைகளை ஒப்படைப்பதற்கு பதிலாக காமத்தின் வடிகாலோடு தாம்பாத்தியத்தை நிறுத்திக்கொண்டு, சமூக குடும்ப வம்ச கணக்குக்காக பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை நிறுத்திக்கொள்ளலாமே?

தேர்தல்_வியாபாரமும்_அடியாட்கள்_வளர்க்கும்_தேசமும்!

#தேர்தல்_வியாபாரமும்_அடியாட்கள்_வளர்க்கும்_தேசமும்!
“2000 தருகிறோம்
6000 தருகிறோம்”
கட்சிகள் வண்ணமயமான அறிக்கைகள் விடுகிறார்கள், அடேங்கப்பா, மக்களின் வரிப்பணத்தை வாய்க்கூசாமல் ஏலம் விடுவதற்கு பதில், குறைந்த பட்சம் “நாடு முழுக்க கல்வியை இலவசமாக்குவோம்” என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்? செய்ய மாட்டார்கள், ஏனென்றால்;

1. ஓரே கல்வி அதுவும் இலவசம் என்றால் “வர்ணாசிரம” தர்மம் அதிர்ந்து விடும்

2. எல்லோரும் படித்துவிட்டால், அடிதடி செய்ய, தீக்குளித்துச்சாக அடியாட்கள், அடிமைகள் கிடைக்க மாட்டார்கள்

3. கல்விக்கொள்ளைக் கும்பல் அனுமதி தராது

4. அரசியல்வாதிகளின் வாரிசுகள் நடத்தும் தனியார் பள்ளிகள் கல்லூரிகள் அதிகம், வருமானம் பாதிக்கும்

5. “நான் ஏழைத்தாயின் மகன்” என்று மேடையில் விடும் கண்ணீர் நாடகங்களை நம்ப ஆட்கள் இல்லாமல் போய் விடுவார்கள்

6. பள்ளிகளில் கல்லூரிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கை தொடங்கி, புத்தக விற்பனைவரை, தாளாளர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அடிக்கும் கொள்ளைகள் நின்றுவிடும்

7. சாராயக்கடைகளில் வியாபாரம் குறைந்துவிடும்
இதெல்லாம் நடந்தால், கட்சி நடத்த பணம் இருக்காது, இதுநாள் வரைக்கும் பொதுச்சேவைக்காக (?!) பாடுபடும் அரசியல்வாதிகள் அரசியலை விட்டுவிட்டு வேறு தொழில் பார்க்க போய்விடுவார்கள்!
யோசித்துப்பாருங்கள், இன்றைய இந்தியாவில், லஞ்சம் லாவண்யம், நேர்மையற்ற அமைப்பு, தொடர் குற்றங்கள் என்று எத்தனையோ பலகீனங்களுக்கு காரணங்கள் பலவாக இருந்தாலும், 72 ஆண்டு காலங்கள் ஆகியும் இன்னமும் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு சாத்தியமாகவில்லை, கல்வியைக்கூட எட்டாக்கனியாக ஆக்கிவைப்பதே ஆட்சியாளர்களின் சாதனை!

சாதாரண ரவுடியாகவோ, வியாபாரியாகவோ வலம் வரும் மனிதர்கள் ஆட்சிக்கு வந்ததும் தலைநகரில் சொத்துகளை குவிக்கிறார்கள், உயர்ரக கார்களில் வலம் வருகிறார்கள், வாரிசுகள் உறவினர்கள் எல்லோரும் எளிதாக தொழிலதிபர்கள் ஆகிறார்கள், ஒருபக்கம் மக்களிடம் வரிகளாக சுரண்டி, மறுபக்கம் மலிவான இலவசங்களை வீசி, மக்களை மந்தையாடுகளாகவே வைத்திருக்கிறார்கள், இவர்களிடம் கல்விப்புரட்சியை எப்படி எதிர்ப்பார்க்க முடியும்? பாலியல் வன்கொடுமைகளின் புரட்சியை வேண்டுமென்றால் எதிர்ப்பார்க்கலாம்!

ஆண்சமூகமும்_ஆணுறுப்பு_குற்றங்களும்

ஆண்சமூகமும்_ஆணுறுப்பு_குற்றங்களும்

சோமலியாவின் நீதிபதி வன்கொடுமை செய்தவர்களின்
பிறப்புறுப்பை அறுத்தது போல்
நாச்சியார் படத்தில் ஆணுறுப்பை கதற கதற செயலிழக்க செய்தது போல்
நிர்பயா தொடங்கி, ராஜலட்சுமி, ஹாசினி, ஆசிபா, சுவாதி, பொள்ளாச்சியின் 7 ஆண்டுகால கொடுமைகள், மற்றும் இன்னமும் கிராமங்களில் பெருநகரங்களில் வளர்ந்து, இன்று கோவையில் 7 வயது குழந்தையின் கொலை வரை ஒருவருக்கும் நம் சட்டம் மரணத்தண்டனை தந்ததில்லை, எப்போதோ அக்காவாகிய சிறுமியை சீரழித்து அவளையும் உடன் தம்பியையும் கொன்ற வாகன ஓட்டுநனனை என்கவுண்டரில் கொன்றார்கள், பின்பு சுவாதியை கொன்றதாய் ஒரு ராம்குமாரை அவசரமாய் முடித்துவைத்தார்கள், மற்றவர்களுக்கு தையல் இயந்திரம் கொடுத்தார்கள், சாட்சிகள் இருக்கிறதா என்று ஒரு முதல்வரே எக்களமிட்டதும் வரலாற்றில் விழுந்த கறைகள்! 


அயனாவரம் பெண் குழந்தை வழக்கில் அந்தக்குழந்தையே இறந்துவிட்டது, ஆனால் குற்றவாளிகள் இன்னமும் வழக்கு வாய்தாவில்! மும்பையில் பள்ளி விட்டு வீடு திரும்பிய சிறுமியை, எதிர்வீட்டில் மனைவி பிரசவத்திற்கு சென்றுவிட, அந்த வீட்டில் இருந்தவன் அந்தச்சிறுமியை அவர்கள் வீட்டில் இரண்டு நாட்கள் அடைத்து வைத்து, எழுதக்கூசும் அளவுக்கு படாதபாடு படுத்தி பின் அந்தச் சிறுமியை குற்றுயிராக மீட்டிருக்கிறார்கள்!

முன்னமே எழுதியதுதான், ஆட்சியாளர்கள் தொடங்கி காவல்துறை, நீதித்துறை வரை பெரும்பான்மை ஆண்களே, இவர்கள் பெரும்பாலும் பெண்களுக்கு பாடமெடுப்பதற்கு காரணம் அவர்களுக்கும் தறுதலையாய் சில ஆண்பிள்ளைகள் இருக்கலாம் என்பதே, மனுநீதி சோழனை அல்ல நாம் மனிதர்களைக்கூட பார்ப்பது அரிதாகிவிட்டது இந்தியாவில்!

காட்டுமிராண்டிகளாய் இவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் புசிக்க, என் மயிருக்கு என்ன வந்தது, யாரோ யாரோ என்று இளித்துக்கொண்டு வரும் அரசியல்வாதிகளுக்கு நாம் ஓட்டுப்போடுவோம், இத்தனை குற்றங்களுக்கும் பிரதானமாய் விளங்கும் சாராய வியாபாரத்தை கச்சிதமாய் வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு நாள்தோறும் குடித்தழிந்து ஆதரவாய் இருப்போம், வேறென்ன போங்கள், ஆண்களை தறுதலையாகத்தான் வளர்ப்போம், சாராயக்கடைகள ஊக்குவிப்போம், வடக்கில் இருந்து குற்றவாளிகளை இறக்குமதி செய்வோம், உள்நாட்டில் பள்ளிகள் அழித்து குற்றவாளிகளை உருவாக்குவோம், போராட்டம் செய்தால் மட்டும் ஸ்னைப்பர் குண்டுகளை பரிசளிப்போம், பாலியல் குற்றவாளிகளை அரவணைப்போம், பிறகு கொஞ்சமும் வெட்கமில்லாமல் அத்தனை பற்களையும் காட்டிக்கொண்டு உணர்ச்சிப்பொங்க அரசியல் பேசுவோம்!

சில ரூபாய்களுக்கு ஓட்டை விற்கும் பதர்களுக்கு பெண் குழந்தைகளின் வேதனை புரியாது! இனி #பெண்கள் பிறக்காமல் இருக்கட்டும் இந்த ஆணாதிக்க தேசத்தில்! தூ!

சில_நேரங்களில்_சில_ஆண்கள்!


ஒரு பக்கம் #மகளிர் தின வாழ்த்துக்கள் போட்டுவிட்டு அடுத்த நிமிடமே, கோவை சரளா கமலின் கட்சியில் சேர்ந்ததை பாலியல் ரீதியான வன்மத்துடன் பதிவிடுகிறீர்கள், பல வகையில் மக்களை துன்புறுத்தி, திடீர் போர் நாடகம் நடத்தும் அரசுக்கு ஆதரவாகவும், ராபேல் ஊழலை மடைமாற்ற அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை மேடையேற்றும் மந்திரியை மாதிரிப் பெண் என்று புகழ்கிறீர்கள்!

உங்களின் பெண்ணியத்தான கருத்தெல்லாம் அந்தப்பெண்ணின் தொழில், பதவி, சாதி, உங்களின் தனிப்பட்ட குரோதம், நம்பிக்கைச் சார்ந்தே இருக்கிறது! கோவை சரளாவையோ ராதிகாவையோ முகம் தெரியாத உங்கள் பக்கத்து வீட்டு பாமாவையோ எளிதாக உங்களால் கேவலமாக விவரிக்க முடிகிறது, மனமுதிர்ச்சி இல்லாமல் மரியாதையற்றுப் பேசும் ஒரு கட்சித்தலைமையின் பெண்ணை உங்களால் பகடி செய்யமுடிகிறது, ஆனால் ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்றவரை, உயிரோடு இருந்தவரை உங்களால் ஒன்றும் சொல்ல முடிந்ததில்லை, தமிழிசையின் கருத்தில் மோதாமல் உருவத்தை கேலி செய்து மோதுவதும், நிர்மலா சீத்தாராமன்களின் அலட்சியமான பேச்சுகளை புறந்தள்ளி விட்டு சாதனை பெண்ணாக சித்திரம் வரைவதும் சாதிய சார்பு மனநிலையும், பெண்ணின் அழகை நிறத்தில் மட்டுமே காணும் மனநிலையும் அன்றி வேறென்ன?
இந்த மனநிலைதான் “நான் ஹை ஆங்கர், ஐய்யாங்கார்” என்று ஒருவரை பேச வைத்தது, அவரையும் கூட மீடுவினால் சொந்தச்சமூகமே பந்தாடுகிறது, சாதிக்கூட பெண்களுக்குச் சாதகமானது இல்லை என்பதுதான் உண்மை!

தன் உரிமை தன் உறவு என்று தன் உறவின் நிலையை மாற்றிக்கொள்ளும் நயன்தாராவை புகழும் உங்களுக்கு, குடிகார அல்லது கொடுமைக்கார கணவனிடம் தப்பித்துச்செல்ல நினைக்கும் ஏதோ ஒரு பெண்ணை இகழாமல் இருக்க முடிந்ததில்லை, நிச்சயம் அவள் உடல் அரிப்பிற்காகவே ஓடினாள் என்று உடன் இருந்து பார்த்ததைப் போன்று பகடி செய்து பரவசம் அடைகிறீர்கள்!

தன்னைவிட வயதில் அதிகமானவனை மணந்துக்கொள்ளும் பெண்களை ஒருமாதிரியாகவும், குறைந்த வயதுடைய ஆண்களை மணந்துக்கொள்ளும் பெண்களை வேறொரு மாதிரியாகவும் பிம்பப்படுத்திக்கொள்கிறீர்கள்!
உங்களின் பெண் பற்றிய பிம்பமெல்லாம், உங்கள் அம்மாவை அப்பா நடத்தும் விதம் கொண்டும், பெண் மீதான உங்கள் நண்பர்களின் வர்ணனையைக்கொண்டும், கிராமத்துப்பெண் என்றால் முழுதாய் சேலையைச்சுற்றிக்கொண்டு, மாமா என்று ஒருவனையே சுற்றிவருபவள் என்றும், நகரத்துப்பெண்ணென்றால் தொடைத்தெரிய கால் சராயணிந்து, கையில் மதுக்கோப்பையுடனும் கண்ணில் வழியும் காமத்துடன் அலைபவளென்றும் கற்றுக்கொடுத்திருக்கும் சில சினிமாக்களின் பாடம் கொண்டும், கொலை, கொள்ளை, விபச்சாரம், கஞ்சா என்று எந்த வழக்கென்றாலும் அதில் பெண்ணை வர்ணனைச்செய்யும் பத்திரிக்கைகளின் கேடுக்கெட்ட நடைமுறைக்கொண்டும், உளவியல் ரீதியாக ஏதோ ஒரு பெண்ணிடம்
தோற்ற உங்கள் மனநிலைக்கொண்டும் அமைந்திருக்கிறது!

இந்தப்பிம்பத்தில்தான் இந்தியச்சமூகத்தின் பெரும்பாலான பழைய தலைமுறைகளும், இன்றைய புதுத்தலைமுறைகளும் வளர்ந்து வருகிறது, எனக்குத்தெரிந்தவள், என்னை மதிப்பவள், என்னை அணுசரிப்பவள், எனக்கு அடங்கியவள், என் சமூகத்தைச்சார்ந்தவள், என் அரசியலை ஆதரிப்பவள், என்னை ஆதரிப்பவள், என் உறவில் இருப்பவள், என் உறவுக்கு நட்பாக இருப்பவள், எதிர்த்துப்பேசாதவள், அரசியல் பேசாதவள், இப்படிப்பட்டவளே நல்லவள், இந்த வட்டத்திற்கு வெளியே இருப்பவள் கெட்டவள் என்று பார்த்துப்பழகிய சிந்தனைதான், ஒரு பக்கம் ஒரு பெண்ணுக்கு வாழ்த்துச்சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் வேறொருத்தியின் கருத்தியலுக்கும் கூட தனிப்பட்ட முறையில் கழிசடை வசனம் பேசி தனிமனித தாக்குதல் நடத்துகிறது!

காதலுக்கும் கல்யாணத்துக்கும் சாதியும் செல்வமும் பார்த்துவிட்டு, எந்தப்பகைக்கும் குரோதத்துக்கும் தன் காமத்தையே தீர்வாக வயது பேதமின்றி, சாதியின்றி மதமின்றி செல்வநிலை பேதமின்றி பெண்ணிடம் பாய்வதுதான் காட்டான்களின் போதிக்கப்பட்ட வீரம்! இந்தக்காட்டான்கள் ஒருபக்கம் வாழ்த்துச்சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம், கொண்டாடியது போதுமென்று பெண்ணை ரசம் வைத்து பழகச்சொல்கிறார்கள்!

அழகு, செல்வம், சாதி, மதம், பதவி, தொழில் எதுவும் பெண்ணுக்கு பாதுகாப்பாகவோ, அணிகலன்களாகவோ ஆகிவிடாது, தன்னை உணர்தலும், தன் சக்தி உணர்தலுமே பெண்ணுக்கான சிறந்த அரண், அன்றைய தினமே மகளிர் தினம், அதுவரை சந்தர்ப்பவாத வாழ்த்துகளை இனம் கண்டு கடந்துச்செல்வதில் இந்தப்பெண் சமூகம் வெற்றியடையட்டும்! முடிந்தால் அதுவரை கொதிக்கும் ரசத்தை எடுத்து காட்டான்களின் முகத்தில் ஊற்றட்டும்!

தேர்தல்_என்பது_எதுவரை?!

அந்தப்பெண் மாலையில் வேலை முடித்து தன் இருசக்கர வாகனத்தில் அண்ணா மேம்பாலத்தின் மேலேறி, அமெரிக்க தூதரகத்தை பார்த்தப்படி நிற்கும் காவலர்களை தாண்டி நுங்கம்பாக்கம் செல்ல இடதுபுறம் திரும்புகிறார், பின்னேயே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர் தோள்பட்டையைப் பற்றி இழுத்து கழுத்தில் இருந்த 8 பவுன் தாலியையும், இன்னுமொரு சங்கிலியையும் பறித்துச்செல்கின்றனர், காவல்துறை அமெரிக்க தூதரகத்தை பார்த்தப்படியே நிற்கிறது, காட்சி மாறி காவல்துறை புகார், நீதிமன்றம் என்று நகர்கிறது, தோழியின் செயினை வாங்கி, திருடனைப் பிடித்து கிடைத்துவிட்டதாக நீதிமன்றத்தில் காட்டி, வழக்கை முடித்து, காவல்துறை வேறு ஒரு வழக்கில் மீட்டெடுத்தாகச் சொல்லி 4 பவுன் கல் வைத்த சிறு சிறு நகைகளைக் கொடுத்து வழக்கு முடிந்ததாக ஆவணப்படுத்துகிறார்கள், இதில். வழக்கின் செலவாக, தவிர்க்க முடியாத “லஞ்ச” வகையில் 50 ஆயிரத்துக்கும் மேல் செலவாக, கிட்டதட்ட 11 பவுன் இழப்பிற்கு கிடைத்தது 3.5 பவுன் நகை, அதுவும் 50 ஆயிரம் இழப்பு, கழுத்தில் காயம், மனவுலைச்சல்!
இன்னொரு பக்கம் பிரபல ஐடி அலுவலங்கள் நிறைந்த சாலை, பட்டப்பகலில் பைக்கில் இருவர் நடத்திக்கொண்டிருந்த பெண்ணிடம் கைபேசியை பறித்துச்செல்கின்றனர், சிசிடிவி கேமரா இருந்தும் 20 ஆயிர பேரத்தில் வழக்குப்பதிய காவல்துறை மறுக்கிறது, உயர்மட்ட கவனத்துக்கு எடுத்துச்செல்ல, அது மறுபடியும் லஞ்சம் கேட்ட அதிகாரிக்கே விசாரணைக்கு அனுப்பப்படுகிறது!
இன்னொரு புறம், அரசாங்க அதிகாரிகளால் சான்றிதழ் தரப்பட்ட கட்டிடம் இடிந்து விழுகிறது, கடன் வாங்கியர்கள் தாள முடியாத சுமையில் சிக்குகிறார்கள், அதிகாரிகள் வழக்கம் போல உலா வருகிறார்கள், இப்படி ஒவ்வொரு துறையிலும் நடக்கும் நிகழ்வுகள் அத்தனையும் கற்பனை என்றே வைத்துக்கொள்ளுங்கள், நாள்தோறும் இந்தக்கற்பனை காட்சிகள் நிதர்சனத்தில் தமிழ்நாடு முழுக்க பரவலாக, குறிப்பாக சென்னையில் அதிகமாக நிகழ்கிறதா இல்லையா? எல்லா வழக்குகளும் தீர்க்கப்பட்டால் குற்றங்கள் நாள்தோறும் நிகழ்கிறதே ஏன்?

ஊழல்களை விட்டுவிடுவோம், வழிப்பறி? ஒவ்வொரு வழிப்பறியிலும் திருடன் பிடிபட்டால் திருட்டு ஏன் தொடர்கிறது? திருடினால் பிடிபடுவோம் என்று தெரிந்தும் ஏன் திருடுகிறார்கள்? உண்மையில் திருடர்கள் பெரும்பாலும் பிடிபடுவதேயில்லை, மாட்டிக்கொண்டால் ஒரு திருடன் பல வழக்கு, மாட்டாத வரை (சம்பந்தபட்டவர்களின் கருணை இருக்கும்வரை) பல திருட்டுகள், அதே திருடர்கள் இல்லையா?

சாதாரண வழிப்பறிக்கொள்ளையின் பின்னே இருக்கும் அரசியலே மோசமாக கட்டுகட்டான பணத்துடன் மறைந்த கண்டெயினர் லாரிகள் வரை தொடர்ந்தது! இப்படி சிறிதும் பெரிதுமாய் எத்தனை நடந்தாலும் மக்கள் எதையும் கண்டுக்கொள்ள மாட்டார்கள் என்ற துணிச்சல்தானே வளர்ந்து இன்று எத்தனை எளிதாக இராணுவத்தின் இழப்பை தேர்தல் களமாக மாற்றிக்கொண்டிருக்கிறது?

ஒவ்வொரு அடியிலும் லஞ்சமும் ஊழலும் கரையானைப்போல தேசத்தை அரித்துக்கொண்டிருக்கும்போது, நம் வீட்டின் கதவுகள் பத்திரமாய் இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்! ஒரு பன்முகம் கொண்ட தேசத்தில் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், காட்டை அழித்து சிலை எழுப்பி, ஒரு மதத்தை வியாபார பொருளாக்கி மதக்கூட்டமென்ற பெயரில் நடத்தும் சாமியாரின் நிகழ்ச்சிகளுக்குச்செல்கின்றனர், இதில் மக்கள் யாரிடம் போய் நீதி கேட்பார்கள்?
தேர்தல் வைத்து, ஆட்சி அதிகாரம் கொடுத்தும், நாட்டை பொதுநல வழக்குகளே காப்பாற்றுகிறது, பொதுநல வழக்குகளில் தீர்ப்பாகும் போது, மக்களின் நலனில் மெத்தனமாய் இருந்த அதிகாரிகள் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் தானே? யாரைப்பற்றி புகார் சொல்கிறோமோ அவர்களிடமே மீண்டும் செல்லவேண்டும், யாரை ஊழல் செய்தவர்கள் என்று ஒருமுறை ஒதுக்குகிறோமோ அவரையே பித்தனுக்கு எத்தன் மேல் என்று அடுத்தமுறை வாக்களித்து அரியணையில் அமர வைக்கிறோம், “கழுதைக்கெட்டால் குட்டிச்சுவர்” என்ற ரீதியில் மீண்டும் மீண்டும் அவர்களே, இதில். அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை ஊழலில் திளைக்கும் அதிகார வரம்பு அப்படியே இருக்கும், இதில் மாற்றம் என்பது எப்படி வரும், ஏமாற்றத்தைத் தவிர?

கல்வி தொடங்கி சுடுகாடு வரை ஊழல், வழிப்பறி திருட்டுத்தொடங்கி அரசியல் வரை திருடர்கள், இதில் இப்போதைய தேர்தல் மாற்றம் கூட யார் குறைவாய் ஊழல் செய்வார்கள் என்பதில்தானே தவிர நேர்மையான ஒரு ஆட்சிக்காக அல்ல!

எத்தனைக் கொள்ளையடித்தாலும் அதை பரிபூரணமாய் அனுபவித்து சாகும்போதும் அதை எடுத்துச்சென்றவர் யாருமில்லை, எத்தனைதான் அன்பைப்பற்றி பேசினாலும், பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு செத்தப்பிறகு ஊர்மெச்ச படையலிடும் பிள்ளைகளைப்போல, இயற்கை, “மரணம் நிதர்சனம், அதுவும் உங்களைப்போன்றவர்களுக்கு (ஊழல்வாதிகளுக்கு) கொடூர மரணம் நிச்சயம்” என்று எத்தனை முறை நிரூபித்தாலும் கொள்ளைகள் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கின்றன!
ஏதோ ஒரு தலைமுறை மாற்றத்தை முன்னெடுக்கும் என்று நம்புவோம், அதுவரை வரும் தேர்தலில் மாற்றமா ஏமாற்றமா என்பதை ஆட்சி மாற்றமே உணர்த்தும்!
#தேர்தல்_என்பது_எதுவரை?!

கொலைக்களமாகும் குடும்பங்களும் நலிவுறும்_சமூகமும்!

பிடிக்கவில்லையென்றால் “விலகிக்கொள்ளுதலை” விட, ஒரேடியாக “விலக்கிக்கொல்வது” இந்திய ஆண்களுக்கு எளிதாக இருக்கிறது, குடிப்பது, புகைப்பது, வேறு மணம் செய்துக்கொள்வது எல்லாம் ஆண்களுக்கே உரித்தான “உரிமை” என்ற மனப்பான்மை இருக்கும் சமூகத்துக்கு, தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் மனைவிக்கு பிடிக்கவில்லை என்றாலும் எப்போதும் “நடத்தை” என்ற ஒழுக்கவிதியை பெண்ணுக்கு மட்டும் வகுத்துவிட்டு, கொன்றுபோடும் எல்லா காரணங்களையும் “பெண்ணின் நடத்தை” என்ற ஒன்றில் ஒளித்துவிடும் திறமையும், பத்திரிக்கைகள் தொடங்கி, சாமான்ய மனிதர்கள் வரை எல்லா மட்டத்திலும் இருக்கிறது, அபிராமியை கழுவி ஊற்றிய பத்திரிக்கைகள், இப்போது சந்தியாவின் சைக்கோ கணவனுக்கும் சந்தியாவையே குற்றவாளியாக்குகிறது! ஆண்களின் “குடிப்பழக்கத்தை” எவ்வளவு எளிதாக இந்தச்சமூகம் புறந்தள்ளுமோ அப்படித்தான் “நடத்தையின்” பேரில் நடக்கும் கொலைகளும் என்பதைத்தான் கொலையும் செய்துவிட்டு சிரிக்கும் பாலகிருஷ்ணனின் “#நடத்தை” காட்டுகிறது!
தவறு பெண் செய்தாலும் ஆண் செய்தாலும், கொல்லப்படுவது ஆண் என்றாலும் பெண் என்றாலும், எப்போதும் “பெண்ணே” குற்றவாளி, இந்தக்கொடூர மனநிலை சமூகத்தில் எப்போதும் தனித்துவிடப்படும் குழந்தைகளின் நிலைதான் பரிதாபம்!

பெண்ணுக்கு கல்வி எதற்கென்று 15 வயது தொடங்கி 20 க்குள் திருமணம், அதற்குள் குழந்தை, குடி, மனச்சிதைவு, கல்வியறிவின்மை, குழந்தை வளர்ப்பு பற்றிய அறிவின்மை, பொருளாதாரச்சிக்கல், புரிதல் இன்மை, என்று எத்தனையோ சிக்கல்களை எல்லாம் “பொறுத்து” “கடந்துதான்” பல பெண்களும், சில ஆண்களும், குழந்தைகளுக்காகவோ, தனித்து நிற்க முடியா இயலாமையினாலோ, குடும்ப நிர்பந்தத்தினாலோ குடும்பங்கள் உடையாமல் காத்து நிற்கின்றனர், அல்லது பிரிகின்றனர், இந்த இரண்டை விடவும் ஆபத்தானது இந்தக்கொலைகள்; இரண்டுக்கும் வழியில்லாமல் கொலையை தேர்ந்தெடுப்பது வளர்ப்பின், சூழ்நிலையின் சிக்கலே!
என்று இந்தச்சமூகம் ஆண் பெண் பேதமில்லாமல், மக்களின் கல்வியையும், மனநிலையும், பாதுகாப்பையும், சமத்துவத்தையும் பற்றிக்கவலைப்படுமோ அப்போதுதான் சிறிதளவேனும் மாற்றம் வரும்!
#கொலைக்களமாகும்_குடும்பங்களும்_நலிவுறும்_சமூகமும்!

Thursday, 2 April 2020

பாகிஸ்தானை ஏன் எதிர்க்க_வேண்டும்?

பாகிஸ்தானை ஏன் எதிர்க்க வேண்டும்?
--------------------------------------------------------------


ஜின்னாவின் பிரிவினைக்குப்பிறகு, இந்துக்கள் கொல்லப்பட்டார்கள், தீவிரவாதிகளை வளர்த்தெடுத்தார்கள், காஷ்மீரை பலவந்தமாக ஆக்கிரமித்தார்கள், அந்த தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தி பல நூறு பேரை கொன்றுக்குவித்தார்கள், நாசகார சக்திகள், சோ எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகள்! நிற்க!
கொஞ்சம் வரலாற்றின் உள்ளே சென்று சில முக்கிய விஷயங்களை பார்ப்போம், இங்கிலாந்தின் பிரித்தாளும் சூழ்ச்சியில் உருவானது இந்த பிரிவினை, இதில் ஜின்னா மட்டுமல்ல காந்தியின் பங்கும் இருக்கிறது, உண்மையில் முதன்முதலில் ஒன்றுபட்ட இந்தியாவில் இந்து முஸ்லிம் பேதமில்லாமல் லட்சக்கணக்கில் (ஜாலியன் வாலாபாக் உதாரணம்) கொன்று குவித்தது இங்கிலாந்து, உலகப்போரில் இந்தியா இவ்கிலாந்துக்கு துணையாக கூட்டணி சேர்ந்து அதே கொன்றுக்குவித்தலை செய்தது, ஆனால் கோடிக்கணக்கில் நம் மூதாதையர்களை இரக்கமின்றிக் கொன்று நம் வளங்களை கொள்ளையடித்து இன்றும் மிச்சமிருக்கும் பராம்பரிய மேல்தட்டு குணத்துடன் “ப்ளடி இந்தியன்” என்று நடத்தும் இங்கிலாந்தில் இந்த பெரும்பாலான டேஷ் பக்தர்களின் பிள்ளைகள் கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டியில் படித்துக்கொண்டிருப்பார்கள்!
உலகப்போரின் சமயத்தில் இருந்து இன்றுவரை இந்தியாவுக்கு நண்பனாய் ரஷ்யா நிற்க, அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பனிப்போரில், இந்தியாவுக்கு நிகராக ஒரு வலிமையை வளர்க்க, அமெரிக்க தேர்ந்தெடுத்த நாடுதான் பாகிஸ்தான், தீவிரவாதம் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு அமெரிக்காவும் ஒரு காரணம் என்பதை அவர்களே மறுக்கமாட்டார்கள், இந்த அமெரிக்காவின் சிலிக்கான் சிட்டியில் இந்த தேஷ் பக்தர்களின் பிள்ளைகள், தலைமுறைகள் பல துறைகளில் மத்திய மட்டத்தில் இருந்து மேல்பட்ட பதவிகள் வரை அமர்ந்திருக்கும், அவர்களில் பெரும்பாலானோர் சொல்லும் வார்த்தை, “ச்சே இந்தியாவா, நோ வே!” தேஷ் பக்தர்களின் வாரிசுகளைப்பற்றி மட்டும் சொல்கிறேன், மற்றவர்களை அல்ல!

அடுத்து சீனா, சீனப்பட்டாசுகள் தொடர்ந்து சீப்பு வரை வாங்குவது தேசத்துரோகம் என்று முழங்கும் பக்தர்களின் வாரிசுகள் இங்கேயும் உண்டு என்பது வேறு விஷயம், ஆனால் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி சிலையை, தேசப்பக்தர்களின் தலைவர் “மேக் இன் இந்தியா” என்று முழங்கிவிட்டு, 3000 கோடியை மட்டும் சீனர்களுக்கு காண்ட்ராக்ட் கொடுத்து முடித்தார், வல்லபாய் பட்டேல் ஆன்மா கூட இதை ஏற்றுக்கொண்டிருக்காது! இறக்குமதியாகும் பல்வேறு பொருட்கள் சீனாவில் தான் உற்பத்தியாகிறது! அடுத்து பசு வதை என்ற பெயரில் உள்நாட்டில் மனிதர்களை கொன்றுக்குவித்து, சீனாவுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்துக்கு வந்தது, தெய்வமென கும்பிட்டுவிட்டு அதன் இறைச்சியை பதப்படுத்திய உணவுகளாக விற்பதும், காலணிகளாக மாற்றி ஏற்றுமதி செய்வதிலும் தேஷ் பக்தர்கள் உண்டு!

இதெல்லாம் சில உதாரணங்களே, வரலாற்றின் போர் பக்கங்களையும், ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு நாட்டிலும் நிகழும் அரசியலின் மோசமான சதிராட்டங்களை எழுதினால் இந்தக்கட்டுரை நீண்டுவிடும், ஆனால் மற்ற நாடுகளுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம் உண்டு, அவர்கள் அரசியலையும் தேசத்தையும் குழப்பிக்கொள்வதில்லை, நாம் ஐந்து வருடமே நாட்டுக்கு ஊழியம் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரை, அவரின் மோசமான திட்டங்களை விமர்சனம் செய்தால் அது தேச விரோதம் என்று கூறுகிறோம், அவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று கொதிக்கிறோம், உண்மையில் நாட்டை நேசிக்கும் ஒருவன்தானே தன் நாடு மோசமான நிலைக்கு போவதைக்கண்டுத்துடிப்பான், பதறுவான், அந்த பதற்றம் தானே “போர் வேண்டாம்” என்ற வேண்டுதலோடு, தேர்தலுக்காக எந்த நிலைக்கும் செல்லும் கீழ்த்தரமான அரசியலைச்சாடுகிறது?
அழகான இந்த நாடு, தேர்தல் சதிராட்டத்துக்காக சில முதலாளிகளின் லாபத்துக்காக யுத்த பூமியாவதை எந்த உண்மையான குடிமகனும் விரும்பமாட்டான், இராணுவத்தில் இருப்பவர்களின் உயிர்களும் மனித உயிர்கள்தான், அவர்கள் நாட்டைக்காப்பதற்காகவும், நீங்கள் மிக்சர் தின்றுக்கொண்டு, “போர் என்றால்...ப்ளா ப்ளா” என்று எழுதும் சுதந்திரத்திற்காகவும் இரவு பகல் பாராமல் உண்மையான தன் தேசப்பற்றை எல்லையில் உயிரைக்கொடுத்து நிரூபித்து இருக்கிறார்கள், உங்கள் மதவாத கட்சிகள் இந்து மதத்தின் வேறு எந்த மதத்தின் பிரதிநிதிகள் அல்ல, இந்தியாவைத் துன்பப்படுத்திய பல நாடுகளில் உங்கள் வளம் கொழிக்க உறவுக்கொண்டு, அடுத்தவரின் தேசப்பற்றைப் பேச உங்களுக்கு எந்தத்தகுதியும் இல்லை!

இந்தியா எல்லா வளமும் நிறைந்த ஒரு பன்முக கலாச்சார நாடு, பாகிஸ்தான் நம் அண்டை நாடு, தீவிரவாதத்தை ஒழித்து அவர்களும் நிம்மதியான வாழ்க்கையைப்பெறட்டும்!
வாழ்க பாரதம்!

Friday, 20 December 2019

மந்தையாட்டு_வரலாறும்_தேர்தலும்

#மந்தையாட்டு_வரலாறும்_தேர்தலும்

வரலாற்றில் இறந்த இராணுவ வீரர்களின் படங்களை வைத்துக்கொண்டு, “எனக்கு ஓட்டுப்போடுங்கள்” என்று தேசத்தின் மீதான பற்றை வாக்குகளாக எந்தப்பிரதமரும் சேகரித்துக்கொண்டிருந்திருக்க மாட்டார்கள், அத்தனைப் பாதுகாப்பு நிறைந்தப்பகுதியில் மொத்தமாய் இராணுவ வாகனங்கள் வர, சர்வ சாதரணமாய் ஒரு தாக்குதலும், தாக்குதல் நடந்த அன்றே தமிழகத்தின் 40 இடங்களும் 40 வீரர்களின் “தியாகத்துக்கு” என்று கட்சிப்பிரச்சாரம் செய்வதும், போர் வரும் பதட்டம் இருப்பதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று குஜராத் முதல்வர் சொல்வதும், பதில் தாக்குதல் நடத்தியதையும் உடனே பிரதமரின் தேர்தல் பிராச்சார உத்தியாய் பயன்படுத்துவதும், அதை பாகிஸ்தான், “இந்தியாவில் தேர்தல் காலம் என்று தெரிகிறது!” என்று சொல்வதும் வரலாற்றில் நிகழ்ந்தக் கறைகள்!

அவசர பணமதிப்பிழப்பையும் அதைத்தொடர்ந்த உயிர்ப்பலிகளையும், ஜிஎஸ்டி அழித்தது, 49000 தொழில்கள் நலிவடைந்ததும், 5 லட்சம் பேர் வேலை இழந்ததும், அடுத்து தூத்துக்குடியால் மறக்கடிக்கப்பட்டது, 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது அடுத்து கேரள மழையால் மறக்கக்கடிக்கப்பட்டது, கேரள மழையின் மீட்புப்பணிக்கு பில் அனுப்பியதும் அடுத்து சபரிமலை விவகாரத்தால் அமுக்கப்பட்டது, சபரிமலையின் சங்கிகளின் போராட்ட வேடிக்கையெல்லாம், அடுத்து வந்த அம்பானிகளின் செய்தியில் மக்கிப்போனது, நடுநடுவே மானே தேனே என்று சீனா எல்லைக்கு ரோடு போட்டு அருணாசலத்தில் அத்து மீறி வேடிக்கைக்காட்டியது, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெட்ரோல் டீசல் விலையேற்றம் தொடர்ந்தது, பலப்பல முற்போக்குவாதிகள், எழுத்தாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர், அதெல்லாம் காலத்தின் மறதி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது,

நாடெங்கும் பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்புணர்ச்சியில் உயிரிழந்தனர், பெண்கள் கெடுக்கப்படும்போது எதிரப்புக்காட்டமல் இருந்தால் உயிருடன் இருக்கும் வாய்ப்புக்கிடைக்கும் என்றும் ஒரு சாதாரண வன்புணர்ச்சிக்கொலையை ஊதிப்பெரிதாக்கியதில் டெல்லியின் சுற்றுலா வருமானம் பாதிக்கப்பட்டது என்ற அரிய கருத்துக்கள் அமைச்சர்களால் மொழியப்பட்டது, தேர்தல் மேடைகளைத்தவிர வேறு எதிலும் பிரதமர் வாய் திறக்கவில்லை!

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எந்தத்தகவலும் மக்களுக்குத்தெரியாமல் இரகசியாமாய் மறைந்துப்போனார், அவசர அவசரமாய் எம்எல்ஏக்கள் மக்களை மறந்து கூவத்தூரில் ஒளிந்துக்கொண்டார்கள், இவரா அவரா என்று தவழ்ந்து உருண்ட நாடகங்கள் ஒருவழியாய் நிறைவுற, உதய் மின்திட்டம் தொடங்கி, நீட் வரை எதையெல்லாம் முன்னாள் முதல்வர் எதிர்த்தாரோ அதையெல்லாம் மத்திய அரசு தங்குத்தடையின்றி புது அரசின் மூலம் நிறைவேற்றிக்கொண்டதும், எட்டுவழிச்சாலை என்ற அத்துமீறல்களும், தெர்மாக்கோல் விட்டு அதற்கும் பல லட்சம் கணக்குக்காட்டிய கொடுமைகளும், ஜல்லிக்கட்டு வன்முறைகளும் , கடவுள் தேவையில்லை எங்கள் சாமிதான் முருகர் என்ற சுயவிளம்பர தம்பட்டங்களும், பொதுநல வழக்கின் வழி வந்த ப்ளாஸ்டிக் தடையால் மக்கள் மனதில் இருந்து மழுங்கடிக்கப்பட்டது!

எப்போதும் நாட்டிலேயே தங்காதவரும், வரலாற்றில் சிலமணிநேரமே பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் என்ற பெருமையும் ராபேலின் கூச்சலில் அடிப்பட்டுப்போனது, விதர்பாவின் வழக்கில் சாட்சிகள் தொடர்ந்து மர்மமாய் சாகடிக்கப்பட்டதும் பெட்டிச்செய்தியாய் சுருங்கிப்போனது, இதற்கு நடுவே அமைச்சர் முன்னிலையில் இல்லாத கைபேசி தொழிற்சாலையில் இருந்து மலிவுவிலையில் கைபேசி கிடைக்கும் என்று அறிவித்துச் சுருட்டிய கொள்ளைக் கிடப்பில் போடப்பட்டது!
அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் பாதளாத்துக்கு தள்ளப்பட்டு தனியார் நிறுவனத்துக்கு ஒரு நாட்டின் பிரதமர் விளம்பரத்தூதர் ஆனதும், குஜராத்தின் தனியார் நிறுவனத்திற்கு பசுமைத்தீர்ப்பாயம் விதித்த சில நூறு கோடிகளை தள்ளுபடி செய்ய வைத்ததும், அதே நிறுவனம் தன் சுய லாபத்துக்காக ஆஸ்திரேலியாவில் வியாபாரம் தொடங்க பொதுத்துறை வங்கியை நிர்பந்தித்துக் கொடுக்க வைத்த அபரிமிதமான கடன் தொகையும் இந்த ஆட்சி செய்த சாதனைத்துளிகள், அத்தனை சாதனைத்துளிகளுக்கும் சிகரம், பொருளாதாரம் சாராத ஒருவரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமித்து, வைப்புத்தொகையில் கைவைத்து தள்ளாட்டத்திற்கு வழிச்செய்த நடைமுறை!

இதெல்லாம் மழுங்கடிக்க, கால் கழுவும் நாடகம், ராபேலின் கூச்சல் எல்லைத்தாக்குதலில் அமைதியானது, எல்லைத்தாக்குதல் பதில் தாக்குதல் என்ற பரபரப்பில் சத்தமின்றி விமான நிலையங்களின் பரமாரிப்பின் வியாபார உரிமை அதானிக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது, பழங்குடிகளை காட்டை விட்டு வெளியேற்றும் தீர்ப்பு வந்திருக்கிறது, படிப்புப் பற்றிய கேள்வி எழுந்ததும் மாயமாய் எரிந்தக்கோப்புகளைப் போல, எதுவும் அடுத்தடுத்த நிகழ்வுகளால் மறக்கடிக்கப்பட்டுவிடும், மொத்த அழிவுத்திட்டங்களின் கொள்கலனாய் தமிழகத்தை மாற்றி விட்டு பல உயிர்களைப்பறித்துவிட்டு, துணிச்சலாய் இந்த மண்ணில் ஓட்டுக்கேட்டு நிற்பதற்கு மக்களின் இந்த மறதியும், பணம் என்ற ஆயுதத்தின் பலமும், சாதிமதத்தின் பேரில் தேசப்பக்தியின் போர்வைகளின் பெயரில் எளிதில் தூண்டப்படும் உணர்ச்சியும் தானே காரணம்?

எது எப்படி இருந்தால் என்ன, செத்தது யாராய் இருந்தாலும், சாகடித்தது அரசியல், இராணுவ நடவடிக்கையை தேர்தல் பிரச்சாரமாக்கிய இந்த மோசமான அரசியல் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்துக்கொண்டிருக்கிறது, அதனால் என்ன வாழ்க பாரதம்!!!
#Saynotowar

இந்தச்சமூகம் என்பது நாம்தான்

அறுந்து விழுந்த மின்கம்பியை பிடித்த ஆறுவயது சிறுவன் மரணம், இதில் அறுந்த விழுந்த மின்கம்பியின் மின்வாரிய அலட்சியம் இந்தியாவுக்கே பொதுவானது, மழைக்காலங்களில் மட்டுமல்ல எல்லாக் காலங்களிலும் நீங்கள் சென்னை மாநகரில் பல்வேறு கம்பிகள் இப்படி சாலையை, நடைபாதையை அடைத்துக்கொண்டிருப்பதை பார்க்கலாம்!
அலட்சியமான அதிகாரிகளையோ, அரசையோ குறித்தல்ல இப்பதிவு, அவ்வப்போது இதுபோல் வரும் செய்திகளின் பின்னே உள்ள பெற்றவர்களின் அஜாக்கிரதைப்பற்றியதே, எத்தனை பாதுகாத்தாலும் நம்மை மீறி நடந்துவிடும் விபத்துகளையும் கொடுமைகளையும் விட்டுவிடுவோம், ஆனால் இவைகளை தவிர்க்கலாமே;

1. வீட்டில் தவழும் நடக்கும் குழந்தைகள் இருந்தால் தண்ணீர் தொட்டிகளை இறுக்கமாக மூடி வைக்கவும், குளியலறைக்கதவுகளை தாழ்போட்டு எட்டாத உயரத்தில் வைக்கவும் ஏன் மறக்கிறோம்?

2. குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் மருந்துகளையும், கேரோசின், தீப்பெட்டி போன்ற பொருட்கள் வைப்பதை தவிர்க்கலாமே?
3. குழந்தையை டிவி ஸ்டாண்டின் அருகில் விட்டு, அது தலையில் விழும்வரை என்ன செய்கிறோம்?

4. குட் டச் பேட் டச் பற்றி இன்னமும் பெற்றவர்களே பேசாத நிலையை எப்போது மாற்றுவோம்?

5. குழந்தைகளை வெளியே விளையாட விடுவது ஆரோக்கியமானதே, ஆனால் வீட்டுக்குள் சீரியல்கள் முன்போ அல்லது வேறு வேலையிலோ மூழ்கி பிள்ளைகளை கண்காணிக்க ஏன் மறக்கிறோம்? அதுதான் இங்கே இந்த மின்விபத்து!

6. எங்காவது வெளியில் செல்லும்போது, பிள்ளைகளை தனியே விட்டு ஏன் செல்கிறோம்? விளைவு ஏழு வயது ஹாசினியின் மரணம்

7. ஆழ்துளைக்கிணறுகளில் விழுவதற்கும் பலரின் தவறுகளைத்தாண்டி நம்முடைய கவனக்குறைவும் காரணமாகிறது

8. வீட்டில் சமைக்காமல் ஏன் எப்போதும் உணவுகளை வெளியே வாங்கிக்கொடுக்கிறோம்?

9. கெடுதல் என்று தெரிந்தும் எதற்கு விதவிதமான வண்ணங்களில் தின்பண்டங்களையும், மைதாவில் செய்த கேக்குகளையும், பரோட்டக்களையும், பிஸ்கட்டுக்களையும் குளிர்பானங்களையும் வாங்கி திணிக்கிறோம்?

10. கைபேசிகள் பிள்ளைகளுக்கு எதற்கு, அதில் விளையாட்டுகள் எதற்கு? கைபேசி வீடியோ கேம்களுக்கு உங்களுக்கு நேரம் இருப்பின் அந்த நேரத்தை உங்கள் குழந்தைகளிடம் செலவழித்தால் என்ன?

11. கிட்டதட்ட குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சதிகாரர்கள், கொலையாளிகள் என்று சித்தரிக்கும் தொலைக்காட்சி சீரியல்களை சினிமாக்களை ஏன் பிள்ளைகளுடன் அமர்ந்து பார்க்கிறோம்?

12. இரவு நேரம் கண்விழித்து இவைகளை பார்க்கும் பழக்கத்தை ஏன் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தி ஆரோக்கியத்தை சிதைக்கிறோம்?

13. சாலையில் தாறுமாறாய் கடந்துச்செல்வது, தலைக்கவசம், சீட்பெல்ட் இல்லாமல் பயணிப்பது போன்ற செயல்களை எப்போது திருத்திக்கொண்டு பிள்ளைகளை வாழ வைக்கப்போகிறோம்?

14. சாலையை கடக்கும்போது, மின்தூக்கிகளில், நகரும் படிக்கட்டுகளில் என்று எல்லா இடங்களிலும் பிள்ளைகளின் கையைவிட்டுவிட்டு கைபேசியில் கவனம் செலுத்தும் பழக்கத்தை எப்போது மாற்றுவோம்?

15. சாதியைச்சொல்லி, மதத்தைச் சொல்லி, கடன்காரர்களுக்கு பொய்யைச்சொல்லி என்று எப்போது இந்தப்பாடங்களை பிள்ளைகளுக்கு கற்றுத்தருவதை கைவிடுவோம்?

16. குடிக்கும், புகைக்கும், பெண்களை போகப்பொருளாகக் கருதும் நடைமுறை வழக்கங்களை எப்போது மாற்றி ஆரோக்கியத்தையும் அன்பையும் சகமனிதரை, மனுஷியை நேசிக்கும் மனப்பான்மையையும் கற்றுத்தரப்போகிறோம்?
இந்தச்சமூகம் என்பது நாம்தான், விபத்துகள் குறைய, #மாற்றம்_நம்மிடம்_இருந்தே_உருவாகவேண்டும்!

கொலைக்களமாகும்_குடும்பங்களும்_நலிவுறும்_சமூகமும்!

பிடிக்கவில்லையென்றால் “விலகிக்கொள்ளுதலை” விட, ஒரேடியாக “விலக்கிக்கொல்வது” இந்திய ஆண்களுக்கு எளிதாக இருக்கிறது, குடிப்பது, புகைப்பது, வேறு மணம் செய்துக்கொள்வது எல்லாம் ஆண்களுக்கே உரித்தான “உரிமை” என்ற மனப்பான்மை இருக்கும் சமூகத்துக்கு, தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் மனைவிக்கு பிடிக்கவில்லை என்றாலும் எப்போதும் “நடத்தை” என்ற ஒழுக்கவிதியை பெண்ணுக்கு மட்டும் வகுத்துவிட்டு, கொன்றுபோடும் எல்லா காரணங்களையும் “பெண்ணின் நடத்தை” என்ற ஒன்றில் ஒளித்துவிடும் திறமையும், பத்திரிக்கைகள் தொடங்கி, சாமான்ய மனிதர்கள் வரை எல்லா மட்டத்திலும் இருக்கிறது, அபிராமியை கழுவி ஊற்றிய பத்திரிக்கைகள், இப்போது சந்தியாவின் சைக்கோ கணவனுக்கும் சந்தியாவையே குற்றவாளியாக்குகிறது! ஆண்களின் “குடிப்பழக்கத்தை” எவ்வளவு எளிதாக இந்தச்சமூகம் புறந்தள்ளுமோ அப்படித்தான் “நடத்தையின்” பேரில் நடக்கும் கொலைகளும் என்பதைத்தான் கொலையும் செய்துவிட்டு சிரிக்கும் பாலகிருஷ்ணனின் “நடத்தை” காட்டுகிறது!

தவறு பெண் செய்தாலும் ஆண் செய்தாலும், கொல்லப்படுவது ஆண் என்றாலும் பெண் என்றாலும், எப்போதும் “பெண்ணே” குற்றவாளி, இந்தக்கொடூர மனநிலை சமூகத்தில் எப்போதும் தனித்துவிடப்படும் குழந்தைகளின் நிலைதான் பரிதாபம்!

பெண்ணுக்கு கல்வி எதற்கென்று 15 வயது தொடங்கி 20 க்குள் திருமணம், அதற்குள் குழந்தை, குடி, மனச்சிதைவு, கல்வியறிவின்மை, குழந்தை வளர்ப்பு பற்றிய அறிவின்மை, பொருளாதாரச்சிக்கல், புரிதல் இன்மை, என்று எத்தனையோ சிக்கல்களை எல்லாம் “பொறுத்து” “கடந்துதான்” பல பெண்களும், சில ஆண்களும், குழந்தைகளுக்காகவோ, தனித்து நிற்க முடியா இயலாமையினாலோ, குடும்ப நிர்பந்தத்தினாலோ குடும்பங்கள் உடையாமல் காத்து நிற்கின்றனர், அல்லது பிரிகின்றனர், இந்த இரண்டை விடவும் ஆபத்தானது இந்தக்கொலைகள்; இரண்டுக்கும் வழியில்லாமல் கொலையை தேர்ந்தெடுப்பது வளர்ப்பின், சூழ்நிலையின் சிக்கலே!
என்று இந்தச்சமூகம் ஆண் பெண் பேதமில்லாமல், மக்களின் கல்வியையும், மனநிலையும், பாதுகாப்பையும், சமத்துவத்தையும் பற்றிக்கவலைப்படுமோ அப்போதுதான் சிறிதளவேனும் மாற்றம் வரும்!

கொலைக்களமாகும்_குடும்பங்களும்_நலிவுறும்_சமூகமும்!

Thursday, 16 May 2019

நிவாரணம் எனும் விலை

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் எது நடந்தாலும், அரசுக்கு தெரிந்தது எல்லாம் “நிவாரணம்” மற்றும் “விசாரணைக்கமிஷன்” (இது நடக்கும் வேகத்துக்கு, இதெல்லாம் “உலகிலேயே மெதுவான விசாரணை” என்று கின்னஸ் புத்தகத்தில் வந்திருக்க வேண்டும்). “எங்கப்பா எனக்கு நிறைய சொத்து சேத்து வச்சிட்டு போயிருக்கார், அதனால நான் இஷ்டத்துக்கு செலவு செய்வேன்” என்பது போல, “இந்த ஜனங்ககிட்ட நிறைய வரிப்பிடுங்குறோம், சாராயத்தாலும் நிறைய வருது, எவன் செத்தா என்ன, நிவாரணம் கொடுத்தா போச்சு” என்ற ரீதியில் இயங்குகிறார்கள்! 

சென்னையில் எல்லா வகையிலும் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளின் அலட்சியத்தால் கட்டிடம் இடிந்து பல உயிர்கள் போனது, பலரின் வீடு என்ற கனவு சிதைந்து, கடனாளியானார்கள், நீர் மேலாண்மையின் அலட்சியத்தில் எப்போதும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர், அலட்சியான நிர்வாகத்தால் பல்வேறு விபத்துகள் சாலையில், கட்டிடங்களின் வரைமுறை கோளாறுகளில் ஏரிகளும் குளங்களும் மாயமாய் மறைந்துக்கொண்டிருக்கிறது, தீ விபத்துகள், பள்ளிச்சார்ந்த விபத்துகள் என்று எதிலும் ஏதோ முதலாளிகளின் மெத்தனமும் அதற்கு அரசு அதிகாரிகளின் ஆதரவும் நிச்சயம் இருக்கும், “சாலையில் விளம்பரப்பலகைகளை வைக்கக்கூடாது என்று உங்களுக்கு நாங்கள் எத்தனை முறை சொல்வது?” என்று உயர்நீதிமன்றம் கண்டிக்கும் அளவுக்கு அரசின் இயக்கம் இருக்கிறது!

சமீபத்தில் அரசுத்துறையில் இருக்கும் நண்பர், மனிதர்களுக்கே இந்த நிலை என்றால், விலங்குகளைப்பற்றி யோசித்துப்பார் என்று அதில் நடக்கும் ஊழல்களை சுட்டிக்காட்டினார், இப்போது நடந்திருக்கும் எச்ஐவி இரத்தம் ஏற்றியக்கொடுமை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது, வராதது இன்னும் எத்தனை என்பதை பாதிக்கப்பட்டவர்களைத் தவிர யார் அறிவார்?
“தவறுக்கு அடிப்படைக் காரணிகளான லஞ்சத்தையும், தகுதியற்ற அதிகாரிகளையும், அலுவலர்களையும், நேர்மையற்ற நிர்வாகத்தையும் சீர்செய்யாதவரை இதற்கெல்லாம் தீர்வில்லை!” அதுவரை இதுபோன்ற அதிர்ச்சிகளை தாங்கிக்கொள்ள பழகவேண்டும்!

பொதுநல_வழக்குகள்

தமிழ்நாடு முழுக்க பேனர்கள் வைக்கத்தடை, டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு! நேற்று இந்த வழக்குத்தொடர்பான செய்தியில், எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும் அதிகாரிகள் மெத்தனமாய் செயல்படுவதற்கும் கண்டனம் தெரிவித்து இருந்தனர், இன்னொரு வழக்கில் கிட்டதட்ட 86 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருந்தே ஒரே காரணத்துக்காக முடித்துவைக்கப்பட்டதையும் நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது, இப்படி நாட்டில் குப்பைகள் தேங்குவதில் இருந்து, சாலைகளின் கட்டமைப்புத் தொடங்கி குழந்தைகள் கடத்தல் வரை, வழக்குகள் வழக்குகள் அத்தனை #பொதுநல_வழக்குகள்!

இத்தனை முக்கிய வழக்குகளில் இரண்டை மட்டும் எடுத்துக்கொள்வோம், சாலை ஆக்கிரமிப்பு சம்பந்தப்பட்ட பொதுநல வழக்குகள், மற்றும் குழந்தைகள் கடத்தல்!
டிராபிக் ராமசாமி என்ற ஒற்றை மனிதரின் பங்களிப்பும் எஞ்சியிருக்கும் நேர்மையான அதிகாரிகளாலும், நீதிமன்றங்களாலுமே இன்றைக்கு சில சாலைகள் சாலைகளாக இருக்கிறது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, லெட்டர் பேட் கட்சி, என்று எத்தக்கட்சியாய் இருந்தாலும் நடைபாதைகள், மரங்கள், குடியிருப்புகள், பொது வாகனங்கள் என்று எதையும் விட்டு வைக்காமல் அத்தனை பேனர்கள் - விளம்பரப்பதாகைகள், அத்தனையையும் வைத்துவிட்டு, போக்குவரத்தை நிறுத்திவிட்டு, இந்தக் கட்சிகளின் வாகனங்கள் பறந்துவிடும், ஆனால் அதன் பின், போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கிக்கொள்வார்கள், விபத்துகள் நேரிடும், விபத்தின் வழக்குகள் விபத்தாக முடித்துவைக்கப்படுமேயன்றி, ஒருநாளும் மோசமான சாலைகளுக்காக, நேர்மையற்ற கட்டமைப்புகளுக்காக இந்த அரசையோ அதிகாரிகளையோ தண்டித்ததேயில்லை!

ஒரு சாதரண இளைஞன் தலையில் தலைக்கவசம் அணியாமல் சாலையில் பறப்பதற்கும், பல வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி, சாலையில் சட்டத்தைப்பற்றிய பயமும் விழிப்புணர்வும், பொதுநலச்சிந்தனையும் இல்லாமல் நாள்தோறும் விபத்துகளை ஏற்படுத்துவதற்கு எது காரணம், நடைபாதைகள் முழுக்க பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் தங்கள் கடைகளை விரிவுபடுத்தியும், நடைபாதைகளை, சாலையோரங்களை நிரந்தர கடைகளாகவும், ஒழுங்கற்ற வாகன நிறுத்தங்களாகவும் மாற்றியதற்கு யார் காரணம்? தீ விபத்துகள் நேர்ந்தால் தப்பிக்க வசதியின்றி இயங்கும் பள்ளிகளும், கல்வி நிலையங்களும், அலுவலகங்களும் இன்று ஏராளம், அனுமதியின்றி முறையான தரச்சான்றுகள் இன்றி சாலையில் விரையும் வாகனங்கள் ஏராளம், அதனால் உயிர்பலிகளும் ஏராளம்!

ஒரு டிராபிக் ராமசாமியும் ஒரு உயர்நீதிமன்றமும் இதற்கெல்லாம் தீர்வு காண முடியாது, மக்கள் சுயநலம் மிகுந்து பெருத்துவிட்டார்கள், தங்கள் உயிரையோ பிற உயிர்களைப்பற்றியோ அவர்களுக்கு கவலையில்லை, வதவதவென இருக்கும் ஆக்கிரமிப்புகள் பற்றியும் தங்களால் ஏற்படும் சிரமங்களை அதைத்தொடர்ந்து ஏற்படும் விபத்துகளைப்பற்றியோ வியாபாரிகளுக்கு கவலையில்லை, பேருந்தில் உயிரோடு வைத்து எரித்தாலும் சில பல வருடங்களில் வெளியே வந்துவிடலாம், பணமோ கட்சியோ இருக்கிறது காப்பாற்ற!

இதற்கென தற்காலிக தீர்வுகள் என்பது, நீதிமன்றங்களும் டிராபிக் ராமசாமிகளும் மட்டும்தான், நிரந்தர தீர்வு வேண்டுமென்றால், அமைச்சர்களுக்கும், கட்சிகளுக்கும் கட்டுப்படாத அதிகாரம் மிக்க அமைப்பு ஒன்று வேண்டும், இனி எந்த வாகனங்களிலும் கட்சிக்கொடிகளே இருக்கக்கூடாது என்றும், ஆம்புலன்ஸை தவிர்த்து யாருடைய வாகனங்களுக்காகவும், அது ஆள்பவரே என்றாலும் போக்குவரத்து நிறுத்தப்படக்கூடாது என்றும் சட்டம் இயற்றி அதை அமல்படுத்த வேண்டும், நாடு முழுக்க கண்காணிப்பு கருவிகள் நிறுவ வேண்டும், போக்குவரத்து நிறுத்தப்படாது என்றால் மட்டுமே இந்த கட்சிகளுக்கு கண்மூடித்தனமாக அனுமதித்த ஆக்கிரமிப்புகள் புரியும், சாலையில் சிக்கி, விபத்துகள் நேரிடும் போதே கட்டமைப்பின் கோளாறுகள் புரியும், சுங்கக்கட்டணங்கள் இவர்களும் செலுத்தவேண்டும் என்ற விதிமுறைகள் இருந்தால் மட்டுமே அதன் கொள்ளைகள் புரியும் (ஒரு பகுதி வருமானம் இங்கேயும் போகும் என்பதால் இதை எளிதாக கடந்துவிடலாம்) இவர்கள் பெருத்த சுயநலவாதிகள் என்பதால் அவர்களுக்காக சாலைகளையும் கட்டமைப்புகளையும் சீரமைப்பார்கள்!

இது போலவே குழந்தைகள் கடத்தலும், இந்தச் சாலை விதிமுறைகளையும், வாகன கண்காணிப்பையும், நேர்மையான அமைப்பையும், தலையீடற்ற அதிகாரத்தையும் செயல்படுத்தினால், கடத்தல்களை கண்காணிக்கவும் தடுக்கவும் முடியும், நாள்தோறும் வடக்கில் இருந்து தெற்கிற்கு நகர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் மனிதர்களை கண்காணித்து கட்டுப்படுத்தி, சாலையில் குழந்தைகளை வைத்து பிச்சையெடுப்பவர்களை மீட்டெடுத்து குழந்தைகளை பாதுகாக்கும் ஒரு வலுவான சட்டத்தையும் அமல்படுத்தும் வரை இதுவும் தொடரும், எத்தனையோ சிக்னல்களில் குழந்தைகள் பிச்சையெடுக்கும், சாலைகளை மட்டும்தான் பார்க்கும் போக்குவரத்துத்துறை, மாற்றப்படி அவர்களுக்கு, அவர்களை அப்புறப்படுத்தும், குழந்தைகளை மீட்டெடுக்கும் அதிகாரம் இல்லை, இல்லாமல் இருக்கலாம் அல்லது குற்றத்தில் மறைமுக பங்கும் இருக்கலாம், கண்முன்னே நிகழும் குற்றங்களுக்கு நாமும் ஒரு மறைமுக சாட்சிதானே?

ஓட்டுப்போட்டு ஆட்சி அதிகாரத்தை ஒரு சாராரிடம் கொடுத்துவிட்டு, நாட்டில் குப்பையை அகற்றுவதில் இருந்து, காற்று மாசை ஏற்படுத்தும் ஆலைகள் முடக்குவது வரை நீதிமன்றங்களையே நாட வேண்டியிருக்கிறது, வழக்குகள் மூலமே நாட்டில் மாற்றம் நடக்குமென்றால், தகுதியற்ற ஆட்சியாளர்களை, இந்த வழக்குகளின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் கொண்டு மக்களே கலைக்கும் அதிகாரத்தை கொடுக்கும் ஒரு சட்டம் வேண்டும், அதுவரை பொதுநல வழக்குகளும் நீதிமன்றங்களுமே துணை! 😓
#Public_Litigation #Judiciary #Traffic_Ramasamy #டிராபிக்_ராமசாமி

நாட்டிய அரங்கேற்ற நிகழ்வு

இந்த வருடத்தில் ஒருநாள் பழைய அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரிந்த சகோதரி உஷா, தன் மகளுக்கு நாட்டிய அரங்கேற்றம், மே மாதம் வைத்திருக்கிறேன், அந்த நாளில் சிறிது நேரம் ஒதுக்க முடியுமா என்று கேட்டார், நாடகம், நாட்டியம், பாடல்கள் என்று எல்லாவற்றிலும் இயல்பிலேயே இருக்கும் ஆர்வத்தாலும், உஷாவுக்காகவும், அரைநாள் விடுமுறை எடுத்தால் என்ன தோன்றியதாலும் சரி என்றேன், திடுதிடுப்பென்று “இல்லை, நீங்கள்தான் முக்கிய விருந்தினர், அதுதான் நிச்சயம் வரமேண்டுமென்று கேட்கிறேன்” என்று ஒரு ஆனந்த அதிர்ச்சியைத் தந்து, விடாப்பிடியாய் என் பட்டங்களை பெயருக்கு பின்னே வரிசைக்கட்டி அழகான இந்த அழைப்பிதழை அச்சிட்டு குடும்பச் சகிதமாய் வீட்டிற்கு வந்து அழைத்தார், முறையாய் நாட்டியம் பயின்றவர்கள், ஆசிரியர்கள் என்று அந்தக் கலைத்துறைச் சார்ந்த மேதைகளுடன், நான் எப்படி மேடையில் என்று தயங்கிய போது, “அமுதா உங்க மனசு எனக்குத்தெரியும், நீங்க வந்து மனசார செய்யும் வாழ்த்து எனக்கு வேணும், அதுக்குத்தான் கூப்பிடறேன், என் மகளுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும்” என்ற போது, மனதைப்படித்து, நேசிக்கும் மனிதர்கள் போகும் இடமெல்லாம் கிடைப்பதொரு வரமென்று உணர்ந்தேன்!

உஷாவின் கனவும், அயராத உழைப்பின், அவர் மகள் “ரம்யாவின்” நடனத்தில் தெரிந்தது, அம்மாவைப்போலவே அழகான பெண் குழந்தை, அம்மாவைப்போலவே தன்மையும் மென்மையான அணுகுமுறையும், அந்த மாலை வேளையில் ரம்யாவின் பெயருக்கேற்ப அந்த மாலைப்பொழுது ரம்யமாய் ஆனது, நாட்டிய மேதைகள் நிறைந்திருந்த சபையில், அற்புதமாய் ஆடிய அந்தக்குழந்தையின் நடனத்திற்கு பாராட்டுக்களையும், திறமை மேன்மேலும் வளர்ந்து ஒளிவிட வாழ்த்துகளையும் சொல்லி விடைப்பெற்றேன்!

இத்தனை மாதங்கள் கடந்து இத்தனை தாமதமாய் எழுதுவதற்கு காரணம், வழக்கமான வேலைப்பளூ என்பதை விட, மனம் நிறைய அன்பிருந்தாலும், நடன ஆளுமைகளின் மேடையில், வெறும் ரசிகையாய் அமர்ந்திருந்த தயக்கமே காரணம், இந்த வருடம் முடியப்போகும் இந்தக்கடைசி மாதத்தில், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் வெளிப்படுத்தாமல் வைத்திருக்காதே என்று மனம் இடித்துரைத்ததின் வெளிப்பாடே இது!
உஷா, உன்னுடைய உழைப்பும் கனவும், இந்த வாழ்க்கைப்பாதையை உனக்கு வரமாக மாற்றட்டும், ரம்யாவிற்கு எப்போதும் சிறந்தவைகளே கிட்டட்டும்! God bless!

Image may contain: 2 people, text

புற்றுநோய்

ஒரு சேனலில் நடிகை ஒருவர் “பல வண்ண நிறங்களிலான இந்த உணவுப்பண்டங்கள் புற்றுநோய்களுக்கான காரணிகள்” என்று உணர்ச்சிவசமாய் நடிக்கிறார், பின் மற்றொரு சேனலில் விளம்பர படத்தில் இதைக்குடித்தால்தான் ஆரோக்கியம் நிலைக்கும் என்று வேறு ஒரு வேடம் பூணுகிறார், “தமிழர்களின் நலம்” பேசி ஜல்லிக்கட்டு அரசியல் பேசிய நடிகர், கோக்கையோ பெப்ஸியையோ குடிக்க கோக்குமாக்காக பறக்கிறார், இப்படியே இன்னொரு தளபதி நடிகரும் ஒரு படத்தில் மூச்சிரைக்க கார்ப்பரேட் அரசியல் பேசி, இன்னொரு கார்ப்பரேட் விளம்பரத்தில் தண்ணீர் உறிஞ்சும் முதலைகளுக்கு சாதகமாக சாகசம் செய்கிறார்!
இந்த நடிப்புக்கு சற்றும் சளைத்ததில்லை நம் அரசியல்வாதிகளின் நாடகங்கள், எல்லோரின் வங்கிக்கணக்கிலும் பதினைந்து லட்சம் என்ற பொய் அரசியல், 2020 க்குள் இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் வீடு என்று ஆட்சித்தொடர பொய்களை அணிவகுக்கிறது!

எப்படி இருந்தாலும், மரபணு வழியால், புகையிலையால், சுற்றுப்புறச்சூழ்நிலையால், மாறுப்பட்ட உணவு பழக்கத்தால், குப்பைகளை வயிற்றுக்கு திணிக்கும் கலாச்சாரத்தால், சாராயத்தால், போதை மருந்துகளால், உடல் உழைப்ப இல்லாமையால், சுகாதாரமின்மையால், அணுக்கதிர்களால் என்று நாள்தோறும் புற்றுநோய் நோயாளிகள் பெருகிக்கொண்டே போகிறார்கள், இந்திய புற்றுநோய் ஆராய்ச்சிக்கழகத்தின் கூற்றுப்படி, நாள்தோறும் 1300 பேர் இந்தியாவில் புற்றுநோயால் இறக்கிறார்கள், இந்த நிலையில்தான் தாமிர ஆலைகளையும், அணுவுலைகளையும், கப்பல் கழிவுகளையும் மருத்துவக்கழிவுகளையும் தமிழகத்தில் கொட்டுகிறார்கள், மக்களுக்காக போராட வேண்டியவர்கள், இதற்கெல்லாம் கையெழுத்து போட்டுவிட்டு மாற்றி மாற்றி கல்லா கட்டுவதையே வாழ்க்கையாக மாற்றிக்கொண்டு விட்டார்கள்!

மக்களும்கூட வாழ்க்கைமுறையை புற்றுநோய் நோக்கியே நகர்த்திக்கொண்டு போகிறார்கள், மாறிவரும் சூழ்நிலையில் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் புற்றுநோய் குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான் என்ற உண்மையை எடுத்துச்சொல்லத்தான் யாருமில்லை, புற்றுநோய் பாதித்தப்பிறகே சில விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பிரபலமானவர்களிடம் இருந்து வருகிறது!

எது எப்படியோ, எந்த விளம்பரங்களிலும், யாருடைய நடிப்பிலும் மோசம் போகாமல் மூளையை ஆரோக்கியமாய் உபயோகித்து நலமுடன் வாழ வாழ்த்துகள்!

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...