Friday, 20 December 2019

கொலைக்களமாகும்_குடும்பங்களும்_நலிவுறும்_சமூகமும்!

பிடிக்கவில்லையென்றால் “விலகிக்கொள்ளுதலை” விட, ஒரேடியாக “விலக்கிக்கொல்வது” இந்திய ஆண்களுக்கு எளிதாக இருக்கிறது, குடிப்பது, புகைப்பது, வேறு மணம் செய்துக்கொள்வது எல்லாம் ஆண்களுக்கே உரித்தான “உரிமை” என்ற மனப்பான்மை இருக்கும் சமூகத்துக்கு, தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் மனைவிக்கு பிடிக்கவில்லை என்றாலும் எப்போதும் “நடத்தை” என்ற ஒழுக்கவிதியை பெண்ணுக்கு மட்டும் வகுத்துவிட்டு, கொன்றுபோடும் எல்லா காரணங்களையும் “பெண்ணின் நடத்தை” என்ற ஒன்றில் ஒளித்துவிடும் திறமையும், பத்திரிக்கைகள் தொடங்கி, சாமான்ய மனிதர்கள் வரை எல்லா மட்டத்திலும் இருக்கிறது, அபிராமியை கழுவி ஊற்றிய பத்திரிக்கைகள், இப்போது சந்தியாவின் சைக்கோ கணவனுக்கும் சந்தியாவையே குற்றவாளியாக்குகிறது! ஆண்களின் “குடிப்பழக்கத்தை” எவ்வளவு எளிதாக இந்தச்சமூகம் புறந்தள்ளுமோ அப்படித்தான் “நடத்தையின்” பேரில் நடக்கும் கொலைகளும் என்பதைத்தான் கொலையும் செய்துவிட்டு சிரிக்கும் பாலகிருஷ்ணனின் “நடத்தை” காட்டுகிறது!

தவறு பெண் செய்தாலும் ஆண் செய்தாலும், கொல்லப்படுவது ஆண் என்றாலும் பெண் என்றாலும், எப்போதும் “பெண்ணே” குற்றவாளி, இந்தக்கொடூர மனநிலை சமூகத்தில் எப்போதும் தனித்துவிடப்படும் குழந்தைகளின் நிலைதான் பரிதாபம்!

பெண்ணுக்கு கல்வி எதற்கென்று 15 வயது தொடங்கி 20 க்குள் திருமணம், அதற்குள் குழந்தை, குடி, மனச்சிதைவு, கல்வியறிவின்மை, குழந்தை வளர்ப்பு பற்றிய அறிவின்மை, பொருளாதாரச்சிக்கல், புரிதல் இன்மை, என்று எத்தனையோ சிக்கல்களை எல்லாம் “பொறுத்து” “கடந்துதான்” பல பெண்களும், சில ஆண்களும், குழந்தைகளுக்காகவோ, தனித்து நிற்க முடியா இயலாமையினாலோ, குடும்ப நிர்பந்தத்தினாலோ குடும்பங்கள் உடையாமல் காத்து நிற்கின்றனர், அல்லது பிரிகின்றனர், இந்த இரண்டை விடவும் ஆபத்தானது இந்தக்கொலைகள்; இரண்டுக்கும் வழியில்லாமல் கொலையை தேர்ந்தெடுப்பது வளர்ப்பின், சூழ்நிலையின் சிக்கலே!
என்று இந்தச்சமூகம் ஆண் பெண் பேதமில்லாமல், மக்களின் கல்வியையும், மனநிலையும், பாதுகாப்பையும், சமத்துவத்தையும் பற்றிக்கவலைப்படுமோ அப்போதுதான் சிறிதளவேனும் மாற்றம் வரும்!

கொலைக்களமாகும்_குடும்பங்களும்_நலிவுறும்_சமூகமும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!