Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts
Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts

Saturday, 20 April 2019

சீனப்பயணம்-8

இரண்டுவார பயணம் முடிந்து, கிளம்பும்
நாள் வந்தது! விடியற்காலையில் எழுந்து, செக் அவுட் செய்து விமானநிலையம் சென்று சீனாவில் இருந்து சென்னைக்கு பயணப்பெட்டிகளை செக் இன் செய்து, ஹாங்காங் வரைக்குமான பயணசீட்டு பெற்ற வரை எல்லாம் சரியாக நடந்தது, டாலியன் விமான நிலையத்தின் மாபெரும் குறை கழிவறைகள், மோசமான கழிவறைகள் சென்னையின் உள்நாட்டு விமான கழிவறைகளுக்கு சவால்விட்டு நின்றது!
ஹாங்காங்குடன் ஒப்பிட்டு பார்த்தால் டாலியனில் உள்ளது சிறிய விமான நிலையம், விமானத்தின் பெயர் மாறுதலில் கொஞ்சம் குழம்பி, பின் ஒருவழியாய் அதற்குரிய சரியான வரிசையில் நிற்க ஒரு ஆஸ்திரேலியர் அறிமுகமானார், நான்கு மாத காலமாக சீனர்களுக்கு ஆங்கிலம் கற்றுதந்துவிட்டு, ஒரு மாத விடுமுறையில் செல்வதாகவும், சீனர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும் பகிர்ந்துக்கொண்டார்!

இந்தியாவின் ஒரு பலம் ஆங்கிலம், அதைச்சீனர்கள் எட்டிப்பிடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை, மொழியிலும், விஞ்ஞானத்திலும், வேளாண் தொழில் நுட்பத்திலும், இயற்கையை பாதுகாக்க அவர்கள் எடுக்கும் அக்கறையிலும், தனிமனித சுதந்திரத்திலும் அவர்கள் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்க, ராமயண காலத்தில் பறந்தது விமானம் என்று ஆரம்பித்து, எட்டுவழிச்சாலை என்று இருக்கும் மரங்களை அழித்து, மீத்தேன், நியூட்ரினோ என்று ஒரு மாநிலத்தையே குறிவைத்து, பேச்சுவழக்கில் இல்லாத ஒரு சமஸ்க்ருதத்தை தூக்கிப்பிடித்து, இந்தியை திணித்து, மாநிலங்கள் முழுக்க கூன் பாண்டிகளை உருவாக்கி, வன்முறைகளை அடக்காமல், பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி, உலகம் சுற்றும் பிரதமரையே காலத்துக்கும் வைத்துக்கொண்டிருந்தால் அருணாசலத்தில் நுழைந்த சீனா, வியாபாரிகளின் பேராசையில் இறக்குமதி பொருட்களாக இந்தியா முழுதும் பரவியிருக்கும் சீனா, பிற மாநில எல்லைகளிலும் அத்துமீறும் என்று இரண்டு தேசங்களையும் ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை!

சீனாவில் இருந்து ஹாங்காங் வந்திறங்கியாகிவிட்டது, அதே முந்தைய ரன் லோலா ரன் அனுபவம் நிழலாடியது. அங்கிருந்து சுமார் ஐந்து மணிநேரம் காத்திருப்பு, நேரே பயணசீட்டு வாங்கச்சென்றால் இந்த முறை புதிதாய் ஒரு குண்டு போட்டார்கள், “சாரி யுவர் டிக்கெட் இஸ் நாட் கன்பார்ம்ஃட்!” (அதாகபட்டது மக்களே எனக்கு டிக்கெட் இல்லையாம் 😳)
அது எந்த மாதிரி உணர்ச்சி 🙄என்றே எனக்கு தெரியாத நிலையில் அந்தப்பெண்ணை சில விநாடிகள் உற்றுப்பார்த்து, பின் தெளிந்து, “சாரி, பட் ஹௌ? மை ஃபேக்கெஜ் செக் கின் இஸ் டன் டில் சென்னை!” என்னுடைய பயணப்பைகள் சென்னை வரைக்கும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட பிறகு எனக்கு மட்டும் எப்படி டிக்கெட் இல்லாமல் போகும் என்று வாதிட, இந்தியா செல்லும் விமானங்கள் அனைத்தும் ஓவர் புக் செய்யப்பட்டு விட்டதாகவும், என்னுடைய கம்பெனியின் ஏஜென்ட் முதலில் டிக்கெட் பதிவுசெய்து பின் அது ரத்துசெய்யப்பட்டு கடைசியாக பயண தேதிக்கு முந்தைய இரவுதான் புக் செய்ததாகவும் அதனால் டிக்கெட் உறுதி செய்யப்படவிடவில்லை என்றும் விளக்கம் சொன்னார்கள், பின் 8:20 விமானம் 10:20 தான் புறப்படும் என்றார்கள், 9:20 வரை நான் காத்திருக்க வேண்டும் என்றார்கள்!

“சரி உன் டிக்கெட் வேண்டாம், என்னுடைய பைகளை கொடுத்துவிடுங்கள்”, என்றால் அதற்கு நான் இமிக்ரேஷன் செக் செய்ய வேண்டும் என்றார்கள், வெளியே போக எனக்கு ஹாங்காங் பாஸ்போர்ட் வேண்டும், உள்ளே செல்ல போர்டிங் பாஸ் வேண்டும், இதற்குள் அலுவலகம் எனக்கு கல்கத்தா செல்ல டிக்கெட் எடுத்துவிட்டது, “சரிம்மா என் பெட்டியை சென்னைக்கு அனுப்பிடு, நான் கல்கத்தா போறேன்”, என்றால், அதுவும் முடியாது என்றார்கள், ஒன்று ஹாங்காங் பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் இல்லை நான் காத்திருக்க வேண்டும் என்றார்கள், ஒன்றுக்கு மூன்று பேர் இதையே சொல்ல இதற்கிடையே அலுவலக பிரச்சனைகள், வேலைகள் வரிசைக்கட்டி போன் கால்களாக வர, உள்ளே போகவும் முடியாமல் வெளியே போகவும் முடியாமல் அங்கேயே உட்கார்ந்துக்கொண்டு வேலைகளை தொடர்ந்தேன், கேத்தே பசிபிக்பின் மூன்று பெண்களில் ஒரு பெண் மட்டும் “டிக்கெட் இன்று இல்லை என்றால் நாளை, நாளை இல்லை என்றால் அடுத்தநாள், வெயிட் செய்வதுதான் ஒரே வழி” என்று ரொம்பவும் எதிர்மறையாக பேச, மனதுக்குள் நேர்மறையாக, “ரொம்ப பேசுற நீதான், நான் இருக்குற இடம் தேடி டிக்கெட் கொண்டு வர போறே!” என்று மனதுக்குள் ஒரு காட்சியை ஓடவிட்டுகொண்டு ஹாங்காங்குக்கு விசா போடச்சொல்லி அலுவலகத்துக்கு பேசி கொண்டிருக்க, அந்தச் ஹாங்காங் பெண், ஆமாம் அதே பெண்தான், என்னைத்தேடி வந்து நான் அமர்ந்திருந்த இடத்திலேயே வந்து என் பாஸ்போர்ட்டை பெற்று குறித்துவிட்டு, என் கையில் போர்டிங் பாஸ் தர அப்போது மணி 9:45, பத்தரைக்கு போர்டிங் என்று சொல்ல, நன்றி கூறி ஓட்டம் தொடங்கியது!

அவசரமாய் செக்யூரிட்டி செக் முடித்து, ஓட்டமாய் ஓடி கேட் நம்பர் 47 வர, “கேட் நம்பர் மாறிவிட்டது, 11.10 போர்டிங்” என்றார்கள், 47 இல் இருந்து 70 க்கு ஒட்டமாய் ஓடி செல்ல, மணி 11.05, “போர்டிங் 11:30 க்கு” என்று அறிவிப்புப்பலகை சொன்னது, காலையில் கிளம்பிய போது சாப்பிட்ட பழங்களும், சீன விமானத்தில் காலையில் உண்ட ஒரு ரொட்டித்துண்டும் எப்போதோ ஜீரணமாயிருக்க, ஏழு மணி நேரத்திற்கு மேல் போர்டிங் பாஸூக்கு போராடி களைத்ததில் பசி பிடுங்கியது, சாப்பிட மீண்டும் அவ்வளவு தூரம் போகலாமா வேண்டாமா என்று யோசிக்க மணி 11:20, சரிவேண்டாம் என்று முடிவெடுத்து காத்திருக்க, விமானம் மேலும் தாமதம் 12:00 க்கு புறப்படும் என்றார்கள், அதற்குள் பக்கத்தில் இருந்த எல்லோரும் “ரன் லோலா ரன்” பாணியில் 4 கேட்டுகள் இப்படியே மாற்றி மாற்றி வந்திருப்பதாக புகார் பட்டியலை வாசிக்க, பசியில் கண் முன்னே நட்சத்திரங்கள் தெரிந்தது, அதற்குள் அருகிலிருந்த ஒரு சென்னையைச் சேர்ந்த அம்மா, “ரொம்ப பசியா இருக்கற போல இதைச் சாப்பிடு” என்று நட்ஸ் சாக்லேட் பாரை கொடுக்க, எங்கே சென்றாலும் தாயன்பு கிடைத்துவிடுகிறது என்று கடவுளுக்கும் அந்த அம்மைக்கும் நன்றி சொல்லி வாங்கிக்கொண்டேன்! ஒரு வழியாய் விமானம் கிளம்பி, சென்னை விமான நிலையம் வந்துச் சேர்ந்த போது மணி 3:20, வழக்கம் போல “சுவச் பாரத்” உடைந்த டைல்ஸூகளுடன், அந்த இரவில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீண்ட ஒரு நீண்ட வரிசையில், அட்டைப்பெட்டிகள் போன்ற இமிக்ரேஷன் கேமராக்களுடன் வரவேற்றது!

#சீனப்பயணம்8

சீனப்பயணம்-7

முந்தைய நாள் கடைவீதியில் சுற்றியபோது வெயில் வாட்டியது, மாலைப்பொழுதான நேரத்தில், “வாங்க நாம டீ மில்க் குடிக்கலாம்” என்றார்கள், அது சூப்பராக இருக்கும் என்று பரபரவென நான்காவது தளத்தில் இருந்து கீழ்தளத்திற்கு வந்தார்கள், பின்பு யாரிடமோ விசாரிக்க, “அந்தக் கடை இன்னைக்கு விடுமுறை!” என்றதும் அவர்களுக்கு சப்பென்று ஆகிவிட்டது, “அது என்ன டீ மில்க்”என்றால், கேட்டதும் எனக்கும் சப்பென்றாகிவிட்டது, நம்மூரு டீயைத்தான் அவர்கள் டீ மில்க் என்கிறார்கள்!
அந்த நகரில் எந்த உணவகத்தில் தண்ணீர் கேட்டாலும், சுடுநீரே தருகிறார்கள், அதில் பெரும்பாலும் ஒரு எலுமிச்சை துண்டு மிதக்கிறது! சாதாரண குளிர்நீர் கிடையாது, வேண்டுமென்றால் காசுக்கொடுத்து தண்ணீர் பாட்டில்தான் வாங்கவேண்டும்! எப்போதும் டீயை பால் கலக்காமல் குடிப்பவர்களுக்கு இந்த பால் கலந்த தேநீரை அறிமுகப்படுத்தியது நம்மூர் சேட்டனாய்தான் இருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்! 

உப்பு உரைப்பில்லாத உணவையும், பழங்களையும், காய்கறிகளையும் உண்டு, டோபஸ்கோவின் மிளகாய் சாஸ், சிறிது மிளகு என்று எது பக்கத்தில் வந்தாலும் “ஓ ஸ்பைஸி” என்று இரண்டுபேரும் மாறி மாறிச் சொல்ல, “சென்னைக்கு வாங்க, எறா தொக்கு, மீன்குழம்பு, நண்டு வறுவலும் தந்து உங்களுக்கு காரம்ன்னா என்னன்னு காட்டுறேன்” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

ஒருவழியாய் எல்லாம் முடிந்து திரும்ப, தினம் தினம் பரபரப்பான அலுவலக பணிகள் முடிந்து கடைசி நாளும் வந்தது, க்ளையண்டை வேறு ஒரு ஹோட்டலில் இருந்து அழைத்து வர ஒரு ஹௌடி காரில் கிளம்ப, கார் எதுவாய் இருந்தாலும் ஓட்டுநனரின் நடத்தையில் மாற்றம் இல்லை என்பதை தெரிந்துக்கொண்ட நாள் அது, மற்ற காரின் ஓட்டுநர்கள் (ஒரே ஒரு பெண் ஓட்டுநனரைத் தவிர) ரேஷ் ட்ரைவிங்கிலும் ப்ளிச்சென்று அவ்வப்போது கார் கண்ணாடியைத்திறந்து சுத்தமாய் இருந்தச் சாலையில் எச்சில் துப்பிக்கொண்டு முகஞ்சுளிக்க வைக்க, இந்த ஹௌடியின் ஓட்டுநர் சாலையைக் கடந்த ஒரு பெண்மணியை மிக நெருக்கத்தில் சென்று பயமுறுத்தி நிறுத்திக்கிளம்பினார், கொஞ்சம் முன்னே சென்றதும் இரு போக்குவரத்துக் காவலர்களில் ஒருவர் ஓட்டுனரை தன் சுட்டுவிரல் நீட்டி எச்சரிக்க, ஓட்டுநனர் அதை மதித்ததாய் தெரியவில்லை!

ஒன்று மட்டும் தெரிந்தது, மிகக்கடுமையான சட்டவிதிகள் உள்ள சீனா அதைக்கொஞ்சம் தளர்த்திவிட்டால் அது இந்தியா போல் மாறிவிடும், அதுவே அதன் மக்கள் தொகையில் தொண்ணூறு சதவீதம் தொகையை பண்பட்டவர்களாக மாற்றிவிட்டால், சட்டத்திட்டங்கள் இல்லாமலே மிகச்சிறந்த மக்கள் சக்தியைக்கொண்ட ஜப்பானிய தேசம் போல மாறிவிடும்!
#சீனப்பயணம்7

சீனப்பயணம்-6

அப்படி இப்படி என்று ஒரு வாரத்தைக்கடத்தி, சனிக்கிழமை வேலைசெய்துக்கொண்டே ஓய்வெடுத்து (?!) ஞாயிறு முழுக்க கடைவீதியில் சுற்றினோம், பேரம் பேச இவர்களை அழைத்துச்செல்ல ஒரு கடையில் 250 சீன பணம் என்று ஒன்றைச் சொல்ல, இவர்கள் அதை 230 க்கு கேட்கலாமா அல்லது 200 க்கு கேட்கலாமா என்று கேட்க “50க்கு கேளு” என்றதும் அதிர்ச்சியடைந்தார்கள், “ஒத்துக்க மாட்டாங்க” என்க “நீ கேளு அப்படியே நான் சொல்றதையும் சொல்லு, இந்தியாவில் வந்து விழறது எல்லாம் சீனப்பொருள் தான், அதனால எனக்கு இதோட உண்மையான விலை தெரியும்ன்னு சொல்லு” என்றவுடன் அவர்கள் அப்படியே சீனமொழியில் மொழிப்பெயர்க்க, கடையில் இருந்த பெண்ணின் முகம் நொடியில் மாறிவிட்டது, அமைதியாய் நிற்க, “அவ்வளவு கம்மி பண்ண எப்படி?” என்று தொடங்கி 90 க்கு முடிந்தது! “அப்போ இதே விலைக்கு, இதே பொருள் எங்களுக்கும் இரண்டு வேண்டும்” என்று அவர்களும் ஆர்டர் செய்து கொண்டார்கள்! 

“எல்லா கடைகளிலும் நீங்களே ஒரு விலை சொல்லுங்க, நான் இதே ஊரில் பொறந்து வளர்ந்திருக்கேன், ஆனா இப்படி ஒரு பேரமும், இவ்வளவு குறைவா கிடைக்கும்ன்னு எனக்குத் தெரியவே தெரியாது” என்று ஆச்சரியப்பட, அடுத்தடுத்த கடைகளிலும் விலையை ஒவ்வொன்றுக்கும் குறைத்து திரும்பவும் மொத்தமாய் பில் போடும்போது இன்னமும் குறைக்க, அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியத்தோடு கடைவீதியுலா முடிந்தது, உடன் வந்தவர்களின் புண்ணியத்தில் காய்கறிகள் போட்டு ஒரு சாதம் சாப்பிட முடிந்தது!
இந்த நகரம் சீனாவில் மென்பொருள் நகரமென, அந்த இடத்தில் மிகுந்த செல்வந்தர்கள் வசிக்கும் இடம் என்று உலகில் உள்ள எல்லா உயர்ரக கார்களும் வரிசைக்கட்டி நின்றதை சுட்டிக்காட்டினார்கள்!

அப்படியே உலா வந்தால் கொஞ்ச தூரத்தில் சிதிலமடைந்த அரசாங்கம் கட்டிக்கொடுத்த குடியிருப்புகளைப் போல கொஞ்சம் சிதிலமடைந்த நிற்கும் நடுத்தர மக்களின் வீடுகளும் தீப்பெட்டிகளைப் போல அடுக்கமாய் அமைந்திருந்தது!
#சீனப்பயணம்6

சீனப்பயணம்

ஆமா நான் என்ன கேட்டேன், நான் குடிக்க ஒரு ஜூஸ் கேட்டேன், ப்ரேக் பாஸ்ட் சாப்பிட ஒரு பிரட் கேட்டேன், அது ஒரு குற்றமா? ஒரு பெரிய கோப்பையில் ஆரஞ்சு பழச்சாறும், இரண்டு பிரட்களுக்கு பதில் மூன்று பிரட்களை வைத்து, முட்டையை வைத்து பின் காய்கறிகள், இலைதழைகள் வைத்து நிறைய சான்ட்விச்சுகளும், ஃப்ரென்ச் ஃப்ரைஸ்களும் தட்டை நிறைத்திருந்தது!

புதிய ஹோட்டல் அத்தனை அழகாய், அமைதியாய் இருக்கிறது, வரவேற்பறையில் இருக்கும் பலருக்கு ஆங்கிலம் தெரிகிறது, மற்றப்படி சிங் சுங் ஹாங் தான்! வெள்ளிக்கிழமை ஆதலால் அலுவலகத்தில் எல்லோரும் செர்ரி பழத்தோட்டத்திற்கு அழைத்துச்செல்ல, ஒரு சிறிய ப்ளாஸ்டிக் வாளியில் நீர் நிறைத்து கையில் கொடுத்துவிட்டார்கள், எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு செர்ரி பழங்களைப் பறித்து அந்த வாளியில் உள்ள தண்ணீரில் அலசி சாப்பிட வேண்டும், “நோ நோ எனக்கு செர்ரியெல்லாம் வேண்டாம்” என்றேன் ஒரு பழத்தின் புளிப்புச்சுவை சர்ரென்று மூளையை எட்டியதும்! “ஹா ஹா திஸ் தி லன்ச் பார் டுடே (இன்றைக்கு இதுதான் மதிய உணவு) என்றார்கள், நம்ம ஊரு ரூபாயில் 275 ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட, அந்தச் சூழ்நிலையிலும் ரம்மியமாய் இருந்தது, ஏதோ ஒரு சிறிய ஊட்டிமலையின் மீது சிலுசிலுவென்ற காற்றாட நடந்தது போல் இருந்தது அந்தச் சிறிய பயணம், கிட்டதட்ட 4 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைப்பயணம்! ஆளாளுக்கு அத்தனைப்பழங்களை எளிதாய் சாப்பிட பத்துப்பழங்களுக்கு மேல் வயிறு போடாதே என்றது, நாக்கு எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடுவேன் என்றது, இந்தச் சில நாட்களில் இரண்டு கிலோ குறைந்திருக்கிறேன், இப்படியெல்லாம் டயட் இருந்தாத்தான் உண்டு என்ற மைண்ட் வாய்ஸை அடக்கி பசி மறந்த துறவி நிலைக்கு தயார் படுத்திக்கொண்டிருக்கிறேன்! 

தொடர்ந்த நாட்களில் இன்னமும் இந்த ஊரின் சுத்தத்தை வியந்துகொண்டிருக்கிறேன், நம்முடைய பிரதமர் சீனப்பயணம் மேற்கொண்டு “சுவச் பாரத்தை” சீனாவில் பரப்பியதால்தான் இந்த மாற்றம் என்று இந்தியச் சங்கிமங்கிகளைப் போல் யோசித்துக்கொண்டிருக்கிறேன்!
#சீனப்பயணம்4

சீனப்பயணம்

வழக்கம் போல பணிகள், வழக்கமில்லாத உணவுகள், அருமையான மனிதர்கள், அழகான ஒரு மென்பொருள் அலுவலங்கள் நிறைந்த நகரமாக இருக்கிறது டாலியன், “டாலியன் பெஸ்ட் சிட்டி” என்ற பெயர் பலகைகளை பல இடங்களில் பார்க்க முடிகிறது.
“எத்தனை மணிக்கு யார் வந்து நகரை சுத்தப்படுத்துவது?” என்று கேட்கிறேன், விடிகாலையில் வந்து அரசு குப்பை வாகனங்கள் சுத்தம் செய்யும் என்றார்கள், கண்முன்னே ஒரு இடத்தில் குப்பையை அள்ளி வீதியெங்கும் உதிர்த்துச்செல்லும் சென்னை மாநாகராட்சியின் வாகனங்கள் கண்முன்னே வந்தது, மக்களும் குப்பைகளை குப்பைத்தொட்டிகளை தேடிப்போடுகின்றனர், விதிவிலக்குகளையும் காண முடிகிறது!
அலுவலகம் விட்டு திரும்பி வந்தப்பிறகு தங்கியிருந்த ஹோட்டலில் ஒரு மாடியில் சீன உணவகம் இருக்கிறது என்று தெரிய வர, இன்றைக்காவது ஒரு ஃப்ரைட் ரைஸ் - அரிசி சாதம் சாப்பிடுவோம் என்று சென்றேன்.
நல்லவேளை அங்கிருந்த பெண் கையில் டேப்லெட் வைத்துக்கொண்டு உணவு வகைகளைக்காட்ட எல்லாவற்றிலும் பன்றியும் மாடும் இருந்தது, (இவர்களுக்கு அதிகமான ஏற்றுமதி செய்வது இந்தியா என்பது உபரித்தகவல், அங்கே சாப்பிட்டால் கொலை, இங்கே ஏற்றுமதி செய்தால் வியாபாரம்), ஒரு குழந்தையிடம் பேசுவது போல, “இது எல்லாம் இல்லாமல் ஒரு முட்டை ப்ரைட் ரைஸ் வேண்டும், மற்றும் அதிலிருந்த ஒரு நண்டுக்கறியும் வேண்டும்” என்று ஒவ்வொரு வார்த்தைகளாய் பிரித்துச் சொல்ல, சிறிது நேரத்தில் அங்கிருந்த ஒரு வாடிக்கையாளாராய் நான் இருக்க (எனக்கு அப்பவே சந்தேகம் வந்திருக்க வேண்டாம்?!) சிறிது நேரத்தில் உணவு வந்தது, “ப்ரைட் ரைஸ் இங்க இருக்கு, நண்டு எங்கேயிருக்கு?” என்று கேட்க, அதுவும் அதில்தான் இருக்கு என்று வாழைப்பழ பகடியை நினைவுறுத்த, சரி எப்படியும் வயித்துல ஒன்னாதானே போகப்போகுது என்று சாப்பிட, ரொம்ப நாள் கழித்து நாவிற்கு சுவை தெரிந்தது, கொஞ்ச நேரத்தில் வாயில் ஏதோ தட்டுப்பட, கையில் எடுத்துப்பார்த்தால் ஒரு கண்ணாடித்துண்டு, “சீ திஸ்” என்று கூப்பிட்டுக் காட்ட, அந்தப் பெண் மன்னிப்புக்கேட்க, சரி ஏதோ ஒன்று வந்திருக்கலாம், உணவை ஏன் வீணடிக்க வேண்டும் என்று சாப்பிட, உணவு முழுக்க கண்ணாடிச் சில்கள் எப்படியோ அரைப்பட்டிருந்தது, அப்படியே வைத்துவிட்டு எழ, அந்தப்பெண் பல தடவை மன்னிப்புக்கேட்டு ஓடிப்போய் பழங்களை கொண்டு வந்து சாப்பிடுமாறு சொல்லி, மீண்டும் புதிதாய் உணவு செய்து தருகிறேன் என்று சொல்ல, கொஞ்சம் சாப்பிட்ட கண்ணாடி உணவே போதும், மொழியே புரியாதவர்களிடம் என்ன சொல்லி என்ன செய்ய என்று நினைத்துக்கொண்டு, “எனக்கு வருத்தம் இல்லை, பசி இல்லை, வேண்டாம்!” என்று மறுத்துவிட்டு அறைக்கு வந்துவிட, அரைமணிநேரத்தில் வாயிலில் மணியோசை கேட்டது, கதவைத்திறந்தால் அந்தப்பெண் புதிதாய் செய்ய அதே போன்ற உணவுடனும், பழத்தட்டுடனும் நிற்க, பசியே இல்லாமல் அந்த உணவை வாங்கி வீணடிக்க மனம் வராமல் பல முறை தன்மையாய் எடுத்துக்கூறி மறுக்க, புரிந்தும் புரியாமலும் அந்தப்பெண் மன்றாடி மன்றாடி கண்கள் கலங்கிவிட, அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் உணவை வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தேன்!
சில பணிகளை முடித்துவிட்டு கண் எதிரே இருந்த உணவை சாப்பிட்டே தீர வேண்டிய கட்டாயத்தில் சாப்பிடத் தொடங்க, இரண்டு வாய் உண்ட பின், தட்டில் ஏதோ வித்தியாசமாய் இருக்க, உற்று உற்றுப் பார்த்ததில் அது ஒரு பூச்சி, அப்படியே உணவை ஓரமாய் வைத்துவிட்டு விதியை நினைத்துச்சிரித்து உறங்கச்சென்றேன்!
இத்தனை நடந்தும் நான் வர வேண்டும் என்று அந்தப்பெண் கேட்டுக்கொண்டதால் அதே இடத்திற்குச் சென்று, பிரித்து உடைத்து ஆங்கிலத்தில், “இங்கே பாரு அதே ரைஸ்தான், ஆனா மாடு, பன்றி அப்புறம் பூச்சியில்லாமல்!” என்று சொல்லிவிட்டு காத்திருக்கிறேன், தி(கி)ல்லுடன்! 🙄🤭
#சீனப்பயணம்5

சீனப்பயணம்

முதலில் சென்ற ஹோட்டலில், இரவு கொலை பட்டினி, நடு இரவுக்கு மேல் உறங்கி, பிறகு விடிந்ததும் கொஞ்சம் அலுவலக பணி செய்துவிட்டு, பத்துமணிக்கு கிளம்பினால் காலை உணவு இல்லை என்றார்கள், “சரி நான் ரூமுக்கு போறேன், ரூம் சர்வீஸ் இருக்கில்ல?” என்றால் உணவே இல்லை என்றார்கள், “நோ” வைத்தவிர ரிஷப்ஷனில் இருந்த மூன்று பெண்களுக்குமே ஆங்கிலம் தெரியவில்லை, சாப்பிடுவது போல கையை வாய்க்கருகில் கொண்டு சென்று காட்ட, கையை வெளியே காட்டி உடைந்த ஆங்கிலத்தில் வெளியே சென்று சாப்பிடச்சொன்னார்கள், இன்னமும் பொறுமையாய் “ஐ யம் ஸ்டெயிங் இன் யு யர் ஹோட்டல்” என்று சொல்ல, “யா, அவுட்சயிட் அவுட்சயிட்” என்றார்கள், மனதுக்குள் காலையும் பட்டினிதான் என்று உறுதி செய்துக்கொண்டு, தண்ணீராவது குடிக்கலாம் என்று, “குட் யு கீவ் மீ எ வாட்டர் பாட்டில் ப்ளீஸ்?” என்று சொல்ல, “ய அவுட்சயிட் அவுட்சயிட்” என்று திரும்பவும் சொல்ல, கொஞ்சம் பொறுமையிழந்து ஆங்கிலம் தெரிந்த ஒருவரை வரச்சொல்ல முடியுமா என்று கேட்க, வாட்டர் என்பதை புரிந்துக்கொள்ள ஒரு இளைஞன் வந்து புரிந்துக்கொண்டு தண்ணீர் கொடுக்க, தெய்வமே என்று நிம்மதியடைந்து நன்றி சொல்லி நகர்ந்தேன்! 

முந்தைய இரவே கொஞ்சம் ஆங்கிலம் புரிந்த பெண்ணிடம் அலுவலக முகவரியை காட்டி அதை அப்படியே மாண்டரினில் எழுதி வாங்கிக்கொண்டேன், அப்படியே அந்த ஹோட்டலின் முகவரியையும், வெளியே ஒரு காரை நிறுத்தி, ஒன்றும் பேசாமல், விஜய் மல்லையா ஓடிய பிறகு இன்காம்டாக்ஸ் ரெய்டுக்கு வந்த அதிகாரியை போல மொக்கையாய் வாய் திறக்காமல் காகிதத்தில் உள்ள முகவரியை காட்டி கையை சாலையின் முன்னே காட்ட, புரிந்துக்கொண்ட காரோட்டி கதவைத்திறந்து விட, ஒருவழியாய் ஏறி அலுவலகம் சென்றேன்!

வாசலிலேயே வரவேற்று வந்திறங்கியது தெரியாது என்று மன்னிப்புக்கோரியவர்களிடம் ஒரு இரவு முழுக்க நடந்தேறிய சாகசத்தை சொல்லாமல், ஒன்றும் பிரச்சினையில்லை, அருமையான பயணம் என்று பணியைத்தொடர்ந்தேன்! மதியம் உணவு உண்ண அலுவலகம் பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கு எல்லோரும் அழைத்துச்செல்ல, உணவு பட்டியலில் உருளைக்கிழங்கு சாதம் என்று பெயரையும் பளிச்சென்ற படத்தையும் பார்க்க, முந்தைய இரவில் இருந்து தண்ணீர் மட்டும் பார்த்த வயிறு ஆனந்தமாய் போடு போடு என்று கூப்பாடு போட, “ப்ளீஸ் ஆர்டர் திஸ் ஃபார் மீ” என்று சொல்ல, “நோ அமுதா தட் ஈஸ் போர்க் (பன்றிக்கறி)” என்றார்கள், “அடப்பாவிகளா உருளைக்கிழங்குன்னு போட்டுட்டு அதுல பன்னியையும் சேர்த்தாட போடுவீங்க?!” என்று நொந்துக்கொண்டு, “ப்ளீஸ் ஆர்டர் எனிதிங் வெஜ்!” என்றேன், சுடச்சுட சட்டி நிறைய வெறும் சாதமும், அதன் மேல் கொஞ்சம் சிக்கன் குழம்பும், பக்கத்தில் கொஞ்சம் இலைதழையும் வந்தது!”

#சீனப்பயணம்3

சீனப்பயணம்

ஏதோ ஒரு தகவல் பரிமாற்ற தாமதத்தில், சீனாவுக்கு இரவு வந்து சேர்ந்தது, அடுத்த நாள் காலையில்தான் சீன அலுவலகத்துக்கு தெரிந்திருக்கிறது (அதை அப்புறம் போய் கவனிக்கலாம்) இரவு பத்தரை மணிக்கு விமானம் வந்திறங்க, கம்பெனியின் சிம் கார்டை எடுத்து கைபேசியில் போட அது வேலை செய்யவில்லை, முன்னெச்சரிக்கையாய் ரீசார்ஜ் செய்த வோடாபோன் பேசுவதற்கு பதில் ஜிஎஸ்டி ஆக்டிவேஷன் என்று எல்லாவற்றையும் ஏப்பம் விட்டிருந்தது. சீனாவில் வாட்ஸ் ஆப், கூகுள், யூடுயுப் முதலியவை வேலை செய்யாது என்ற தோழியின் தகவலின்படி, டவுன்லோட் செய்திருந்த விபிஎன்னை ஆக்டிவேட் செய்ய, ஹாங்காங்கில் கேள்வியே கேட்காமல் வைஃபை வந்தது போல இங்கு வரவில்லை, கைபேசி முழுக்க மாண்டரின் எழுத்துக்கள் மின்ன, அருகே இருந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம் எனக்கு வைஃபை வேண்டும் என்று எப்படியோ புரிய வைக்க, அவர் அவருடைய தகவலை கைபேசியில் தந்து இணைய இணைப்பை ஏற்படுத்திக்கொடுக்க ஒரு வழியாய் வீட்டுக்கு தகவல் கொடுத்து நிமிர, விமான நிலையம் வெறிச்சோடி போயிருந்தது!
24 மணி நேரத்திற்கும் மேல் தூக்கமில்லாமல் வந்த அலைச்சலில் நிதானமாய் நடந்து பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியே நடக்க, ஏதோ தன் ஃகேர்ள் பிரண்டுக்காக காத்திருந்து கண்டதும் மகிழ்ச்சியாய் ஓடி வந்தவனை போல ஒருவன் அத்தனை துள்ளலாய் ஓடி அருகில் வந்து ஹாலோ என்க, “டேய் யாருடா நீ!” என்று கொஞ்சம் ஜெர்க் ஆனேன், ஒருவேளை அலுவலகத்தில் இருந்து வந்தவரோ என்று யோசித்தாலும் கையில் பெயரட்டை இல்லை, “வு ஆர் யு?” என கேட்க, “டேக்ஸி?” என்றாரே பார்க்கலாம், அடேய் என மனதுக்குள் நொந்துக்கொண்டு “நோ நோ ப்ளீஸ்” என்று நகர்ந்து வர அங்கே ப்ரீபெய்ட் டாக்ஸி கவுண்டரில் ஆளே இல்லை!
கையில் இருந்த முகவரியை எடுத்து அதில் தப்பித்தவறி அந்த ஊர் மொழியில் முகவரி இருக்கிறாதா என்றால் இல்லை, கையில் பேப்பரை வைத்துக்கொண்டு யோசிப்பதை பார்த்ததும் முதலில் வந்தவரே அருகில் வர, சரி பார்க்கலாம் என்று “இந்த முகவரியில் என்னை கொண்டு விட முடியுமா என்று கேட்க, அட்சர சுத்தமாய் அவருக்கு ஆங்கிலம் புரியவில்லை, ஹா ஹீ ஹே என்ற இந்த ஒலிகளுக்கு எனக்கும் அர்த்தம் புரியவில்லை, இருந்தாலும் என் கையில் இருந்த ட்ராலியை சட்டென்று பிடுங்கிக்கொண்டு ஓட, கடவுளே என்று அந்த ஓட்டுநனரின் பின்னேயே நானும் ஓட, “பயபுள்ள டக்குன்னு டாக்ஸிக்குள்ள பெட்டியை தூக்கி வைக்க” வேறு வழியில்லாமல் நானும் ஏறி உட்கார்ந்துக் கொண்டேன், மறுபடியும் அவர் முகத்துக்கு நேரே பேப்பரை காட்டி, “டு யூ அன்டர்ஸ்டாண்ட்?” என்று சந்தேகமாய் கேட்க, புதுசாய் பேப்பரை மறுபடியும் பார்த்து, மூக்கிலேயே பேச, யோசனையை அமர்ந்திருந்தேன், கையில் கார்ட் இருந்தது, காசு இல்லை, “கார்ட் ஆர் ஃகேஷ்?” என்று கேட்க மீண்டும் ஏதோ ஒலி!
விமான நிலைய கட்டண நுழைவாயிலில் கார் தேங்க, சட்டென்று கார் கதவை திறந்து குதித்து, அங்கிருந்த பெண்ணிடம் முகவரியை காட்டி ஓட்டுநனருக்கு இந்த முகவரியை புரிய வைக்க முடியுமா என்றேன், இரண்டு பேரும் முக்காலே ஏதோ பேசிக்கொள்ள, சாட்சியை உருவாக்கிவிட்ட திருப்தியுடன் இப்போது கொஞ்சம் தைரியமாய் ஏறி உட்கார்ந்தேன். கையில் காசு கிடையாது என்பதை மறுபடி மறுபடி ஓட்டுநனருக்கு புரிய வைக்க, சட்டென்று யாருமற்ற ஒரு பகுதியில் கார் நின்றது, ஏடிஎம் என்று வண்டியை விட்டு அவர் இறங்க, சரி இந்தப் பைகளை எப்படி நம்பி விட்டுப்போவது என்ற யோசனையில் கைப்பையையும், லேப்டாப் பையையும் எடுத்துக்கொண்டு இறங்க, ஒட்டுநனரும் கூடவே இறங்கி உடன் வர (டேய் நீ ஏன்டா கூடவே வர?”) என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டே ஏடிஎம்மில் நுழைந்து காசு எடுத்து ஒருவழியாய் ஹோட்டல் வர, ஒட்டுநனருக்கு நன்றி சொல்லி, செக் இன் செய்து, சோறு இருக்கிறாதா என்று கேட்டால் பத்து மணிக்கு மேல் சாப்பாடே கிடையாது என்றார்கள், வேண்டும் என்றால் ரூம் சர்விஸில் ஆர்டர் செய்து கொள்ளலாம் என்க, அட்டை முழுக்க மாடும், பன்றியும், டாஸ்மாக் சமாச்சாரமும் நிறைத்திருந்தது படங்களாய், மருந்துக்கும் ஆங்கிலம் இல்லை, ரூம் சர்வீஸுக்கு போன் செய்யலாம் என்றால் அந்தப் பொத்தான்கள் செயலற்று போயிருந்தது!
#சீனப்பயணம்2

சீனப்பயணம்

ஹாங்காங்கில் வந்திறங்கிய முதல் நாளே, ரன் லோலா ரன் (?)என்ற ஜெர்மனியப்படத்தில் வருவதுபோல ஓட வைத்துவிட்டார்கள், ஒரே நாளில் ஒரு கிலோ கரையுமளவுக்கு நடையோ நடை, கிட்டதட்ட ஆறு மணி நேரம் நடையும், 15 நிமிட மின்னல் வேக ஓட்டமும் (பள்ளியில் நடந்த
ஓட்டப்பந்தயத்தை விட மிக வேகமான ஓட்டம்).

அலுவலக வேலையாய் சீனப்பயணம், ஒன்பது மணி நேரம் ஹாங்காங்கில் காத்திருந்து அடுத்த விமானத்தில் டாலியன், சீனா செல்ல வேண்டிய காத்திருப்பில், 5:25 க்கு விமான புறப்பாடு, 4:30 மணிக்கு கேட்டில் இருக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்கள்!

காலை ஆறரைக்கு வந்திறங்கி, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, எல்லா உணவுகளிலும் விதவிதமான இறைச்சிகளே நிறைந்திருக்க, பசிக்கு விமானத்தில் நான்கு மணிக்கு சாப்பிட்ட ஒரு ஸ்பூன் (!) பொங்கலும் ஒரு பன்னுடனும் திருப்திப்பட்டுக்கொண்டு நடந்தேன்!

நடந்து உட்கார்ந்து பின் உறக்கம் வர, அதைத் தவிர்க்க பின் எழுந்து நடந்து, சுமார் 530 வாயில்களை கொண்ட பெரிய விமானநிலையத்தில் ஒரு வழியாய் நடந்துக் களைத்து, வேகமான ஆங்கிலத்தை மெதுவாய் வார்த்தைகளைப் பிரித்து உச்சரித்து மதிய உணவுக்கு ஒரு வெஜ் (காய்கறி) ஃப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்து சாப்பிட, பசி மயக்கத்தில் பாதி உண்ட பிறகு ஏதோ கருப்பாய் தோலுடன் பாதி வெள்ளையாய் இருக்க, இது என்ன காளானா என்று கேட்க, ஆமாம் என்று உணவு விடுதி பணியாளர் தலையாட்ட, ஏதோ ஒன்று நெஞ்சுக்குள் உருள அதற்கு மேல் சாப்பிடமுடியாமல் எழுந்தேன்.

சீன மொழியிலும் ஆங்கில மொழியிலும் மின்னிய பல விமானங்களின் அறிவிப்பு பெயர் பலகை கண்ணைக்கட்ட “வாட் இஸ் த கேட் நம்பர் ப்ளீஸ்?” என்று விமான சேவை அலுவலகத்தில் கேட்க, ஒரு மணிக்கு பார்க்கவும் என்றார்கள், அப்போது மணி ஒன்றரை என்க, இரண்டு மணிக்கு அறிவிப்பு பெயர் பலகையை பார்க்கச் சொன்னார்கள், அப்படியே இரண்டு, மூன்று, நான்கானது, அறிவிப்பு மட்டும் இல்லை, விமானம் 5:25 புறப்படும் என்று அறிவிப்பு இருந்ததே ஒழிய, எந்த “கேட்” எண் என்ற அறிவிப்பு நான்கே முக்கால் வரை இல்லை, ஒரு வழியாய் விமான நிலைய சிப்பந்தியாய் ஒரு இந்திய முகம் தெரிய, “4:30 ஏற வேண்டும் 5:25 விமானம் கிளம்பும் என்றால் இப்போது வரை கேட் எண்ணே சொல்லவில்லையே, திடீரென 530 கேட்களில் என்னை 525 க்கு போகச்சொன்னால் (ஏன் இப்படி?) நான் எப்படி இந்த 60 எண்ணில் இருந்து இந்தக்கூட்டத்தில் ஓடுவது என சலிப்படைய”, அந்தப் இந்திய சீனப்பெண் (அவர்களுடைய ஆங்கிலமும் காதில் சீன மொழியைப் போல) “விமானம் தாமதமாய் இருக்கலாம், இந்த அறிவிப்பு பலகையை பார்ப்பதை தவிர வேறு வழியில்லை, வேண்டுமானால் நடுவே நின்றுகொண்டு அறிவிப்பு வந்தால் ஓடலாம் (நேரம்!)” என்று சொல்லிவிட்டுச் செல்ல, பார்கோட் மெஷின் இருந்த இடத்தில் டிக்கட்டை ஸ்கேன் செய்ய, இன்னமும் கேட் அறிவிக்கப்படவில்லை என்க, கொஞ்சம் தள்ளி அறிவிப்புப் பலகையை பார்க்க, மணி 4:50!

டேலியனுக்கு 5:25 விமானம் புறப்படும் என்ற அதே அறிவிப்பில் (அடேய்!) 525 கேட் நம்பர் என்று மின்ன, என் வாயில் வசம்பை வெச்சு தேய்க்க என்று மனதுக்குள் திட்டிக்கொண்டு “எக்ஸ்க்யூஸ்மி” என்று 525 ஐ நோக்கி தலைத்தெறிக்க கைப்பை லேப்டாப் பேக் முதற்கொண்டு வாரி “ரன் லோலா ரன்” என ஸைன் போர்டுகளை பார்த்துக்கொண்டு வலது, இடது, நேரே, கீழே, திரும்பவும் மேலே என்று ஓடி 525 க்கு வந்தால் மணி 5:04, கூட்டம் மொத்தமும் அப்படியே நிற்கிறது, ஒரு வழியாய் டிக்கெட் பாஸ்போர்ட் செக் செய்து நிற்க, ஆறரைக்கு போர்டிங் தொடங்க அப்போதும் அறிவிப்புப் பலகையில் 5:25 விமானம் புறப்படும் என்ற செய்தியே அந்த 525 ஆவது நுழைவாயிலிலும் மின்னிக்கொண்டிருந்தது!
#ஹாங்காங் #சீனப்பயணம்1

Tuesday, 29 August 2017

யாருக்கோ வலிக்கிறது

சில நாட்களுக்கு முன்பு, ஒரு ஒன்பது வயது பெண்குழந்தை டெங்குக்காய்ச்சலால் தனியார் மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருக்க, அவளின் உடல்நலனுக்காக, இரத்ததானத்திற்கும், பணத்தேவைக்கும் பதவிவிட்டிருந்தேன்! இந்தக்குழந்தை மூளைச்சாவு அடைந்துவிட்டதாக இன்று காலையில் செய்தி வந்தது! இருப்பினும் மருத்துவர்கள் அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைத்திருக்கிறார்கள்! ஏற்கனவே போட்ட பதிவை நீக்கி விட்டேன்!

உங்கள் பிரார்த்தனைகளே அந்தக்குழந்தைக்கும், ஏற்கனவே கணவனை இழந்துவிட்ட அந்தத் தாய்க்கும் தேவை! நிற்க
ஒன்பது வந்து பெண்குழந்தைக்கு, காய்ச்சலின் காரணம் தெரியாமல் ஏதோ மருந்துகள் கொடுத்து, பின் வீரியம் அதிகரிக்க, உறுப்புகள் பாதிக்க, மருத்துவமனையில் சேர்க்க, டயாலிஸிஸ் போன்ற வலி நிறைந்த சிகிச்சைமுறை வரைச்சென்றும், கடையில் வலிமிகுந்த மூளைச்சாவு என்று செய்திவரும்போது, அது கடும் மனஉளைச்சலைத் தருகிறது!
ஜனனம் ஒன்று இருந்தால் மரணமும் நிச்சயம்தான் எனினும், இளம் வயதில் குழந்தைகளின் பெரும்பாலான மரணங்கள் நிகழ்வது அலட்சியத்தாலும் அஜாக்கிரதையாலும் தானே? டெங்குவுக்கு காரணமான கொசுவை ஒழிக்க குறைந்தபட்சம் சுத்தத்தை மக்களும் அரசும் உறுதி செய்திருக்கிறார்களா என்றால், இல்லை! குப்பைகளை இந்த அரசு மறுசுழற்சி செய்கிறாதா, இல்லை, அது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் மாறுகிறது, அவ்வளவே!

நிலவேம்பு குணமளிக்கிறது என்றால் அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏன் போதிய அளவில் அரசாங்கம் ஏற்படுத்துவதில்லை? ப்ரேக்கிங் நியூஸ் பார்க்கும் மக்களுக்கு ஆரோக்கியத்தைப் பற்றிய தேடலும் குறைந்துதான் போயிருக்கிறது! அரசாங்கம் ஏன் எல்லா மருத்துவமனைகளிலும் நிலவேம்பை கட்டாயப்படுத்துவதில்லை?
ஓ எம் ஆர் சாலைகளில் நாள்தோறும் விபத்துக்கள், அரசாங்கம் செய்வது என்ன, செப்டம்பர் ஒன்று முதல் எல்லோரும் அசல் லைசென்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான், புற்றீசல் போல் பெருகிக்கிடக்கும் வாகனங்களை, ஒவ்வொரு பெரிய சாலையிலும் ஒரேயொரு காவல்துறை அதிகாரி நின்றுகொண்டு என்ன செய்து சீர்படுத்துவார்??

ஓட்டைப்பேருந்து, லைசன்ஸ் இல்லா ஓட்டுநர், சில குழந்தைகளின் மரணம், பின்பு ஒரு கண்துடைப்பு நாடகம், நீச்சல் குளம், மின்விசிறிகள், மின்தூக்கிகள், டிவி பெட்டிகள், தண்ணீர் தொட்டிகள், ஆழ்துளைக் கிணறுகள், சாலையில் தொங்கும் மின்சார கேபிள்கள், தூக்குமாட்டிக்கொள்ளட்டும் என்ற ரீதியில் ஊஞ்சலாடும் பல்வேறு ஒயர்கள், ஆக்ஸிஜன் இன்றி பறிபோகும் உயிர்கள், குண்டும் குழியுமாய் சாலையில் நிறைந்திருக்கும் மரண பள்ளத்தாக்குகள், பாலியல் வன்கொடுமைகள், ப்ளூவேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகள், தலைக்கவசமின்றி, சீட் பெல்ட் இன்றி, ஓரே பைக்கில் பணத்தை மிச்சம் செய்ய நான்கு பேர்கள் என்று பிள்ளைகளை வைத்து சாகசப்பயணம் மேற்கொள்ளும் அப்பன்களாலும், ஆத்தாக்களாலும், வேடிக்கைப் பார்க்கும் அரசாலும் என்று இந்த நாட்டில் விபத்துகளாலும், நோய்களாலும் குழந்தைகளின் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன!

கொத்துக்கொத்தாய் மக்கள் செத்தாலும், எல்லாவற்றிற்கும் நிவாரணம் என்று மக்கள் வரிப்பணத்தை தன்னுடைய கையாலாகத்தனத்திற்கு எடுத்து நீட்டும் அரசாங்கம், ஒவ்வொரு மரணமும் வெறும் எண்ணிக்கையாக பார்க்கப்படும் நாட்டில் உயிர்களுக்கு மதிப்பில்லை, பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கும் இன்றைய இந்த ஆட்சியாளர்களுக்கும் உருவமும் நிறமும் மட்டுமே வித்தியாசம், மற்றப்படி பதவி பணம் என்ற இரண்டிற்காகவும் எதையும் செய்கிறார்கள் ஆட்சியாளர்கள், யாருக்கோ வலிக்கிறது எனக்கென்ன என்று இருக்கிறோம் நாம்!

Tuesday, 8 November 2016

#Spain_1 #ஸ்பெயின்

அழகான நகரம் ஸ்பெயின்!

படுசுத்தமாய் இருக்கிறது சாலைகள் பெரும்பாலான ஐரோப்பிய நகரங்களின் சாலைகளைப் போல்! இங்கே கூவத்தை சுத்தப்படுத்துவோம் என்று அரசியல்வாதிகள் வாக்கு சேகரிக்க முடியாது என்பது ஒரு துயரமான விஷயம், சென்னையில் நான்கடி நடைபாதைகளைக் கூட வியாபாரிகளும் வாகனங்களும் ஆக்கிரமித்துக் கொண்டதால், சாலையில் படுகவனமாய் ஊர்ந்து சென்ற அனுபவத்தில் இருந்து, ஒரு தற்காலிக விடுதலை உணர்வு இந்த ஸ்பெயின் நகரத்தின் ஒரு சாலை அளவுக்கு பரந்திருக்கும் நடைபாதையில் நடக்கும்போது கிடைக்கிறது!

ஒரு கைக்குட்டையை விட சற்றே பெரிய அளவில் தைத்தத் துணியே பல யுவதிகளுக்கு போதுமானதாய் இருக்க, எந்த ஆண்களும் அவர்களை வெறித்து நோக்கவில்லை, தன் இணையைத் தவிர பிற பெண்களை அவர்கள் உரசுவதோ கைப்பேசியில் புகைப்படம் எடுத்து புரட்சி பேசுவதும் இல்லை!
எல்லோருமே குடிக்கிறார்கள், பெரும்பாலானோர் புகைக்கிறார்கள், அழகிய நடைபாதைகளில் புகையில்லாத இடமாக பார்த்து நிற்க வேண்டியிருக்கிறது! இல்லையென்றால் புகைப்பது பிறரா நாமா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது! ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் குழந்தைகள் சட்டென்று பெரியவர்கள் ஆகிவிடுகிறார்கள், இரவு நடன விடுதிகள் நிரம்பி வழிகிறது! ஒன்றிரண்டு காதல் காட்சிகள் காணக்கிடைக்கிறது!

இரயில் நிலையம் அத்தனை சுத்தமாய் இருக்கிறது, தண்டவாளத்தில் தூக்கி எறிந்த பிளாஸ்டிக் பைகளோ மீந்த உணவுப் பொட்டலங்களோ, பீர் பாட்டில்களோ, மலக்கழிவோ எதுவுமே இல்லை! காற்றில் உதிரும் சருகுகளைக் கூட எடுத்து குப்பைக் கூடைகளில் சேகரிக்கிறார்கள்! அதிகமாய் குடித்துவிட்டால், தம் வாகனத்தை விட்டுவிட்டு, வாடகை வண்டியில் பயணிக்கிறார்கள், குடித்துவிட்டு செய்யும் எந்த தவறுக்கான தண்டனையில் இருந்தும் தப்ப முடியாதாம்!

ஸ்பானிஷ் பேசுபவர்கள் என்றாலும் காட்டலுனியா என்ற பழங்குடிகள் தங்களை ஸ்பேயின் மக்கள் என்று சொல்வதைத் காட்டிலும், காட்டலுனியன் என்றே சொல்லிக் கொள்கிறார்கள், அவர்களே கடுமையான உழைப்பாளிகள் என்றும் அறியப்படுகிறார்கள்!

அப்படியே இரயிலில் பயணிக்கும் போது, கரடுமுரடான பாடலும் அல்லாத பேச்சும் அல்லாத ஒரு பாடலை குழுவாக சில பெண்கள் பாட, அவர்கள் அனைவரும் கறுப்பு உடையிலும், நடுவே ஒரு மணப்பெண் வெள்ளை உடையிலும் இருக்கிறார்! திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு, மணப்பெண்ணுக்கான திருமணத்திற்கு முந்தைய சடங்காக அதைச் செய்கிறார்கள்! மணமகனின் புகைப்படம் தாங்கிய, மற்றும் சில வாழ்த்துகள் நிரம்பிய பதாகைகளை ஏந்தியபடி பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் செல்கிறார்கள், முதிய பெண்மணி ஒருவர் விசில்
அடித்துக் கொண்டே செல்கிறார், கர்ணகடூரமாய் ஒலிக்கும் அந்த பாடலையும் விசிலையும் தாண்டி அவர்களின் மகிழ்ச்சியை ரசிக்கவே தோன்றுகிறது, சொந்த ஊரில் நடக்கும் மாப்பிள்ளை ஊர்வலத்தைப் போல இருக்கிறது!
இறுக்கமான சூழலில் கடந்த ஆறு நாட்களாய் விடியற்காலையில் இருந்து இரவு வரை நடந்து முடிந்த அலுவல் சம்பந்தமான வேலைகளில் இருந்து இந்த ஞாயிறுதான் கொஞ்சம் சோம்பலாய் ஏழு மணிக்கு விடிந்திருக்கிறது!

நாளை குழந்தைகளையும் தாய் நாட்டையும் பார்க்கும் ஆவலில், இன்று இந்த மிதமான மழையையும், பச்சைப் பசேலென்ற வீதிகளையும் ரசித்தப்படி இந்த ஒரு நாள் மட்டும் ஸ்பெயினில் மிக அழகாக நகர்ந்து கொண்டிருக்கிறது!

ஸ்பெயின் 2

ஒருநாள் முழுதும் ஸ்பெயின் நகர வீதியில் நடந்து நடந்து கைபேசியில் எடுத்த புகைப்படங்கள்! அற்புதமான வீதிகளும், சுத்தமான சாலைகளும், அழகிய துறைமுகமும், நிறைய உணவு விடுதிகளும், நிறைய வகை மதுபானங்களும் (அங்கே போய் நான் லெமன் ஜூஸ் தான் குடிச்சேன்னு சொன்னா நம்பனும்!) பலவூர் நாட்டு மக்களும் என மிகக் கொண்டாட்டமாய்ப் போனது அந்தப் பொழுது!

உணவென்று வரும்போது மட்டுமே என் நிலைமை திண்டாட்டமானது, கடல் உணவுகளையாவது சாப்பிடலாம் என்று நினைத்தபோது, பாதி வெந்த உயிரினங்களை அதன் முழு வடிவத்தில் தட்டில் பரப்பிய போது, பல வருடங்களாக இவைகளைச் சாப்பிடும்போது வராத துக்கம் எல்லாம், மொத்தமாய் வந்து தொண்டையில் வந்து அடைத்துக் கொண்டது, இதையெல்லாம் அம்மா கிட்டே கொடுத்தா எவ்வளவு அழகாச் சுத்தம் பண்ணி மசாலா போட்டு வறுத்துத் தருவாங்க என்று நினைத்து வந்த துக்கம் அது!) எல்லாவற்றையும் ஓரமாய் ஒதுக்கி வைத்துவிட்டு, மிஞ்சியிருந்த சாதத்தின் அளவைப் பார்த்தால் ஒரு மூன்று தேக்கரண்டி அளவு இருந்தது! அப்படியே பச்சை மீன் வாசம் வந்ததால் சாப்பிட்டதாய்ப் பேர் பண்ணிவிட்டு, அந்தப் பொழுது உணவை ஒரு ஐஸ் கிரீமில் முடித்தேன்!

குழந்தைகளை வைத்து யாரும் பிச்சையெடுக்கவில்லை, ஆனால் "என் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள், எனக்கு வேலையில்லை, உதவுங்கள் என்று அவர்களின் புகைப்படத்தை வைத்துக் கைக் கூப்பி, அதைத் தரையில் வைத்து, அதன் மீது தலையை வைத்து விழுந்து உதவிக் கேட்கிறார்கள்! மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் ஸ்பெயின் நகர மக்கள் உதவும் குணம் அதிகம் கொண்டவர்கள் என்று என்னுடன் வந்த ஒரு டச்சு நாட்டவர் சொன்னார்!

புகைப்படங்களைக் கொண்டு பிச்சையெடுப்பவர்களைக் கடந்தால், தன் உருவத்தையே முழுதாய் மாற்றிக் கொண்டு, விதவிதமான கதாபாத்திரங்களாய்த் தன்னை உருமாற்றி, அந்தத் துறைமுக வீதி வழியே நிற்கிறார்கள், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பும் சுற்றுலாப்பயணிகள் தாங்கள் விரும்பும் சில்லறையை அவர்களின் உண்டியலில் போட்டுப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம், நானும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்!

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு இந்தத் துறைமுக வழியேதான் பயணத்தைத் துவங்கினாராம், அவர் நினைவாகச் சிலை வைத்திருக்கிறார்கள், மிகப்பிரமாண்டமாய் இருக்கிறது அது, கைபேசியில் ஒரு ஷாட்டில் அடைக்க முடியவில்லை!

துறைமுக மேம்பாலத்தில் நடந்தபோது, கீழே ஓடிய, பரந்தக் கடலைப் பார்த்தபோது, நீச்சல் தெரியாதது நினைவுக்கு வந்தது, அந்த மரப்பாலத்தில் அத்தனை மனிதர்களும் இருசக்கர வாகனங்களும் ஏறியபோது, நம் ஊர்ப் பாலங்களின் தரத்தின் நினைவில் அந்தப் பாலத்தை விட மனது பயத்தில் ஒரு மெல்லிய ஊசலாட்டம் போட்டது!

அப்படியே கடந்து பிரமாண்டமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் நுழைந்தோம், கொளுத்தும் வெயிலில் என்னுடைய அப்போதையத் தேவை ஒரு ஜோடிக் காலுறைகள், வாங்கி அணிந்தபின்தான் நடக்க முடிந்தது, அதுவரை அந்த வெயிலில் பாதங்கள் தீய்ந்து கொண்டிருந்தது!

உடன் வந்தவர்கள் கடைகளில் நுழைய, நானும் மற்றொருவரும் ஓரமாய் நின்று மற்றவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்க, எதிரே இருந்த நகரும் படிக்கட்டுகளில் இருந்து ஒரு பெண் கதறி கதறி அழுது கொண்டே வர, "அந்தப் பொண்ணு ஏன் இப்படித் தேம்பி தேம்பி அழுவுறா, ஐயோ பாவம்" எனக் கூற அருகே இருந்த அமெரிக்கர், "லவ் பிரேக் அப் ஆகியிருக்கும்" என்றார் (ச்சே...எல்லா ஊருலேயும் இந்த ஆம்புளைப் புள்ளைங்களுக்குப் பொண்ணுங்களே அழ வைக்கறேதே வேலையா போச்சு, மனதுக்குள் திட்டிக் கொண்டேன் :-p

இங்கேயும் பெண்கள் கண்கலங்கிப் பார்த்ததுண்டு, ஆனால் அந்தப் பெண் சுற்றுப்புறம் சூழ்நிலை என்று எதையும் நோக்காமல் அத்தனை சத்தமாய் அழுதுக் கொண்டிருந்தாள், (யாரும் அவளைத் தேறுதல் படுத்துவது போல் காணோம்) நான் ரொம்ப வருத்தப்படுவதை அறிந்த நண்பர், "அதெல்லாம் சரியாயிடும், இன்னொரு பாய் பிரெண்ட் கிடைச்சா சரியாய் போய்டும்" என்றார்! "அந்தப் பொண்ணு அதுக்குதான் அழறா என்று என்ன நிச்சயம், வேறு ஒரு பிரச்சனையா கூட இருக்கலாம்தானே?" என்றேன், "ம்ம் சரிதான்" என்று ஆமோதிக்க, ஒருதலைக் காதலுக்கே அரிவாளைத் தூக்கும் நம்ம ஊரு பையன்களின் வீரத்தைப் பற்றி அந்தப் பெண்ணிடம் சொல்லலாமா என்று ஒரு கணம் தோன்றிய அதைப் பற்றிய கற்பனையில் மனம் செல்ல, சென்றவர்கள் வர, அங்கிருந்து மீண்டும் நடந்தே உணவகத்துக்குச் சென்றோம்!

ஹார்ட் ராக் கஃபே என்ற பிரபலமான உணவகம் மற்றும் மதுபான விடுதிக்குள் நுழைந்தேன், தன்னுடைய பத்துப் பன்னிரண்டு வயது மகனுக்கு ஜூஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு அவன் அப்பா தனக்குப் பியர் வாங்கிக் கொண்டு அமர்ந்தார்!

எல்லா வயதிலும் ஆட்கள் இருந்தாலும், சிறியவர்களுக்கு அங்கே எந்த வித மதுபானத்தையும் அவர்கள் தரவில்லை, அது சட்டம் என்றார்கள்! விதவிதமான பெயர்களில் எத்தனை விதமான பானங்கள் என்று எலுமிச்சை, புதினாவும் கலந்த ஒரு நீரை அருந்திக் கொண்டு மற்றவற்றை வழக்கம் போல் பார்த்துக் கொண்டிருந்தேன்!

உடன் வந்த சக அமெரிக்க அலுவலகத் தோழி, குழந்தைகளுக்குச் சில பரிசுகளை வாங்க வேண்டும் என்று கடையில் நுழைய, அங்கே எல்லாம் இந்திய முகங்கள், அடடா நம்ம ஊரு போல இருக்கிறதே என்று நுழைந்து, உடைந்த இந்தியில் பேசினால் அந்தக் கடையிலிருப்பவர்கள் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆட்கள் என்று தெரிந்தது!

ஒரு பாகிஸ்தானிய ஊழியர் இந்திய முகத்தைப் பார்த்தப் பரவசத்தில் வாங்கும் பொருட்களுக்குத் தள்ளுபடித் தர, அமெரிக்கத் தோழிக்கு மிகுந்த ஆச்சரியம், அந்தச் சில நிமிடங்களில் தன்னுடைய நாடு குடும்பம், குழந்தை என்று சொல்ல ஆரம்பிக்க, கடல் கடந்து வரும் மனிதர்களுக்குத் தம் மண்ணின் நினைவுகளைப் பகிரக் கிடைக்கும் எந்த வினாடியும் அவர்களுக்குப் பரவசத்தைத் தரும் என்று நேரில் மீண்டும் உணர்ந்து கொண்ட தினம் அது! மிக மரியாதையாக "அண்ணா!" என்று விளித்து, என் உடைந்த இந்தியில் அவரிடம் விடைபெற்றுக் கொண்டேன், ஒன்றும் புரியாமல் திருத் திருவென என் அருகில் விழித்துக் கொண்டிருந்தவர்களைக் காப்பாற்ற அது போதுமானதாய் இருந்தது!

அழகான நகரத்தில் ஒரு சிறிய ஆபத்தும் இருக்கிறது, ஒரு பெண் நிர்வாணமாய்ப் போனால் கூட அங்கே எந்த ஆபத்தும் இல்லை, ஆனால் உங்கள் மணிபர்ஸை, அல்லது கைப்பையை அப்படியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே கவனிக்காமல் செல்வீர்களேயானால், அது வேறொரு கைக்குப் போகும் அபாயம் இருக்கிறது! இங்கே வழிப்பறித் தவிர்க்க நமக்குக் கவனம் அவசியம்!

விமான நிலையத்தில் கூட உங்கள் பொருட்கள் பாத்திரம் என்று அரைமணிக்கொருதரம் அறிவிப்புச் செய்து கொண்டே இருக்கிறார்கள்!
நான்கு மொழிகளை அரசு மொழிகளாகக் கொண்டிருக்கிறது, இருபத்திரண்டு மொழிகளை அரசு அங்கீகரித்திருக்கிறது என்று அந்த ஊர் மனிதர் ஒருவர் சொன்னார், விமான நிலையத்திலும் நான்கு மொழியில் அறிவிப்புச் செய்கிறார்கள்!

அழகிய நகரத்துக்கு ஒரு திருஷ்டிபோல் திருட்டுக் குற்றங்கள்!
கண்ணில் ஒரு காவல்துறை நண்பரைக் கூடக் காண முடியவில்லை, ஒரு வழியாய் இரண்டு பேர்களைக் கண்டேன், அவசரமாய் அவர்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டேன், அவர்களை விட அவர்களின் புல்லட் அட்டகாசமாய் இருந்தது, ஒரு காளைமாட்டின் ஆகிருதியுடன் அது இருந்தது, ஆண் பெண் என இருபாலாருக்கும் ஒரே மாதிரி வாகனம் தான்! இருந்தாலும் எங்க ஊருப் போலீசுக்குக் கொடுத்து இருக்கிற சூப்பர் சைக்கிள் மாதிரி ஆகுமா என்று தோன்றியது, ஒருவேளை அவர்கள் காவல்துறையின் சைக்கிளைப் பார்த்தால் என்ன சொல்லுவார்கள்? இங்கே ஒன்றுமே செய்யாதா எல்லா அரசியல்வாதிகளுக்கு இன்னோவாவும், திருடனைப் பிடிக்கவேண்டும் என்று பணிக்கப் படும் கடைநிலைக் காவலர்களுக்குச் சைக்கிளும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று எங்கேனும் யாரும் சிலாகிக்கலாம்!

வீதியில் கலைஞர்கள் ஜிம்னாஸ்டிக் செய்கிறார்கள், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அந்தரத்தில் தாவிக் குதிக்கிறார்கள், ஒலிம்பிக்கில் பார்த்ததை வீதியில் பார்க்க முடிகிறது, ஒரு சில நிமிடங்கள் அதைக் காணொளிப் பதிவாக எடுத்தேன்! பிறகு பழமையான ரோமன் கத்தோலிக்கத் தேவாலயத்துக்குச் சென்றேன், நிமிர்ந்துப் பார்த்துக் கழுத்துதான் வலித்தது, அத்தனை பெரிதாய் இருக்கிறது, துண்டுத் துண்டாய் மட்டுமே புகைப்படம் எடுக்க முடிந்தது! அதன் வாயிலிலும் பிச்சைக் எடுக்கிறார்கள், "கோவிலுக்குச் சிலர் பிச்சையெடுக்க, வெளியேவும் சிலர் பிச்சையெடுக்கிறார்கள்" என்று எங்கோ படித்த வாக்கியம் நினைவில் வந்து போனது!

சில இளைஞர்கள் சேர்ந்து, புதுவிதமான நடனம் ஆடி, காசு கேட்கிறார்கள், அதையும் ஒரு சில நிமிடங்களே காணொளிப் பதிவாக எடுத்து வைத்துக் கொண்டேன்!

இறுதியாக உணவுச் சுற்றுலா என்று ஒருவரிடம் அழைத்துச் செல்ல, நல்ல பசியோடு அதற்கெல்லாம் செல்லக் கூடாது என்று அலுத்துக் கொள்ள வைத்த சிறிய பயணம் அது, ஸ்பெயினைப் பற்றி ஏற்கனவே அறிந்து கொண்ட விவரங்களை ஒருவர் அரைமணிநேரத்துக்கு மேல் ஓரிடத்தில் சொல்லி, ஓர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார், அங்கே உணவு வந்ததும் அதைச் சாப்பிடவிடாமல் மீண்டும் அந்த நகரத்தைப் பற்றி அரைமணிநேரத்துக்கு மேல் சொற்பொழிவு ஆற்றிவிட்டு, சாப்பிடச் சொன்ன போது, உணவு ஆறிவிட்டிருந்தது! எங்களோடு ஒரு சீனத் தம்பதியும், ஒரு வயதான அமெரிக்கத் தம்பதியும் எங்கள் எதிரே அமர்ந்திருந்தனர். ருமேனியா, அமேரிக்கா, ஸ்பெயின், ஹாலந்து, சீனா, கனடா, இந்தியா, மலேஷியா என்ற அற்புதமான பலவேறு நாட்டுக் கலவையில் அமைந்தது அந்தச் சந்திப்பு!

என் எதிரே இருந்த முதிய பெண்மணிக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும் என்றும் தோன்றியது, அவர் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது, கணவர் உதவி செய்து கொண்டிருந்தார், தனக்கு அல்சர் இருப்பதாகவும் சாப்பிடுவதற்கு முன் ஏதோ மாத்திரை சாப்பிடவேண்டும் என்று சொல்லிக் கொண்டே மாத்திரையை விழுங்கிய அந்தப் பெரியம்மா, பசியால் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு, சற்றுக் குளிரில் நடுங்கிக் கொண்டு பரிதாபமாய் (பசியில் மட்டும் வரும் ஒரு பரிதாப லுக் அது) முகத்தை வைத்துக் கொண்டு அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்க, சட்டென்று அவர், "நீ ரொம்ப அழகாயிருக்கே, உன் முகம் ஓவியம் மாதிரியிருக்கு, உனக்கு மூணுக் குழந்தைதானே?" என்றார், (பசி வந்தா பரிதாபமா முகத்தை வெச்சுக்குறே என்ற அம்மாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது), அடடா கடல் கடந்து ஒருவர் புகழ்கிறாரே என்று சற்றுப் பரவசம் ஏற்பட்டாலும், மூன்று குழந்தைகள் என்று சொன்னதில் திகில் வந்தது, "இல்லை இல்லை எனக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று இரண்டு குழந்தைகள், அதுவே போதும்" என்று அவசரமாக மறுத்தேன், "நிச்சயமா உனக்கு மூணாவது குழந்தை வேண்டாமா?" என்றார், இப்போது பசிப் போய்க் கிலிப் பிடித்துக் கொண்டது, ஏதோ அரச மரத்துக் குறி ஜோசியர் மாதிரி அந்தப் பெரியம்மா பேசவும்!

பிறகு, அவர் இந்தியாவைப் பற்றியும், இங்கே அவர் ஒரு சாமியாரைப் பார்க்க வந்திருக்கிறேன் என்றும், இந்தியச் சித்த மருந்துகள் மேல் தனக்கிருக்கும் அபார நம்பிக்கையைப் பற்றியும் விவரித்தார், அந்த முதிய வயதிலும் அவர்கள் இருவரும் கப்பலில் உலகச் சுற்றுலா செல்வதற்காகப் பார்சிலோனா வந்திருப்பதாகச் சொல்ல, ஐம்பது அறுபது வயதிலேயே வயசாகிவிட்டது முடங்கிக்கிட எனும் இந்திய வாழ்க்கை முறைகள் மனதை வருத்தியது!

அவர்களுக்குச் சித்த மருத்துவக் குறிப்புகள் சிலவற்றைத் தந்து, அவர்கள் பயணம் சிறக்க வாழ்த்தி, சோர்வாய் இருப்பதாய்ச் சொல்லி, நானும் அமெரிக்கத் தோழியும் அந்த உணவுச் சுற்றுலாவில் இருந்து கழண்டுக் கொண்டோம்!

அப்படி இப்படி என்று ஒரு காற்றைப் போல அந்த ஒருநாள் அலைந்தேன், நடந்து நடந்து கால்கள் சோர்வுற்றுப் போனது, பலமணி நேரம் பயணம் செய்து, ஸ்பெயின், ஜெர்மனி கடந்து, சென்னை விமானநிலையத்தில் வந்திறங்கி, நிலையத்தின் உள்ளே நடந்து வந்த போது, "நடைபாதையில் பான் பராக் எச்சில் சுவரோரத்தில் வழிந்தும், பெயர்ந்துப் போன நடைபாதைகளும், அட்டைப்பெட்டியைப் போல இம்மிகிரேஷன் கௌண்டர்களில் யாருக்கோ டெண்டர் கொடுத்து வாங்கிய டப்பா காமெராக்களும், சுவற்றில் கண்ணாடிகளில் போட்டிருந்த ஒட்டுக்களும் நம் ஊர் மணத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது!!

ஆழ்ந்து சுவாசித்தேன், மழைப் பெய்து கொண்டிருந்தது! எப்படியானாலும் சென்னை!!!
#ஸ்பெயின் #Spain_2

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...