Showing posts with label உணர்வுகள். Show all posts
Showing posts with label உணர்வுகள். Show all posts

Monday, 20 February 2023

குருட்டுப்பூனைகள்

 

அவர்கள் வியாபாரம் செய்ய வந்தார்கள்
இவர்கள் முழுக்கவே வியாபாரிகள்
 
அவர்கள் நம் நாட்டைச் சுரண்டினார்கள்
இவர்களும் பொதுத்துறைகளை விற்று
தனியார் கடன்களை தள்ளுபடி செய்து
அதையே செய்துக்கொண்டிருக்கிறார்கள்
 
அவர்கள் பிரிவினைகளை வளர்த்தார்கள்
இவர்கள் பிரிவினைகளில்தான் செழிக்கிறார்கள்
அவர்கள் கொத்துக்கொத்தாக 
மக்களை கொன்றார்கள்
இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக
உதவாத திட்டங்களின் மூலம்
பிரிவினை அரசியல் மூலம் 
மக்களை கொல்கிறார்கள்
 
அவர்கள் வரலாற்றில் கொஞ்சமே கொஞ்சம்
அறிவுடன் செயல்பட்டார்கள்
இவர்கள் மறைகழண்ட அறிவோடு 
நிறைய ஆணவத்தோடு 
நாளும் வரலாற்றை திரிக்கிறார்கள்
 
அவர்களின் அரசி பெண்
பெண்ணுரிமை பேணினார்கள்
இவர்கள் தலைமை நடிகர்கள்
நாளும் வன்கொடுமைகளை மறைத்து
பாலியல் குற்றவாளிகளுக்கு துணை நிற்கிறார்கள்
 
அவர்கள் சுயநலத்துக்கேனும் நாட்டின்
கட்டமைப்பை பலப்படுத்தினார்கள்
இவர்கள் வியாபாரிகளின் சுயநலத்துக்காக
இருக்கும் வளங்களை 
அழித்துக்கொண்டிருக்கிறார்கள்
 
அவர்களிடமும்
இந்த நாட்டின் எட்டப்பன்கள் கட்சி மாறி
மதம் மாறி கொள்கை மாறி
பிறர் ரத்தத்தை உறிஞ்சினார்கள்
இவர்களிடமும் மாநிலத்துக்கு மாநிலம்
எட்டப்பன்கள் பதவிக்காக பணத்திற்காக
பல்லிளிக்கிறார்கள் 
 
சொந்த மண்ணின் மொழி, உரிமை
அழிக்கிறார்கள்
அவர்கள் மொத்தமாய் சுரண்டி 
ஓடிவிட்டார்கள்
இவர்கள் மொத்தமாய் சுருட்டிக்கொண்டு
நம்மை தேச விரோதி என்று விரட்டுகிறார்கள்
 
அவர்களும் கொள்ளையர்கள்தான்
இவர்களும் கொடூரர்கள்தான்
அவர்களிடமிருந்து விடுபட 200 ஆண்டுகளானது
இவர்களிடமிருந்து விடுபட 
சூடும் சுரணையும் மிகும் ஆண்டு வரவேண்டும்
 
எதை வேண்டுமானாலும் செய்
எனக்கு பதவியைக் கொடு என்று அடிபணிகிறார்கள்
சாதித்தலைமைகள் மதப்போர்வையில்
இவர்களை நம்பும் மக்களோ
உரிமைகளை பறிகொடுத்து ஒரு கேடுகெட்ட வரலாற்றை
வருங்காலத்திற்காக விட்டு வைக்கிறார்கள்
அவர்களும் இவர்களும் யாரென்று உலகுக்குத் தெரியும்
ஆனாலும் குருட்டுப்பூனைகளாய் மக்கள்
விடியல் வரும் காலமே உண்மையானச் சுதந்திரம்!

ஒரு_மொழி_அழிப்பின்_பின்னே_உள்ள_அரசியல்

 

வடக்கில் அவரவரின் தாய்மொழியை அழித்து, ஆங்கிலம் மறுத்து இந்தியை திணித்து, பிழைப்பைக்கெடுத்து, கல்வியை எட்டாக்கனியாக்கியதால், தெற்கில் பிழைப்புத்தேடி குவியுது கூட்டம், வடக்கில் சொன்ன பொய்களைப் போல் தெற்கிலும் சொல்ல இந்தி தேவைப்படுகிறது, ஏற்கனவே மூளை மழுங்கிய இந்திக்கூட்டம் இங்கே வாழ ஒரே ரேஷன் தேவைப்படுகிறது, தெற்கு மூளையை மழுங்கடிக்க ஆங்கில மறுப்பு தேவைப்படுகிறது, இருக்கும் கொஞ்ச நஞ்ச சூடு சுரணையை அழிக்க தாய்மொழி அழிப்பு தேவைப்படுகிறது, இத்தனையும் முடித்தப்பிறகு, “ஒன் நேஷன் வொய் எலெக்‌ஷன்?” (One nation why election?) என்று சட்டமும் இயற்றிக்கொள்ளலாம், மொத்தத்தில் ஆங்கிலேய அடிமைத்தனத்துக்கு பிறகு, ஒரு மாநில வியாபாரிகளின் ஏகாதிபத்தியம் நிலவுகிறது, அதை நிலைபெற வைக்கவே சில ஏஜேண்டுகள் பதவிகள் கொடுத்து அலங்கரிக்கப்படுகிறார்கள்

Thursday, 16 April 2020

சாலை

இன்று தரமணியின் சுங்கக்கட்டண சாலைக்கு முன்பு இருந்த இருளில் ஒரு முதியவர் சாலையில் விபத்தில் சிக்கி அமர்ந்திருக்க, காரை நிறுத்தி “ஆம்புலன்ஸூக்கு கால் பண்ண வேண்டுமா?” என்று அருகில் இருந்தவர்களை கேட்கும்போதே முதியவரை சரியாக கவனித்தேன், அவரின் உடல் முழுக்க இரத்தம், கால் பாதமொன்று துண்டாகி தனியே கிடந்தது, முதியவர் தன் இரு கைகளையும் தடவிக்கொண்டிருந்தார், அவர் பெரும் அதிர்ச்சியில் சமைந்திருப்பது புரிந்தது, விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனங்களும் அருகிலேயே இருந்தது, முதிய வயதில் நடமாடும் போதே பெற்றவர்களை பாரமாக நினைக்கும் காலத்தில் இந்த முதியவர் தன் காலையும் இழந்து என்ன செய்வார் என்ற கனத்தச் சிந்தனையில் பயணம் தொடர்ந்தேன்! 

சோழிங்கநல்லூரில் இருந்து தரமணியின் மத்திய கைலாஷ் வரையிலுமான நெடுஞ்சாலையில் வழிநெடுக மின்விளக்குகள் பெரும்பாலும் எரிவதில்லை, பகல் நேரத்தில், இரவு நேரத்தில் சாலையை கடக்க, சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் ஏறி குதித்து தற்கொலை முயற்சி செய்வதில் சென்னைவாசிகளுக்கும் வெளியூர் பயணிகளுக்கும் அலாதி விருப்பம், மக்களின் சாகும் ஆசையை செவ்வனே நிறைவேற்றும்
பொருட்டு, அந்தச் சாலை நெடுகிலும் போக்குவரத்து காவல்துறையும் இல்லை, சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நபர்களுக்கு சாலையின் விளக்குகள் பற்றிய கவலையில்லை, அது வேறு ஒரு கண்ட்ராக்டர் வேலையாக இருக்கும்!
போக்குவரத்து காவல்துறையின் பக்கத்தில் பலமுறை புகார் செய்தும், இங்கே நட்பில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயனில்லை, சாலை முழுக்க சிசிடிவி கேமிராக்கள் விபத்துகளை தடுக்காது என்று அதிகாரிகளுக்கு புரிய வேண்டும்!

வாசலில் எறும்புகள் மண்துகள்களை பரப்பி சிறு புற்று எழுப்பியிருந்தால் அதைப்பற்றிய கவலையின்றி வாசல் கூட்டித்தள்ளுவது போல, மொத்தத்தில் இந்த நாட்டில் மோசமான சாலைகளின் கட்டமைப்பில், சட்டத்தின் விதிமீறல்களில், அலட்சியத்தில் மக்கள் உயிரிழக்கும்போது அவ்வளவுதானே என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நடந்துகொள்கிறார்கள், ரெயிலில்செல்லும் ஒரு அமைச்சருக்கு கூட ஓராயிரம் காவல்துறை சாலையில் அணிவகுக்கும் மாநிலத்தில், அதன் தலைநகரின் வீதிகளில் மக்களுக்கு பாதுகாப்பில்லை!😡😞

தெரிந்த உண்மைதான் கவலையில்லை

தலைநகரில் நீர் இல்லை,
அமைச்சர்கள் தாகத்தில் தவிப்பதில்லை
கவலையில்லை

சாலையில் போக்குவரத்து ஒழுங்கில்லை
அமைச்சர்களின் கார்கள்
சாலையில் தேங்குவதில்லை
கவலையில்லை


பணமதிப்பிழப்பில் இறந்தது ஏழைகளே
முதலைகள் பிடிபடவில்லை
அமைச்சர்களின் செல்வம் தேயவில்லை
கவலையில்லை

வெள்ளமும் வறட்சியும்
உயிர்களை விட்டுவைக்கவில்லை
அமைச்சர்களின் உறவுகள் சாகவில்லை
கவலையில்லை

நீர்நிலைகளை காணவில்லை
ஆக்கிரமிப்புகள் எல்லாம் அரசு கட்டிடங்களும்
அரசு அனுமதி தந்த இடங்களே
அவை மறைத்த ஆறுகளின்
வழித்தடங்கள் தெரியவில்லை
கவலையில்லை

காற்றிலும் நீரிலும் சுத்தமில்லை
ஆலைகள் எல்லாம் ஏழைகளுடையது இல்லை
அமைச்சர்களின் வருமானம் மாசுபடவில்லை
கவலையில்லை

காடுகளை காணவில்லை
நாட்டில் மரங்களில்லை
அமைச்சர்களை வெயில் தாக்கவில்லை
கவலையில்லை

மின்சாரம் இல்லாமல் தொழிலில்லை
மருத்துவமனைகளில் உயிர்காக்கும் கருவிகளுக்கு
மாற்றில்லை
அமைச்சர்களுக்கு வியர்க்கவில்லை
கவலையில்லை

குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை
பெண்களுக்கு சாலையில் சுதந்திரமில்லை
அமைச்சர்களின் வாரிசுகள் காணாமல் போனதில்லை
அவர்தம் குடும்பத்துப் பெண்கள்
அகாலத்தில் செத்ததில்லை
கவலையில்லை

எது நடந்தாலும் மக்களுக்கே
அமைச்சர்களுக்கு இல்லை என்பதால்
இது மக்களாட்சி
ஓட்டுரிமை இல்லையென்றால்
இது சர்வாதிகார மன்னர்களின் ஆட்சி,
தெரிந்த உண்மைதான்
கவலையில்லை!

தலைமுறைச்சாபம்!

இந்த மௌனம்தான்
எவ்வளவு அழகாய் இருக்கிறது
என்றான்
வார்த்தைகளை பறித்துக்கொண்டு

இந்த அடக்கம்தான்
எத்தனை உயர்ந்தது
என்றான்
சுதந்திரத்தை நசித்துவிட்டு

இந்த பொறுமைதான்
என்னை கவர்கிறது
என்றான்
சிறகுகளை பிய்த்துவிட்டு

இந்த கருணைதான்
என்னை தக்கவைக்கிறது
என்றான்
ஏளனம் செய்துவிட்டு

இந்த அறிவுதான்
என்னை வியக்கவைக்கிறது
என்றான்
சுயத்தை கொன்றுவிட்டு

அத்தனையும் கேட்டிருந்த
கூண்டுக்கிளி
இனி உன் வம்ச கூட்டுக்குள்
கிளிகளே இல்லாது
போகட்டுமென்று சாபமிட்டு
படபடவென இறக்கைகளையடித்துக்கொண்டு
செத்து வீழ்ந்தது!
#தலைமுறைச்சாபம்!

அம்மா

வீட்டிலுள்ளவர்களுக்கு உடம்பு சரியில்லையென்றால் நாம் (அம்மாக்கள்):
“இந்தா தைலம் தேச்சுவிடறேன் தூங்கு!”
“இந்தா குட்டி சுடுதண்ணி, உப்பு போட்டு இருக்கேன், வாய் கொப்பளி தொண்டை சரியாகும்”
“டேய் துவரை ரசம், இந்தா குடிச்சிடு சரியாகிடும்”
இப்படி “.....” “....” “....”

நமக்கு (அம்மாவுக்கு) உடம்பு சரியில்லையென்றால்:
“இங்க பாரும்மா எல்லாம் மனசுதான் காரணம், வேலையெல்லாம் முடிச்சிட்டு (?!) தூங்கு!”
“சுடுதண்ணி வெச்சு வாய் கொப்பளிமா, கசாயம் வெச்சு குடி, ஆபிஸ் லீவ் போட்டுட்டியா அப்போ ஈவ்னிங் எனக்கு கோபி மஞ்ஜூரியன் செஞ்சு கொடு(!)...........”
அம்மா மைண்ட் வாய்ஸ் “பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே, நான் சுடுதண்ணிய குடிச்சிட்டு ஆபிஸூக்கே போறேன்!”
👀

Faith

Man had faith that God would save
God had faith that man would behave
Both failed with each other in their try
Amid everyday’s religious fanatics sly!

கடவுள் காப்பாற்றுவர் என்று மனிதனும்
மனிதனின் ஒழுங்காய் நடந்துகொள்வான் என்று கடவுளும் நம்பினர்
நாள்தோறும் நிகழும் மதவெறியர்களின் சூழ்ச்சியில்
இருவரும் தம் முயற்சியில் தோற்றனர்!

கால வெள்ளத்தில்

தன் கனவுகள் விடுத்து
யாருடைய கனவுகளுக்காகவோ படித்து
யாருடையோ விருப்பதிற்காகவோ மணந்து
பெற்றப் பிள்ளைகளின் வாழ்க்கைக்காக வாழ்ந்து
சமூகத்தின் கட்டாயத்துக்காக வளைந்து
குனிந்துக்கொண்டே போகும்
பெண்களின் வாழ்க்கையெல்லாம்
வெறும் காகிதப் பூக்களாக
கால வெள்ளத்தில் கரைந்துப்போகிறது

கண்காணிப்பும்_எதிர்வினையும்

#கண்காணிப்பும்_எதிர்வினையும்
1. 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி ஆட்டோ டிரைவர்கள் பாலியல் பலாத்காரம், கண்காணிப்பு கேமரா மூலம் இரண்டு டிரைவர்கள் கைது, மேலும் சிலரை காவல்துறை தேடுகிறது

2. எலியட்ஸ் பீச்சில் பிறந்தநாள் கொண்டாடி, நடைபாதையை அசுத்தமாக்கிய இளைஞர்களை கண்காணிப்புக் கேமரா மூலம் கண்டுபிடித்து சாஸ்திரி நகர் காவல்துறையை சேர்ந்த காவலர் ஒருவர் அவர்களை வைத்தே நடைபாதையை சுத்தப்படுத்தி நூதனமாக தண்டனை தந்திருக்கிறார்

3. சேலத்தில் பள்ளி வளாகத்தில் நடந்துக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை பின் நோக்கி வந்த பள்ளி வாகனம் கொன்றிருக்கிறது!

இந்த மூன்று செய்திகளிலும் முக்கியமான விஷயம் “கண்காணிப்புத்தான்”. காவல்துறை நகரெங்கும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி வருகிறது, ஆனால் போக்குவரத்து காவல்துறையின் இருப்பும் நடமாட்டமும் குறைந்து வருகிறது (தேர்தலுக்கு பல மாதங்கள் முன்பிருந்தே), கேமராக்களை நிறுவிவிட்டு, அதை தொடர்ந்து கண்காணித்து குற்றத்தை தடுக்காமல், வெறும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மட்டும் பயன்படுத்திய குறைபாட்டின் உதாரணம் தான் முதல் செய்தி, அதற்கு மேலும் சொல்ல வேண்டுமென்றால் நகரம் முழுக்க சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் நிகழ்கிறது, அதிலும் அரசுப்போக்குவரத்து வாகனங்களை காட்டிலும் அதிக விதிமீறல்களை உபேர், ஃசுவிங்கி, சோமேட்டோ போன்ற நிறுவன ஊழியர்கள் செய்கிறார்கள், “ப்ச் கேமராதானே?” அவ்வளவுதான் இந்தக் கேமராக்களின் மீதான கணிப்பு! ஆன்லைனில் கேமராக்களை கண்காணிக்க ஒரு குழுவை அமைத்துப் பார்த்திருந்தால் அந்தச் சிறுமியை குற்றம் நிகழும்முன்னே காப்பாற்றியிருக்கலாம்தானே?
இரண்டாவது செய்தியில், குப்பையைப்போட்டவரை மெனக்கெட்டு கண்காணிப்பு கேமரா மூலமும் குப்பையில் கிடந்த கேக் பெட்டியின் முகவரி வைத்து கண்டுபிடித்து, நூதனமாய் தண்டனை வழங்கி திருத்தியதில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டிருக்கிறது, மற்றவர்கள் அலட்சியமாய் கடக்கும் விஷயத்தை சிரத்தை எடுத்து சீர்செய்யும் இதுபோன்றவர்களால் தான் நாட்டில் இனி மாற்றம்
மெல்ல சாத்தியமாகும்!

மூன்றாவது செய்தியிலும், முக்கிய பங்கு கண்காணிப்புத்தான், பள்ளிக்கு குழந்தைகள் வரும்போது, ஒன்று பெற்றவர்கள் வகுப்புவரை சென்றுவிட வேண்டும் அல்லது அதை அனுமதிக்காத பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்கு பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும், பள்ளி வேன்களில், ஆட்டோக்களில் செல்லும் பிள்ளைகளின் பாதுகாப்பு பெரும்பாலும் கேள்விக்குறிதான், நம்முடைய நாட்டில் பாதுகாப்பு என்பது ரியாக்டிவ்(reactive) தான், எதிர்வினைதான், அதாவது எதுவும் நிகழ்ந்த பின்னரே வருத்தப்பட்டு செயலாற்றுவது, 250 கிலோ வெடிபொருட்களை கொண்டுவந்து இராணுவ வீரர்களை கொல்லும்வரை தூங்கிவிட்டு பின் எதிர்வினையாற்றுவதும் ஒரு நல்ல உதாரணம்! அங்கே தொடங்கி சாலையில் குழந்தைகளை கடத்துவது வரை நம் கண்காணிப்பு என்பது எதிர்வினையாற்ற மட்டுமே!

அதுதான் ஓட்டுப்போடுவதிலும் நிகழ்கிறது, ஓட்டுப்போடும் போது பணத்துக்காக கண்ணைமூடிக்கொண்டு அதைச் செய்துவிட்டு,பின் 5 வருடம் குத்துதே குடையுதே என்று அவதியுற்று மீண்டும் அதையே செய்கிறோம்!
எதிர்வினையோ இல்லை முன்கூட்டியே யோசித்து செயல்படுவதோ, எதையும் சிறப்புற செய்தால் மட்டுமே நம் எதிர்கால தலைமுறை வாழும்!

பெண்ணெனும்_பொருள்!

#பெண்ணெனும்_பொருள்!
ஆக கடைசிவரை எந்தக்குழந்தையைப் பாலியல் பலாத்காரம் செய்துக் கொன்றாலும், எத்தனைப்பெண்களை கூட்டு வன்புணர்வு செய்துக் கொன்றாலும், கடுமையான தண்டனை குற்றவாளிகளுக்கு இல்லை? ஆண்களின் வளர்ப்பில், சமூக பாதுகாப்பில், கல்வியில் எந்த மாற்றமும் இல்லை? எந்தக்கட்சியின் தேர்தல் வாக்குறுதியிலும் இது இல்லை! மொத்தத்தில் “ஆடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?” என்ற காலத்திற்கு இட்டுச்செல்கிறார்கள் ஆட்சியாளர்களும், நீதி நெறியாளர்களும்!

பெண்களுக்கு இலவசமாய் மிக்ஸியும், கிரைண்டரும், ஸ்கூட்டரும் தருவார்கள், மற்றபடி கல்வி, சமூக உரிமை, பாதுகாப்பு இதெல்லாம் கேட்கவே கூடாது, கவர்னர் கன்னத்தை கிள்ளூவார், அமைச்சர் பெண்ணை ஏமாற்றி பிள்ளைப் பெற்றுக்கொள்வார், கட்சி சார்ந்த சில மடையர்கள் பெண்களை அசிங்கமாக சித்தரிப்பார்கள், அரசியல்வாதிகளின் ஆதரவில் அவர்கள் வாரிசுகள் பெண்களை நசித்து படம் எடுப்பார்கள், சாதிச்சங்கங்களின் தயவில் கொழுத்தவன், இளைத்தவனின் பெண்களை வெட்டிக்கொல்வான், சாதிப்பெயரில் நீரில் கூட தீண்டாமை கொண்டு குழந்தைகளை கொல்வார்கள், உயிரை காப்பாற்றிக்கொள்ள பாலியல் வக்கிரங்களில் பெண்கள் போராடக்கூடாது என்று அமைச்சர் சொல்வார், ஊரே ஆதாரங்களை சமர்பித்தாலும், ஆதாரம் இருக்கிறதா என்று அமைச்சர் கேலி செய்வார், தனியே வெளியே வந்தால் கொல்வார்கள், வீட்டில் இருந்தாலும் கொல்வார்கள், ஆடையோடு இருந்தாலும் கொல்வார்கள், ஆடையற்று பிறக்கும் குழந்தையையும் புசிப்பார்கள், இப்படி தொடர்ந்து நடக்கும் எதற்கும் இன்று வரை பதிலில்லாத நிலையில், தொடர்ந்து மிக்ஸிக்கும் கிரைண்டருக்குமாக, சில ஆயிரம் ரூபாய்களுக்காக ஓட்டுப்போட வேண்டுமா என்று பெண்கள் யோசிக்க வேண்டும், ஓட்டுக்கேட்டு வரும்போது, வாக்காளர்களிடம் கேள்விக்கேட்காமல் பணத்தை எதிர்ப்பார்த்து நின்றால் பெண்களுக்கு மரியாதை மட்டுமல்ல, பிறக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்புமில்லை!

Wednesday, 15 April 2020

காதல்!

நேற்று அழவைத்ததோ
இன்று உயிரெடுத்ததோ
யாருக்கும்
நினைவிலிருப்பதில்லை
எனினும்
ஏதோ ஒரு கண்ணீரையோ
யாரோ ஒருவரின் உயிரையோ
மீட்டி
கொடுமைகளை நினைவூட்ட
காலம் காத்திருக்கும்
அப்போதும் காலத்தோடு
மன்றாடி பிறர்
நலம் வேண்டும்
உள்ளங்களில் உயிர்பித்திருக்கிறது
#காதல்!

Friday, 20 December 2019

மானங்கெட்ட அரசியலா

ஏதேதோ எண்ணி வந்தேன்
சட்டென்று நீ துப்பிய
வார்த்தைகளின் வெம்மையில்
பொசுங்கிப்போனேன்
இனி உன் கடிகாரத்திற்கு
என் நேரச்சுமையில்லை
கொள்கை வேறு
கூட்டணி வேறென்று
வந்து நிற்க
இது என்ன மானங்கெட்ட
அரசியலா
காயப்பட்ட மனமன்றொ?!
😉😉😉

இந்தச்சமூகம் என்பது நாம்தான்

அறுந்து விழுந்த மின்கம்பியை பிடித்த ஆறுவயது சிறுவன் மரணம், இதில் அறுந்த விழுந்த மின்கம்பியின் மின்வாரிய அலட்சியம் இந்தியாவுக்கே பொதுவானது, மழைக்காலங்களில் மட்டுமல்ல எல்லாக் காலங்களிலும் நீங்கள் சென்னை மாநகரில் பல்வேறு கம்பிகள் இப்படி சாலையை, நடைபாதையை அடைத்துக்கொண்டிருப்பதை பார்க்கலாம்!
அலட்சியமான அதிகாரிகளையோ, அரசையோ குறித்தல்ல இப்பதிவு, அவ்வப்போது இதுபோல் வரும் செய்திகளின் பின்னே உள்ள பெற்றவர்களின் அஜாக்கிரதைப்பற்றியதே, எத்தனை பாதுகாத்தாலும் நம்மை மீறி நடந்துவிடும் விபத்துகளையும் கொடுமைகளையும் விட்டுவிடுவோம், ஆனால் இவைகளை தவிர்க்கலாமே;

1. வீட்டில் தவழும் நடக்கும் குழந்தைகள் இருந்தால் தண்ணீர் தொட்டிகளை இறுக்கமாக மூடி வைக்கவும், குளியலறைக்கதவுகளை தாழ்போட்டு எட்டாத உயரத்தில் வைக்கவும் ஏன் மறக்கிறோம்?

2. குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் மருந்துகளையும், கேரோசின், தீப்பெட்டி போன்ற பொருட்கள் வைப்பதை தவிர்க்கலாமே?
3. குழந்தையை டிவி ஸ்டாண்டின் அருகில் விட்டு, அது தலையில் விழும்வரை என்ன செய்கிறோம்?

4. குட் டச் பேட் டச் பற்றி இன்னமும் பெற்றவர்களே பேசாத நிலையை எப்போது மாற்றுவோம்?

5. குழந்தைகளை வெளியே விளையாட விடுவது ஆரோக்கியமானதே, ஆனால் வீட்டுக்குள் சீரியல்கள் முன்போ அல்லது வேறு வேலையிலோ மூழ்கி பிள்ளைகளை கண்காணிக்க ஏன் மறக்கிறோம்? அதுதான் இங்கே இந்த மின்விபத்து!

6. எங்காவது வெளியில் செல்லும்போது, பிள்ளைகளை தனியே விட்டு ஏன் செல்கிறோம்? விளைவு ஏழு வயது ஹாசினியின் மரணம்

7. ஆழ்துளைக்கிணறுகளில் விழுவதற்கும் பலரின் தவறுகளைத்தாண்டி நம்முடைய கவனக்குறைவும் காரணமாகிறது

8. வீட்டில் சமைக்காமல் ஏன் எப்போதும் உணவுகளை வெளியே வாங்கிக்கொடுக்கிறோம்?

9. கெடுதல் என்று தெரிந்தும் எதற்கு விதவிதமான வண்ணங்களில் தின்பண்டங்களையும், மைதாவில் செய்த கேக்குகளையும், பரோட்டக்களையும், பிஸ்கட்டுக்களையும் குளிர்பானங்களையும் வாங்கி திணிக்கிறோம்?

10. கைபேசிகள் பிள்ளைகளுக்கு எதற்கு, அதில் விளையாட்டுகள் எதற்கு? கைபேசி வீடியோ கேம்களுக்கு உங்களுக்கு நேரம் இருப்பின் அந்த நேரத்தை உங்கள் குழந்தைகளிடம் செலவழித்தால் என்ன?

11. கிட்டதட்ட குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சதிகாரர்கள், கொலையாளிகள் என்று சித்தரிக்கும் தொலைக்காட்சி சீரியல்களை சினிமாக்களை ஏன் பிள்ளைகளுடன் அமர்ந்து பார்க்கிறோம்?

12. இரவு நேரம் கண்விழித்து இவைகளை பார்க்கும் பழக்கத்தை ஏன் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தி ஆரோக்கியத்தை சிதைக்கிறோம்?

13. சாலையில் தாறுமாறாய் கடந்துச்செல்வது, தலைக்கவசம், சீட்பெல்ட் இல்லாமல் பயணிப்பது போன்ற செயல்களை எப்போது திருத்திக்கொண்டு பிள்ளைகளை வாழ வைக்கப்போகிறோம்?

14. சாலையை கடக்கும்போது, மின்தூக்கிகளில், நகரும் படிக்கட்டுகளில் என்று எல்லா இடங்களிலும் பிள்ளைகளின் கையைவிட்டுவிட்டு கைபேசியில் கவனம் செலுத்தும் பழக்கத்தை எப்போது மாற்றுவோம்?

15. சாதியைச்சொல்லி, மதத்தைச் சொல்லி, கடன்காரர்களுக்கு பொய்யைச்சொல்லி என்று எப்போது இந்தப்பாடங்களை பிள்ளைகளுக்கு கற்றுத்தருவதை கைவிடுவோம்?

16. குடிக்கும், புகைக்கும், பெண்களை போகப்பொருளாகக் கருதும் நடைமுறை வழக்கங்களை எப்போது மாற்றி ஆரோக்கியத்தையும் அன்பையும் சகமனிதரை, மனுஷியை நேசிக்கும் மனப்பான்மையையும் கற்றுத்தரப்போகிறோம்?
இந்தச்சமூகம் என்பது நாம்தான், விபத்துகள் குறைய, #மாற்றம்_நம்மிடம்_இருந்தே_உருவாகவேண்டும்!

Thursday, 16 May 2019

வேகச் சாரலில்

"கடவுளே, நிறைய டிராபிக் ஜாம் ஆகணும்!"
"ஹலோ பல்லவன் அங்கிள் பிரிட்ஜ்ல இன்னும் மெதுவா போங்க!"
"ஹலோ ஆட்டோ சைடு கொடுக்காதீங்க!"
"கடவுளே கடவுளே எங்க வீட்டு வாசல்ல கேட் மூடியிருக்கணுமா!"
இதெல்லாம் நடன வகுப்பில் இருந்து என் சின்ன சில்வண்டை பைக்கில் அழைத்து வரும் போது, மழைச்சாரல் துவங்கியிருந்த மாலைவேளையில் நனைய அவள் பலமாய் வேண்டியது, அம்மாவுக்கு மழை பரவசம், மழைக்கு மகள் மீது பரவசம், வேகச் சாரலில் நனைத்துச்சென்றது❤️

கார்ப்பரேட்டுகள் ராஜ்ஜியம்

முதலில் கிழக்கிந்திய கம்பெனி
பின் பிரிட்டிஷ் ராஜ்ஜியம்
சமீபத்தில் மோடி அரசாங்கம்
இப்போதும் எப்போதும் குஜராத்
கார்ப்பரேட்டுகள் ராஜ்ஜியம்
1947 ஆகஸ்ட் 15 இல் கிடைத்தது
2014 மே 26 இல் தொலைந்து போனது
மதியாத சுதந்திரம்!


No photo description available.

நாட்டிய அரங்கேற்ற நிகழ்வு

இந்த வருடத்தில் ஒருநாள் பழைய அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரிந்த சகோதரி உஷா, தன் மகளுக்கு நாட்டிய அரங்கேற்றம், மே மாதம் வைத்திருக்கிறேன், அந்த நாளில் சிறிது நேரம் ஒதுக்க முடியுமா என்று கேட்டார், நாடகம், நாட்டியம், பாடல்கள் என்று எல்லாவற்றிலும் இயல்பிலேயே இருக்கும் ஆர்வத்தாலும், உஷாவுக்காகவும், அரைநாள் விடுமுறை எடுத்தால் என்ன தோன்றியதாலும் சரி என்றேன், திடுதிடுப்பென்று “இல்லை, நீங்கள்தான் முக்கிய விருந்தினர், அதுதான் நிச்சயம் வரமேண்டுமென்று கேட்கிறேன்” என்று ஒரு ஆனந்த அதிர்ச்சியைத் தந்து, விடாப்பிடியாய் என் பட்டங்களை பெயருக்கு பின்னே வரிசைக்கட்டி அழகான இந்த அழைப்பிதழை அச்சிட்டு குடும்பச் சகிதமாய் வீட்டிற்கு வந்து அழைத்தார், முறையாய் நாட்டியம் பயின்றவர்கள், ஆசிரியர்கள் என்று அந்தக் கலைத்துறைச் சார்ந்த மேதைகளுடன், நான் எப்படி மேடையில் என்று தயங்கிய போது, “அமுதா உங்க மனசு எனக்குத்தெரியும், நீங்க வந்து மனசார செய்யும் வாழ்த்து எனக்கு வேணும், அதுக்குத்தான் கூப்பிடறேன், என் மகளுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும்” என்ற போது, மனதைப்படித்து, நேசிக்கும் மனிதர்கள் போகும் இடமெல்லாம் கிடைப்பதொரு வரமென்று உணர்ந்தேன்!

உஷாவின் கனவும், அயராத உழைப்பின், அவர் மகள் “ரம்யாவின்” நடனத்தில் தெரிந்தது, அம்மாவைப்போலவே அழகான பெண் குழந்தை, அம்மாவைப்போலவே தன்மையும் மென்மையான அணுகுமுறையும், அந்த மாலை வேளையில் ரம்யாவின் பெயருக்கேற்ப அந்த மாலைப்பொழுது ரம்யமாய் ஆனது, நாட்டிய மேதைகள் நிறைந்திருந்த சபையில், அற்புதமாய் ஆடிய அந்தக்குழந்தையின் நடனத்திற்கு பாராட்டுக்களையும், திறமை மேன்மேலும் வளர்ந்து ஒளிவிட வாழ்த்துகளையும் சொல்லி விடைப்பெற்றேன்!

இத்தனை மாதங்கள் கடந்து இத்தனை தாமதமாய் எழுதுவதற்கு காரணம், வழக்கமான வேலைப்பளூ என்பதை விட, மனம் நிறைய அன்பிருந்தாலும், நடன ஆளுமைகளின் மேடையில், வெறும் ரசிகையாய் அமர்ந்திருந்த தயக்கமே காரணம், இந்த வருடம் முடியப்போகும் இந்தக்கடைசி மாதத்தில், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் வெளிப்படுத்தாமல் வைத்திருக்காதே என்று மனம் இடித்துரைத்ததின் வெளிப்பாடே இது!
உஷா, உன்னுடைய உழைப்பும் கனவும், இந்த வாழ்க்கைப்பாதையை உனக்கு வரமாக மாற்றட்டும், ரம்யாவிற்கு எப்போதும் சிறந்தவைகளே கிட்டட்டும்! God bless!

Image may contain: 2 people, text

காயப்படுத்தலாம்

எப்படி வேண்டுமானாலும்
காயப்படுத்தலாம்
யோசிக்கவேண்டியதில்லை
அன்பைக்காட்டவே
அதிக மெனக்கெடல்
தேவை!


No photo description available.

சாதிய புகழொலிகள்

ஒருவன் தீமைகள் செய்யும்போது ஊமையாய் இருந்துவிட்டு, அதே அவன் நல்லது செய்தால் ஆஹா ஒஹோவென்று ஒருவரோ ஒரு கும்பலோ அளவுக்கதிகமாக புகழ்கிறது என்றால் தெரிந்துக்கொள்ளுங்கள், அவர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும், இது அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்!
இங்கே சாதி கல்வியால், பொருளாதாரத்தால், பதவியால், பட்டத்தால், உலக அறிவால் அழியவில்லை, படித்தவர்களுக்கும் அது உள்ளூர ஒரு மகிழ்ச்சியை தந்துக்கொண்டிருக்கிறது, தாம் இந்தச்சாதி என்று பெருமிதம் கொள்ள வைக்கிறது, தன் சாதியைச் சேர்ந்த ஆட்களை காணும்போது உவகைக்கொள்கிறது, பணத்தைத் தவிர்த்து பரஸ்பரம் லாபம் பார்த்துக்கொள்கிறது, இத்தோடு நின்றுவிட்டால் பரவாயில்லை, அது அப்படியே வெறியாக மாறும்போது, பள்ளியில் மாணவர்களிடையே உப்புக்கு உதவாத விஷயத்தில் தொடங்கி, பிற்பாடு காதல் கல்யாணம், கொடுக்கல் வாங்கல் என்று எல்லாவற்றிலும் “உயிர்ப்பலி” கேட்கும் அளவிற்கு உருவெடுக்கிறது!
சுற்றிலும் பாருங்கள், உண்மை புரியும்! இல்லையென்றால் 120 கோடி மக்கள் தொகையில் இந்தக் குற்றங்கள் சிறிய விழுக்காடு என்று மனதை தேற்றிக்கொண்டு அமைதிக்கொள்ளுங்கள், மிகப்பெரிய அரசியல்வாதிகளாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது!

கொலைகார_தேசம்

#கொலைகார_தேசம்
பெண்களை ஏமாற்றுபவர்கள், கொலை செய்பவர்கள், தங்கள் பாலியல் வறட்சியை தீர்த்து கொள்பவர்கள் பின் சிசுவாய் இருந்தாலும் தீர்த்துக்கொல்பவர்கள் எல்லாம் உடனடியாக மனநிலைப்பிறழ்ந்த நோயாளிவிடுகிறார்கள், இல்லையென்றால் ஒன்றும் தெரியாத உத்தமன்களாகிவிடுகிறார்கள்! 😠
ஊழல் செய்து பின் அதை மறைக்க வன்முறைகளைத் தூண்டிவிடுவதில் தொடங்கி, போராட்டக்காரர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, சுட்டு சுட்டு விளையாடி, உதவித் தேடி வரும் பெண்களை ஏமாற்றி, பிள்ளைப்பெற்றுக்கொள்ளுவது வரை செய்யும்
அரசியல்வாதிகள், “ஐ பிம்பிளிக்கி பிளாப்பி” என்று இந்த மனநோயாளி வேடத்தைப் போட முடிவதில்லை, ஏனேனில் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மனநிலை சரியில்லாதவர்கள், தேர்தலில் வேட்பாளர்களாகும் தகுதியை இழக்கிறார்கள், அதனால் பெரும்பாலும் அவர்கள் வழக்கு விசாரணை என்று வந்துவிட்டால் “வலதுபக்க” மார்பை அழுத்திக்கொண்டு உடனடி இதய நோயாளிகளாய் மருத்துவமனையில் படுத்துக்கொள்கிறார்கள்😉

குற்றம் செய்துவிட்டு மனநிலை பாதித்த கொலைகாரர்களையும், ஊழல் செய்து, வழக்கை தவிர்க்க இதயநோயாளிகளாய் ஆகும் அரசியல்வாதிகளையும் பார்த்துப் பார்த்து மக்கள் ஜென் துறவிகளாய் மாறிக்கொண்டு வருகிறார்கள்!😇 😎

விதைக்காமல்_வெற்றியில்லை

“ஏன் இதை சரியாக செய்யவில்லை?” என்று கடிந்துக்கொண்டாலும், பின் அதை எப்படி சீர்செய்வது என்பதை மட்டுமே யோசித்து பின் அந்தத் தவறு நிகழாமல் இருக்க வேண்டிய வழிமுறைகளை செய்யவேண்டியது, மலையென இருக்கும் அலுவலகப் பணியில் ஒரு சிறு கல்லளவு பணி, அற்புதமாய் செய்தப் பணிக்கு பாராட்டும் அதே வேகத்தில் செய்ய வேண்டும், வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருத்துறையில் இதை நிச்சயம் செய்வார்கள், அப்படியே யு டர்ன் அடித்து தனிப்பட்ட வாழ்க்கையில் வந்தோமென்றால் இந்த அணுகுமுறை நிச்சயம் வளர்ந்தவர்களிடம் இல்லை, “ஏன்? ச்சை! “ என்ற கடிந்துக்கொள்ளலோடு இன்னும் பல வார்த்தைகளின் வீச்சோடு முடிந்துவிடுகிறது, மற்றப்படி ஏன் எதற்கு எப்படி, இனி எப்படி சீர்செய்வது என்பன போன்ற எதுவும் கேட்கப்படுவதோ உணரப்படுவதோ இல்லை, எந்தத் தவறும் நிகழ்வதற்கு தவறே காரணங்கள் இல்லை, காரணத்தை விட்டுவிட்டு காரியம் செய்தவரை வசைபாடுவதும் இயல்பு, சரியாய் நிகழும் ஒன்றையும் கூட நாம் பாராட்டுவதும் இல்லை, அம்மா செய்யும் சமையல் நன்றாக இருந்தால் ஒன்றும் இல்லை, உப்பு அதிகமாகும் நாளில், ஏன் இப்படி என்று புருவம் உயர்த்துவது போன்றதே இது!
உரியவரிடம், கோபத்தை வரைமுறையோடு காட்டுங்கள், அன்பை வரையறையில்லாமல் காட்டுங்கள், குறைகளைச் சுட்டுங்கள், நிறைகளை கைத்தட்டி பாராட்டுங்கள், இவையெல்லாம் ஆக்கப்பூர்வமானவை, இதற்கு சம்பளம் தேவையில்லை, நல்ல மனமும் சிந்தனையும் மட்டுமே போதும்; இதை எதுவும் நீங்கள் செய்யாமல் எந்த மாற்றத்தையும் எவ்விடத்திலும் எவரிடத்திலும் எதிர்நோக்குதல் கால விரையமே!
,
#விதைக்காமல்_வெற்றியில்லை

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...