Showing posts with label நிகழ்வுகள்!. Show all posts
Showing posts with label நிகழ்வுகள்!. Show all posts

Thursday, 16 April 2020

சாலை

இன்று தரமணியின் சுங்கக்கட்டண சாலைக்கு முன்பு இருந்த இருளில் ஒரு முதியவர் சாலையில் விபத்தில் சிக்கி அமர்ந்திருக்க, காரை நிறுத்தி “ஆம்புலன்ஸூக்கு கால் பண்ண வேண்டுமா?” என்று அருகில் இருந்தவர்களை கேட்கும்போதே முதியவரை சரியாக கவனித்தேன், அவரின் உடல் முழுக்க இரத்தம், கால் பாதமொன்று துண்டாகி தனியே கிடந்தது, முதியவர் தன் இரு கைகளையும் தடவிக்கொண்டிருந்தார், அவர் பெரும் அதிர்ச்சியில் சமைந்திருப்பது புரிந்தது, விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனங்களும் அருகிலேயே இருந்தது, முதிய வயதில் நடமாடும் போதே பெற்றவர்களை பாரமாக நினைக்கும் காலத்தில் இந்த முதியவர் தன் காலையும் இழந்து என்ன செய்வார் என்ற கனத்தச் சிந்தனையில் பயணம் தொடர்ந்தேன்! 

சோழிங்கநல்லூரில் இருந்து தரமணியின் மத்திய கைலாஷ் வரையிலுமான நெடுஞ்சாலையில் வழிநெடுக மின்விளக்குகள் பெரும்பாலும் எரிவதில்லை, பகல் நேரத்தில், இரவு நேரத்தில் சாலையை கடக்க, சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் ஏறி குதித்து தற்கொலை முயற்சி செய்வதில் சென்னைவாசிகளுக்கும் வெளியூர் பயணிகளுக்கும் அலாதி விருப்பம், மக்களின் சாகும் ஆசையை செவ்வனே நிறைவேற்றும்
பொருட்டு, அந்தச் சாலை நெடுகிலும் போக்குவரத்து காவல்துறையும் இல்லை, சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நபர்களுக்கு சாலையின் விளக்குகள் பற்றிய கவலையில்லை, அது வேறு ஒரு கண்ட்ராக்டர் வேலையாக இருக்கும்!
போக்குவரத்து காவல்துறையின் பக்கத்தில் பலமுறை புகார் செய்தும், இங்கே நட்பில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயனில்லை, சாலை முழுக்க சிசிடிவி கேமிராக்கள் விபத்துகளை தடுக்காது என்று அதிகாரிகளுக்கு புரிய வேண்டும்!

வாசலில் எறும்புகள் மண்துகள்களை பரப்பி சிறு புற்று எழுப்பியிருந்தால் அதைப்பற்றிய கவலையின்றி வாசல் கூட்டித்தள்ளுவது போல, மொத்தத்தில் இந்த நாட்டில் மோசமான சாலைகளின் கட்டமைப்பில், சட்டத்தின் விதிமீறல்களில், அலட்சியத்தில் மக்கள் உயிரிழக்கும்போது அவ்வளவுதானே என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நடந்துகொள்கிறார்கள், ரெயிலில்செல்லும் ஒரு அமைச்சருக்கு கூட ஓராயிரம் காவல்துறை சாலையில் அணிவகுக்கும் மாநிலத்தில், அதன் தலைநகரின் வீதிகளில் மக்களுக்கு பாதுகாப்பில்லை!😡😞

கண்காணிப்பும்_எதிர்வினையும்

#கண்காணிப்பும்_எதிர்வினையும்
1. 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி ஆட்டோ டிரைவர்கள் பாலியல் பலாத்காரம், கண்காணிப்பு கேமரா மூலம் இரண்டு டிரைவர்கள் கைது, மேலும் சிலரை காவல்துறை தேடுகிறது

2. எலியட்ஸ் பீச்சில் பிறந்தநாள் கொண்டாடி, நடைபாதையை அசுத்தமாக்கிய இளைஞர்களை கண்காணிப்புக் கேமரா மூலம் கண்டுபிடித்து சாஸ்திரி நகர் காவல்துறையை சேர்ந்த காவலர் ஒருவர் அவர்களை வைத்தே நடைபாதையை சுத்தப்படுத்தி நூதனமாக தண்டனை தந்திருக்கிறார்

3. சேலத்தில் பள்ளி வளாகத்தில் நடந்துக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை பின் நோக்கி வந்த பள்ளி வாகனம் கொன்றிருக்கிறது!

இந்த மூன்று செய்திகளிலும் முக்கியமான விஷயம் “கண்காணிப்புத்தான்”. காவல்துறை நகரெங்கும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி வருகிறது, ஆனால் போக்குவரத்து காவல்துறையின் இருப்பும் நடமாட்டமும் குறைந்து வருகிறது (தேர்தலுக்கு பல மாதங்கள் முன்பிருந்தே), கேமராக்களை நிறுவிவிட்டு, அதை தொடர்ந்து கண்காணித்து குற்றத்தை தடுக்காமல், வெறும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மட்டும் பயன்படுத்திய குறைபாட்டின் உதாரணம் தான் முதல் செய்தி, அதற்கு மேலும் சொல்ல வேண்டுமென்றால் நகரம் முழுக்க சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் நிகழ்கிறது, அதிலும் அரசுப்போக்குவரத்து வாகனங்களை காட்டிலும் அதிக விதிமீறல்களை உபேர், ஃசுவிங்கி, சோமேட்டோ போன்ற நிறுவன ஊழியர்கள் செய்கிறார்கள், “ப்ச் கேமராதானே?” அவ்வளவுதான் இந்தக் கேமராக்களின் மீதான கணிப்பு! ஆன்லைனில் கேமராக்களை கண்காணிக்க ஒரு குழுவை அமைத்துப் பார்த்திருந்தால் அந்தச் சிறுமியை குற்றம் நிகழும்முன்னே காப்பாற்றியிருக்கலாம்தானே?
இரண்டாவது செய்தியில், குப்பையைப்போட்டவரை மெனக்கெட்டு கண்காணிப்பு கேமரா மூலமும் குப்பையில் கிடந்த கேக் பெட்டியின் முகவரி வைத்து கண்டுபிடித்து, நூதனமாய் தண்டனை வழங்கி திருத்தியதில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டிருக்கிறது, மற்றவர்கள் அலட்சியமாய் கடக்கும் விஷயத்தை சிரத்தை எடுத்து சீர்செய்யும் இதுபோன்றவர்களால் தான் நாட்டில் இனி மாற்றம்
மெல்ல சாத்தியமாகும்!

மூன்றாவது செய்தியிலும், முக்கிய பங்கு கண்காணிப்புத்தான், பள்ளிக்கு குழந்தைகள் வரும்போது, ஒன்று பெற்றவர்கள் வகுப்புவரை சென்றுவிட வேண்டும் அல்லது அதை அனுமதிக்காத பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்கு பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும், பள்ளி வேன்களில், ஆட்டோக்களில் செல்லும் பிள்ளைகளின் பாதுகாப்பு பெரும்பாலும் கேள்விக்குறிதான், நம்முடைய நாட்டில் பாதுகாப்பு என்பது ரியாக்டிவ்(reactive) தான், எதிர்வினைதான், அதாவது எதுவும் நிகழ்ந்த பின்னரே வருத்தப்பட்டு செயலாற்றுவது, 250 கிலோ வெடிபொருட்களை கொண்டுவந்து இராணுவ வீரர்களை கொல்லும்வரை தூங்கிவிட்டு பின் எதிர்வினையாற்றுவதும் ஒரு நல்ல உதாரணம்! அங்கே தொடங்கி சாலையில் குழந்தைகளை கடத்துவது வரை நம் கண்காணிப்பு என்பது எதிர்வினையாற்ற மட்டுமே!

அதுதான் ஓட்டுப்போடுவதிலும் நிகழ்கிறது, ஓட்டுப்போடும் போது பணத்துக்காக கண்ணைமூடிக்கொண்டு அதைச் செய்துவிட்டு,பின் 5 வருடம் குத்துதே குடையுதே என்று அவதியுற்று மீண்டும் அதையே செய்கிறோம்!
எதிர்வினையோ இல்லை முன்கூட்டியே யோசித்து செயல்படுவதோ, எதையும் சிறப்புற செய்தால் மட்டுமே நம் எதிர்கால தலைமுறை வாழும்!

பெண்ணெனும்_பொருள்!

#பெண்ணெனும்_பொருள்!
ஆக கடைசிவரை எந்தக்குழந்தையைப் பாலியல் பலாத்காரம் செய்துக் கொன்றாலும், எத்தனைப்பெண்களை கூட்டு வன்புணர்வு செய்துக் கொன்றாலும், கடுமையான தண்டனை குற்றவாளிகளுக்கு இல்லை? ஆண்களின் வளர்ப்பில், சமூக பாதுகாப்பில், கல்வியில் எந்த மாற்றமும் இல்லை? எந்தக்கட்சியின் தேர்தல் வாக்குறுதியிலும் இது இல்லை! மொத்தத்தில் “ஆடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?” என்ற காலத்திற்கு இட்டுச்செல்கிறார்கள் ஆட்சியாளர்களும், நீதி நெறியாளர்களும்!

பெண்களுக்கு இலவசமாய் மிக்ஸியும், கிரைண்டரும், ஸ்கூட்டரும் தருவார்கள், மற்றபடி கல்வி, சமூக உரிமை, பாதுகாப்பு இதெல்லாம் கேட்கவே கூடாது, கவர்னர் கன்னத்தை கிள்ளூவார், அமைச்சர் பெண்ணை ஏமாற்றி பிள்ளைப் பெற்றுக்கொள்வார், கட்சி சார்ந்த சில மடையர்கள் பெண்களை அசிங்கமாக சித்தரிப்பார்கள், அரசியல்வாதிகளின் ஆதரவில் அவர்கள் வாரிசுகள் பெண்களை நசித்து படம் எடுப்பார்கள், சாதிச்சங்கங்களின் தயவில் கொழுத்தவன், இளைத்தவனின் பெண்களை வெட்டிக்கொல்வான், சாதிப்பெயரில் நீரில் கூட தீண்டாமை கொண்டு குழந்தைகளை கொல்வார்கள், உயிரை காப்பாற்றிக்கொள்ள பாலியல் வக்கிரங்களில் பெண்கள் போராடக்கூடாது என்று அமைச்சர் சொல்வார், ஊரே ஆதாரங்களை சமர்பித்தாலும், ஆதாரம் இருக்கிறதா என்று அமைச்சர் கேலி செய்வார், தனியே வெளியே வந்தால் கொல்வார்கள், வீட்டில் இருந்தாலும் கொல்வார்கள், ஆடையோடு இருந்தாலும் கொல்வார்கள், ஆடையற்று பிறக்கும் குழந்தையையும் புசிப்பார்கள், இப்படி தொடர்ந்து நடக்கும் எதற்கும் இன்று வரை பதிலில்லாத நிலையில், தொடர்ந்து மிக்ஸிக்கும் கிரைண்டருக்குமாக, சில ஆயிரம் ரூபாய்களுக்காக ஓட்டுப்போட வேண்டுமா என்று பெண்கள் யோசிக்க வேண்டும், ஓட்டுக்கேட்டு வரும்போது, வாக்காளர்களிடம் கேள்விக்கேட்காமல் பணத்தை எதிர்ப்பார்த்து நின்றால் பெண்களுக்கு மரியாதை மட்டுமல்ல, பிறக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்புமில்லை!

காட்டுத்தர்பார்

#காட்டுத்தர்பார்
குழந்தைகள் பள்ளி செல்லும் நேரத்தில் ஆளும் கட்சி அதன் கூட்டணி கட்சிகளும் லாயிட்ஸ் ரோடில் அணிவகுத்திருக்கிறார்கள், ஆளுக்கு ஒரு கொடியை வண்டியில் கட்டிக்கொண்டு வெள்ளை சட்டையில் இருசக்கர வாகன ஓட்டிகள் யார் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்று வண்டியை ஆங்காங்கே நிறுத்தி வைக்க, ஓரே ஒரு காவல்துறை அதிகாரி போக்குவரத்தை சீர்செய்ய, நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களை தானே சிரமப்பட்டு தள்ளி வைக்கிறார், பள்ளிக்கு தாமதமாகும் பதட்டம் வண்டிகளின் ஹாரன் ஒலியில் காதை அறைகிறது!
இங்கே இருக்கும் பிரச்சனை ஒன்றுதான், கட்சி கொடியை கட்டிக்கொண்டால் படித்தவன், படிக்காதவன், ரவுடி, இத்யாதி இத்யாதி என எல்லோருக்கும் ஒரு திமிர்த்தனமும் அலட்சியமும் வந்துவிடுகிறது, ஒரு சாதாரண கட்சியின் அடிமட்ட தொண்டனை கூட கேள்வி கேட்கவோ அதட்டவோ திராணியில்லாமல் நம் காவல்துறை இருக்கிறது, அடிமட்ட தொண்டர்களே காவல்துறைக்கு மரியாதை தராத போது இந்த அமைச்சர்களிடம் இந்த அதிகாரிகள் என்ன பாடுபடுவார்கள்?
குறைந்தபட்சம் மக்களுக்கு இடையூறில்லாமல் வாகனங்களை நிறுத்தக்கூட தெரியாத இந்த அரசுதானா மீத்தேன், அணுவுலைகளின் ஆபத்தையுணர்ந்து மக்களின் பாதுகாப்புக்கு மெனக்கெடப் போகிறது? தமிழகத்திற்கு விடிவு காலம் எப்போது?

Thursday, 16 May 2019

Metoo

#Metoo போட வேண்டுமென்றால் அப்பத்தா ஆத்தாவில் இருந்து இப்போதுள்ள கொள்ளு பேத்திகள் வரை 99% சதவீத இந்தியப் பெண்கள் போட வேண்டும், ஏனென்றால் உலகிலேயே மோசமான ஆண்கள் இந்திய ஆண்கள் என்றும் மோசமான பெண்கள் இங்கிலாந்து பெண்கள் என்றும் ஒரு சர்வே சொல்லுகிறதாம்!
நல்லவர்கள், நேர்மையாளர்கள், பெண்ணை ஏய்க்காதவர்கள் மன்னிக்க! 😎 .

Saturday, 20 April 2019

பெரிய திருடர்கள்

நம்முடைய காவல்துறைக்கு அசாத்திய திறமை இருக்கிறது, முதல்வர், பிரதமர் வருகிறார்கள்
என்றால் ஒரு சின்ன தடங்கல் கூட இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள், ஒரு கலெக்டரின் மொபைல் போன் காணாமல் போய் விட்டால் ஒரே நாளில் கண்டுபிடித்து விடுவார்கள், எந்தக் காட்டுக்குள் எந்த வீரப்பன் இருந்தாலும் கண்டுபிடித்து விடுவார்கள், மெரீனாவில் தடையுத்தரவு என்றால் இரண்டு சாலைகளுக்கு முன்பே ஒரு ஈ காக்கையை கூட நுழைய விட மாட்டார்கள், ஒரு மாபெரும் கூட்டத்தை கலைக்க வேண்டுமென்றால், மெரீனாவில் கலைத்ததை விட வேகமாய் கலைத்துவிடுவார்கள்! 

தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகம் வரை வரவிட்டு, பின்பு ஸ்னைப்பர்கள் வைத்து சுடுவதில் எல்லாம் திட்டமிடல்கள் இல்லை, மக்கள் தான் அராஜகம் செய்தார்கள், எல்லா காணொளிகளும் அப்படித்தான் வரும், பின் அதில் வந்த அனைவரும் எந்த வயது என்றாலும் தீவிரவாதிகள், அப்பாவி அரசாங்கத்துக்கும், காவல்துறைக்கும் இதில் ஒரு பங்கும் இல்லை, ஆனால் இனி எந்தப் போராட்டம் என்றாலும் ஸ்னைப்பர்கள் நிச்சயம் என்ற பயத்தை உருவாக்கியிருக்கிறார்கள், ஸ்டெர்லைட் ஆலை, வேறு எதாவது விஷ ஆலை, நாடு முழுக்க அணுவுலைகள் என்று எல்லாவற்றையும் தமிழ்நாட்டில் அமைத்துக்கொள்ளலாம், முழுதாய் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் வரை ஆட்சி செய்துகொள்ளலாம், பின்பு பினாமி சொத்துக்கள் இருக்கும் தேசத்துக்கு சென்று விடலாம்!

தமிழ்நாட்டின் நான்கு மூலைகளிலும் அழிவுத்திட்டங்களை செயல்படுத்தி, மக்களை போராட்டக்காரர்களாக்கி, அவர்களை நடுவீதியில் சுட்டுக்கொன்று, ஒரு பக்கம் அவர்களை தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தி, மறுபக்கம் முதலை கண்ணீர் வடித்து நிவாரணம் தந்து, அரசு வேலை தந்து அடிமையாக்கும் இந்த சாணாக்கியத்தனம், சாணாக்கியனே அறியாததது
இத்தனை உயிர்கள் போராட்டங்களில் பலியாவது எதற்கு என்று எண்ணினால், நாட்டின் வளங்களை காப்பதற்காக, அரசு இதைச் செய்தது எதற்காக என்றால் தனியார் முதலாளிகளுக்காக, இந்த நாடு சீரும் சீறப்புமாய் இருக்கட்டும், சுட்டுக்கொள்ளும் காவல்துறைதான் நண்பர்கள், சுடச்சொல்லும் அரசுதான் நம்முடைய ஆட்சியாளார்கள், எது எப்படி இருந்தால் என்ன அதுதான் செத்தபிறகு காசு வருகிறதே, போதும்!

தாழ்வுமனப்பான்மை

“அந்தப்பொண்ணுக்கு மூக்கு கொஞ்சம் சப்பை, எங்க மாமா பொண்ணுக்கு கலர் கொஞ்சம் கம்மி, அட அவ ரொம்ப குண்டு”, இப்படியெல்லாம் பெண்கள் திருமணத்திற்கு பின்பே அதிகம் தத்தமது உறவுகளிடம், குறிப்பாக கணவர்களிடம் கதைக்கிறார்கள், எப்போதும் உடலழகை / புற அழகை வைத்தும், அடுத்தவரை மட்டம் தட்டித் தம்மை மேம்படுத்திக்காட்ட முனையும் மனநிலைக்குத்தான் “#தாழ்வுமனப்பான்மை” என்று பெயர், அதுவும் தமது துணையிடமே அக அழகை விசாலப்படுத்துதலை விடுத்து, தமது புற அழகை அடுத்தப்பெண்களுடனான ஒப்பீட்டில் மேம்படுத்திக்கொள்ளும் அந்த திருமண உறவில் அப்படியென்ன நம்பிக்கை இருந்துவிடப்போகிறது, கடமைக்காகவும் காமத்துக்காகவும் சேர்ந்திருப்பதைத் தவிர? 

“மனதில் வரும் ப்ரியம்தான் காதல் என்றால் நாய்க்குட்டியுடன் வருவதும் காதல்தான், உடலில் வரும் ஆசைதான் காதல் என்றால் விலைமாதுவுடன் வருவதும் காதல்தான்”, என்று யாருடைய வரிகளாகவோ படித்தேன், மனம், உடல் இணைந்தாலும், காதலும் திருமணமும் நீடிக்க “பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும், ஆழ்ந்த அன்பும்” அவசியம், அது இல்லாத போதே “அழகுக்கான ஒப்பீடுகள்” சில பெண்களுக்கும் ஆண்களுக்கும் தேவைப்படுகிறது, தம்மை நிலைநிறுத்திக்கொள்ள அடுத்தவரை புறம்கூறுதல், இல்லாததை இருப்பதாக கூறுதல், எப்போதும் பொய்களை கட்டவிழ்த்தல், ஒருவர் அனுமதியில்லாமல் புற அழகை வர்ணித்தல் எல்லாம் மிக மோசமான மனநிலை, அப்படி நிலைநிறுத்திக்கொள்ளும் உறவெல்லாம் சுவைப்பதில்லை!

Sunday, 17 February 2019

Pepsico

Bedtime story for my children revolved around various topics and finally landed up with a video of PepsiCo CEO Indhra Nooyi's successful career as a woman, where she says, "I was from Madras, which was water-starved...." and then the entire episode of her becoming a CEO with PepsiCo. My younger one, 8 years old daughter, interrupted and said, "mom, I see despite her education and her own experience of water starved Madras, she has made a big blunder by becoming a CEO of "water sucking Industry" and depriving drinking water for people of her own birth place, and what is the use of she is being modest?" and I'm dumb struck! 

பிள்ளைகள் உறங்க இரவு நேர கதைகள் என்று பல கதைகள் சொல்லி, இறுதியாக பெப்ஸிக்கோ-வின் முதன்மை செயல் அதிகாரி திருமதி. இந்திரா நூயி யின் வெற்றி வரலாற்று காணோளியை வந்தடைந்தோம், அதில் திருமதி. இந்திரா, "நான் மெட்ராஸில் பிறந்து வளர்ந்தேன், அதுவும் தண்ணீர் பஞ்சம் நிறைந்த மெட்ராஸ்..." என்று தொடர்ந்து அவர் பெப்ஸிக்கோ வில் முதன்மை அதிகாரியானது, அவர் கடந்து வந்த பாதையைப் பற்றிச் சொல்லிக்கொண்டு போக, இடையே குறுக்கிட்ட என் எட்டு வயது இளைய மகள் கேட்டாள், "அம்மா, அவங்க இவ்வளவு படிச்சு, தண்ணீர் பிரச்சினையுள்ள சென்னையில் வளர்ந்தும், பூமியில தேவையில்லாத ஒரு கூல்டிரிங்க்குக்காக, ஜனங்களுக்கு குடிக்கிற தண்ணியில்லாம உறிஞ்சுற ஒரு கம்பெனிக்கு ஏன் தலைவரா ஆனாங்க? இவங்க படிச்சு, அடக்கமா அமைதியா இருந்தாலும் அதனால என்ன யூஸ்?!"
நான் வாய்மூடி மௌனியானேன்!

#Daughter #Pepsico

Tuesday, 8 November 2016

நிகழ்வுகள்!

மத்திய கைலாஷின் சிக்னலில், ரைட் இண்டிகேட்டர் போட்டு யு டர்ன் எடுக்க, வாகனத்தின் நீளத்திற்கேற்ப, சாலையின் தடுப்புச் சுவரை விட்டுக் கொஞ்சம் தள்ளி திருப்ப, பாம் பாம் என்ற அலறலில், தடுப்புச் சுவற்றுக்கும் வாகனத்துக்குமான, சிறிய இடைவெளியில் கண் இமைக்கும் நேரத்தில் வந்து மோதி சாலையில் விழுந்தார் ஒரு பைக் ஒட்டி, ஒருவேளை சிறிய வாகனமாய் இருந்திருந்தால் தடுப்புச் சுவற்றை ஒட்டி திருப்பியிருப்பேன், நிச்சயம் இதே வேகத்தில் அவர் தடுப்பைச் சுவற்றில் நசுங்கியிருப்பார். கீழே இறங்கினால், மிகக்கனமான ஒரு தலைக்கவசம் அணிந்திருந்தார், சட்டென்று எழுந்துவிட்டார். 
 
அந்தக் குறுகிய இடைவெளியில் யு டர்ன் செய்ய முந்திய அவர், பதட்டத்தில், "நீங்க ஏன் யு டர்ன் செய்யுறீங்க" என்று கேட்க, "இப்போ நீங்க என்ன செஞ்சீங்க?" என்று பதில் கேள்வி கேட்க அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. முன்னே ஒரு சிறிய தடுப்பைக் காவல்துறை அடைத்திருந்தது, அதற்கடுத்த வளைவில்தான் திரும்ப முடியும். அவரும் அப்படியே திரும்ப வந்து, கிடைத்த இடைவெளியில் அத்தனை வேகத்தில் நுழைய, திரும்பி நின்றுக்கொண்டிருந்த வாகனத்தில் மோதியதால் விழுந்த அளவில் எழுந்துக்கொண்டார். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரி விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்ய, "இன்னும் சின்ன இடைவெளியில் லாரி திரும்பும்போது திரும்பிடாதீங்க, பார்த்துப் போங்க" என்று அவரைப் பார்த்துச் சொல்லிவிட்டு விதியை நொந்து கொண்டு திரும்பி சென்றேன்!

சென்னையில் சாலைவிதிகளை மனிதர்கள் புறந்தள்ளி வெகுகாலம் ஆகிவிட்டது, ஒரு ரயில்நிலையத்தில் ஒருவன் ஒரு பெண்ணைப் பட்டப்பகலில் வெட்டிக்கொல்ல, அவனா இவனா என்று தடுமாறும் நீதியில், அலட்சியமான கண்காணிப்பு முறைகளில், அடுத்தடுத்துப் பெண்கள் ஆண்களால் சர்வ சாதரணமாகக் கொலைசெய்யப்பட்டார்கள், துளிர் விட்டுப்போவது என்று பெரியவர்கள் இதைத்தான் சொல்வார்கள், பயம் விட்டுப் போதல், சட்டத்தின் மீது!

இதைப்போலவே சாலைகளிலும், ஒருவழிப்பாதையில் முதலில் ஓரமாய் ஒதுங்கி மெதுவாய் வந்தவர்கள், இப்போதெல்லாம் ஒருவழிப்பாதையிலேயே இருவழிப்பாதையில் வருவதைப் போல மிக வேகமாய் நேர் எதிரே வருகிறார்கள்!
ரியர் வியூ மிரர் என்பதையே எதற்கு என்று பாதிப்பேர் கழட்டி வைத்துவிட்டும், ஒரு சாரார் அதைச் சாலையைக் கீழ் நோக்கிக் கவிழ்த்து வைத்தும் பறக்கின்றனர்!

எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்தச் சிக்னலிலும் ஷேர் ஆட்டோக்களும், வேன்களும் சர்வ சுதந்திரமாய் நிற்கும், எந்தக் காவல்துறையைக் கண்டும் அவர்கள் அஞ்சுவதில்லை!
பார்களில் இருந்து உயர்தரக் கார்கள் முழுப் போதையில் சர்ரென்று சாலையில் விரையும், அவர்களுக்கும் பயமில்லை!
அவரவர் தரத்துக்கு அவர்களின் பணம் பேசும், அல்லது பலம் பேசும்!
ஒரு விபத்து, ஓர் உயிர் பலி எல்லாம் சட்டத்திற்குப் பத்தோடு ஒன்று பதினொன்று, பாதிக்கப்படும் குடும்பங்களுக்கே அது வாழ்நாள் மனஉளைச்சல், யாரோ ஒருவரின் இறப்பு ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தையே அசைத்துவிடும்!

இருந்தாலும், இந்தியாவின் சாலைகளில் தினந்தோறும் கழைக்கூத்து நடக்கிறது, வீரர்கள் தலைக்கவசம் இல்லாமல் விரைகிறார்கள், நான்கு முதல் ஏழு பேர் வரை ஒரு பைக்கில் சாகசப் பயணம் செய்கிறார்கள். சிலநொடிகள் விழும் சிகப்பு விளக்குக்கு நிற்க வேண்டி இருக்கும் நேரத்தை வீணடிக்கக் கூட முடியாமல் அவர்கள் எந்திரமாய்ப் பறக்கிறார்கள், பேருந்துகளை ஒருபுறம் கவிழ்த்துவிடும் அளவில் பயணிகள் இழுக்க, நடத்துனர் சாமர்த்தியமாகப் பூவியீர்ப்பு விசைக்கு எதிராகச் செயல்பட்டு விரைகிறார், சாலை பரிசோதனையில் தோற்றுப் போன கார்களில் குடும்பங்களில் ஊர்வலம்!

நடைபாதைகள் என்பது கடைகளை விஸ்தரிப்பதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும் என்ற சட்ட மாற்றம் ஏற்பட்டு வெகுநாளாகி விட்டது, யாரையும் கேள்வி கேட்க ஓட்டரசியல் பயம் கொள்கிறது, ஒரு ஆம்புலன்ஸ் இந்த வீதிகளில் வந்தால் உயிர் பிழைக்க வாய்ப்பேயில்லை!
பலகோடியில் பிரதமர் பயணிக்க அதிநவீன விமானம் வாங்கும் நாட்டில், இன்னும் கடைக்கோடியில் செம்மண் சாலைகளும், பெருநகரங்களில் ஒரு தூறலுக்கே பல்லிளிக்கும் பாவப்பட்ட சாலைகளும், ஒரு அடைமழையில் வெள்ளத்தில் இடிந்து விழும் பாலங்களும், அறுந்து தொங்கிக்கொண்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்களும் நகரத்தின் நிலையைப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது!

ஜனாதிபதி முதல் அமைச்சர் வரை பயணிக்கும் சாலைகள், எப்போது அவர்கள் வருவதால் மட்டுமே, சில இடங்களில் சாலைகள் என்று பெயர் பெற்றிருக்கின்றன.
ஒருவேளை நாளை இந்தியா வல்லரசானால், அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை ஹெலிகாப்டரிலேயே பறக்கலாம் என்றால், சாலைகள் மக்களுக்கு எதற்கு?

Monday, 29 February 2016

ஈகை என்பது பிறவிக்கடன்!

உதவி என்று கேட்டு வந்தவர் யாராய் இருந்தாலும் என் தந்தையும் தாயும் இல்லையென்று மறுத்ததேயில்லை, தமக்குரிய எல்லா சொத்தையும் உறவுகளுக்காக வேண்டாமென மறுத்து, வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்தவர்கள், 'உன்னால முடியும் போது இல்லைன்னு சொல்லாதே, கொடுக்க முடிஞ்சா கொடுத்துட்டு, போய்கிட்டே இரு, ஒரு வார்த்தையைக் கூட எதிர்பார்த்து தேங்கி நிக்காதே, நாம எது செஞ்சாலும் சந்தோஷமா செய்யணும், மனசில்லாம எந்தக் காரியத்தையும் செய்யாதே, இந்த உலகம் தேவைகளுக்காக ஓடிக்கிட்டே இருக்கும், யார் தருவாங்களோ அவங்க பின்னாடி இந்த உலகம் ஓடும், ஒருநாள் கொடுக்க முடியாம போய்ட்டா, போற்றின வாய்கள் தூற்றும், ஒருத்தருக்கு உன்னால உதவி பண்ண முடியும்னா, அதுதான் உனக்கு கடவுள் கொடுத்த வேலை, அவ்வளவுதான், புகழ்ச்சிக்காக தேங்கி நின்னா முடியாத காலத்திலே திட்டறதையும் கேக்க வேண்டி வரும்'

இங்கே வெள்ள மீட்பு , நிவாரணப் பணிகளுக்குப்பிறகு, மனிதாபிமான செயல்களுக்குச் சென்று சேர்ந்து மனங்களுக்கு புத்துணர்வு தர வேண்டிய வெளிச்சம், வெற்று விளம்பரமாய் புகழ் என்னும் போதைக்கு ஊறுகாயாகிக் கொண்டிருக்கிறது!

ஒருவருக்கு உதவி செய்வதென்பது மனித நேயம், இதில் விளம்பரங்கள் தேவையில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து!

இருப்பினும் குழுவாய் சேர்ந்தோ, தனிப்பட்ட முறையிலோ செய்யும் நல்ல காரியங்களை வெளிச்சம் இட்டு காட்டுவதால் பிறருக்கு ஒரு தூண்டுதலாய் அது இருக்கும்
என்றால், அதை நிச்சயம் நாம் செய்யலாம். ஆனால் எந்த இடத்திலும் செயலை மட்டும் சொல்லி நகர்ந்து விட வேண்டும், உதவிப் பெறுபவரின் விவரங்களை, அதை வெளியிடுவதால் அவருக்கு நன்மைப் பயக்குமெனில், அவர் அனுமதியளித்தால் மட்டுமே பகிர்தல் வேண்டும்!

இடது கைக் கொடுப்பதை வலது கை அறியாமல் செய்ய வேண்டும் என்ற கூற்றை முழுதும் பின்பற்ற முடியவில்லை என்றாலும், மேற்கூறிய வகையிலேனும் பின்பற்றலாம்!

ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும், எப்போதும்
மனிதர்கள் கொடுப்பது, பெறுவது என்ற இரண்டையும் மாற்றி மாற்றி செய்ய வேண்டிய நிலையை காலம் கட்டாயம் ஏற்படுத்திக் கொடுக்கும், ஆகையால் கொடுப்பதால் நாம் கடவுளர்கள் அல்ல, பெறுவதால் நாம் பிச்சைக்காரர்களும் அல்ல, எந்த நிலையில் இருந்தாலும் நாம் மனிதர்கள் மட்டுமே!

ஈகை என்பது பிறவிக்கடன்!

ஆங்கிலம்

பெங்களூர், ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்களிலும், மற்ற பிற வடமாநிலங்களிலும், பெரும்பான்மையான எல்லா அரசு, தனியார் அலுவலகங்களிலும், வணிக இடங்களிலும், இந்தி இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் அவர்களின் தாய் மொழி இருக்கும், இந்தி இருக்கும் இடத்தில் அவர்கள் மொழியும் அறிவிப்புப் பலகைகளில் இருக்கும், தமிழகத்தின் தலைநகரில் இயங்கும் பல்வேறு வணிக இடங்களில், தனியார் வங்கிகளின் மக்கள் புழங்கும் இடங்களில், இந்தியும் ஆங்கிலமும் இருக்கிறதே தவிரத் தமிழ் என்பது இல்லை, இந்தி எதிர்ப்பை விட நாம் தமிழ் ஒழிப்பு நிலைக்கே முதலில் வேதனைப் பட வேண்டும்!
பிற மாநிலங்களில் இந்தியை எதிர்க்கிறார்களோ இல்லையோ, தங்கள் மொழியைக் கட்டிக் காக்கிறார்கள், இங்கே தமிழன் ஆண்டாலும் சுரண்டல், தமிழர் அல்லாதவர் ஆண்டாலும் சுரண்டல்!
நமக்கு ஆங்கிலம் என்பது தமிழை மறப்பதற்கு அல்ல!

சென்னை_என்றொரு_நம்பிக்கை‬!

பூகம்பம், சுனாமி, பெரு வெள்ளம், சாராய ஆறு, பெண்களைத் தொடரும் வக்கிரப் பத்திரிக்கைகள், அடிப்படை உரிமைக்கும் கூட மக்களின் போராட்டம், தினம் நடக்கும் அரசியல் கூத்தில் சிக்கலாகும் சாலைப் பயணங்கள், பல்வேறு நகரங்களிலிருந்து வந்தேறும் குற்றங்கள்......இப்படி எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு நிற்கிறது தலைநகரம், நம்பிக்கை நகரமாய்!
‪#‎சென்னை_என்றொரு_நம்பிக்கை‬!

நிகழ்வுகள்!,

பிள்ளைகளின் அருமைப் பெருமைகளைப் பற்றிக் கேட்பதற்காக, இன்று பள்ளிச் சென்றேன், இன்னமும் கொஞ்சம் நேரமிருந்தது, பஞ்சயத்துக்காக அடிக்கடிச் செல்லாததால் எழும்பி நிற்கும் கட்டிடங்களில் எந்தக் கட்டிடத்தில் அவன் வகுப்பு இருக்கிறது என்று ஒரு சிறு குழப்பம் வந்துவிட்டது. அப்படியே வெளியில் நின்ற சில மேல்நிலை வகுப்பு மாணவர்களிடம், பிப்த் ஸ்டாண்டர்ட் ஈ செக்க்ஷன் எந்தப் பக்கம் என்று கேட்டுக் கொண்டிருந்தபோது,
இரண்டு பேர், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான தனிப் பயிற்சி வகுப்பு விளம்பரத் துண்டுச் சீட்டுக்களைக் கொடுத்தனர், சரி இதெல்லாம் நமக்கெதுக்கு என்று தள்ளிப் போகும் போது, "ஹலோ எக்ஸ்குயுஸ், நீங்க எந்தக் குரூப்? நாங்க எல்லாக் குரூப்புக்கும் எடுப்போம்"
நான் "....ஹி ஹி ஹி" என்று திரும்பிப் பார்த்தேன், நல்லவேளை மம்மிஈஈஈஈஈஈஈஈஈஈ என்று மகனோ மகளோ ஓடி வரவில்லை! tongue emoticon

‪#‎தட்‬ அல்ப சந்தோஷ மொமென்ட்

மகன்‬

மகனின் வகுப்புக்கு வந்தாயிற்று,
"டீச்சர் என் பையன் ....?"
"ரொம்ப நாட்டி உங்க பையன், எந்நேரமும் சிரிச்சுக்கிட்டே இருக்கான், எல்லாரையும் சிரிக்க வெச்சுடுறான், வந்து ஒரு பாயிண்ட் சொல்லுடான்னா, சொல்லிட்டே அவனே சிரிச்சுக்குறான்....அப்புறம் தினம் லேட்"
டீச்சர் பேசாம அவனுக்கு இம்போசிஷன் கொடுங்க, வீட்டேலேயும் ரொம்பக் கலாட்டா, நீங்கதான் கண்டிக்கனும்"
ஐயோ, நீங்க வேற, உங்க பையனைக் கூப்பிட்டு எது கேட்டாலும், ரொம்ப ஸ்வீட்டா ஒரு சிரிப்புச் சிரிக்கிறான் பாருங்க, யாருன்னாலும் மயங்கிடுவாங்க..."
டீச்சர் சொன்னதும் மறுபடியும் அதே சிரிப்பு....
டீச்சர் அவனிடம் திரும்பி, பிரசன்னா இனிமே சிரிக்கக் கூடாது...
நான் இருக்கட்டும் டீச்சர், சிரிக்கட்டும், அதுல என்ன தப்பு, பட் கேள்விக்குப் பதில் சொல்லிட்டு ஸ்மைல் பண்ணட்டும்
டீச்சர் சிரித்தார்.....நல்ல அம்மா நல்ல பையன்....அவர் மைண்ட் வாய்ஸ்! tongue emoticon

மருத்துவமனையில்

மருத்துவமனையில் அமர்ந்திருக்கிறேன், பக்கத்தில் ஒரு கிராமத்துப் பெரியவர் அமர்ந்திருக்கிறார், சத்தமாக கைபேசியில், "ம்ம் சொல்லு, எந்த ஊரு பொண்ணு?
...
கோயம்புத்தூரா? எவ்வளவு தேறும்?
....
நிலம் இருக்கா ?
...
அப்பா என்ன பண்றாரு?...

இப்படியே ஓடுகிறது, பொண்ணு
என்ன படிச்சிருக்கு, குணம் எப்படி...ஹ்ஹூம் இதெல்லாம் கேக்கவேயில்ல
பொண்ணு வீட்டுக்காரங்களும் இப்படித்தான்!
சில வருஷங்களுக்கு முன்னாடி என் மாமாவும் தன் மகனுக்கு இப்படித்தான் பொண்ணுப் பார்த்தார், சில மாதங்களுக்கு பிறகு, கிளி ஜோடியோடு ஆத்தை விட்டு பறந்துப் போய்டுச்சு, மதம் மாறி காதல் திருமணம் செய்த இரண்டாவது மகனின் மனைவி, அவர்களுடன் அன்போடு இயைந்து வாழ்கிறார்!
இதுனால காதல் திருமணம்தான் சிறந்ததுன்னு சொல்ல வரலே பெரியவங்களே, நீங்க முதியோர் இல்லம் போறது, உங்களுக்கு அமைஞ்ச பிள்ளைகளைப் பொறுத்த விதி! அவ்வளவுதான்!

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...