Friday, 20 December 2019

இந்தச்சமூகம் என்பது நாம்தான்

அறுந்து விழுந்த மின்கம்பியை பிடித்த ஆறுவயது சிறுவன் மரணம், இதில் அறுந்த விழுந்த மின்கம்பியின் மின்வாரிய அலட்சியம் இந்தியாவுக்கே பொதுவானது, மழைக்காலங்களில் மட்டுமல்ல எல்லாக் காலங்களிலும் நீங்கள் சென்னை மாநகரில் பல்வேறு கம்பிகள் இப்படி சாலையை, நடைபாதையை அடைத்துக்கொண்டிருப்பதை பார்க்கலாம்!
அலட்சியமான அதிகாரிகளையோ, அரசையோ குறித்தல்ல இப்பதிவு, அவ்வப்போது இதுபோல் வரும் செய்திகளின் பின்னே உள்ள பெற்றவர்களின் அஜாக்கிரதைப்பற்றியதே, எத்தனை பாதுகாத்தாலும் நம்மை மீறி நடந்துவிடும் விபத்துகளையும் கொடுமைகளையும் விட்டுவிடுவோம், ஆனால் இவைகளை தவிர்க்கலாமே;

1. வீட்டில் தவழும் நடக்கும் குழந்தைகள் இருந்தால் தண்ணீர் தொட்டிகளை இறுக்கமாக மூடி வைக்கவும், குளியலறைக்கதவுகளை தாழ்போட்டு எட்டாத உயரத்தில் வைக்கவும் ஏன் மறக்கிறோம்?

2. குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் மருந்துகளையும், கேரோசின், தீப்பெட்டி போன்ற பொருட்கள் வைப்பதை தவிர்க்கலாமே?
3. குழந்தையை டிவி ஸ்டாண்டின் அருகில் விட்டு, அது தலையில் விழும்வரை என்ன செய்கிறோம்?

4. குட் டச் பேட் டச் பற்றி இன்னமும் பெற்றவர்களே பேசாத நிலையை எப்போது மாற்றுவோம்?

5. குழந்தைகளை வெளியே விளையாட விடுவது ஆரோக்கியமானதே, ஆனால் வீட்டுக்குள் சீரியல்கள் முன்போ அல்லது வேறு வேலையிலோ மூழ்கி பிள்ளைகளை கண்காணிக்க ஏன் மறக்கிறோம்? அதுதான் இங்கே இந்த மின்விபத்து!

6. எங்காவது வெளியில் செல்லும்போது, பிள்ளைகளை தனியே விட்டு ஏன் செல்கிறோம்? விளைவு ஏழு வயது ஹாசினியின் மரணம்

7. ஆழ்துளைக்கிணறுகளில் விழுவதற்கும் பலரின் தவறுகளைத்தாண்டி நம்முடைய கவனக்குறைவும் காரணமாகிறது

8. வீட்டில் சமைக்காமல் ஏன் எப்போதும் உணவுகளை வெளியே வாங்கிக்கொடுக்கிறோம்?

9. கெடுதல் என்று தெரிந்தும் எதற்கு விதவிதமான வண்ணங்களில் தின்பண்டங்களையும், மைதாவில் செய்த கேக்குகளையும், பரோட்டக்களையும், பிஸ்கட்டுக்களையும் குளிர்பானங்களையும் வாங்கி திணிக்கிறோம்?

10. கைபேசிகள் பிள்ளைகளுக்கு எதற்கு, அதில் விளையாட்டுகள் எதற்கு? கைபேசி வீடியோ கேம்களுக்கு உங்களுக்கு நேரம் இருப்பின் அந்த நேரத்தை உங்கள் குழந்தைகளிடம் செலவழித்தால் என்ன?

11. கிட்டதட்ட குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சதிகாரர்கள், கொலையாளிகள் என்று சித்தரிக்கும் தொலைக்காட்சி சீரியல்களை சினிமாக்களை ஏன் பிள்ளைகளுடன் அமர்ந்து பார்க்கிறோம்?

12. இரவு நேரம் கண்விழித்து இவைகளை பார்க்கும் பழக்கத்தை ஏன் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தி ஆரோக்கியத்தை சிதைக்கிறோம்?

13. சாலையில் தாறுமாறாய் கடந்துச்செல்வது, தலைக்கவசம், சீட்பெல்ட் இல்லாமல் பயணிப்பது போன்ற செயல்களை எப்போது திருத்திக்கொண்டு பிள்ளைகளை வாழ வைக்கப்போகிறோம்?

14. சாலையை கடக்கும்போது, மின்தூக்கிகளில், நகரும் படிக்கட்டுகளில் என்று எல்லா இடங்களிலும் பிள்ளைகளின் கையைவிட்டுவிட்டு கைபேசியில் கவனம் செலுத்தும் பழக்கத்தை எப்போது மாற்றுவோம்?

15. சாதியைச்சொல்லி, மதத்தைச் சொல்லி, கடன்காரர்களுக்கு பொய்யைச்சொல்லி என்று எப்போது இந்தப்பாடங்களை பிள்ளைகளுக்கு கற்றுத்தருவதை கைவிடுவோம்?

16. குடிக்கும், புகைக்கும், பெண்களை போகப்பொருளாகக் கருதும் நடைமுறை வழக்கங்களை எப்போது மாற்றி ஆரோக்கியத்தையும் அன்பையும் சகமனிதரை, மனுஷியை நேசிக்கும் மனப்பான்மையையும் கற்றுத்தரப்போகிறோம்?
இந்தச்சமூகம் என்பது நாம்தான், விபத்துகள் குறைய, #மாற்றம்_நம்மிடம்_இருந்தே_உருவாகவேண்டும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!