Friday, 20 December 2019

அன்பெனும்_அம்புலிமாமா_கதை!

#அன்பெனும்_அம்புலிமாமா_கதை!

அவனுக்கு புற்றுநோய்
அவளுக்கு என்றால் நீங்கள்
எனக்கா(?!)என்பீர்கள் என்பதால்
அவனுக்கு என்கிறேன்

தேடி உழைத்தச் செல்வங்கள்
பலகோடி என்றாலும்
அதைப்பங்கீட உறவுகள்
பல இருந்தது
எதார்த்தமாய் சிந்திப்போம்
சொத்துகளை மாற்றி எழுதென்றாள்
மனைவி
நீ இருக்கும்போதே மரியாதையில்லை
எங்களையும் கொஞ்சம் யோசியென்றார்
தந்தை
எஞ்சியிருக்கும் மகளுக்கான
சீர்வரிசைகளை நினைத்து அம்மா
கண்ணீர்விட
வீடியோ கேம்களில் மூழ்கியிருந்தார்கள்
பிள்ளைகள்
அவரவர் விரும்பியதை தந்துவிட்டு
நிமிர
மருத்துவம் தொடரலாமென்று
வெற்று ஆறுதல் தந்தக்குடும்பம்
கரிய இரவின்
பொருளாதார வெளிச்சத்தில்
நிம்மதியாய் உறங்க
முன்தேதியிட்ட உறக்கத்தின் சுமையில்
விழித்திருந்தான் அவன்

எல்லாம் இருக்கிறது எதுமில்லையென்ற
உண்மையில்
நவீன சித்தார்த்தானாய்
இரவில் பயணம் தொடங்க
“ஐயா தம்பி நானும் வரேன் ராசா”
என்று வந்து நின்றாள் முதிய தாதி
வெறும் தாதியென்றால்
உங்கள் மனதில் ஆஹாவென்று
காமம் கிளுகிளுப்பு கள்ளக்காதல் என்றே
அன்பு அடையாளப்படுத்தப்படுமென்பதால்
முதிய தாதியாக அவள் உடன்செல்ல
வந்து நின்றாள்

மௌனமாய் தலையசைத்து
அவள் கைப்பிடித்து கண்ணொற்றி
அவன் உடைந்தழ
பின்னேயே வாலாட்டிக்கொண்டு வந்தது
அவ்வப்போது
அவன் பரிவுக்காட்டி வளர்த்த
நாயொன்று

தொலைதூரம் சென்ற அவன்
நேசமிக்க எளிய மனிதர்களின்
உதவியாலும்
பிரியாது பரிவுக்காட்டிய நாயினாலும்
புற்று நீங்கி
உயிர்பிழைத்தான் என்றால்
நீங்கள் நம்பவா போகிறீர்கள்?
அன்பும் கருணையும்
உயிர் காக்கும் மந்திரமென்றால்
அதெல்லாம் அம்புலிமாமா கதைதான்
என்பீர்கள்
எங்கோ அம்புலிமாமா கதைகள்
நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன
நீங்கள் எப்போதாவது நாய்க்கு
காட்டும் பரிவைப்போலவேனும்
நேசிக்கும் உயிர்களுக்கு
நேரமெடுத்து பரிவுக்காட்டுங்கள்
அன்பெனும் மந்திரம்
அம்புலிமாமாக்களை மீட்டெடுக்கும்!


No photo description available.

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!