Thursday, 16 April 2020

தெரிந்த உண்மைதான் கவலையில்லை

தலைநகரில் நீர் இல்லை,
அமைச்சர்கள் தாகத்தில் தவிப்பதில்லை
கவலையில்லை

சாலையில் போக்குவரத்து ஒழுங்கில்லை
அமைச்சர்களின் கார்கள்
சாலையில் தேங்குவதில்லை
கவலையில்லை


பணமதிப்பிழப்பில் இறந்தது ஏழைகளே
முதலைகள் பிடிபடவில்லை
அமைச்சர்களின் செல்வம் தேயவில்லை
கவலையில்லை

வெள்ளமும் வறட்சியும்
உயிர்களை விட்டுவைக்கவில்லை
அமைச்சர்களின் உறவுகள் சாகவில்லை
கவலையில்லை

நீர்நிலைகளை காணவில்லை
ஆக்கிரமிப்புகள் எல்லாம் அரசு கட்டிடங்களும்
அரசு அனுமதி தந்த இடங்களே
அவை மறைத்த ஆறுகளின்
வழித்தடங்கள் தெரியவில்லை
கவலையில்லை

காற்றிலும் நீரிலும் சுத்தமில்லை
ஆலைகள் எல்லாம் ஏழைகளுடையது இல்லை
அமைச்சர்களின் வருமானம் மாசுபடவில்லை
கவலையில்லை

காடுகளை காணவில்லை
நாட்டில் மரங்களில்லை
அமைச்சர்களை வெயில் தாக்கவில்லை
கவலையில்லை

மின்சாரம் இல்லாமல் தொழிலில்லை
மருத்துவமனைகளில் உயிர்காக்கும் கருவிகளுக்கு
மாற்றில்லை
அமைச்சர்களுக்கு வியர்க்கவில்லை
கவலையில்லை

குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை
பெண்களுக்கு சாலையில் சுதந்திரமில்லை
அமைச்சர்களின் வாரிசுகள் காணாமல் போனதில்லை
அவர்தம் குடும்பத்துப் பெண்கள்
அகாலத்தில் செத்ததில்லை
கவலையில்லை

எது நடந்தாலும் மக்களுக்கே
அமைச்சர்களுக்கு இல்லை என்பதால்
இது மக்களாட்சி
ஓட்டுரிமை இல்லையென்றால்
இது சர்வாதிகார மன்னர்களின் ஆட்சி,
தெரிந்த உண்மைதான்
கவலையில்லை!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...