Wednesday, 15 April 2020

சில_நேரங்களில்_சில_ஆண்கள்!


ஒரு பக்கம் #மகளிர் தின வாழ்த்துக்கள் போட்டுவிட்டு அடுத்த நிமிடமே, கோவை சரளா கமலின் கட்சியில் சேர்ந்ததை பாலியல் ரீதியான வன்மத்துடன் பதிவிடுகிறீர்கள், பல வகையில் மக்களை துன்புறுத்தி, திடீர் போர் நாடகம் நடத்தும் அரசுக்கு ஆதரவாகவும், ராபேல் ஊழலை மடைமாற்ற அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை மேடையேற்றும் மந்திரியை மாதிரிப் பெண் என்று புகழ்கிறீர்கள்!

உங்களின் பெண்ணியத்தான கருத்தெல்லாம் அந்தப்பெண்ணின் தொழில், பதவி, சாதி, உங்களின் தனிப்பட்ட குரோதம், நம்பிக்கைச் சார்ந்தே இருக்கிறது! கோவை சரளாவையோ ராதிகாவையோ முகம் தெரியாத உங்கள் பக்கத்து வீட்டு பாமாவையோ எளிதாக உங்களால் கேவலமாக விவரிக்க முடிகிறது, மனமுதிர்ச்சி இல்லாமல் மரியாதையற்றுப் பேசும் ஒரு கட்சித்தலைமையின் பெண்ணை உங்களால் பகடி செய்யமுடிகிறது, ஆனால் ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்றவரை, உயிரோடு இருந்தவரை உங்களால் ஒன்றும் சொல்ல முடிந்ததில்லை, தமிழிசையின் கருத்தில் மோதாமல் உருவத்தை கேலி செய்து மோதுவதும், நிர்மலா சீத்தாராமன்களின் அலட்சியமான பேச்சுகளை புறந்தள்ளி விட்டு சாதனை பெண்ணாக சித்திரம் வரைவதும் சாதிய சார்பு மனநிலையும், பெண்ணின் அழகை நிறத்தில் மட்டுமே காணும் மனநிலையும் அன்றி வேறென்ன?
இந்த மனநிலைதான் “நான் ஹை ஆங்கர், ஐய்யாங்கார்” என்று ஒருவரை பேச வைத்தது, அவரையும் கூட மீடுவினால் சொந்தச்சமூகமே பந்தாடுகிறது, சாதிக்கூட பெண்களுக்குச் சாதகமானது இல்லை என்பதுதான் உண்மை!

தன் உரிமை தன் உறவு என்று தன் உறவின் நிலையை மாற்றிக்கொள்ளும் நயன்தாராவை புகழும் உங்களுக்கு, குடிகார அல்லது கொடுமைக்கார கணவனிடம் தப்பித்துச்செல்ல நினைக்கும் ஏதோ ஒரு பெண்ணை இகழாமல் இருக்க முடிந்ததில்லை, நிச்சயம் அவள் உடல் அரிப்பிற்காகவே ஓடினாள் என்று உடன் இருந்து பார்த்ததைப் போன்று பகடி செய்து பரவசம் அடைகிறீர்கள்!

தன்னைவிட வயதில் அதிகமானவனை மணந்துக்கொள்ளும் பெண்களை ஒருமாதிரியாகவும், குறைந்த வயதுடைய ஆண்களை மணந்துக்கொள்ளும் பெண்களை வேறொரு மாதிரியாகவும் பிம்பப்படுத்திக்கொள்கிறீர்கள்!
உங்களின் பெண் பற்றிய பிம்பமெல்லாம், உங்கள் அம்மாவை அப்பா நடத்தும் விதம் கொண்டும், பெண் மீதான உங்கள் நண்பர்களின் வர்ணனையைக்கொண்டும், கிராமத்துப்பெண் என்றால் முழுதாய் சேலையைச்சுற்றிக்கொண்டு, மாமா என்று ஒருவனையே சுற்றிவருபவள் என்றும், நகரத்துப்பெண்ணென்றால் தொடைத்தெரிய கால் சராயணிந்து, கையில் மதுக்கோப்பையுடனும் கண்ணில் வழியும் காமத்துடன் அலைபவளென்றும் கற்றுக்கொடுத்திருக்கும் சில சினிமாக்களின் பாடம் கொண்டும், கொலை, கொள்ளை, விபச்சாரம், கஞ்சா என்று எந்த வழக்கென்றாலும் அதில் பெண்ணை வர்ணனைச்செய்யும் பத்திரிக்கைகளின் கேடுக்கெட்ட நடைமுறைக்கொண்டும், உளவியல் ரீதியாக ஏதோ ஒரு பெண்ணிடம்
தோற்ற உங்கள் மனநிலைக்கொண்டும் அமைந்திருக்கிறது!

இந்தப்பிம்பத்தில்தான் இந்தியச்சமூகத்தின் பெரும்பாலான பழைய தலைமுறைகளும், இன்றைய புதுத்தலைமுறைகளும் வளர்ந்து வருகிறது, எனக்குத்தெரிந்தவள், என்னை மதிப்பவள், என்னை அணுசரிப்பவள், எனக்கு அடங்கியவள், என் சமூகத்தைச்சார்ந்தவள், என் அரசியலை ஆதரிப்பவள், என்னை ஆதரிப்பவள், என் உறவில் இருப்பவள், என் உறவுக்கு நட்பாக இருப்பவள், எதிர்த்துப்பேசாதவள், அரசியல் பேசாதவள், இப்படிப்பட்டவளே நல்லவள், இந்த வட்டத்திற்கு வெளியே இருப்பவள் கெட்டவள் என்று பார்த்துப்பழகிய சிந்தனைதான், ஒரு பக்கம் ஒரு பெண்ணுக்கு வாழ்த்துச்சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் வேறொருத்தியின் கருத்தியலுக்கும் கூட தனிப்பட்ட முறையில் கழிசடை வசனம் பேசி தனிமனித தாக்குதல் நடத்துகிறது!

காதலுக்கும் கல்யாணத்துக்கும் சாதியும் செல்வமும் பார்த்துவிட்டு, எந்தப்பகைக்கும் குரோதத்துக்கும் தன் காமத்தையே தீர்வாக வயது பேதமின்றி, சாதியின்றி மதமின்றி செல்வநிலை பேதமின்றி பெண்ணிடம் பாய்வதுதான் காட்டான்களின் போதிக்கப்பட்ட வீரம்! இந்தக்காட்டான்கள் ஒருபக்கம் வாழ்த்துச்சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம், கொண்டாடியது போதுமென்று பெண்ணை ரசம் வைத்து பழகச்சொல்கிறார்கள்!

அழகு, செல்வம், சாதி, மதம், பதவி, தொழில் எதுவும் பெண்ணுக்கு பாதுகாப்பாகவோ, அணிகலன்களாகவோ ஆகிவிடாது, தன்னை உணர்தலும், தன் சக்தி உணர்தலுமே பெண்ணுக்கான சிறந்த அரண், அன்றைய தினமே மகளிர் தினம், அதுவரை சந்தர்ப்பவாத வாழ்த்துகளை இனம் கண்டு கடந்துச்செல்வதில் இந்தப்பெண் சமூகம் வெற்றியடையட்டும்! முடிந்தால் அதுவரை கொதிக்கும் ரசத்தை எடுத்து காட்டான்களின் முகத்தில் ஊற்றட்டும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!