Wednesday, 15 April 2020

பிள்ளைகளை_வளர்க்கும்_ஆண்ட்ராய்டுகள்!

#பிள்ளைகளை_வளர்க்கும்_ஆண்ட்ராய்டுகள்!
சில வருடங்களுக்கு முன்பு இங்கே ஒரு பெண், ஒரு பதிவில், தன் நான்கு வயது பிள்ளையை விடுதியில் சேர்த்துவிட்டதாகவும், வீட்டில் சும்மா இருக்கிறேன், போர் அடிக்கிறது, என்ன செய்யலாம் என்று ஒரு கைவினைக்கான பதிவில் போட்டு இருந்தார், வீட்டில் சும்மா இருப்பவர்களுக்கு ஏன் குழந்தையை விடுதியில் சேர்க்க தோன்றுகிறது என்று கேட்டுவிட்டு வந்துவிட்டேன், குழந்தை வளர்ப்பு என்பது இப்போது ஸ்மார்ட் போன்களையும், வீடியோ கேம்களையும், நொறுக்குத்தீனிகளையும் கொடுத்துவிட்டால் போதும் என்ற நிலைக்கு வந்திருக்கிறது!

14 வயது வரை குழந்தைகளுக்கு காது மூக்கு தொண்டை வளர்ச்சியென்பது இந்தக் கைபேசியின் கதிர்வீச்சில் பாதிக்கும் என்று அறிக்கை இருக்கிறது, ஆனால் “தொல்லையில்லாமல்” இருந்தால் போதும் என்று கைபேசியில் எல்லா கேம்களையும் போட்டுவிட்டு ஆடு என்று விட்டுவிட்டு, பின் குழந்தை படிப்பில் சரியில்லை, உணவு சரியாக உண்பதில்லை என்ற குறை வேறு! பேப்பரில் வரையும் குழந்தைக்கும், ஐபேடில் வரையும் குழந்தைக்குமான சோதனையில் அதிக நிறைவாற்றலும், புத்திசாலித்தனமும் வண்ணங்களை தாள்களில் அல்லது கரும்பலகையில் வரையும் குழந்தைகளுக்கு அதிகம் என்று ஒரு ஆய்வில் நிரூபித்து இருக்கின்றனர்!

ஒரு குழந்தை சாப்பிடவில்லை என்றால், என் மகன் மகள் சாப்பிடவே மாட்டான், அவனுக்கு கணக்கு வராது, எந்நேரமும் வீடியோ கேம்ஸ்தான் என்று பிள்ளைகள் எதிரிலேயே குறையோ பெருமையோ பேசும் பெற்றோர்கள் அதிகம், அதுதான் அவர்களே சொல்லிவிட்டார்களே என்று பிள்ளைகளும் சரியாக சாப்பிடாதவர்களாக, கணக்கில் பலகீனமானவர்களாக, எப்போதும் வீடியோ கேம்களில் முழ்கியவர்களாக மாறிப்போகிறார்கள்! பதினெட்டு வயது கூட நிரம்பாத பிள்ளைகளுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம எதற்கு? குழ்ந்தையின் உணவில் கூட அக்கறை செலுத்த முடியாத பெற்றவர்கள், ஸ்மார்ட் போன்களை வாங்கிக்கொடுத்து எத்தகைய அன்பை பொழிகிறார்கள்?

ஆபாசமான வீடியோக்கள், கருத்துகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன, குழந்தை பருவம், விடலை, வளர் பருவம் என்று எல்லா காலக்கட்டத்திலும் பிள்ளைகள் இணையத்தில் செலவழித்தால், பிள்ளைகளை நல்வழிப்படுத்துவதில் பெற்றோர்களாகிய உங்களின் பங்கு என்ன?

இதன் விளைவுகள்தான், சிறுவன் ஒருவன் சக மாணவிக்கு தாலிக்கட்டியது, ப்ளூ வேல் கேம்கள் போன்ற ஆபத்தான விளையாட்டுகளில் உயிரை விட்டது, பள்ளியில் சக மாணவனை சாதிப்பெருமை பேசி அடிப்பது, கொல்வது பின் வருங்காலத்தில் குற்றவாளிகளாக ஆண்பிள்ளைகள் உருவெடுப்பதும், மனதளவிலும் உடலளவிலும் பெண் பிள்ளைகள் பலகீனமானவர்களாக மாறி, படிக்க வேண்டிய பருவத்தில் யாரையோ நம்பி ஏமாறுவதும் பின் தற்கொலை செய்து கொள்வதும் நிகழ்கிறது!

குழந்தைகள் நம் வாழ்வை அழகாக்க பிறந்தவர்கள், அவர்களுக்கு நாம் தரும் வெகுமதி நம் நேரமே, அவர்கள் ஆரோக்கியத்திலும், மனதின் உடலின் வளர்ச்சியிலும் பெற்றோர்களை தவிர வேறு யாரும் அக்கறை எடுத்துக்கொள்ள முடியாது, தனிமையில், ஸ்மார்ட் போன்களில் உழலும் பிள்ளைகள் பாவப்பட்ட ஜீவன்கள், பெற்றுவிட்டு விடுதியிலோ கண்காணாத காட்டில் உள்ள பள்ளியிலோ தள்ளுவதற்கும், டிவி, மொபைல் போன்கள், வீடியோ கேம்களிடமும் பிள்ளைகளை ஒப்படைப்பதற்கு பதிலாக காமத்தின் வடிகாலோடு தாம்பாத்தியத்தை நிறுத்திக்கொண்டு, சமூக குடும்ப வம்ச கணக்குக்காக பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை நிறுத்திக்கொள்ளலாமே?

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!