Wednesday, 15 April 2020

சுவாதியும்_ராஜலெட்சுமியும்

#சுவாதியும்_ராஜலெட்சுமியும்
சுவாதி கொலை வழக்கில் ஊரே பொங்கியது, நீதிமன்றம் தானாய் வழக்கை தொடர்ந்தது, பாஜக இந்துத்துவா அலைவரிசையில் கொதித்தது, நடிகர்கள், பிரபலங்கள், அறிஞர்கள் என்று எல்லோரும் கருத்துமுழக்கமிட்டார்கள், செய்தித்தாள்கள், மீடியாக்கள் ஓயாமல் கதறின, அப்போது என்ன நினைத்திருப்போம்? அடடா இந்தச் சமூகத்தில் மனிதம் சாகவில்லை, நீதி செத்துவிடவில்லை, எல்லா துறைகளிலும் மனிதர்கள் நியாயத்துக்காக முழக்கமிடுகிறார்கள், ஜனநாயகத்தின் முக்கிய தூணான பத்திரிக்கைகள் தீயாய் வேலை செய்கிறார்கள் என்றுதானே?
ஆனால், நந்தினி, அனிதா, ஹாசினி, ஹாசீபா, ராஜலெட்சுமி, இன்னமும் பெயர் தெரியாத பல குழந்தைகள், பொள்ளாச்சியின் 7 ஆண்டுகால வன்முறையில் தற்கொலை செய்து இறந்தப்பெண்கள், சமூகத்தால் கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் பெண்கள், வாய் பேச முடியாத இறந்துபோன அயனாவர குழந்தை, பெரிய பள்ளியில் பாலியல் வியாபாரத்திற்கு ஆளாக்கப்பட்ட மழலைகள், இப்போது இந்த ஆறு வயது சிறுமி, சமூகத்தின் அவமதிப்பு தொடங்கி, பாலியல் பசிக்கு வரை ஆசிட் வீசப்பட்ட, கொடூரமாய் சிதைக்கப்பட்ட இவர்களுக்கு என்ன நீதி கிடைத்தது? எத்தனை வழக்குகளில் குற்றவாளிகள் பிடிப்பட்டார்கள்? எத்தனையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது?

ஞாபகம் இருக்கிறதா சரவணபவனின் ராஜகோபால்? 2001 ஆண்டு தொடங்கி, வாய்தா, வழக்கு, மேல்முறையீடு என்று ஆண்டுகள் பல ஓடி இறுதியாக 2019 ல் உச்சநீதிமன்றம் ஆயுள்தண்டனையை உறுதி செய்திருக்கிறது, இதற்கிடையில் குற்றவாளி தான் செய்ய வேண்டியதை, வாழ வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்ட பெண் எத்தகைய மன உளைச்சலை, போராட்டங்களை எதிர்கொண்டிருக்கக்கூடும்?

பொள்ளாச்சி வழக்கில் சம்பந்தபட்ட அரசியல்வாதிகளின் பிள்ளைகளை இன்னமும் ஏன் கைது செய்ய முடியவில்லை? ஆறு வயது குழந்தையின் மரணத்திற்கு போராடக்கூட தேர்தல் காலம் அனுமதி மறுக்கிறது, ஆனால் பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு இங்கே அனுமதி மறுப்பில்லை, 22 நாளேயான பிறந்தக்குழந்தைத்தொடங்கி, 90 வயது முதியவள் வரை பாலியல் வன்புணர்ச்சியில் சிதைக்கப்படுகிறார்கள், நாய்குட்டிகள், கன்றுக்குட்டிகள் கூட தப்பவில்லை!

உயர்சாதியில் பிறந்த சுவாதி சிந்தியது மட்டும்தான் ரத்தமா, துடிதுடிக்க மழலைகள் சிதைக்கப்பட்டபோது வந்ததென்ன சாக்கடையா? பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாய் பேசினவன் பாதுகாப்போடு வலம் வந்தான், பொள்ளாச்சி வழக்கிலும் அடிப்பது போல ஒரு வீடியோவை பரப்பிவிட்டு “ஆகா சட்டம் கடுமையாய் நடந்துக்கொள்கிறது!” என்று மக்களை நம்ப வைத்து மறக்க வைத்தார்கள்!

இப்போது இந்த ஆறு வயது குழந்தையின் வலியும், தன்னைக்காப்பாற்ற யாரும் வரமாட்டார்களா என்ற கடைசி நிமிட தவிப்பும் இனி கானலாய் போகும், அடுத்து நமக்கு ஐபிஎல், தேர்தல் இருக்கிறது, மறந்துபோவோம்!
“இறந்துபோன பெண்கள், குழந்தைகளுக்கு என்ன நீதி?” என்று ஓட்டுக்கேட்க வரும் ஆட்சியாளர்களை கேளுங்கள்,

“நாங்களும் இந்துதானே என்ன நீதி?” என்று அந்த நாலு தொகுதிகளிலும் பாஜக வை கேளூங்கள்,

ஒரு சீட் கூட கொடுக்கவில்லை என்று வருத்தப்படும், எங்கள் இனப்பெண்களை போல் பெண்கள் முழுதாய் போர்த்திக்கொள்ள வேண்டும் என்று கலாச்சார பாடம் எடுத்த முஸ்லீம் லீக்கிடம் “குழந்தை ஆசிபா செய்த தவறென்ன?” என்று கேளுங்கள்,

தலித், பிற்படுத்த மக்கள் என்று அரசியல் செய்யும் கட்சிகளிடம் “ராஜலெட்சுமிக்கு என்ன நீதி?” என்று கேளூங்கள்,
“இறந்துபோன வன்னிய பெண்களுக்கு மாற்றம் முன்னேற்றம் ஏமாற்றத்திடம் என்ன நீதி?” என்று கேளூங்கள்,

கொங்கு நாட்டுச்சிங்கம் எங்கள் தங்கம் என்று நீங்கள் கொண்டாடும் எடப்பாடியிடம் “பொள்ளாச்சிப்பெண்களுக்கு என்ன நீதி?” என்று கேளுங்கள்,
ஆறு வயதுக்குழந்தையின் தாயோடு மாவட்ட ஆட்சியாளார் முன்பு உட்கார கூட வைக்கப்படாமல் நின்றுக்கொண்டிருந்த மகளிர் ஆணையத்திடம், “இப்படியே இன்னும் எத்தனை காலத்துக்கு பிள்ளைகளை பலி கொடுப்பது?” என்று கேளுங்கள்!

எதை கேட்டாலும், “பெண் பிள்ளைகளின் ஒழுக்கம், ஆடை, மயிரு மட்டை” என்று பேசினால் அவர்களை பார்த்து காறீத்துப்புங்கள், ஒருவேளை கேட்க தோன்றாமல், டிடிவி தினகரன் பரிசுப்பெட்டியைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால், கண்ணாடி முன் நின்று நீங்களே “கர்ர் தூ” துப்பிக்கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!