Monday, 14 December 2015

மலர்ப்பலிகள்


ஆந்திராவில் மூன்று வயது குழந்தை மின்தூக்கியில் (லிப்ட்) மாட்டிக் கொண்டு இறந்து விட்டது. இப்போது மிக முக்கியக் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். 
ஏன் மின்தூக்கியை இயக்கும் ஊழியர் இல்லை?
வேறு யாரும் ஏன் உடன் இல்லை, ஏன் கேமரா இல்லை?
மழலையர் பள்ளிகளுக்கு மின்தூக்கி அவசியமா?
இந்தக் கேள்விகளை எழுப்ப ஓர் உயிர் போயிருக்கிறது. 

டெங்கு காய்ச்சலில் சில குழந்தைகள் பலியானப்பின்னரே சில பள்ளிகள் கொசுக்களை ஒழிக்க முயற்சி எடுத்துக்கொண்டது. மிகுந்த பணம் பறிக்கும் பள்ளி அது, இரண்டு குழந்தைகள் டெங்கு காய்ச்சலில் இறந்த பிறகு, ஏன் இப்படி என்ற கேள்விக்குப் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களைக் கொசு மருந்து வாங்கித்தரச் சொல்லி இருக்கிறது! 

குழந்தைகளைப் பள்ளிக்கு படிக்க அனுப்பும்போது அவர்களுக்கு இவையெல்லாம் நாம் சொல்லி கொடுக்க வேண்டி இருக்கிறது; 

 1. குட் டச் பேட் டச் என மற்றவர்கள் குழந்தையின் உடலில் எந்தப் பாகங்களில் தொடலாம் தொடக்கக் கூடாது என்று,
 2. வெள்ளித் தங்கம் என்று எதுவும் வேண்டாம், அது உனக்கு ஆபத்தாய் முடியலாம் என்று,
 3. பள்ளி விட்டவுடன் வீட்டில் இருந்து அம்மாவோ, அப்பாவோ, உறவினரோ வரும்வரை வேறு யாரும் அழைத்தாலும் போகக்கூடாது என்று,
 4. விளையாடும்போது ஒருவரை ஒருவர் தள்ளிவிடக் கூடாது, அடிபட்டுவிடும் என்று,
 5. நீச்சல் குளத்தில் விளையாடும்போது மிகுந்த எச்சரிக்கைத் தேவை என்று,
 6. ஆசிரியரை எதிர்த்துப் பேச வேண்டாம், அமைதியாய் இரு, பெற்றவர்களிடம் சொல் என்று...

பள்ளிகளே இன்னமும் எத்தனை சொல்ல வேண்டும் எங்கள் பிள்ளைகளுக்கு? 
சொல்லாமல் விட்டதும் இருக்கிறது. பெற்றவர்களின் இயலாமையில் இரண்டு வயதிலேயே உங்களைப் பள்ளிக்குத் துரத்துவோம் அல்லது புறாக்கூண்டு போன்ற கட்டிடங்களில் பள்ளி என்று சேர்ப்போம். அங்கே உங்களுக்குத் தீ விபத்து ஏற்பட்டால், யாரேனும் வெடிகுண்டு வைத்துவிட்டால், புதியதாய் உன் பள்ளியின் மின்தூக்கியில்... பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும்? உங்களுக்கும் முடியாது எங்களுக்கும் தெரியாது!

 ஒன்றாம் வகுப்பில் படித்த என் மகன், வீட்டுப் பாடங்களை எழுதுவதில்லை, வகுப்பில் பாடங்களையும் எழுதுவதில்லை, இரண்டையும் எழுத வையுங்கள் என்று ஆசிரியை எனக்குக் கடிதம் அனுப்பினார். என்னவென்று சொல்லுங்கள் வீட்டுப்பாடங்களை எழுத வைக்கிறேன். வகுப்பில் எழுத வேண்டியதை நீங்கள்தான் எழுதவைக்க வேண்டும் என்று பதில் கடிதம் எழுதினேன். வந்து சந்திக்குமாறு அழைப்பு வந்தது. சில பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு நான் என்ன செய்வது ஒரு வகுப்பில் ஐம்பது பிள்ளைகள் என்று சொல்லிய அவரின் நிலைப் பரிதாபமாய் இருந்தது. பள்ளிகளில் இதுபோன்று ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களைத் திணித்தால் குழந்தைகளின் மீது அக்கறையும் கவனமும் எப்படி வரும்? நாமும் பெரிய பள்ளிகள் என்ற மாயையில் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்! 
   
பணம் பறிக்கும், விளையாட்டை மறுக்கும், பெற்றவர்களை அடிமைப்போல் நடத்தும், பிள்ளைகளை எந்திரங்களாக நினைத்து அடக்கும் பள்ளிகளைப் பெரிய பள்ளிகள் என்று கொண்டாடுகிறோம். அங்கீகாரமே இல்லாத பள்ளிகளைக் கூட மிகப்பெரும் பின்புலம் கொண்ட முதலாளிகளின் கவர்ச்சி விளம்பரங்களில், பள்ளிக்கூடத்தில் திரைப்பட நடிகை நடிகையரின் பங்கேற்பு எனும் கவர்ச்சியில் பிள்ளைகளைக் கொண்டு போய்த் திணிக்கிறோம். சிறிய பள்ளிகள் என்றாலும் அங்கும் பிரச்சனைகள் ஓய்ந்தபாடில்லை!

கல்வி ஏன் இன்னும் தனியார் வசம்? அரசாங்கப் பள்ளிகளில் சாதிப் பாகுபாடு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள்  பெரும்பாலான பள்ளிகளில் இல்லை. எந்த அரசியல்வாதியின் குழந்தைகளும், அமைச்சர்களின் குழந்தைகளும் அரசாங்கப் பள்ளிகளில் இல்லை. அரசுப் பள்ளிகளில் அரசவையில் இருக்கும் அமைச்சர்களே நம்பிக்கைக் கொண்டு தங்கள் பிள்ளைகளைச் சேர்க்காத போது பெரும்பாலான மக்கள் எப்படி நம்பிக்கை வைப்பார்கள்?

 தமிழ்த் தமிழ் என்று முழங்கும் அரசியல்வாதிகளின் குழந்தைகள் ஊட்டி கான்வென்ட்டில் அல்லது அவர்களின் பிரத்தியேகப் பெரும் பள்ளிகளில்!
 அமைச்சர்களும் அதிகாரிகளும் அரசாங்கப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பார்கள். மத்திய அரசு நடத்தும் பள்ளிகள் உண்டு, ஆனால் அங்கே சாமானியனின் பாமரனின் குழந்தைகளுக்கு இடமில்லை.

 இரண்டாயிரம் கோடிகளுக்கு மேல் சாமானியர்கள் டாஸ்மாக்கில் கொட்டுகிறார்கள். அந்தப் பாவத்தில் விளைந்த வருமானதிற்கு ஈடாய் நீங்கள் இலவசக் கல்வியை எந்தப் பேதமுமின்றி எல்லோருக்கும் ஈந்தால் என்ன?

நாம் கடந்த சில நிகழ்வுகள்:
இரண்டாயிரத்து நான்காம் ஆண்டுத் தொண்ணூற்று நான்கு இளந்தளிர்கள் உயிரோடு எரிந்துக் கருகினர் கும்பகோணத்தில். பள்ளிகளில் இப்போது தீப்பிடித்தால் அவசரக் கால வழி என்று ஏதும் உள்ளதா? நெருப்பை அணைக்கச் சாதனங்கள் எல்லாப் பள்ளிகளிலும் உள்ளதா, அவை இயங்கும் நிலையில் உள்ளதா? கடைசியாய் அதிகாரிகளே நீங்கள் எப்போது சோதனைச் செய்தீர்கள்?

 அடுத்து மூன்று வருடங்களுக்குப் பின்பு ஒரு குழந்தை, பள்ளி வாகனத்தின் ஓட்டையில் இருந்து விழுந்து இறந்தது? கடைசியாய் நீங்கள் சோதனைச் செய்தது எப்போது? மழையில் அரசாங்கப் பேருந்தில் ஓட்டுனர் குடைப்பிடித்து வண்டி ஓட்டுகிறார், உங்கள் முதுகில் அழுக்கை வைத்துக் கொண்டு நீங்கள் இப்பள்ளிகளை எப்படிக் கேள்விக் கேட்பீர்கள்?

 பள்ளி நீச்சல் குளத்தில் குழந்தை இறந்தது. நீங்கள் கடைசியாய் ஆய்வு செய்தது எப்போது? ஐந்தாயிரத்துக்கு மேல் பிள்ளைகள் இருக்கும் பள்ளியில், ஒரு சேர முப்பது குழந்தைகள் நீச்சல் குளத்தில் இறங்கும் பள்ளியில் எத்தனை நீச்சல் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள்?

 பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு, கத்திகுத்து, சாதிப்பாகுபாடு... வரிசையாய் நீள்கிறது பட்டியல் உங்களைக் கேட்க எங்களை நாங்களே கேட்டுக்கொள்ள!

 இதற்காகப் போராளி ஒருவன் முளைத்தால் அவனை முடக்கப் பல்வேறு ஆயுதங்கள் உண்டு இங்கே! 

 தனியார் முதலாளிகள், ஆசிரியப் பெருந்தகைகள், பெற்றோர்கள் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் என்று யாருடைய ரௌடிகள் என்றும் யாருடைய ஆணவத்தாலும் அலட்சியத்தாலும், எந்த உயிர் போனாலும் உங்களின் எந்த நிவராணமும் அந்த மழலைகளின் உயிர்களைத் திருப்பித் தாராது!

 ஒவ்வொரு ரூபாய் நோட்டுக்காகவும் உங்கள் மனசாட்சியை விற்று நீங்கள் போடும் கையெழுத்தும், வெறும் பள்ளிகளையும் கட்டிடங்களையும் பாலங்களையும் அசைக்கவில்லை பல்லாயிரக்கனக்கான உயிர்களை அசைக்கிறது. அந்த ரூபாய்த் தாள்களை உற்றுப் பாருங்கள் ஏதோ ஓர் உதிர்ந்த மழலையின் கடைசிச் சிரிப்புத் தெரியும்.

போதும்! உங்கள் அலட்சிய ஓட்டைகளைச் சுட்டிக் காட்ட இன்னமும் வேண்டுமா உங்களுக்கு 
ரத்தம் ஒழுகும் மலர்ப்பலிகள்?

http://www.pratilipi.com/read?id=5766040617222144
 

Friday, 11 December 2015

மூக்கைப் பிடித்துக்கொண்டு கடந்து போகவும்

ஸ்ரீபெரும்பத்தூரில் பதிவுத்துறை அலுவலகத்திற்குச் சென்ற போது, கழிவறையை உபயோகப்படுத்த எண்ணி, அங்கிருந்த ஊழியர்களைக் கேட்டபோது, அவர்கள் உபயோகத்திற்கென்று வைத்திருந்த கழிவறையைக் கைகாட்டினார்கள்.....அதைப் பார்த்ததும் அந்த ஊழியர்களின் நிலையை எண்ணி மனிதாபிமான அடிப்படையில் இரக்கம் வந்தது, இந்த அலுவலகம் என்றில்லை, பெரும்பாலும் சிறு வணிக நிலையங்கள், மக்கள் அன்றாடம் வந்து போகும் அலுவலகங்கள் என்று அத்தனையிலும் கழிவறை என்பது திகிலறைதான்

நம் மக்களுக்குப் பெரும்பாலும் கழிவறை என்பது அதிக முக்கியத்துவமில்லாத ஓர் அறை, தோழிக்கென வாடகைக்கு ஒரு வீடு பார்க்கப் பல நாட்களாய்த் திரிந்தேன், சிறிது முதல் பெரிதானப் பல அடுக்கு மாடி குடியிருப்புக்களில் கூடக் கழிவறை என்பது ஒரு வேண்டாத அறையாகத்தான் புழக்கத்தில் இருந்தது, வீட்டுத் தரகர், புத்தம் புதிய வீடொன்று மைலாப்பூரில் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்று அழைத்துச் சென்றார், அந்த வீட்டில் கழிவறை எப்படி இருந்தது என்றால், அந்த அறையில் ஓர் ஆள் நுழைவதே மிகசிரமமான விஷயம் என்று தோன்றுமளவிற்கு மிகச்சிறியதாய் ஒரு பொந்து போன்ற ஒரு நுழைவாயில், அதைப் பார்த்ததே போதும் என்று வந்துவிட்டேன்.

குழந்தைகளை உடன் அழைத்துச் செல்லும்போது, நிச்சயம் கழிவறையைத் தேடிச் செல்லும் சந்தர்ப்பங்கள் வரும் , வந்ததுண்டு, அந்த வகையில் சென்னையில் பிரதான வீதியில் இருக்கும் வணிக அங்காடிகளின் நிலையும் பயங்கரம்தான், நாள் முழுதும் நின்று கொண்டே வேலை செய்யும் பணியாளர்களின் ஒரு குறைந்தப்பட்சத் தேவையில் கூடச் சுகாதாரம் இல்லை
இந்தப் பேய் மழையில், இப்போது ஏன் கழிவறைப் பற்றிய கருத்து என்று யோசிக்கிறீர்களா ? சாதாரண நாட்களிலேயே இந்த நிலைமை என்றால், இந்த மழையில் மக்களின் நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், முகாம்கள் என்று பல நூறு மக்களை ஓர் இடத்தில் அரசு தங்கவைக்கிறது , அங்கே ஆயிரம் பேருக்கு நீங்கள் உணவு கொடுக்கலாம், நான்கைந்துக் கழிவறைகளை வைத்துக் கொண்டு மக்கள் என்ன செய்வார்கள், குறைந்தபட்சம் சுகாதார வசதியைச் செய்து தராமல் , மக்களுக்கு நீங்கள் மருத்துவ முகாம்களையும், மருந்துகளையும் தந்தென்ன பயன் ?

ஆயிரத்து நூறு கோடிக்கு மேல் நிதி வந்துக்கொண்டிருக்கிறது, இருப்பினும் இதற்கு முன்பே கழிப்பறை வசதி இல்லாத மாநகராட்சிப் பள்ளிகளுக்கும், ஊர்களுக்கும் இந்த நிதியில் இருந்தாவது அந்த வசதியை செய்து கொடுங்கள்!
கழிப்பறை என்பது உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கான அடிப்படை, வீடு முழுக்கச் சாம்பிராணிப் போட்டுச் சூடம் ஏற்றினாலும், கழிப்பறை அசுத்தமாய் இருந்தால், வீட்டில் எந்தக் கடவுளும் அதிர்ஷ்டமும் வாசம் செய்யாது, ஆரோக்கியமே எல்லாவற்றிக்கும் அடிப்படை, கழிப்பறை என்பது உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் அறை, அதன் சுத்தமும் சுகாதாரமும் ஆரோக்கியத்திற்கு அவசியம்

தனியார் , அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வணிக நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், ரயில்கள் என்று எல்லா இடத்திலும் உணவறைப் போன்றே கழிவறையும் அவசியம்!

ஊழலையும், கழிப்பறையையும் மூக்கைப் பிடித்துக் கொண்டு நெடுநாள் நாம் கடக்க முடியாது , மோசமான நிலையை அடையும்போது இரண்டுமே நம் உயிருக்கு உலைவைத்து விடும், இயற்கை உணர்த்திவிட்டுப் போயிருக்கிறது

Friday, 4 December 2015

வந்தாரை வாழவைத்த சென்னையும், மழையில் முளைத்தவைகளும்!



கடந்து செல்லும் நீரில் இறந்தவர்களைப் புதைக்கவும் முடியாமல், எரிக்கவும் முடியாமல் நீரில் எரிந்து விடும் துயரம் சென்னைக்குப் புதிது, பின்னாளில் இதுதான் எம் முதாதையர்ப் பழக்கம் என்றும் யாரும் சொல்லாமல் இருத்தல் வேண்டும், கங்கையில் பிணங்களை எறியும் பழக்கமும் இப்படித்தான் வந்திருக்குமோ என்று ஒரு விபரீதக் கற்பனைத் தோன்றுகிறது.

மனிதர்கள், கால்நடைகள் என்று பிணங்களைக் கடந்தும், ஒவ்வொரு மனிதனும் சக மனிதனுக்கு இங்கே உதவி செய்கிறான். குளிரில் குழந்தைகள் முதியவர்கள் என்று வீதியில், மண்டபத்தில், பள்ளியில், ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள், ஒருவேளை உணவு, சிறிதளவுக் குடிநீர் எம்மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. யார் கண்ணில் வரும் கண்ணீரும், நிறைந்திருக்கும் நீரை அதிகப்படுத்திவிடுமோ என்ற அச்சத்தைத் தோற்றுவிக்கும் அளவிற்கு வெள்ளம்.

சென்னை, கடலூர் என்று மழையில் பாதித்த இடங்கள் அதிகமே, எனினும் சென்னையைப் பற்றித் தொடர்ந்து பிற நகரத்தில், ஊர்களில் இருந்து வரும் பகடிகளையும் எஞ்சியிருக்கும் நேரத்தில் நாங்களும் படித்துச் சிரிக்கிறோம். தலைக்கு மேலே வெள்ளம் போன பின், கோபத்தையும் வீரத்தையும் உங்களிடம் காட்டி ஆகப்போவதென்ன? அந்த நேரமும் உழைப்பும் யாரோ ஒருவருக்கு உதவி செய்யத் தேவைப்படலாம்!

பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து அதிகசம்பளம்
பெறுகிறார்கள் என்று பொருமியவர்கள் / சொன்னவர்கள் எல்லாம் சற்று வாருங்கள், இந்தப் பன்னாட்டு ஊழியர்களும் தெருவில் தான் இருக்கிறார்கள், கிடைக்கும் இடத்தில் மீட்புப் பணிகளோடு அலுவலக வேலையையும் எப்படியோ முடிந்தவரைத் தொடர்கிறார்கள். என் சாதி என்று விழா எடுத்துக் கொண்டாடியவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறீர்கள், உயிர் போகும் தருவாயில், எந்தக் கையையும் மக்கள் பற்றிக் கொள்கிறார்கள்

வேலைகளின் குவியலில் மீட்புப் பணிகளின் அழைப்புக்களில் இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கிறோம், லெமுரியா கண்டம் போல் சென்னை மூழ்கிப்போகுமோ என்ற உங்களின் அச்சத்தை “நாசா” தந்த ஆய்வறிக்கை என்று எங்களுக்குப் பீதியைக் கிளப்பாமல், நெருங்கியவர் , அறிந்தவர் என்று முடிந்தால் உதவிகள் செய்யுங்கள், இல்லை அமைதியாய் இந்த நிலை மாறப் பிரார்த்தனை செய்யுங்கள் .

உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர், அதிகாரத்திலோ, ஆட்சியிலோ, அரசியலிலோ இருந்தால் கொஞ்சம் அவர்களை மனிதராய் மாறச் சொல்லும் ஓர் உதவிப்  போதும், பாலுக்காய் அழும் பிள்ளைகளையும், தண்ணீரில் செல்லும் சடலங்களையும் அவர்களைக் கொஞ்சம் பார்க்க செய்தால் போதும், இந்த நேரத்தில் கூட எரிகிற வீட்டில் பிடுங்கும் வரையில் லாபம் என்ற ரீதியில் விலைகளைப் பலமடங்கு விற்கும் வியாபாரிகளாய் அவர்களை ஒருபோதும் மாறாமல் இருந்தால் போதும்!

வேதனையில் எங்களுக்கு, எந்தப் பொய்/அவதூறு வழக்கு
வழக்கும் பற்றிய அச்சமின்றி , ஆள்பவர்களைக் கேள்விக் கேட்க இன்று வந்த எங்கள் வீரத்தைக்  கொஞ்சம், வரும் தலைமுறையினருக்குக்  கடத்திவிட்டுச்  செல்கிறோமோ இல்லையோ தெரியாது, எனினும் மனிதர்களுக்குப் பிற உயிர்களுக்குக் கருணை காட்டும் காருண்யம் இருக்க வேண்டும் என்பதை இப்பிள்ளைகள் உணர்ந்து கொள்ளும் ஒரு சிறு செயலை உதவியென்று ஒருவருக்கொருவர் செய்கிறோம்

குளிரில் நடுங்கும் ஓர் இளைஞன், தான் போட்டிருந்த மேலாடையைக் கழற்றி யாரோ ஒரு குழந்தைக்குப் போர்த்துகிறான் , காலில் ஈரத்தில் காலையில் இருந்து இரவு வரை ஓடிய ஓட்டத்தில் ஒருவனுக்குத் தோல் நெகிழ்ந்து உரிந்து ரத்தம் வடிகிறது, இருந்தும் ஓடுகிறான், உணவு, உடை , மீட்புப் பணி, பிரார்த்தனை என்று ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதைச்  செய்து கொண்டேயிருக்கிறார்கள், சென்னையில் இருந்தும் வெளியூரில் இருந்தும்! 

இந்த மழை உயிர்களைக் கொன்றது, வீதியில் கொண்டு வந்து நிறுத்தியது, இருப்பினும் மனிதத்தை உயிர்பித்திருக்கிறது, நம் பக்கத்தில் வீட்டில் இருப்பவர்களை நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறது, அதன் நீர்நிலைகளைக் குறித்துவைத்துச் சென்றிருக்கிறது, கட்சிகளின் ஆட்சியின் அவலத்தை, அதிகாரத்தின் முகத்தைத் தோலுரித்துக் காட்டி இருக்கிறது, பலகீனமான பாலங்களைச் சாலைகளை இப்போதே அகற்றியிருக்கிறது, இந்த மழை ஒருவேளை என் உயிரை எடுத்துச் சென்றாலும், மன்னித்துக்கொள்ளுங்கள் இந்த மழையை நான் போற்றுகிறேன்! 

சென்னை என்பது சொந்த மண்ணைச் சேர்ந்தவர்களை மட்டுமல்ல எல்லா ஊர்களில் இருந்தும் வந்தவர்களைப் பிள்ளைகளாகப் பாவித்து வாழவைத்துக் கொண்டிருக்கும் தலைநகரம்! இது வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் உங்களுக்கு வரலாற்றில் பாடம் கிடைக்கும், வீழ்ந்து எழும்போது இன்னமும் சிறந்த மனிதர்களாய் எழுந்திருப்போம், நாளைப்பொழுது எப்படிப் புலர்ந்தாலும், நாளைப்பொழுது உண்டு என்ற நம்பிக்கையில் சென்னை!

இயற்கையைப் போற்றுதும்!


The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...