Tuesday, 21 February 2017

தோற்றுப்போனவர்கள்

தோல்வியில்
தோற்றுப்போனவன்
சாமான்யாகிறான்
தோல்வியில்
கற்றவன்
வெற்றியாளனாகிறான்
தோல்வியில்
காயப்பட்டவன்
அமரனாகிறான்
தோல்வியில்
வெறிக்கொண்டவன்
சில நேரம்
கொலைகாரனாகிறான்
பெரும்பாலும்
அரசியல்வாதியாகிறான்

வெட்கப்பூக்கள்

Image may contain: 1 person, outdoor
 இந்த இரவில்
மின்னும் நட்சத்திரங்கள்
விடியலில்
மறைந்துவிடும் மாயமோ
காதல்?

அன்றி
வெப்பம்
சூழ்ந்த நிலத்தில்
வீசும் வேம்பின்
காற்றோ
காதல்?

இச் சாமரம்
வீசும் காற்றில்
ஓயாது
சலசலக்கும்
இலைகளின் குரலா
காதல்?

கிளைக்குக் கிளைத்
தாவி
அன்றில்கள்
ஒன்றின்மேல் ஒன்று
தழுவிக்கொள்ளும்
வேட்கையா
காதல்?

ஒருமணித்துளியில்
மலரும் காதல்
ஒரு மழையிரவில்
கரையும் காதல்
காதலின் வகையை
காதலே அறியா
தேசத்தில்
தோல்வற்றிச்
சுருங்கி
எலும்புகள் தேய்ந்து
பாக்குரலில்
வெற்றிலையிடிக்கும்
பாட்டியொருத்தி
அதில்
ஒரு பிடிச் சூழற்றி
தாத்தனுக்கூட்ட
ஆண்டுகள் கடந்த
காதலில்
அதே
வெட்கப்பூக்கள்
வாசனையோடு!
#வெட்கப்பூக்கள்

பேய்களின் ஆட்சியில்!

வருமானத்தில் வரி
செலவினத்தில் வரி
சேமிப்பிற்கு வரி
மருந்துகளுக்கு வரி
மருத்துவத்துக்கு வரி
அணிகலன்களுக்கு வரி
கல்விக்கு வரி
தண்ணீருக்கு வரி
சாலைப் பயன்பாட்டுக்கு வரி
எரிபொருட்களுக்கு வரி
உணவுக்கு வரி
ஏற்றுமதிக்கு வரி
இறக்குமதிக்கு வரி
வரிக்கு மிஞ்சியதில் வரி
இப்போது
கல்யாணத்துக்கு வரி
நாளை இறப்புக்கும்
கருமாதிக்கும் வரிகள்
மிச்சமிருக்கிறது
இந்தப் பேய்களின் ஆட்சியில்!

விடியும்

வறண்ட பூமி,
பெய்தும் பெய்யாமலும்
தீர்க்கும் மழை
கடும் குளிர்
சுடும் அனல்
திருட்டுக்கூட்டம்
தண்ணீர் பற்றாக்குறை
சாராயத்தின் ஆறு
கூன் மந்திரிகள்
கொலைக்கார செங்கோல்
செல்லாத நோட்டுகள்
பறந்துக்கொண்டேயிருக்கும்
மத்திய அதிகாரத்தட்டு
சாதிய ஓநாய்கள்
காவல் நரிகள்
குழந்தைகளின் சவக்குழிகள்
சுடுகாட்டுப் பேய்கள்
அறிவற்ற ஆடுகள்
கொடூர விபத்துகள்
மர்ம மரணங்கள்
காகிதத் தாள் உலகம்
இத்தனையும் மீறி
வாழ்தல் பேராதிசயம்
இருண்டு கொண்டேயிருக்கும்
புலர் காலைப் பொழுதாக
இதைக் கருதினால்
சட்டென்று விடிந்துவிடும்
நேரம் அருகில்தான்
வினைவிதைத்தவன்
வினை அறுப்பான்
வெளிச்சப்புள்ளி வந்துவிடும்
காத்திருப்போம்
காலம் கனியும்வரை!

மக்களின்வெறுப்பு

#அணுக்கதை
முன்னொரு காலத்தில், வணிகரொருவர் எப்போதும் செருப்பை வெளியே விட்டு, குடையை உள்ளே வைக்கும் கதையைக் கேட்டு நொந்துக்கொண்டிருந்த செருப்பு, கலியுகத்தில் தனக்கு வந்த வாழ்வையெண்ணி, குடையிடம் சொல்லியது;

செருப்பை வைத்து ஆட்சி
செய்தது இதிகாசம்
செருப்பே ஆட்சி
செய்வது
ஜனநாயகம்! 


இதைக்கேட்ட குடை;

வைக்க வேண்டிய
இடத்தில்
உன்னை வைத்தவரை
மனிதர்கள்
வாழ்ந்தார்கள்
அரியணையில்
வைத்த நாள்முதல்
நிலை தாழ்ந்தார்கள்

என்று சொல்லிவிட்டு,

வறண்ட வானத்தை
பார்த்துக்கொண்டே
இருந்தது குடை
கையறுநிலை
மக்களைப்போல!
பி.கு: இது அரசியல் பதிவல்ல
#மக்களின்வெறுப்பு

இங்கே_உயிர்கள்_விற்பனைக்கு

நகர நிர்வாகம் மோசமாகி
நகரம் மழைநீரில் தத்தளித்தால்
சில நூறு மக்கள் இறந்துபோனால்
சில நூறு ரூபாய்கள் மக்களுக்கு!

நீர் மேலாண்மை மோசமாகி
வறட்சி மேலோங்கி
விவசாயிகள் தற்கொலைச் செய்துகொண்டால்
சில நூறு ரூபாய்கள் விவசாயிகளுக்கு!

குடியால் குடிகெட்டு
கொலையிலோ விபத்திலோ
யாரேனும் மரணமடைந்தால்
சில நூறு ரூபாய்கள் குடும்பத்துக்கு!

காமம் மிகுந்து
எளிதாய் உயிர்களைக் களவாடி
பெண்களையும் குழந்தைகளையும் கொன்றால்
சில நூறு ரூபாய்கள் குடும்பங்களுக்கு!

நிலத்தில் வாயு எடுத்து
தனியார் கொழிக்க
நிலம் மலடாகி வாழ்வாதாரம்
பொய்த்துப்போனால்
சில நூறு ரூபாய்கள் குடும்பங்களுக்கு!

சில ஆயிரம் ரூபாய் கடன்களைக்
கொடுக்க முடியாமல்
கல்வியைத் தொடர முடியாமல்
மாணவன் தற்கொலைச் செய்துக்கொண்டால்
சில நூறு ரூபாய்கள் அவன் குடும்பத்துக்கு!

கட்சி அபிமானத்தில்
பேருந்திலோ பள்ளியிலோ குளத்திலோ
பெண்களைக் குழந்தைகளை மக்களை
யாரோ சிலர் எரித்தாலும் புதைத்தாலும்
சில நூறு ரூபாய்கள் அவரைச் சார்ந்தோர்க்கு!

கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகள்
பிச்சை எடுத்தாலும்
அதிலும் சில நூறுகள் அதிகாரவர்க்கத்துக்கு!

யாரின் மின்சாரத்துக்கோ கூடங்குளம் அமைக்க
யாரின் நலத்துக்கோ குழாய் பதிக்க
யாரின் கழிவுகளையோ கொட்ட நிலம் சமைக்க
தமிழகப் பூமி சில கோடி ரூபாயில் தனியாருக்கு!

இத்தனையும் மறக்க
எஞ்சியிருக்கும் சாம்பலையும் விற்க
சில நூறு ரூபாய்கள் போதும்
இந்த அடிமை கூட்டத்துக்கு!
தமிழகம் விற்பனைக்கு
என்ற அறிவிப்புப் பலகை மட்டும்
காணவில்லை
அதை ஏதோ ஒரு மந்திரி
திருடிக் கொண்டு போயிருக்கலாம்
அல்லது யாரோ ஒருவன்
சில நூறு ரூபாய் கூலிக்காக
எங்கோ ஒரு மூலையில்
உருவாக்கிக் கொண்டிருக்கலாம்!

#இங்கே_உயிர்கள்_விற்பனைக்கு

போதும்!

நகையில்லையென்றாலும்,
ஆடையிருந்தாலும்,
குழந்தையென்றாலும்
கிழவியென்றாலும்
கசக்கப்படுவதற்கும்
கொல்லப்படுவதற்கும்
அவர்கள் பெண்கள் என்பதே
போதும்!


எதிரேயிருப்பது
மகளா மனைவியா தாயா
என்று தெரியாத அளவிற்கு
புணரும்
மனிதர்களின்
காமத்துக்குக் காரணம்
அவரின் போதையில்லை
பெண்களின் ஆடையில்லை
அவர்கள் தறிகெட்ட
ஆண்கள் என்பதே
போதும்!

ஒருவனைக்கூட
கடுமையாய் தண்டிக்க முடியாத
உங்கள் சட்டம் மாறாதவரை
உங்கள் வழக்கு விவாதங்களைத்
தள்ளிவைத்துவிட்டு
பெண்ணற்ற பூமியாக
இதை மாற்றிக்கொள்ளுங்கள்
கொல்லுங்கள்
#போதும்!

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...