Thursday, 16 November 2017

சுவையற்ற_தொடர்கதைகள்

Image may contain: one or more people and people sitting


அவனுக்குச் சரியான படிப்பில்லை,
குடிகார அப்பனுக்கும் அதில்
அக்கறையில்லை!
அரசாங்கப் பள்ளியில் படிக்கவைக்கவும்
அண்டை அயலாருக்கு நேரமில்லை!

முதலில் அவன் புகைத்தான்
வான் மண்டலத்தில் விழும் ஓட்டைக்கு
இரண்டு சதவீதப் பங்கு
இந்தப் புகைக்கும் உண்டென்று
யாரும் அவனிடம் சொல்லவில்லை
இந்தப்புகை உன் மூச்சுக்குழாயில்
ஓட்டைகள் போட்டுவிடும்
என்ற எச்சரிக்கை விளம்பரங்களை
அவனும் கண்டுகொள்ளவில்லை!

அடுத்த வீட்டில்
ஒழுங்காய் படித்துக்கொண்டிருந்தவனும்
அவனுடன் புகைத்தான்
தறுதலைகள் என்ற ஆசிரியர்கள்
கண்டிக்கவில்லை!

புகைத்தவனும்
நன்கு படித்தவனும்
சினிமாவின் பக்கம் போய்
எடுபிடி வேலைகள் செய்தார்கள்
யாரும் தடுக்கவில்லை!
சாதிக்கட்சியின் தலைவரிடம்
அடிமையானார்கள்
உற்றார் உறவினர் விடுவிக்கவில்லை!

அவனும் இன்னொருவனும்
புகைத்தலில் தொடங்கிக் கடத்தலில்
வந்து நின்றார்கள்
காவல்துறை கைதுசெய்யவில்லை!
சாதியக் கட்சித்தாண்டி
பல கட்சித்தலைவர்களுக்கு அவன்
பரிச்சயம் ஆனான்
தலைவருக்காக ஒருவனைக் கொளுத்தி
தீக்குளித்த செய்தியாக்கினான்
சதியை ஊடங்கங்கள் கண்டுகொள்ளவில்லை!

புகைத்தலில் தடம் மாறிய அவனும்
அவனால் தடம் மாறிய அவனும்
இப்படியே வளர்ந்து
சாராயக்கடை அதிபர்கள் ஆனார்கள்
குடும்பத்தினர் நியாயம் கற்பிக்கவில்லை!

வருடங்கள் கரைந்து
அவர்கள் கல்வித்தந்தையானார்கள்
கல்வியாளர்கள் கேள்வி கேட்கவில்லை
வேடந்தரித்த சாமியார்களிடம்
கைகோர்த்தார்கள்
பின் அரசியலில் நுழைந்து தேர்தலில்
நின்றார்கள்
மக்கள் பின்புலம் பார்க்கவில்லை!
அவர்கள் ஜெயித்து மந்திரிகளும்
ஆனார்கள்
நாடும் நாசமாய்ப் போனது
யாரும் அதைபற்றிக் கவலைகொள்ளவில்லை!

முடிவேயில்லாத இந்த நிதர்சனங்களை
எந்த நீதித்துறையும் மாற்றியமைப்பதில்லை
நிதியொன்றே போதுமென்ற மனநிலையில்
ஜனநாயக சதிகளைப்பற்றியோ
பறிபோகும் உரிமைகளைப்பற்றியோ
மக்களும் வருத்தப்படுவதில்லை!

அட போகட்டுமே
இதுவெல்லாம் சுவையற்ற தொடர்கதை
முடிக்கும்வரை முடிவில்லை!!!

Original_license

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாளில், தரமணியின் உள்ளே ஒரு அலுவலகத்தில் இருந்து உடன் பணிபுரியும் சகோதரியுடன் பிரதானச் சாலையை அடைந்தபோது, ஒரு முதியப் பெண்மணி, நடுவே இருக்கும் சாலைதடுப்பில் ஏறி சாலையைக்கடக்க முயன்றதில் தடுக்கி கீழே விழ, அந்தப்பக்கம் வந்த கார் மோதியதில் உடல் நசுங்கி இறந்து கிடந்தார்! இப்போதும் கூட ஓஎம்ஆர், ஈசிர், சோழிங்கநல்லூர் போன்ற பிரதான சாலைகளில் மக்கள் உயரமான தடுப்புச்சுவரில் குழந்தைகளுடன் ஏறி நின்று குதிக்கிறார்கள், இரவுகளில் பல பகுதிகளில் விளக்குகள் எரிவதில்லை, இருட்டில் விபத்துகள் சர்வசாதாரணம்! பாதசாரிகள் கடப்பதற்கு உயரமான மேடைகளை அமைத்திருக்கிறார்கள், இளைஞர்கள் அதை தவிர்த்து கைபேசியுடன் சாலையை கடக்கும்போது, முதியவர்கள் எப்படி ஏறிக்கடப்பார்கள்?

இசபெல்லா மருத்துவமனைக்குச் செல்லும் சாலையை பல வருடங்களாக ஒரு வழிப்பாதையாக மாற்றி வைத்திருக்கிறது காவல்துறை, இன்று வரை அதை யாரும் மதிப்பதில்லை, காவல்துறையும் கண்டுகொள்ளவதில்லை!
நீண்ட காலமாக அதிமுக அலுவலகம் அமைந்திருக்கும் நான்குவழிச் சாலைகளில் சிக்னலே நிறுவப்படவேயில்லை, அதன் ரகசியமும் தெரியவில்லை!

சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நுழையும் பகுதிகளும், சாலையில் சில பகுதிகளும் குண்டும் குழியுமாய் இருக்கிறது, "அதுதான் காசு வாங்குறீங்களே இந்த இடத்தில் உள்ள பள்ளங்களை அடைக்கமாட்டீர்களா", என்று கேட்டால் "செய்யணும், சொல்லியிருக்கோம்" என்ற பொதுவான பதில் மட்டுமே! பைக்குகளுக்கு சுங்கக்கட்டணம் இல்லையென்றாலும் மொகமத் சதக் கல்லூரி மாணவர்கள் யு டர்னை தவிர்க்க, பேருந்து வரும் சாலையில் நேரெதிரே பயணிக்கிறார்கள்! காவல்துறை கண்டுகொள்வதில்லை, அவர்களுக்கு மெரீனாவில் கூட்டம் கூடாமல் இருந்தால் போதும்!
ஜாம்பஜார், மீர்சாகிப்பேட்டை, மைலாப்பூர்,திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ் பகுதிகளில் நடைபாதைகள் கடைகளாகவும், பாதையோரங்கள் வாகன நிறுத்தங்களாகவும் மாறி மக்களை நட்டநடுச் சாலையில் பதைக்க வைக்கிறார்கள், பல்லவன்கள் சிக்கித் திணறுகிறார்கள்!
புரசைவாக்கம், வடபழனி, வேளச்சேரி போன்ற பகுதிகளில் கடைகளுக்கும், மால்களுக்கும் என வாகனங்கள் பிதுங்கி வழிகிறது, ஒரு வழிப்பாதையா, இருவழிப்பாதையா என்பதெல்லாம் பெரும்பாலான சென்னையின் சாலைகளில் புரியாத புதிர்தான்!

இதற்கெல்லாம் தீர்வு ஒன்றே ஒன்றுதான், "அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) மற்றும் தீயணைப்பு வாகனங்களைத் தவிர, பிரதமரோ, முதலமைச்சரோ, ஜனாதிபதியோ அல்லது வேறு எந்த அமைச்சர்கள் என்றாலும் அதிகாரிகள் என்றாலும், வெளிநாட்டு அதிபர்கள் என்றாலும், எந்த மட்டத்து ஆளுமை என்றாலும் யாருக்காகவும் போக்குவரத்தை நிறுத்தக்கூடாது! போக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையிலும்,விமானத்திலும் பறக்கும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு விபத்தும் அது சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கமும் புரிவதேயில்லை! அதன் விளைவுதான் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்துக்கொண்டால் விபத்துகள் குறைந்துவிடும் என்பதும், தெர்மாக்கோல் போட்டால் தண்ணீர் ஆவியாகாது என்றதும்!

ஓட்டுப்போடும் மக்களிடம் வாக்குச் சேகரிக்க திறந்தவெளி வாகனத்தில் வரும்போது இல்லாத பயம், அமைச்சரானதும் வந்துவிடுகிறது, போக்குவரத்தை நிறுத்தி, பல கார்கள் புடைசூழ எதற்கு இந்த ஆர்ப்பாட்டம்? அல்லது அத்தனை அவசரமாய் அலுவலகம் சென்று மக்களுக்காக இவர்கள் சாதித்தது என்ன?

மக்களோடு மக்களாய் இவர்கள் பயணம் செய்யாதவரை விபத்துகள் குறையப்போவதில்லை, இவர்களுக்கு சலுகைகளை துண்டித்து, மற்ற எல்லோரையும் போல் உன் அலுவலகம் சென்று உன் அமைச்சர் பதவியை கவனி என்று சொன்னால், மக்கள் உயிரை எண்ணிக்கையாக பார்க்கும் இவர்களுக்கு தங்கள் உயிர் வெல்லம் என்பதால், நெல்லுக்கு பாய்ச்சிய நீர் சிறிது புல்லுக்கு பாய்ந்தது போல, அமைச்சர்களுக்காக சீரமைக்கப்படும் போக்குவரத்து மக்களுக்கு கொஞ்சம் உதவி செய்யும்!
இதையெல்லாம் செய்யாமல் வெறுமனெ சூழல் விளக்குகளை கழட்டிவிட்டோம் என்று குறளி வித்தைக்காட்டாதீர்கள் மக்களுக்கு!
#Original_license #Roadsafety #Tamilnadu #Chennai

அவர்களும்_நாங்களும்

No automatic alt text available. 
அவர்கள்
சுவாதியைக்
கொல்லப்பட்ட பெண்
என்றார்கள்
அனிதாவை
செத்துப்போன கோழை
தலித்
என்கிறார்கள்

அவர்கள்
முஸ்லீம்களை
தீவிரவாதிகள்
என்றார்கள்
இந்துத்வா போர்வையில்
சகமனிதர்களை
கொல்பவனை
போராளி
என்கிறார்கள்

அவர்கள்
இந்தியைத்
திணிப்பது அவசியம்
என்றார்கள்
தமிழை நேசிக்கிறோம்
நீலிக்கண்ணீரை
நம்புங்கள்
என்கிறார்கள்

அவர்கள்
வன்புணர்ச்சிக்கு
ஆட்படும் பெண்கள்
கொலையைத் தவிர்க்க
எதிர்க்கக்கூடாது
என்றார்கள்
மக்களை இகழ்ந்த
பெண்ணை மந்திரியாக்கி
சமூகநிதி காக்கிறோம்
என்கிறார்கள்

அவர்கள்
மாடுகள்
கடவுளுக்கு சமம்
என்றார்கள்
சகமனிதனின்
குருதியை
வெட்டிச் சுவைத்து
ஒன்றுப்பட்ட
தேசம்
என்கிறார்கள்

அவர்கள்
கிரிக்கெட்
தோல்வியில்
கொதிப்படைந்து
வேதனை
என்றார்கள்
மூச்சுக்குத் தவித்து
மாயும் குழந்தைகளின்
சடலங்களைக் கடந்து
இது சாதாரணம்
என்கிறார்கள்

அவர்கள்
அதானிகளிடமும்
அம்பானிகளிடமும்
கருணைக்காட்டி
தொழில் முன்னேற்றம்
என்றார்கள்
போராடிக் காயும்
விவசாயிகளின்
கண்களையும் பார்க்க
மறுத்து
வயிற்றுவலி தற்கொலைகள்
என்கிறார்கள்

அவர்கள்
ஒரே தேசம்
ஒரே வரி
என்றார்கள்
பெட்ரோலையும்
டீசலையும்
பிரித்து
அபரிதமான வரிகளால்
விலையேற்றி
விலைவாசிகளை
குறைக்கிறோம்
என்கிறார்கள்

அவர்கள்
சுத்தமான இந்தியா
என்றார்கள்
கங்கையையும்
யமுனையையும்
சாமியார்களிடம்
தந்து
அசுத்தப்படுத்தி
புண்ணியம்
என்கிறார்கள்

அவர்கள்
கல்வியைத்
தரமாக்குவோம்
என்றார்கள்
ஏழைகளை ஒதுக்கி
மேல்மட்டம் மட்டும்
பயிலும் வகையில்
தேர்வுமுறை உருவாக்கி
தரம் தராதரம்
என்கிறார்கள்

அவர்கள்
கருத்துச்சுதந்திரத்தின்
பிரதிநிதிகள் நாங்கள்
என்றார்கள்
மற்றவர்களின்
கருத்துச்சுதந்திரத்தின்
நெஞ்சுகளுக்கு
குண்டுகளே பரிசு
என்கிறார்கள்

கட்சிகளுக்குள்
பயணம் செய்து
அரசியலில் எதிரியில்லை
என்பார்கள்
அத்தனையும் சகித்துக்கொண்டு
ஓட்டுப்போடும் வாக்களார்களுக்கு
அதே இத்துப்போன வாக்குறுதிகளை
அடுத்த தேர்தலிலும் தருவார்கள்

இப்படி அவர்கள்
எத்தனையோ
சொல்கிறார்கள்
வேறு எதையோ
செய்கிறார்கள்
ஒவ்வொரு முறையும்
ஏமாற்றிவிட்டு
மக்கள்பணியே கடமையென்று
கண்துடைப்பு நாடகம்
நடத்திவிட்டு
பின்
கும்பிட்டு நகர்கிறார்கள்!


ஒரிஜினல்_லைசென்ஸ்

சாலையில் இன்னின்ன போக்குவரத்து விதிமீறல்களுக்காக காவலர்கள் பிடிப்பார்கள், தண்டனை வாங்கித்தருவார்கள், இதெல்லாம் சரி,
"சிக்னல் இயங்காத, எந்த சிசிடிவி கேமராக்களும் இல்லாத, ஆயிரக்கணக்கான வாகனங்கள் பறக்கும் சாலையில், விதிமீறல்கள் செய்யும் சில நூறு வாகனங்களை, அவைகளில் பெரும்பாலும் விர்ரென பறக்கும் இருசாக்கர வாகனங்களும், "எந்த ரூலும் எங்கள ஒன்னும் செய்யாது" என்று செல்லும் பல்லவன் பேருந்துகளும், "சார் முந்தின நிறுத்தத்திலேயே அவர கவனிச்சுட்டேன்" என்று கடந்துச்செல்லும் லாரிகளுமென நிறைந்திருக்கும் நெடுஞ்சாலையில்,
சிக்னலின் ஒர் ஓரமாக அமர்ந்திருக்கும் அல்லது நடுவே நின்றிருக்கும் ஒன்றிரண்டு காவல்துறை அதிகாரிகள், அல்லது மூன்று நான்கு பேராக ஒர் ஓரத்தில் குழுமியிருக்கும் காவல்துறை அதிகாரிகள் எப்படி ஒருவரைக்கூட விடாமல் பாய்ந்து பாய்ந்து பிடிப்பார்கள்? ஓவர் ஸ்பீட் என்றும், ஹெல்மெட் இல்லையென்றும், விதிமீறல்களை எப்படி நிரூபிப்பார்கள்? கட்சிக்கொடிகளை பறக்க விட்டுக்கொண்டு சீறும் வாகனங்களை எப்படி துணிச்சலாய் மடக்குவார்கள்? டாஸ்மாக் கடைகளில் வாகன நிறுத்தத்தோடு கூடிய பார்களில் இருந்து வரும் வாகனங்களையெல்லாம் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் பறிமுதல் செய்து, பல்லாயிரக்கணக்கான வாகனங்களை எங்கே நிறுத்துவார்கள்? இப்படி எழும் எந்தக் கேள்விகளுக்கும் எந்த அடிப்படை ஆராய்தலும் இல்லாமல், கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், ஒரே இரவில் காவல்துறையை சூப்பர்மேன்களாக்கி, ஒரிஜினல் லைசென்ஸ் மூலம் விபத்துகள் எல்லாம் குறைந்து போகும்போது, இந்த அரும்பெரும் யோசனையை எப்படி காப்பீடு பதிவு செய்து காப்பாற்றப்போகிறார்கள் என்பதே பெருத்த யோசனையாக இருக்கிறது!

#ஒரிஜினல்_லைசென்ஸ்

-------------------

சாலைகளின் தரமோ, ஆட்சியாளர்களின் மனமோ மாறும் வழிக்காணோம், இந்த லைசென்ஸ் எடுக்கும் நடைமுறையில், வாகன ஓட்டிகளுக்கு சில தொகுக்கப்பட்ட பிரசவ காட்சிகளையும், விபத்தினால் உறுப்பு இழந்தவர்களின் அனுபவத்தையும், மரணம் ஏற்படுத்திய விபத்துக்காட்சிகளையும், இறந்தவர்கள் குடும்பங்கள் அடைந்த மனவேதனையையும், இழப்புகளையும் தொகுத்து அதையெல்லாம் பார்க்க வைத்து பின் பிற நடைமுறைகளையும் முடித்து லைசென்ஸ் கொடுத்தால் என்ன? அப்படியாவது அவர்களுக்கு உயிர்களின் மதிப்புத்தெரியட்டுமே?!

குருதியின் சாயலே!

பிரிட்டிஷ் தோட்டாக்கள்
இன்னும் உயிரோடு இருக்கிறது
இந்தியாவில்
கருத்துச்சுதந்திரத்தின்
நெஞ்சுத்துளைக்க!
பிரிட்டிஷின் சிவப்பிலும்
மத்தியின் காவியிலும்
எப்போதும் குருதியின்
சாயலே!

தகுதியில்லாத தலைவர்கள்

லஸ் சர்ச் சிக்னலில், அஜாந்தாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு சிக்னல் விழ, பல்லவன் விரைய, பல்லவன் பின் ஒரு வரிசையில் நானும், திடீரென ஒரு சைக்கிளோட்டி பல்லவனுக்கும் காருக்கும் குறுக்கே வர, வழிவிட்டு நிற்க, வலதுபுறத்தில் இருந்து தவறான வழியில் வந்து ஒரு ஆட்டோ காரையொட்டி இடித்துக்கொண்டு நிற்க, சாலையில் பிரச்சனை வேண்டாமென்று சைக்கிள் சென்றபின் முன்னோக்கி நகர, முழுபோதையில் ஒரு பெரியவர் மீடியனைத் தாண்டி குறுக்கே குதிக்க, அவருக்காகவும் நான் வண்டியை நிறுத்த, சைடில் இருந்த ஆட்டோ ஓட்டி இப்போது வாகனத்தின் பின்னே இடிக்க, அப்போதும் பொறுமை என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு நகர, அதன்பின் அந்த ஆட்டோ ஓட்டுநர் (அவரும் போதையில்) சொன்னதுதான் கொடுமை, "குறுக்கே ஆள் வந்தா வண்டிய நிறுத்திடுவியா, போய்கிட்டே இருக்க வேண்டியதுதானே?" ஒருவேளை எனக்கு முன் அந்த ஆட்டோ ஓட்டுநர் சென்றிருந்தால் அந்த குடிகார பெரியவரும், சிக்னலை மதிக்காத சைக்கிளோட்டியும் பரலோகம் சென்றிருப்பார்கள், அவ்வளவு குடி, அத்தனை வேகம், அத்தனை அலட்சியம், வார்த்தைகளில் பெருத்த மரியாதை! கண்ணுக்கெட்டியவரை காவல்துறையைக் காணவில்லை!

சாலையில் முதலில் அமைச்சர்கள் விதிகளைப் புறக்கணித்து, போக்குவரத்தை நிறுத்தி விரைந்தார்கள், பின்பு பல்லவன் போக்குவரத்து ஓட்டுநர்கள் சில நிறுத்தங்களிலும் பல சிக்னல்களிலும் நிற்காமல் ஓட்டினார்கள், இப்போதும் அப்படியே, பிறகு நிறைய மினி ஆட்டோ, ஷேர் ஆட்டோ, ஆட்டோக்கள் எல்லாம் யாருடைய பினாமி சொத்தாக மாறிய தெம்பில், அல்லது தினமும் நான் மாமூல் கொடுக்கிறேன் என்று சிலர் எதையும் மதிக்காமல், யார் எப்படி போனால் என்ன என்று இருசக்கர வாகனங்கள் மற்றவர்களுக்கு உயிர்பயம் காட்டி எல்லாத்திசைகளிலும் விரைகின்றனர், மேம்பாலத்தின் கைப்பிடிச்சுவற்றின் மேலே மட்டும்தான் அவர்கள் வாகனம் ஓட்டவில்லை!

விநாயகர் ஊர்வலம், வேளாங்கண்ணி ஊர்வலம், ஏதோ ஒரு சவ ஊர்வலம், திருமண ஊர்வலம், கட்சி மீட்டிங் என்று எதற்கெதற்கோ சாலை முடக்கப்படுகிறது, உடல்நிலை சரியில்லாத கைக்குழந்தையை வைத்துக்கொண்டு, மருத்துமனைக்குச் செல்லும் சாலை மறிக்கப்பட்டதால், நண்பர் ஒருவரை, இரவு நேரத்தில் எத்தனை கெஞ்சியும் இரண்டு கிலோமீட்டர்கள் சுற்ற வைத்திருக்கிறார்கள் காவல்துறையினர்!

ஒரு சவ ஊர்வலத்தில், ராயப்பேட்டையின் மேம்பாலத்தின் கீழே, சாலை முடக்கப்பட காத்திருந்த நேரத்தில், நேரெதிரே வந்த ஊர்வலத்தில் ஆடிக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவன், அந்தப்பக்கம் கணவனோடு பின்னே அமர்ந்திருந்த நடுத்தர மார்வாடிப் பெண்ணின் மீது பட்டாசைத் தூக்கி எறிந்தான், உடன் வந்த ஒற்றைக்காவலர் ஒன்றும் கேட்கவில்லை!
குடித்துவிட்டு வாகனம் ஒட்டக்கூடாது என்னும் அரசு மதுக்கடைகளையும், அதனுடன் பார்களையும், பார்க்கிங் வசதியுடன் நடத்துகிறது, நீட் டுக்கு அனுமதியளித்ததைப் போல அறிவார்ந்த செயல்தான் இது!

நாட்டில் இப்போதெல்லாம் குற்றங்களுக்கு பஞ்சமில்லை, விபத்துக்களுக்கும் பஞ்சமில்லை, பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கும் பஞ்சமில்லை! தவறு செய்பவன் எல்லாம் "பணம்" கொடுத்தால் போதும் என்ற மனநிலையை நோக்கி நகர்ந்து ஆண்டுகள் பலவாயிற்று!

பதவி, பணம் என்ற குறிக்கோளில் நகரும் ஆட்சியாளார்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் செயல்திறன் எல்லாம் வேறு எதிலோ இருக்கிறது, அதே பணம் கொடுத்தால் ஓட்டும், தப்பு செய்தால் பணம் கொடுத்துத் தப்பிக்கலாம் என்ற மனநிலையில் பெரும்பான்மையான மக்களும் வந்து நாளாயிற்று!

சாராயம், பணம் என்ற புள்ளிகளில் உயிர்ப்பலிகள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன!
தகுதியில்லாத தலைவர்களால் நாடு என்ன ஆகும் என்பதற்கு தமிழ்நாடு சிறந்த உதாரணம்!
#நீட், #Roadsafety #Chennai_Traffic

பிணவாடை




No automatic alt text available.


அரசியல் முழுக்க
பிணவாடை!
வெட்டியான்களே
தொண்டர்கள்
கொலைகாரர்களே
தலைவர்கள்!
பிணவாடை தாளாமல்
அழுகிக்கொண்டிருக்கிறது
பணம்
அவர்தம் உறக்கத்தை
பறித்தப்படி!
அவர்களோ
ஒருவரையொருவர்
குற்றஞ்சாட்டிக்கொண்டு
தமக்கான கல்லறைகளை
ஆழத் தோண்டியபடி!

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...