Wednesday, 18 January 2017

வெறுமை

அழகாய் மின்னுகிறது வானம்
மெல்லியதாய் வீசும் காற்று
சலனத்தில் சிணுங்கும் இலைகள்
வெறிச்சென்று கிடக்கும் வீதி
வாசிக்கக் கிடைத்திருக்கும் நேரம்
அத்தனையும் வீண்தான்
பிள்ளைகள் அருகில் இல்லா
இந்தவோர் இரவில்!
#வெறுமை

அரிதாரம்

அந்தக் கசாப்புக் கடை வியாபாரி
நாடக நடிகராக மறுமுகம் காட்டி
மேடையில் மேய்ப்பராக
அரிதாரம் பூசுவதைப் போலவே
இந்திய, தமிழக அரசியல்வாதிகள்
தேர்தலில்!

நம்பிக்கையோடு
ஆடுகள்
மேய்ப்பரின் உருவத்தில்,
உணர்ச்சியில்,
மொழியில் கவரப்பட்டு,
கல்லறைக்கே செல்கின்றன
ஒவ்வொரு முறையும்
மேய்ப்பர்களோ
நாடகம் முடிந்ததும்
பிரியாணி சாப்பிட
சட்டமன்றத்துக்கும்
பாராளுமன்றத்திற்கும்
திசை திரும்புகிறார்கள்!

Monday, 21 November 2016

ஓட்டைகள்

நாகரீகத்தின் உச்சத்தில்
கிழித்துவிடப்பட்டிருந்த
விலையுர்ந்த
ஜீன்ஸ் பேண்டை
அணிந்து
சிக்னலில்
காத்திருந்த இளைஞனிடம்
யாசகம் கேட்க
தயங்கி
வறுமையின் உச்சத்தில்
கிழிந்த வேட்டியுடன்
இருந்த முதியவர்
விலகிச் சென்றார்
வறுமைக்கும்
பெருமைக்கும்
இடையே
பலநூறு
#ஓட்டைகள்

மனமொத்த அன்பும் தோழமையும்

மனமொத்த அன்பும் தோழமையும்
இணைந்த வாழ்க்கைத்துணை
இல்லறத்தை அழகாக்கும்
அதிகாரமும் நீதியும்
அழகாய் கைக்கோர்க்கும்
நல்லறம்
இந்த மண்ணில்
வாழ்தலை இனிமையாக்கும்
முன்னது பலருக்கு வாய்ப்பதில்லை
பின்னது இன்னமும்
யாருக்கும் வாய்க்கவில்லை!

வரலாற்றுப்_பக்கங்கள்

அணுவுலை வெடித்தால்
காற்று மாசுபட்டால்
தண்ணீர் வறண்டுபோனால்
வளங்கள் சுரண்டப்பட்டால்
நிறுவனங்கள் மூடப்பட்டால்
விவசாயிகள் தற்கொலைச் செய்து கொண்டால்
கல்விச்சாலைகள் மூடப்பட்டால்
சாராயம் பெருகினால்
கூலிக் கொலையாளர்கள் புற்றீசல் போல் புறப்பட்டால்
புதிய தொழில் வாய்ப்புகள் முடக்கப்பட்டால்
என்ன என்ன எது ஆனால்?


எதைத் தடுத்தாலும்
எது வெடித்தாலும்
எது நாசமாய்ப் போனாலும்
சுவிஸ் வங்கிக் காப்பாற்றும்
என்று அரசியலாளர்களும்
நிரந்தர வேலையும் சொத்துக்களும்
காப்பாற்றும்
என்று அதிகாரிகளும்
நடிகர்கள் காப்பாற்றுவார்கள்
என்று ரசிகர்களும்
கடவுள் காப்பாற்றுவார்
என்று மத அபிமானிகளும்
அரசியல் தலைமை காப்பாற்றும்
என்று அடிபொடிகளும்
கவர்ச்சிப் படம் காப்பாற்றும்
என்று பத்திரிக்கைகளும்
ஊழல் அரசியல்வாதிகளும்
புரையோடிய அதிகாரிகளும்
காப்பாற்றுவார்கள்
என்று ஆட்டு மந்தை மக்களும்
எனக்கென்ன என்று கடந்துப்போக

ஒரு பாலைவனப் பிரதேசம்
வருங்காலத் தலைமுறைக்கு
உருவாகிக் கொண்டிருக்கிறது
உபயோகப்படாதப் பணத்தாள்களோடு!

உற்றுப் பாருங்கள்
பணத்தில் எழுதிய வரலாற்றுப் பக்கங்களில்
வறுமையும் பஞ்சமும்
 படர்ந்து கொண்டிருக்கிறது

பிள்ளைகளைச்_சூழ்ந்திருக்கும்_உலகம்

இன்று ஒரு வேலையாகக் கோபாலபுரத்தில் இருக்கும் டி ஏ வி மற்றும் நேஷனல் பப்ளிக் பள்ளிகள் அமைந்திருக்கும் சாலையைக் கடக்க நேர்ந்தது, இருபக்கமும் வாகனங்களை நிறுத்தி, பெரும் போக்குவரத்து நெரிசல், சென்னையில் பள்ளிகள் அமைந்திருக்கும் எல்லாச் சாலைகளிலும் இதுதான் பிரச்சனை என்றாலும், சிறிய பிள்ளைகள் கூடத் தங்கள் வாகனத்துக்காக அப்படியும் இப்படியும் உடன் பெரியவர்கள் இல்லாமல் ஓடியது அச்சத்தையே தந்தது, அவ்வப்போது காணும் காட்சிகளைக் கண்டும், கேட்கும் நிகழ்வுகளைக் கொண்டும், சில கருத்துக்களைக் குழந்தைகளின் நலனுக்காகப் பகிர்கிறேன்;

1. பள்ளியின் வாகனம் என்றாலும் தனியார் வாகனம் என்றாலும், பெற்றவர் அளவுக்குப் பிள்ளைகளின் மேல் யாருக்கும் அக்கறை இருக்காது! உங்களுக்கு ஒரே பிள்ளை, அவர்களுக்குப் பத்தில் ஒன்று பதினொன்று, அவ்வளவே! அதுதான் விபத்துகள் நிகழும்போது பள்ளிகளின் மற்றும் காவல்துறையின் எண்ணமும்!

2. பத்து வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்குப் பெற்றோரோ, அல்லது வீட்டில் உள்ள ஒருவரோ அவர்களைப் பள்ளியில் விட உடன் செல்லுதல் அவசியம்!

3. பத்தாவது படிக்கும் மாணவன், ஒரு தனியார் வேனில், விளையாட்டுக்காகப் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சென்றதை இந்தச் சனிக்கிழமை காண நேர்ந்தது, உள்ளே உள்ள அவனது மற்ற நண்பர்களுக்கு அது ஒரு விளையாட்டாய் இருந்தது! பெரிய பிள்ளைகளுக்கும் பாதுகாப்பைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். வளர்ந்தப் பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கவனியுங்கள்! முடிந்தால் அவர்களின் நட்புகளை அவ்வபோது சந்தித்து நட்புடன் பழகி, தேவையற்ற பழக்கங்களைக் களையலாம்!

4. உங்கள் பிள்ளைகளை வீட்டிலோ தெருவிலோ வாகனம் இறங்கிவிடும் நேரத்திற்கும் முன்பு நீங்கள் அங்கே காத்திருங்கள், உங்கள் பிள்ளையைப் பத்திரமாய்க் கையைப் பிடித்து இறக்கி, பாதுகாப்பான இடத்திற்கு வரும்வரை உங்கள் பார்வையை அவர்கள் மீதும் வாகனத்தின் மீதும் வைத்திருங்கள்! பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு வேகம் மட்டுமே இருக்கிறது, விவேகம் இல்லை!

5. தனியார் ஆட்டோவை ஏற்பாடு செய்தாலும், அதில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்று நீங்கள் கண்காணிக்க வேண்டும். ஒரு பிள்ளையை ஒருவர் ஏற்றிவிட, காலியாய்ச் சென்ற ஆட்டோ, மற்றொரு தெருவில் நிறையப் பிள்ளைகளைப் புளி மூட்டை போல் ஏற்றி, ஆட்டோவின் சீட்டுக்கு மேல் உள்ள சிறிய இடத்தில் கூடப் பிள்ளைகளை அமரவைத்து அழைத்துச் செல்கிறார்கள். அவர்களுக்குப் பணம் மட்டுமே முக்கியம்!

6. பெண் குழந்தைகள் என்றாலும் ஆண் குழந்தைகள் என்றாலும் குட் டச் (நல்ல தொடுகை), பேட் டச் (கீழ்த்தரமான தொடுகை) பற்றிக் கற்றுக் கொடுங்கள்! ஓர் ஐந்து வயது சிறுமியை அழைத்துச் சென்ற பள்ளி வாகனத்தில், பத்தாவது படிக்கும் மாணவன் ஒருவன் அந்தக் குழந்தையைத் தொடக் கூடாத இடங்களில் தொட்டுத் துன்புறுத்தி இருக்கிறான். பிறகு பெற்றவர்கள் சென்று பள்ளியிடம் முறையிட, அந்த மாணவனின் அரசியல் பின்புலத்தால், பள்ளி நிர்வாகம் மெத்தனமாய் இருக்க, அந்தக் குழந்தையை வேறொரு பள்ளியில் சேர்த்தார்கள். வெளியாட்கள் என்றில்லை, பாலியல் வன்கொடுமை என்பது யாராலும் எந்த வயதினராலும் எந்தப் பாலினம் என்றாலும் நிகழ்த்தப்படலாம், கவனம் அவசியம்!

7. தெரிந்தவர் அறிந்தவர், பல காலம் எங்களுக்குத் தெரியும் என்று தனியார் ஆட்டோ ஓட்டுனர்களை, பிற வாகன ஓட்டிகளையும் மட்டும் நம்பி சிறு குழந்தைகளைத் தனியே அனுப்புவது தவறு.

என் மகன் ஒன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது, அவனைப் பள்ளியில் விட்டுவிட்டு நான் திரும்ப, அப்போதுதான் வந்து நின்ற வேனில் இருந்து, மகனின் நண்பன் இறங்கும்போது கீழே விழுந்தான், அவன் விழுந்ததைக் கவனிக்காமலோ அல்லது கவனித்தும் அந்த வாகனம் சென்று விட்டது, விழுந்த வேகத்தில் அந்தப் பிள்ளை நடைபாதையில் வாந்தி எடுக்க, அவனுக்கு வேண்டிய முதலுதவிகளைச் செய்து அவன் பெற்றோருக்கு போன் செய்ய, அவர்களிடம் எந்த அக்கறையையும் இல்லை! சில வருடங்கள் கழித்துச் சமீபத்தில் பேசியதில், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த அந்தத் தோழி அவர்கள் வீட்டில் இருந்து தனியே வர அனுமதியில்லை என்றது சற்றே விந்தையாக இருந்தது! யாரோ ஓர் ஓட்டுனரை நம்பி, ஏதோ ஒரு வாகனத்தை நம்பியே அந்தப் பிள்ளை இதுநாள் வரை பயணிக்கிறான்! செல்வம் போனால் சேர்த்துக் கொள்ளலாம், குழந்தைகளுக்கு நேரமில்லையெனில், அவர்களின் பாதுகாப்புக்கு உடன் வர மதம் பெரியவர்கள் பெண்ணுக்கு அனுமதி தரமாட்டார்கள் எனில் பிள்ளைகள் எதற்கு?

எல்லாவற்றையும் தந்தைதான் செய்ய வேண்டும் என்று இல்லை, உங்கள் வீட்டு பெண்களுக்கும் சுதந்திரம் கொடுத்து, பயிற்சி கொடுத்து, பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!

8. பன்னிரண்டு வயதிற்கும் அந்தச் சிறுமிக்கு, என் பிள்ளைகளுக்காக நான் பள்ளியில் காத்திருந்த போது, அந்தப் பெண்ணின் அருகில் வந்த ஒரு ஆட்டோ டிரைவர், அந்தப் பெண்ணின் தோளில் கைவைத்து, பின் கன்னத்தைக் கிள்ளி, "ஏண்டி கழுதை, இங்கே நிக்குறே, சனியனே வா!" என்று அழைத்தான், என்னால் முடிந்தது அன்றைக்கு அவனைக் கண்டித்தது, ஆனால் இதுபோலத் தரக்குறைவாக எத்தனை பேர் உங்கள் பிள்ளைகளிடம் பேசுகிறார்கள், தொடுகிறார்கள் என்று உங்கள் பிள்ளைகளிடம் கேட்கிறீர்களா? அவர்கள் மதிப்பெண் என்று மட்டும் கேட்க முடிந்த உங்களுக்கு, பள்ளியில் அவர்கள் படும் அவதியையும், வெளியில் படும் அவதியையும் கேட்டு தெரிந்து, அவர்களுடன் நேரம் செலவிட்டு, அவைகளைச் சீர்ப்படுத்துங்கள்! இல்லையெனில் வருங்காலத்தில் துன்பமே மிஞ்சும்!

9. சமீபத்தில் பத்திரிகையில் ஒரு நிகழ்வைப் படித்தேன், அப்பாவும் அம்மாவும் வேலைக்குச் செல்ல, அப்பா இரவு நெடு நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்ப, அம்மாவும் நெடுந்தூரம் பயணம் செய்து மாலையில் வரும் போது, மிகுந்த சோர்வில் தன் மக்களிடம் நேரம் செலவிட முடியாமல், வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு உறங்கிவிடுவாராம்.

தன் பெண்ணைப் பள்ளி விட்டு வந்ததும் பக்கத்து வீட்டு முதிய உறவினர் ஒருவரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுச் சென்று விடுவது தின வழக்கம்! கொஞ்ச நாளாய் மகள் அம்மாவிடம், "அம்மா என்கூடப் பேசு, நான் உன்கிட்டே கொஞ்சம் பேசணும்" என்று சொல்ல, "நாளைக்கு நாளைக்கு" என்று தட்டிக் கழித்திருக்கின்றனர்.

சிறிது நாட்களுக்குப் பிறகு அந்த முதிய உறவினர் வீட்டுக்குச் செல்ல மறுத்த மகள், தன் அம்மாவிடம் பூனைக்குட்டிகளை வாங்கித் தர சொல்லி அடம் பிடிக்க அம்மாவும் வாங்கித் தந்திருக்கிறார்! பூனைக் குட்டிகள் வந்த சில நாட்களில் மகளிடம் பெரிய மாற்றம், அது அம்மாவுக்கு நிம்மதியைத் தந்திருக்கிறது. இருந்தாலும் மகள் வளர்க்கும் பூனைகளைக் காணும் பொருட்டு அவள் அறைக்குச் செல்ல, அங்கே அந்தப் பூனைக் குட்டிகளைச் சங்கிலியில் பிணைத்தும், ஒன்றின் காதுகளை வெட்டியும், குட்டிகளின் உடல் முழுதும் குண்டு ஊசியால் குத்தியும், அதன் ரோமங்களைத் தீய்த்தும் வைத்திருந்திருக்கிறாள், பக்கத்துக்கு வீட்டில் உள்ள பெண்மணிகளும் அவளிடம் வந்து, "உன் மகள் அந்தப் பூனைகளைக் கொடுமை படுத்துகிறாள், இப்படியே விட்டால் அவளுக்குப் பைத்தியம் பிடித்து விடும்!" என்று சொல்ல, அப்போதுதான் அம்மாவுக்கு மகளின் மனநிலைப் புரிந்தது!

ஒரு மனநல மருத்துவரிடம் செல்ல, மகள் தன்னை அந்த முதிய உறவினர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாகவும், தன் அம்மா தன்னிடம் காது கொடுத்து, பேச மறுத்ததாகவும், அதனால் அந்த முதிய உறவினரின் நினைவு வரும்போது, இந்தப் பூனைக்குக் குட்டிகளைக் கொடுமைப்படுத்துவது அவளுக்கு அந்த உறவினரையே துன்புறுத்துவது போலத் தோன்றுவதால் அவளுக்கு மகிழ்ச்சி கிடைப்பதாகவும் சொல்லி இருக்கிறாள்!

உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் காதுகளும், மனமும் நேரமும் வேண்டும், இல்லையென்றால் ஏதோ ஒரு உயிர் உங்கள் பிள்ளைகளின் துன்புறுத்தலுக்கு ஆளாகும்! நாயை கல்லால் அடிப்பது, பூனையைத் துன்புறுத்துவது, பட்டாம் பூச்சியைப் பிய்த்து எறிவது என்று பிள்ளைகள் செய்யும் செயல்களை ஊக்குவிக்காதீர்கள், அது அவர்களின் மனச்சிதைவின் ஆரம்ப அறிகுறி! இப்படியே வளரும் பிள்ளைகள் சிறந்த கணவனாகவோ, மனைவியாகவோ ஆதல் அரிது!

10. வெளியில், தெருவில், பக்கத்துக்கு வீட்டில் விளையாடச் செல்லும் பிள்ளைகளிடமும் கவனம் அவசியம்!

11. இன்று மொத்த எலக்ட்ரானிக் பொருட்களையும் பிள்ளைகளிடம் கொடுக்கிறீர்கள், அதில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்கிறீர்களா? அதில் அவர்கள் நல்லதையும் தெரிந்து கொள்ளமுடியும், தேவை இல்லாத குப்பைகளையும் காண முடியும், வழிகாட்ட வேண்டியது பெற்றோரின் கடமை.

12. வெளி உலகை, பாதுகாப்பு நிறைந்ததாக நாம் மாற்ற முடியாது, முடிந்தவரை நம்மில் இருந்து வந்த உயிரை, நாம் சரியாக வழிநடத்தலாம், பாதுகாப்பை உறுதி செய்யலாம்!

சென்னை போக்குவரத்து

உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிக்கையான "தி குளோபல் ரிப்போர்ட் ஆன் அர்பன் ஹெல்த்" தின் படி, சாலை விபத்துகளில் மாண்டுபோவர்களின் பட்டியலில், சியாரா என்ற பிரேசிலின் நகரத்துக்கு அடுத்துச் சென்னை இரண்டாவது இடத்தில் இருக்கிறது!

இதற்காகச் சென்னைவாசிகளாக இன்றே நாம் பெருமைபட்டுக்கொள்ளலாம், ஏனெனில் இந்த விபத்து நாளை நமக்கும் நடக்கலாம், நாம் இல்லாமல் போகலாம்!

அரசாங்கம் இல்லையென்றாலும், அதிகாரிகள் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் அறுபது சதவீத விபத்துகள் நம்மாலேயே குறைக்கப்படலாம்! அது என்ன என்ன என்று நமக்கே தெரியும்! 

1. சிக்கனலை மதிப்பது

2. சாலை வரிசைகளை மதிப்பது

3. தலைக்கவசம் அணிவது

4. மித வேகம் 

5. பதினெட்டுக்குக் குறைவான குழந்தைகளுக்கு மோட்டார் வாகனங்களை
கொடுக்காமல் இருப்பது. சைக்கிளை தந்தாலும் அவர்களை நெடுஞ்சாலைகளில் கவனமாய் இருக்கச் சொல்வது

6. கனரக வாகனங்களின் முறையான தணிக்கைகள்

7. நடைபாதைகளில் வீடுகளை விஸ்தரிப்பது, கடைகளை விஸ்தரிப்பது போன்ற செயல்களைத் தவிர்த்தல்

7. உங்கள் பிள்ளைகள் நண்பர்களுடன் பைக்கில் இருவர் மூவராக ரேஸில் பறப்பது போன்ற சாகசங்களைக் கண்காணித்து அறிவுறுத்துவது என நிறைய இருக்கின்றன நாம் செய்வதற்கு!

பொதுவான விதிகளை விடுத்து, ஒரு பைக்கில், ஓட்டும் ஆணோ பெண்ணோ மட்டும் தலைக்கவசம் அணிந்து, குழந்தைகளுக்கு, அல்லது பின்னால் இருப்பவர்களுக்குத் தலைக்கவசம் இல்லாமல் செல்வது எப்படிப்பட்ட அக்கறை என்று புரிவதில்லை! ஒருவேளை கீழே விழுந்தால், ஓட்டுநர் மட்டும் தப்பித்துக் குடும்பம் சாகலாம் என்ற எண்ணமா?

நாள்தோறும் நெருக்கடி அதிகரித்துக் கொண்டே வருகிறது சாலைகளில். பைக் ஓட்டிகள் நடைபாதைகள் ஓட்டுகிறார்கள், சாலைத் தடுப்புச் சுவர் குட்டையாய் இருந்தால் அதன் மேல் ஏறி ஓட்டுகிறார்கள், இன்னமும் அவர்கள் வரிசையாய்ச் செல்லும் வாகனங்களின் மேல் பறக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்!

விதிமுறைகளை மீறி தினந்தோறும் லட்சணக்கணக்கில் வாகனங்கள் சாலைகளில் பறக்கிறது, அதிகாரிகள் ஓரமாய் நிற்கிறார்கள், மாத கடைசியில் சில அபராதங்கள் விதிக்கப்படுகின்றன! பொதுவாய் சீர்கெட்டு இருக்கும் சாலைகள் மழை நேரத்தில் முழுதும் காணாமல் போகிறது (ஊரே காணாமல் போனது கடந்த வருடம்)!

இந்தச் சாலைகளின் நிலைகளும், போக்குவரத்தும் சீர் செய்யப்பட மிக முக்கியமான பிரமுகர்களுக்குச் சாலைகளில் இடைஞ்சலோ, விபத்தோ அல்லது, ஏதோ ஒரு பொதுநல வழக்கோ தேவைப்படலாம், அதுவரை, நம்முடைய கவனத்தாலும் பிறருடைய கருணையாலும் தான் நாம் வீடு திரும்ப வேண்டும்!
#சென்னை #போக்குவரத்து

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...