Tuesday, 27 June 2017

தற்கொலைகள்







No automatic alt text available.

நேற்றிரவு நான்
தற்கொலைச் செய்துகொண்டேன்
அப்படித்தான் எல்லோரும்
சொல்கிறார்கள்

தெளிவாய் படித்து
பரீட்சை எழுதி
எதிர்ப்பார்த்த மதிப்பெண்
கிடைக்காதபோது
அப்பனுக்கு கடன்சுமை
தந்து
மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து
ஆற அமர வந்த
எதிர்ப்பார்த்த மதிப்பெண்ணில்
இந்த கல்வியமைப்பின்
கசப்பான வணிக
நோக்கத்தைக் காண
நேர்ந்தபோது

வாங்கியக் கடனின்
வட்டிக்காக
உழைத்துத்தேய்ந்த
அப்பனின் கூன்முதுகை
நிமிர்த்த முடியாதபோது

குடிகாரத் தமையனிடம்
சிக்கிச் சிதைந்த
அண்ணியின் கண்ணீரை
மவுனமாய் கடந்தபோது

உற்றத்தோழி
காதல் தோல்வியில்
கண் எதிரே
உத்திரத்தில் தொங்கியபோது

பக்கத்துவீட்டு பிஞ்சை
எதிர்வீட்டு மாணிக்கம்
கசக்கி கொன்ற
செய்தியின் போது

காதலித்து மணந்த
அடுத்தவீட்டு இசக்கியை
கர்ப்பக் கோலத்தில்
அவள் பெற்றோர்
வெட்டிச் சாய்த்தப்போது

நன்றாய் படித்த
சண்முகத்தை
டாஸ்மாக் கடையில்
அவன் அப்பன்
வேலைக்குச் சேர்த்தப்போது

குண்டுக்குழி கன்னத்துடன்
கட்டாயப் போதையில்
குழந்தைகளுடன்
பெண்கள் சாலையில்
பிச்சையெடுத்த போது

கடன் வாங்கி
ஓடிப்போன எதிர்வீட்டுக்காரன் மீது
புகார் கொடுக்கச்சென்ற
ஆனந்தியின் அம்மாவை
ஒரு இராத்திரி படுக்க அழைத்த
அந்த காவல்துறை அதிகாரியின்
கண்களைக் கண்டபோது

ஒரு மழைநேரத்துக்
காலையில் அவனுக்காக
காய்ச்சலுடன் கால்கடுக்க
காத்திருந்த வேளையில்
வராது சென்ற அவன்
அலட்சியத்தின்போது

ஆயிரம் நம்பிக்கைத்தந்து
காரணங்கள் சொல்லி
காசுக்காக அவன்
வேறொரு கழுத்தில்
தாலி பூட்டியபோது

மறுக்க மறுக்க
கேளாமல்
ஒரு குடிகாரச் சுப்பனுக்கு
அப்பன் கட்டிவைத்தப்போது

உழைத்து உழைத்து
தேய்ந்து
அடிஉதையில் கர்ப்பம்
கலைந்து குருதியாக
வெளியேறியபோது

முன்னம் காதலித்தவன்
இப்பொழுதும்
வைத்துக்கொள்கிறேன்
என்று அழைத்தப்போது

இப்படி
ஒவ்வொரு முறையும்
நான் செத்துப்போய்
அழுதபோது
ஒவ்வொருமுறையும்
என்னைக் கொன்றவர்கள்
கடந்தப்போது
கரிய விழிகளில்
கண்ணீருடன்
உறைந்துவிட்ட புன்னகையுடன்
என் மனம் நோக்கும்
கருணைக்காக காத்திருந்தேன்
அன்பெல்லாம் துன்பமாக
மாறிய வேளைகளில்
நம்பிக்கையெல்லாம்
தகர்ந்துப்போய்
நொடித்துப்போன வேளைகளில்
தோன்றாத எண்ணமெல்லாம்
நேற்றிரவு தோன்றியது விந்தைதான்

ஆமாம் நான் தற்கொலைச்
செய்துக்கொண்டேன்
அப்படித்தான் எல்லோரும்
சொல்கிறார்கள்

கிடத்தப்பட்டிருக்கும்
என் வெற்றுபிண்டத்தின்
மீது சிலருக்கு கருணைப்பொங்குகிறது
சிலருக்கு ஒழுக்கச்சீல
கற்பனைக்கதைகள்
நெஞ்சில் விண்டுகிறது

உறைந்துக்கிடந்த மனதை
அறியாதவர்கள்
துவண்டுக்கிடந்த மனதை
கொன்றவர்கள்
நம்பிக்கைத்துரோகம்
செய்தவர்கள்
நம்பிக்கைத்தந்தவர்கள்
எல்லோருக்கும் இதோ
இந்தச் சவம் கண்ணை
உறுத்துகிறது
சில மணித்துளிகளில்
சில வருடங்களில்
இந்தக் கதைகளும்
இந்தக் காட்சிகளும்
அவரவர் மனதைவிட்டு
அகன்றுவிடும்

ஏய்த்தவர்
சுரண்டியவர்
சுகப்பட்டவர்
சாகடித்தவர்
எல்லாம் வாழ
என்னைப்போல தற்கொலைச்
செய்துக்கொண்ட
இந்த ஆவிகள் சூழ்
உலகத்தில்
இந்தக் கோழைத்தனத்திற்காக
இப்பொழுது
நானும் வருந்துகிறேன்!

 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!