Tuesday, 27 June 2017

அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பாஆஆஆஆஆ

லண்டனில் நடக்கும் தொடர் வன்முறைகள் இப்போது தீ விபத்து, பல உயிரிழப்புகள், கவலைக்கொள்ள வேண்டிய நிகழ்வுகள்தான், அதே வேளையில் சென்னை சில்க்ஸின் தீ விபத்தை, அத்தனை நெருக்கடியான இடத்தில் அத்தனை மாடிக்கட்டிடம் கட்ட அனுமதித்ததை, விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்ற ஆறுதலாலும், நிர்வாகம் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுத்துப் பார்த்துக்கொண்டது என்ற சப்பைக்கட்டினாலும் வசதியாக மறந்துவிட்டோம்!

ஊழலின் குளறுபடிகள் எப்போதும் தீ விபத்தாக, சாலை விபத்தாக, கட்டிட விபத்தாக, அணுவுலை விபத்தாக, தண்ணீரில் நச்சாக, உணவுகளில் கலப்படமாக, மரபணு மாற்றப்பட்ட விதைகளாக, தவறான மருந்துகளாக, தடைச்செய்யபட்ட மருந்துகளாக, அறுந்துதொங்கும் மின்கம்பிகளாக, குழிகளில் உறங்கும் அவ்வப்போது வெளியே தலைநீட்டும் கேபிள்களாக, திடீரென்று பெருக்கெடுத்து ஓடும் மழைநீராக, திறந்துக்கிடக்கும் சாக்கடைகளாக, சாதிய நாற்றமாக, மதத் துவேஷமாக நாடெங்கும் பரவிக்கிடப்பதை ஏனோ வசதியாக மறந்துவிடுகிறோம்!

அரசு செய்யாததை ஒவ்வொரு முறையும் ஒரு பொதுநல வழக்குத்தான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது, நீதிமன்றமே இதையெல்லாம் ஏன் தாமாக முன்வந்து வழக்காக பதியக்கூடாது, ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்கள் இவைகளைச் செய்ய வேண்டும், கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும் என்றால் நாட்டில் சரிபாதி சிறைச்சாலைகளைத்தான் கட்டவேண்டும், பெரும்பான்மையான அதிகாரிகளை, ஆட்சியாளர்களை பதவியைவிட்டு விலக்கவேண்டும்! ஆனால் இது ஒருபோதும் இங்கே நிகழாது, நடக்கும் ஆட்சியின் மறைந்த முதல்வரின் சொத்துக்குவிப்பு வழக்கு நடந்த வேகத்தில், அவரே மறைந்துவிட்டார், மற்றொருவர் பொதுச்செயலாளராகிவிட்டார்!

ஆட்சி அமைப்பதில் உள்ள வேகமும் ஆர்வமும் எந்த அரசியல்வாதிக்கும் மக்கள் பணியில் இல்லை, இங்கே யார் முதல்வர் ஆனாலும், செயல்படாத முதல்வருக்கும் கூட "சப்பைக்கட்டு" கட்ட இங்கே சாதியப்பாசம் கைக்கொடுக்கிறது, மறைந்த முதல்வர் முதல் இப்போது இருக்கும் முதல்வர் வரை, செயல் வேகம் என்பது "சாராயக்கடைகளை" திறந்து வருமானத்தை அதிகரிப்பதில் இருந்தது/ இருக்கிறதே தவிர மற்ற எதிலும் இல்லை!

இங்கே ஏன் ஊழலற்ற ஆட்சி வரமுடியாது? "மனம் போல் வாழ்வு" என்பார்கள், அதற்கு என்ன வேண்டும்? நேர்மறைச்சிந்தனை, அந்த நேர்மறைச்சிந்தனை என்பது நமக்கு எப்படி இருக்கிறது? "ஊழல் செய்தாலும் மக்களுக்கு நல்லது செய்தால் பரவாயில்லை" என்ற ரீதியில் தான் நம்முடைய "நேர்மறைச்சிந்தனை" உள்ளது, அந்தச் சிந்தனைக்கேற்ப இங்கே அதிகாரிகள், ஊழியர்கள், மந்திரிகள், ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள், இந்த எண்ணம் படித்தவர்கள், பாமரர்கள் என்று எல்லோருக்கும் பொதுவில் உள்ளது, ஊழல் செய்யும் போது, "நம்ம ஆளு" என்ற சாதியப்பாசமும் உடன்தொக்கத்தொகைப்போல மக்கள் மனதில் உடன் வருகிறது!

சாலையில் மாதங்களில் சில நாட்களில் காவலர்கள் மும்முரமாய் வாகனம் ஓட்டுபவர்களை விதிமீறல்களுக்காக பிடிப்பார்கள், சில நாட்களில் மீண்டும் அதே விதிமீறல்கள் நிகழும், விபத்துக்கள் தொடர்கதையாகும், அதேதான் இங்கே அரசியலிலும் நிகழ்கிறது, மிகச்சிலரே சமூகத்துக்கும் நாட்டுக்கும் கவலைக்கொள்கின்றனர், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் பொதுநல வழக்குப்போட்டு நடையாய் நடக்கிறார்கள், ரவுடிகளால் கொல்லப்படுகிறார்கள், அல்லது ஏதோ பொய்வழக்கின் பிண்ணனியில் தீவிரவாதி என்ற முத்திரையில் சிறையில் இருக்கிறார்கள், அல்லது குற்றவாளியாக மாற்றப்படுகிறார்கள், மாறுகிறார்கள்!

இந்த நாட்டில் ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு இடத்திலும் விதிமீறல்கள் நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது, ஒவ்வொரு நிமிடமும் மரணங்கள் நிகழ்ந்துக்கொண்டேயிருக்கிறது, ஒவ்வொரு மணிநேரமும் ஏதோ ஒரு பொதுநல வழக்கு பதியப்படுகிறது, இதெல்லாம் ஆள்பவர்களுக்கு தெரியாதா? மாற்ற முடியாதா? மக்களால் தாமே தம்மை ஒழுங்குப்படுத்திக் கொள்ள முடியாதா? விதிகளை தான் மீறினால் ஒரு நியாயமும் மற்றவர் மீறினால் அநியாயம் என்று வெட்டி அறச்சீற்றம் கொள்ளும் மக்களும், சாலையில் விதிகளை மீறிச் செல்லும் வண்டி மந்திரியின், காவல்துறையின் வண்டியாய் இருக்கும்போது மாற்றத்தை அவர்கள் எப்படி ஏற்படுத்துவார்கள்??

மாறாத ஊழல்வாதிகளையே திரும்ப திரும்ப இலவசங்களுக்காகவும், சாதிக்காகவும் தேர்ந்தெடுக்கும் நமக்கு "மரணங்களும் இலவசம்தானே?" அது நமக்கு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், நம்முடைய இயலாமைக்கு ஆதரவாக, அதையும் கூட "வாழ்க்கை சிறிது" என்ற நேர்மறைச்சிந்தனையாகப் பெயர் சூட்டிக்கொள்வோம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!