Tuesday, 16 December 2014

தீவிரவாதிகளே!

 
திருநீறு,
குங்குமம் இடுவதை
நிறுத்திக் கொள்கிறோம்

சிலுவை சுமப்பதை
மண்டியிடுவதை
மறந்து விடுகிறோம்

ஐந்து வேளை தொழுகை
என்பதை - குரான்
படிப்பதைத் துறந்துவிடுகிறோம்

நீங்கள் வகுத்து வைத்த 
மத அடையாளங்களை
விட்டுவிட்ட பிறகாவது
உங்களுக்கு
நாங்கள் மனிதர்கள் என்று
கண்டுகொள்ள முடியுமா
மதவாதிகளே?
உயிர்க்கொல்லும்,
பிள்ளைத் தின்னும்
தீவிரவாதிகளே?

எங்களின் மேல்
வெறுப்பை உமிழச் சொன்னவன்
சிவனும் என்றால், அவனும் வேண்டாம்,
பிரிவினை வளர்க்கச் சொன்னவன்
விஷ்ணுவும் என்றால் அவனும் வேண்டாம்,
அணு ஆயுதத்தில் உலகை அழிக்கச் சொன்னவன்
கர்த்தரும் என்றால் அவனும் வேண்டாம்,
உயிர்வதைச் செய்யச் சொன்னவன்
நபிகள் என்றாலும் அல்லா என்றாலும்
அவனும், எவனும் வேண்டவே வேண்டாம்!

இருப்பது ஓர் உலகு
வாழக் கிடைத்திருப்பது ஒரு வாழ்க்கை
இதில் நீவிர்
காணாத கடவுளுக்காக
காக்காத மதத்துக்காக
எம்பிள்ளைகளை உண்பீர்களா?
அல்லது புல்லும் பூண்டும் வாழும்
உலகில் - எம்மையும்
பயமின்றி வாழ விடுவீர்களா?!

இப்படித்தான் மதம் என்றால்
இதுதான் உங்கள் கடவுள் என்றால்
உயிர் பலி கேட்கும்
உங்கள் காட்டுமிராண்டி
மதங்களும் கடவுளர்களும்
நாசமாய்ப் போகட்டும்!

 

Monday, 15 December 2014

அன்பின் ஆதாரம்


தேன் சுவைத்தல்
வந்து திரியும்
வண்டுக்குத் தெரியும்,
மலரின்
ஒழுகும் உதிரத்தில்,
கசியும் வலியை,
உணர -
தாங்கி நிற்கும் நிலத்துக்கு
மட்டுமே முடியும்!
#அன்பின் ஆதாரம்
 

Sunday, 23 November 2014

யார் பணம்?

 
தெரிந்தவர் ஒருவர் தன் மகளின் மருத்துவக் கனவை நிறைவேற்ற, உள்ளுரில் இடம் கிடைக்காமல், அல்லது கிடைத்த இடத்தில் கேட்ட அதிகப்படியான லஞ்சத்தைச் செலுத்த முடியாமல், ஏதோ ஒரு நாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரியில், தன்னிடம் இருந்த நகைகளை விற்று, பணம் புரட்டி, முதல் வருட மருத்துவக் கல்விக்குக் கட்டணம் செலுத்தி அனுப்பி வைத்தார், இடையில் வங்கிக் கடனுக்கும் கேட்டு வைத்தார், எப்படியும் இரண்டாம் வருடத்திற்குள் வங்கிக் கல்விக் கடன் கொடுத்து விடும் என்ற நம்பிக்கையில் மண் விழுந்தது, மகளின் கனவு முறிந்தது, ஒரு வருடப்  படிப்புடன் அதற்கு முழுக்குப் போட்டு, தமிழ்நாட்டில் ஓர் ஊரில் இப்போது, ஏதோ ஒரு பட்டப்படிப்பு தொடர்கிறார், அம்மாவிற்குக் கடன் சுமை!

 அலுவலகத்தில், அதன் மூலமாகவும், குழுவின் மூலமாகவும் இயன்ற உதவிகளைச் செய்து வந்த வேளையில், எப்படியோ என் முகவரிப் பெற்று, தினம் தோறும் கல்வித் தொடர உதவிக் கேட்டு, அரசாங்கப் பள்ளிகளில் பயிலும் தொழுநோயாளிகளின் குழந்தைகளிடம் இருந்து பல கடிதங்கள்!
 அரசாங்க மருத்துவமனைகளில், உயிர் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் தன் குழந்தைகளுக்காகவும், உறவுகளுக்காகவும், பண உதவிக் கேட்டு வரும் விளம்பரங்கள், தொலைப் பேசி அழைப்புகள். அடிப்படை சுகாதார வசதி இன்றி இயங்கும் அரசாங்கக் கல்விக் கூடங்கள்.

ஒரு மழைப் பொய்த்தாலே, வருமானம் பொய்த்து, தற்கொலைச் செய்து கொள்ளும் விளிம்பு நிலை விவசாயிகள். இந்தியாவின் வருமான விலக்கு அத்தனையும் பெற்று விட்டு, ஓர் அறிவிப்பில் மூடு விழா செய்து தங்கள் நாட்டிற்கு மூட்டைக் கட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள்.

 போபால் விஷ வாயு சாவுகளுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை, நிவராணம் முழுதாகச் சென்றடையவில்லை, வருமான வரியில் நீங்கள் ஓர்  ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்தாலோ, உங்கள் ஏதோ ஒரு சேவைக்கு ஒரு நூறு ரூபாய் கட்டணம் கட்டா விட்டாலோ, உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் நேர்மையான சட்டம் நிறைந்த இந்த நாட்டில் தான் மேற் கூறிய அத்தனையும் நடக்கிறது.

 "அம்மா பசிக்குது, ஐயா தர்மம் பண்ணுங்க" என்ற குரல்களைப் புறம் தள்ளி, ஏதோ ஒரு சாமியார்க்கு அள்ளித் தந்து அவனிடமே பிச்சைக் கேட்கும் மனிதர்கள் தாம் நாம்.

 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களுக்கு எதுவுமே செய்யாத அரசாங்கம், இன்று ஏழு வெளிநாட்டு வங்கிகள், கடன் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்ட, 60,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வைத்திருக்கும் அதானி குழுமத்திற்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடன் கொடுக்கிறது, நாங்கள் இன்னும் கடன் கொடுக்கவில்லை, வெறும் MOU (மெமராண்டம் ஆப் அண்டர்ஸ்டாண்டிங்) என அதன் வங்கித் தலைவர் விளக்கம் சொல்கிறார், இத்தனை கோடிக் கடன் இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு, முதலில் இந்தக் கடன் உடன்படிக்கைத் தேவைதானா? அரசியல்வாதிகள் தேர்தலில் சுற்றும் பூ போதாதென்று இப்போது பொதுவுடைமை வங்கிகளும் பூ மாலையையே மக்களின் காதுகளில் சுற்றுகிறது. ஏற்கனவே மல்லையா குழுமத்திற்குக் கடன் மேல் கடன் கொடுத்து மொத்தமாய் வாங்கிய நாமம் போதாதா?

 மக்களின் வரிப் பணத்தை வாரி இறைத்து, வரவே வராத இதுபோன்ற கொள்ளைக் கடன்களுக்கு இனி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் வருமானத்தையும், அவர்களின் குடும்பத்தின் சொத்துக்களையும் பறிமுதல் செய்தால் என்ன?  

ஐயா சாமி தர்மம் பண்ணுங்க, இல்லாதப்பட்ட கோடிஸ்வர முதலாளிகளுக்கு மட்டும்!

Wednesday, 19 November 2014

வெறும் கதை!

 
ஓர் ஊரில் நிறைய எலிகளின் தொல்லை, எதையும் அந்த எலிகள் விட்டு வைக்கவில்லையாம், ஒன்று மாற்றி ஒன்று என்று உண்டு கொழுத்து, பின் அவைகளுக்கிடையே யார் தலைவர் என்ற போட்டி வந்து, அவைகள் தனித் தனிக் குழுக்களாகப் பிரிந்துக் கொண்டதாம்.
 பிரிந்து கொண்ட நாட்டாமைகள் அவர்களுக்குள் தேர்தல் வைத்து, மாற்றி மாற்றிக் கொட்டமடித்து ஊரையே காலி செய்தனவாம். இந்த எலிகளின் அட்டகாசத்தைப் பொறுக்க முடியாத மக்கள், ஒரு பூனையை வளர்த்தனராம். அத்தனை எலிகளின் கொட்டத்தை அடக்கப் பூனைக்கு ஒரு ராஜாங்கத்தை ஏற்படுத்திக் கொடுத்து, அதை நன்றாகக் கவனித்துக் கொண்டனராம்.

 பூனைக்கும் தனக்குக் கிடைத்த மரியாதையில் மிகவும் உற்சாகமாகிவிட்டதாம். தினம் ஓர் எலியைப் பிடித்து, பூனை உண்டு கொழித்து வந்ததாம், எலிகள் போதாமல் பூனை, ஊர் மக்களின் சமையலறையிலும் புகுந்து உண்டு கொழுத்ததாம், பூனையும் தனக்குக் கூட்டாளிகளை ஏற்படுத்திக் கொண்டதாம், எலிகளுக்காகப் பூனை வளர்த்த மக்கள், பூனையின் வளர்ச்சியில் செய்வதறியாமல் திகைத்தனராம்.

 எலிகள் கூடிக் கூடி ஆலோசித்து, பூனைக்கு எதிராகக் கண்டனத்   தீர்மானங்கள் எழுப்பினவாம், மாற்றாக, பூனையுடன் கூட்டுத் திருட்டுத் தீர்மானம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தவனாம். ஆனால் அந்தக் கண்டனத் தீர்மானத்தை யாருமே பூனையிடம் கொடுக்க முடியவில்லையாம், கூட்டுத் திருட்டுத் தீர்மானத்தையும் பூனையின் காதுகளுக்குக் கொண்டு செல்ல முடியவில்லையாம், பூனையின் ஒளிரும் விழியில் எலிகளுக்குக் கிலி பிடித்துக் கொண்டதாம்.

 பிரிந்து இருந்த எலிகளின் குழுக்களுக்குள் யார் பூனையிடம் கண்டனத்தைக் கொண்டு செல்வது, ஒன்றுமே செய்வதறியாமல் எலிகள் அகப்பட்ட சந்தர்ப்பத்தில் தங்கள் கொள்ளையைத் தொடர, பூனையும் திருட்டையும், அவ்வப்போது எலிகளின் வேட்டையையும் தொடர்ந்ததாம். மக்களும் பூனைக்கும் எலிகளுக்கும் மாறி மாறிப் பயந்து, ஒரு கட்டத்தில் அவர்களும் அந்த வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு விட்டனராம்.....

 சரி இந்தித் திணிப்பு வந்தபோது விழுந்துப் புரண்டுப் போராடியத் திராவிடக் கட்சிகள் எல்லாம் எங்கே, இந்த ஊழல் வழக்கெல்லாம் என்ன ஆகும்? அப்புறம் பை தி வே, அடுத்தத் தேர்தல் எப்போன்னு சொல்லமுடியுமா மகாஜனங்களே!

 பி.கு: மேல நீங்க படிச்ச என் பாட்டி சொன்னக் கதைக்கும் நான் கேட்டக்  கேள்விகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை யுவர் ஆனர்

Friday, 7 November 2014

கான்ஸ்டபிள் கந்தசாமி!

சிக்னல் போட்டுப் பார்த்தாச்சு,
 நடுவில் சிமெண்ட் போட்டு
 தடுப்பும் கட்டியாச்சு,
 சாலைக்கு நடுவே
 வெள்ளைக் கலரிலே
 அளந்து அளந்துக் கோடும் போட்டாச்சு
 பறக்குறதைப் பாய்ஞ்சுப் புடிச்சு
 தண்டமும் போட்டாச்சு,
 குறைஞ்சது "எ.பி.சி.டி" தெரிஞ்சிருக்கும்ங்ற
 நம்பிக்கையில "யு" போட்டு வெச்சாச்சு,
 இருந்தும் சிக்னலைப் பார்க்காம
கழைக்கூத்தாடிக் கணக்கா, தடுப்பில் பாய்ஞ்சு
கோட்டுக்கு நடுவே ஒட்டி
"யு" போட்டுப் போற இடத்தில, புதுசா
 ஒரு "வி" போட்டு "வே" (வழி) கண்டுபிடிச்சு
 பொண்டாட்டிக் கணக்கா, போனை
 எப்பவும் காதுலேயே வெச்சுக்கிட்டு
 எப்படிப் பார்த்தாலும் இருக்குற
 முகராசி மாறப்போறதில்லைனாலும்,
 கண்ணாடியிலே தன் முகத்தையே ரசிச்சுக்கிட்டு
 தான் சாவறதுக்கும் அடுத்தவன சாவடிக்கறதுக்கும்
 பாய்ஞ்சுப் போற பக்கிகளையும்,
 ஹெல்மெட் இல்லாமப் பறந்துபோற
 மண்டையர்களையும் - இந்த
 டிராபிக் கான்ஸ்டபிள் கந்தசாமி
 என்னதான் செய்வாரு சொல்லுங்க?!
 

Monday, 3 November 2014

மனம்!

 மறைக்க முடியாத கண்ணாடி
மறைத்துவைக்கும் கிணறு
சிலவேளைகளில்
கண்டறிய முடியாத
புதையல் - இந்த
பொல்லாத மனம்! 

உனதான உன்னுடையது

 எனது என்னுடையது என்று
எதை எதையோ நீ போற்றிப்பேச
அருகில் இருக்கும்
உனதான உன்னுடையது
கொஞ்சம் விலகியே நிற்கிறது
மனம்!

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...