Thursday, 29 September 2016

நட்பு


எதற்கோ
அழுதழுது வீங்கிய
இமைகளைக் கழுவி
பூச்சிக் கடித்ததென்றும்
உறக்கமின்மையென்றும்
ஒவ்வாமையென்றும்
சொல்லக் காரணங்களுண்டு
ஏனையோரிடம்

விழிவட்ட வளைவிலிடும்
மையை
இமைகளின் மேலோரத்தில்
மெலிதாய் வரைந்து
மிகக் கவனமாய்
செய்யப்பட்ட
ஒப்பனைகளுடனும்
ஓட்ட வைத்த புன்னகையுடனும்
எப்படிச் சென்றாலும்
படித்து விடுகிறாள்
உயிர்த்தோழி
விழியினூடே ஆழ்மனதை

"அழுதியா என்ன?"
அவளின்
ஒற்றைக் கேள்வியில்
உதிர்ந்துவிடுகிறது 
ஒப்பனைகள்!!

Wednesday, 27 July 2016

நமக்கென்ன என்றால் நாளை என்பதே யாருக்கும் இல்லை!

தொலைக்காட்சியில் பழையப் படங்களை பார்க்கும் போது பெரும்பாலான படங்களில், கதாநாயகன் வில்லனை காவல்துறையில் ஒப்படைப்பதாக, அல்லது இறுதியில் காவல்துறை வந்து கைது செய்வதாகவே இருந்திருக்கிறது!

பின் ஏதோ ஒரு காலகட்டத்தில் வில்லனைக் கொன்றுவிட்டு சிறைக்குச் செல்பவன் கதாநாயகன் என்றாகி, தற்காலத்தில் கத்தியையும் தூப்பாக்கியையும் தூக்கி எளிதாய் யாரையும் கொல்பவனும், காவல்துறையின் அவசியமே இன்றி, அச்சமும் இன்றி யாரையும் கொன்று விட்டு, பிண்ணனி இசை முழங்க வீறு நடை போடுபவனும்தான் கதாநாயகன் என்றும் மாறியிருக்கிறது! 

திரைக்கதை உண்மையை ஒட்டியே எடுக்கப்படுகின்றன என்றால், காவல்துறை வெட்கப்பட வேண்டும்!

திரை என்பது கற்பனைக் கதைகளே என்றால், சுதந்திரத்தில் பங்காற்றிய ஒரு கலையை இத்தகைய இழிந்த மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் ஒரு கலையாக மாற்றியதற்கு திரைத்துறையினர் வெட்கப்பட வேண்டும்!

இது எதுவுமே உண்மையில்லை, தனி மனித வக்கிரத்தின் வடிகாலாக இருக்கும் கட்டற்ற காட்சியமைப்புகளை, வருங்கால சந்ததிகளின் மனநிலையை சிதைக்கும் படங்களை, காட்சிகளை நாம் வரவேற்று ரசித்துப் பார்க்கிறோம் என்றால், அதற்காக நாமும் வெட்கப்பட வேண்டும்!

கவர்ச்சியான விளம்பரங்களில் வரும் பொருட்களையெல்லாம், பகட்டுக்காவும், வேலை செய்ய சோம்பல் பட்டும், குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுத்து பின் மருத்துவர்களுக்கு செலவழிக்கும் பெற்றோர்களைப் போல, ஒவ்வொன்றிலும் குற்றவாளிகளை மிகைப்படுத்தி கதாநாயகன் தோற்றம் தரும் மீடியாக்களும், எழுத்தாளர்களும், தினந்தோறும் கட்டற்ற வன்முறைகளை தடுக்க முடியாமல் திணறும் காவல்துறையும், பணம் பதவி என்ற போதையில் இதையெல்லாம் ஆதரிக்கும் அரசியல்வாதிகளும், ஒரு வித மந்தமான நிலையில் இருக்கும் சமூகமும், வெளியில் எரியும் நெருப்பு வீட்டுக்குள் எரியும் போது பதட்டம் கொள்கிறது, அப்போது நீதியில்லை நியாயமில்லை என்று வேதனைப்படுகிறது!

சமூகம் என்பது சாக்கடையானால் சந்தனத்திலும் நாற்றமே எடுக்கும்!
நமக்கென்ன நமக்கென்ன என்றால் நாளை என்பதே யாருக்கும் இல்லை!

பெண்ணாய் நீ பிறக்கும்வரை!

உனக்கு சிறந்தவளாய்
என்னை மாற்றுகிறாய்
உன் சிறுமைகளை மட்டும்
உன் உரிமையென அடைகாக்கிறாய்
உன் கருத்துக்கினியவளாய்
என்னை செதுக்குகிறாய்
என் கருத்துகளை மட்டும்
கருக்கலைப்புச் செய்கிறாய்
உன் சுவைக்கு
என்னை விருந்தாக்குகிறாய்
என் உணர்வுகளை மட்டும்
சிதைத்து நகர்கிறாய்
உன் விருப்பமென நேசிக்கிறாய்
என் விருப்பங்களை மட்டும்
அலைகழித்து அழிக்கிறாய்
உன் சிரிப்பில்
என்னை மகிழச் சொல்கிறாய்
என் கண்ணீரை மட்டும்
நடிப்பென்று கேலிச் செய்கிறாய்
உன் நேரத்துக்கு
என்னை கடிகாரமாக்குகிறாய்
என் வாழ்க்கைநொடிகளை
கவனிக்க மறுக்கிறாய்
உனக்கு சிறந்தவளாய்
என்னை மாற்றுகிறாய்
உன் சிறுமைகளை மட்டும்
உன் உரிமையென
அடைகாக்கிறாய்
உன்னுடைய சுயத்தை
நீ எழுப்புவது
என்னுடைய கல்லறையில்
என்பதை மட்டும்
எப்போதும் நீ உணரமாட்டாய்
ஒரு பெண்ணாய்
நீ பிறக்கும்வரை!

Monday, 6 June 2016

புன்னகை தேசம்!


அத்தனை எளிதில்
கடக்க முடிவதில்லை
உன் வார்த்தைகளை
அத்தனை எளிதில்
ஏற்றுக் கொள்ளமுடிவதில்லை
கணத்துக்குக் கணம் மாறும்
உன் நடத்தை விதிகளை
என் சுயத்தை அசைத்துப் பார்க்கும்
உன் சுயநலக் கூற்றுகளில்
சிதைந்தாலும்
சேகரித்துத் தருகிறேன்
மாறாத என் புன்னகையை
உனக்கு ஒரு பரிசாக!
நீயேனும்
நீயாகவே வாழ்ந்துவிட்டுப் போ
என் காதலே!

Wednesday, 1 June 2016

மனதறியும் நேசம்!

சோர்ந்த விழி பார்த்து
பசியறிவதற்கும்
கையின் குளிர் உணர்ந்து
அரவணைப்பதற்கும்
நலமே என்று ஒலிக்கும்
குரலில்
பொய்யுணர்வதற்கும்
தேவையொரு
மனதறியும் நேசம்!

கீச்சுக்கள்!

மோடி இரண்டு வருஷத்தில் அறிமுகப்படுத்திய திட்டங்கள்னு ஒரு ஆதரவாளர் ஒரு பட்டியல் போட்டிருக்கார், என்னன்னு படிச்சுப் பார்த்தா, கீரின் இந்தியா, டிஜிட்டல் இந்தியான்னு அறிக்கை அளவில் இருக்கிற பல திட்டங்களின் பட்டியலோடு, தபால்துறையின் கிஸான் விகாஸ் பத்திரம், ப்ராவிடன்ட் பண்ட், ஆன்லைனில் இருக்கும் பிறப்பு சான்றிதழ் வசதின்னு பல வருஷமா இருக்குற எல்லாத்தையும் பட்டியல் போட்டு இருக்கு புள்ள, இன்னும் படிச்சா இந்தியாவுக்கு சுதந்திரமே இரண்டு வருஷத்தில்தான் கிடைச்சதுன்னு சொல்வாங்கப் போலன்னு ஓடியே வந்துட்டேன்! 😳😳😳
இதைத்தான் கேக்கறவன் கேனையனா இருந்தா, கேப்பையிலே நெய் வடிதுன்னு சொல்வாங்கன்னு சொன்னாங்க பெரியவங்க!


சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி அவர் காசுல அவர் கடைக்காக ஒரு விளம்பரத்தில் தான் நடிச்சாரு, இங்கே இருக்குற ஆளுங்க இலவசமா தினமும் விளம்பரம் பண்றாங்க! முன்னாடி கேக்குக்கு விளம்பரம், இப்போ துணிக்கடைக்கு! :-p :-p :-p


ஒரு பொருளை நாம் காசு கொடுத்து வாங்கித் தர்மம் கொடுத்தால் அது தானம், பரிசாய்க் கொடுத்தால் அன்பளிப்பு, மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற, கல்வி, மருத்துவம், பாதுகாப்பு, சுகாதாரம், வளர்ச்சி என்று நாட்டை வழிநடத்தவும், ஊக்கத்தொகை, உதவித்தொகை என்று அளித்து வறுமையை ஒழிக்கவும், இந்த வேலைகளைச் செய்யும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மாத ஊதியம் தரவுமென, இந்தச் செலவீனங்களுக்காகத் தரப்படுவதுதான் வரிகள், இவைகளைத் தருவது ஒவ்வொரு குடிமகனும், குடிக்கின்றன மகன்களும் கூட!
இந்த வரிப்பணத்தில் இருந்து தரப்படுவதை "இலவசம்" "இலவசம்" என்று இந்தக் கட்சிகள் கூவுவதை நிறுத்த வேண்டும், மக்கள் வரிகளைக் கட்டி உங்களிடம் இலவசங்களைக் கேட்கவில்லை, எதற்காக உங்களுக்கு ஓட்டுபோட்டு ஆட்சியில் அமர்த்துகிறார்களோ, அந்த மக்கள் நலப் பணிகளை நீங்கள் ஊழலின்றி ஒழுங்காய்ச் செய்தாலே, இங்கே எந்தப் பாமரனுக்கும் உங்களின் எந்தப் பிச்சையும் தேவைப்படாது, எந்த மல்லையாவும் கோடிக்கணக்கில் சுருட்டிக் கொண்டு ஓடவும் மாட்டார்கள்!
‪#‎ஓட்டரசியல்‬
‪#‎இலவச_அரசியல்‬


பயணத்தில், வானொலியில் தேர்தல் விளம்பரங்கள், அதில், ஒரு குரல்,
"அப்போ திமுக இதைச் செய்தது, இப்போ அதிமுகவும் அதையே செய்தது, அவர்கள் செய்தது அந்த ஊழல்கள், இவர்கள் செய்வது இந்த ஊழல்கள், அது குடும்பக் கட்சி, இது ஸ்டிக்கர் கட்சி, ஹ ஹ ஹ, மக்களே இவங்களை நம்பி ஒட்டுப்போடாதீங்க", என்று தொடர்ந்தபோது, "அடடா யாரோ இது எவ்வளவு கருத்தா பேசுறாங்க, நிச்சயமா இது மக்கள் நலக் கூட்டணியா இருக்குமோ" அப்படின்னு நினைச்சு முடிக்கறதுக்குள்ள, "ஆகையால் மக்களே தாமரைக்கு ஓட்டுப்போடுங்க" அப்படின்னு முடிச்சாங்க, பா.ஜ.க!
அண்ணே, மோடி அண்ணே, அக்கா தாமரை அக்கா, இவங்களோட ஊழல்களைப் புட்டு புட்டு வைக்கிறீங்க, பேசுறதுக்கெல்லாம் மாணவர்களை உள்ளே புடிச்சுப் போடுறீங்க, இப்போ??? என்னமோ போங்க, பாரத் மாதா கி ஜே
 

May 7th 2016



இன்று விடுமுறை தினம் எனக்கு, குழந்தைகளுக்கும் விடுமுறை என்பதால், நேற்று வேலைகள் முடித்து, படித்துவிட்டு, மகளுக்கு ஏழாவது பிறந்த நாள் வாழ்த்து கூறிவிட்டு உறங்கச் சென்றபோது, மணி இரண்டை தாண்டிவிட்டது! விடியலில் ஐந்து மணிக்கே எழுப்பினாள், "அம்மாவை தூங்கவிடுமா" என்று வேண்டுகோள் விடுத்து, கணவர் உறக்கம் தொடர, அவள் என்னை விடுவதாயில்லை. எழுந்து வந்தவுடன், இன்று என்ன சமைக்கலாம் என்ற யோசனையுடன், அதிகாலையில் அவளுடன் சேர்ந்து மிக்கி மௌஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். "ஏம்மா பவி, இன்னைக்கு லீவு தானே, கொஞ்ச நேரம் தூங்கவிடமாட்டியா?" "ம்ம் ஸ்கூல் இருக்கும்போது எங்களைத் தூங்கவிடாம எழுப்பி விடுறே இல்லே, நீ எழுப்பினா நாங்க எழுந்திருக்கிற மாதிரி, நீயும் எழுந்திருக்கணும் (!?)" (அம்மாவை மட்டும் எழுப்பறதுக்குத் தீயா வேலை செய்யுது புள்ளே) :-(

May 7th 2016 

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...