Friday, 24 March 2017

சிக்னல்கவிதைகள்!

மக்களின் ஆட்சியாளர்கள்
சாலையில் விரைகிறார்கள்
பயணப்படும் மொத்த
மக்கள் தொகையும்
ஸ்தம்பிக்கிறது
நெரிசலில்!
************************************

தலைக்கவசமில்லை
ஓட்டுபவன் நிதானத்திலில்லை
கைபேசியைப் பிரிய முடியவில்லை
பாதுகாப்புப் பட்டையணியவில்லை
அவரவர் வீட்டு
தேவதைகளையும்
தேவன்களையும்
அப்பன்களும்
அம்மைகளும்
இப்படித்தான்
அழைத்துச்செல்கின்றனர்
குண்டும் குழியுமான
சாலைகளில்!
வாழ்த்துப்பாக்களில்
புகழ்ந்து
உயிர்போனால்
இரங்கற்பாவில்
முடித்துவிடலாம்
சின்னஞ்சிறு உயிர்கள்
மீண்டும் ஒரு காமத்தில்
துளிர்த்துவிடும்தானே?
******************************************
நாய்க்கும் நாய்க்கும்
சண்டை சாலையோரத்தில்
மனிதனுக்கும் மனிதனுக்கும்
சண்டை நட்டநடு ரோட்டில்
******************************************
என்னவோ தெரியவில்லை
வாலில் பின்புறத்தை
மறைத்துக்கொண்டு
சாலை கடந்து ஓடியது
தெருநாய்
இந்தப்பக்கம் குடிபோதையில்
ஆடை அகன்று கிடந்தான்
பன்றி போல் ஒருவன்
*******************************************
நடைபாதைகளை
மறைத்தபடி
விதிகளைப் புறக்கணித்து
ஆள்பவர்களின்
ஆளுயர விளம்பரபதாகைகள்
சாலை விதிகளை
மதிக்கா மக்கள் கூட்டம்
வேடிக்கைப் பார்த்தபடி
நெரிசலில் கரைந்தது
************************************************
பெற்றோர் உற்றோர்
தொடங்கி
சுட்டெடுக்கும் கதிரவனும்
பார்க்காவண்ணம்
தலையில் முக்காடிட்ட
காதலியை
அதிநவீன
இருசக்கர வாகனத்தில்
கவனமாய் இருத்தி
சாலையில்
விரைந்துக்கொண்டிருந்தான்
காதலனொருவன்
பின்னேயே
குடிபோதையில்
லாரி வந்தது
தலைகளைக் குறிவைத்து!
************************************************
நெருப்பைக் கண்ட
எறும்புக் கூட்டம்போல
சாலை ஓரம் ஒதுங்கியது
மக்கள்கூட்டம்
மழைச்சாரலில்!
************************************************
நிலத்தில் மரங்கள்
அழித்து
இயற்கைத்தேடி
மலையேறிப்போனவனின்
வாகனம் மூச்சிரைத்தது
மலைகளில் மரங்கள் கொன்று
நிலத்தை நோக்கி
இறங்கிக்கொண்டிருந்தான்
மற்றுமொருவன்
************************************************
மைதானங்கள் அழிந்துபோய்
கட்டிடங்கள் ஆனது
சாலைகள் என்பது
வாகனநிறுத்தங்கள் ஆனது
நடைபாதைகளோ விஸ்தரிக்கப்பட்ட
வியாபார நிலையங்கள் ஆனது
இப்போதெல்லாம் குழந்தைகள்
தொலைக்காட்சிக்குப் பிறகு
தொலைவிலிருக்கும்
அகன்ற வானத்தை
வெறித்திருக்கிறார்கள்
************************************************
#சிக்னல்கவிதைகள்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!