Monday, 10 August 2015

#மகன் #மகள்



உடன்பிறந்தவளோடு சிணுங்கி

சண்டையிட்டாலும் அவளுக்காய்
பரிந்து பேசுவான்,
பிடிவாதம் காட்டிக்
குறும்பு செய்யும் நேரத்திலும் - யாரும்
காணா அன்னையின் கண்ணீரை
கண்டு கொள்ளுவான்,
வார்த்தைகள் இன்றிக் கேள்விகள் இன்றி
அம்மாவின் கண்ணீர்த் துடைத்து
அணைத்துக் கொள்ளுவான்,
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நேரத்திலும்
அலுவல் முடிந்து அருகே வரும் அம்மா
சாப்பிட்டாளா என்று உறுதி செய்வான்,
அவள் உண்ணும் வரை உறக்கம் தவிர்ப்பான்,
பேசித் திரியும் பட்டாம்பூச்சியாய் மகள்கள்
வாழ்க்கையின் சோலையில் மகரந்தம்
தூவும் தேவதைகள் என்றால்,
அமைதியாய் அரவணைத்துக் கொள்ளும்
மகன்கள் கடவுளர்கள் அன்றோ!

#மகன் #மகள்

கீச்சுக்கள்!

இறக்கும்போது ஊற்றும் பாலைக்காட்டிலும்
இருக்கும்போதே தாகம் தீர்க்கும் நீர் சிறந்தது,
தேவைப்படும்போது தரப்படாத அல்லது பெறப்படாத எதுவும்
போற்றப்படுவது இல்லை !
— feeling thoughtful.
எந்த ஒரு முயற்சியும் அடியோடு குலைந்து போகிறது சில மனிதர்களாலும் அவர்தம் வார்த்தைகளாலும்
இருப்பினும் பூவியீர்ப்பின் விசையைத் தாண்டியே சாத்தியப்படும் நிலவிற்கான பயணம்!
The destiny can be moon only when you break the earth's gravitational barriers amidst negative people and words!


--------------------------------------------------------------------------------------
நித்திரையில் மூழ்கும் நேரம்
சித்திரையை வரவேற்க
வந்தது கோடை மழை,
பெரும் கொடையாய் வாசலில்!
மழையெனும் கவிதையுடன்
மலரட்டும் புத்தாண்டு அனைவருக்கும்!
------------------------------------------------------------------------------------------------------------------


தன் நிலத்தில் உழுது ஊருக்கு உணவு தரும் சிறு விவசாய முதலாளியிடம் இருந்து நிலத்தைப் பிடுங்கி, நாடு நாடாய் சென்று நிலம் இருக்கிறது, வளம் இருக்கிறது, குப்பைக் கொட்ட இந்திய நாடு இருக்கிறது, நிலத்தைப் பிடுங்கி நீரை உறிஞ்சி, மொழியை நசுக்கி, மதத்தை வளர்த்து, தண்ணீருக்காக அடித்துக் கொண்டு, ஏற்கனவே பராரியாய் ஆகிக்கொண்டிருக்கும் மலிவானக் கூலிகள் இருக்கின்றனர் என்று கொஞ்சம் கொஞ்சமாய் நாட்டைக் குத்தகைக்கு விட்டுக் கொண்டிருக்கும் அரசை விட்டு விட்டு,
சாதி மறுத்து, கடவுள் மறுத்து, சம்பிரதாயங்கள் மறுத்து, பெண்களுக்குக் குரல் கொடுத்து என்று முதிய வயதிலும் மூத்திரப் பையைச் சுமந்து கொண்டு சேவை செய்த ஒரு பெரியவரின் படத்தில் மூத்திரம் அடிக்கத்தான் உங்களுக்குத் துப்பு இருக்கிறது..........
சேவை செய்த ஈ.வே.ரா என்ற பெரியாரை விட, சேவை செய்து கொண்டிருக்கும் எண்ணற்ற பெரியவர்களை விட, உங்களுக்குப் பெண்ணையும் பொன்னையும் பறிக்கும் சாமியார்களையும், தொட்டால் தீட்டு என்று ஒதுங்கிச் செல்லும் பெரியவாளையும் தானே பிடிக்கும் அப்ரெண்டீஸ்களா!
— feeling annoyed.
----------------------------------------------------------------------------------------------------------
 
ஐயமின்றிக் கொள்ளும் ஓர் அதித நம்பிக்கையே காதல்!
------------------------------------------------------------------------------------------------------------
மறுக்க முடியாத ஆதாரத்துடன் கூடிய உண்மையென்று காலமும் சூழ்நிலையும் எத்தனை முறை உணர்த்தினாலும், சில உண்மைகள் பொய்யாய் இருக்க வேண்டுமென விரும்புகிறது மனம்!
‪#‎உண்மைகள்‬ உவப்பாய் இருப்பதில்லை பல நேரங்களில்!
-----------------------------------------------------------------------------------------------------------
தெரியாதென்பது தொடக்கம்
முயற்சிக்க நினைப்பது ஆக்கம்
தொடங்கி முயல்வது முன்னேற்றம்
தோல்வியிலும் துவளாமல் இருப்பது ஊக்கம்
முடியாது என்று முடங்கிப் போவதே (முடிவு) முற்றும்!
-----------------------------------------------------------------------------------------------------------------
உலகும் சுற்றும் வாலிபன், அதே (கேமரா) கண்கள்! - ‪#‎பிரதமர்‬
ஊர் ஊரா போய் காமெராவை மட்டும் கரெக்டா கண்டுபிடிச்சிடுறார்! 
------------------------------------------------------------------------------------------------------------
பிரதமரின் அடுத்த நேர்காணலை விரைவில் எடுக்கப் போவது பேஷன் டிவி தான்...

‪#‎பிரபலம்‬
-----------------------------------------------------------------------------------------------------------------------

தருவதற்கும், மறுப்பதற்கும் உள்ள மனதின் இடைவெளியே, ஒன்றை செய்வதற்கும் , சோம்பி, சோர்ந்து செய்யாமல் தவிர்ப்பதற்கும் இடையேயும் உள்ளது!
எல்லோருக்கும் இருப்பது 24 மணி நேரம்தான், மனங்கள் மட்டுமே குரங்கின் வகைகள்
----------------------------------------------------------------------------------------------------------------
எளிதாய் கிடைத்துவிடும் எதுவும் மலிவாய்த் தெரிகிறது!
-----------------------------------------------------------------------------------------------------------------
 
 


 

யோகப் பயிற்சி


யோகப் பயிற்சி நாளும் செய்தால் உங்கள் உடல் வலிமை பெரும், நிறைய யோகப் பயிற்சிகள் இருந்தாலும், அதில் ஓர் இரண்டை மட்டும் இங்கே காண்போம், உடலுக்கு மட்டுமல்ல இங்கே குறிப்பிட்டுள்ள பயிற்சிகள் தொடரும்போது உங்கள் வாழ்க்கையும் வளம் பெரும், மேற்கொண்டு படியுங்கள், பின்குறிப்பை கவனமாய்ப் படியுங்கள்
புஜங்காசனா
------------------------
தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து, சற்றே தோள்பட்டையை உயர்த்தி, கரங்களைத் தரையில் அழுத்தி, தலையை நிமிர்த்திப் பாருங்கள்
இந்தப் பயிற்சியில் உங்கள் வயிற்றுப் பகுதி வலிமையாகும், உங்கள் முதுகும் தோள்பட்டையும் வலிமையாகும், நெஞ்சுப்பகுதி விரியும், ரத்த ஓட்டம் சீராகும்
இதை ஆங்கிலத்தில் கோப்ரா போஸ் என்பார்கள், இதைப்பற்றிக் கோப்ரா என்ன நினைக்கிறது என்பது இங்கு முக்கியமில்லை
நீங்கள் அதிகம் சிந்திக்கும்முன் அடுத்த யோக முறையைப் பார்ப்போம்
உட்டனாசனா மற்றும் அர்த்த உட்டனாசனா...
------------------------------------------------------------------------------
நேரே நின்று, வயிற்றை உள்ளிழுத்து (நீங்கள் போட்டோவுக்குப் போஸ் கொடுக்கும்போது சட்டென்று தொப்பைக்கு ஒன் ஸ்டே பேக் என்று செய்வீர்களே....ம்ம் ....அதே அதேதான்) அப்படியே முன்னே குனியுங்கள், முழுதாய் முழங் காலை மடிக்காமல், எவ்வளவு குனிய முடியுமோ அவ்வளவு குனிந்து, முட்டிவரை, கணுக்கால் வரை, அல்லது பாதம் வரை வந்து தரைதொடலாம்.....
இதுவும் உங்கள் முதுகு வயிற்றுப் பகுதியை உறுதிப் படுத்தும், உங்கள் உடலின் வளையும் தன்மையை அதிகரிக்கும்.
உங்களுக்குக் கழுத்து வலி இருந்தால் இந்த இரண்டு பயிற்சிகளைச் செய்யும்போது கவனம் தேவை.....இந்தப் பயிற்சியைக் குழந்தைகள் பெற்றோரிடம் செய்தால் அவர்களுக்கு நிறைய ஆசிகளும் அன்பும் கிடைக்கும், பூரிப்பில் பெற்றோர்களிடம் இருந்து அன்பில் தோய்ந்தக் கவிதைகளும், நிலைத்தகவல்களும் முகபுத்தகத்திற்குக் கிடைக்கும், கணவன்மார்கள் மனைவியிடம் செய்தால், காலமெல்லாம் காதல் வாழ்க என்று உங்கள் மைண்ட் வாய்சில் ஒரு ரீவைண்ட் ராகம் ஓடிக்கொண்டே இருக்கும்.....
பின்குறிப்பு:
---------------------
வளம் என்பது எத்தனை தூரம் குனிந்தால் இன்னோவா கிடைக்கும், ஆசிர்வதிக்கப்பட்ட பதவிக் கிடைக்கும் என்றெல்லாம் நீங்கள் நினைத்திருந்தால் அதற்குக் கம்பெனிப் பொறுப்பேற்காது, இந்த வயதிலும் விடாது யோகப் பயிற்சியைச் செய்கின்ற இவர்களின் ஆர்வம் உங்களுக்கு ஊக்கமாய் அமையவே இந்தப் படங்கள் இணையத்திலிருந்து
— feeling crazy.

வாழ்க்கை

பிறப்பும் நம் விருப்பத்திலில்லை
இறப்பையும் நாம் விரும்பவதில்லை
இடைப்பட்ட நாட்களும் கூட
நம் வசத்திலில்லை,
எனினும்
அன்பை விதைத்து,
எதிர்ப்பார்ப்பு துறந்து,
கடக்கும் வாழ்க்கையில்
எப்போதும் ஏமாற்றமில்லை!

Thursday, 6 August 2015

காதல் போயின் வாழ்தல்!




நண்பன் ஒருவன், ஒரு பெண் கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் நேரத்தில், அவளின் காதலனால் கொல்லப்பட்ட வீடியோ பதிவை அனுப்பி வைக்க, தெரியாமல் அதைப் பார்த்துத் தொலைத்து, மனம் கசந்துபோனது.

 காதல் என்றில்லாமல், பல திருமண உறவுகளும் கூட இந்த மனநிலையைத்தான் கொண்டிருக்கிறது, தன்னுடன் வாழ வராத கணவனைக் குடும்பத்துடன் எரித்துக் கொன்ற பெண், தன்னுடன் வாழ வராத மனைவியைக் குழந்தையுடன் கொலை செய்த ஆண், காதலிக்கும் மகளைக் கொலை செய்த தந்தை, காதலுக்காகப் பெற்றோரை கொலை செய்த பிள்ளைகள் என்று செய்திகள் வந்த வண்ணம்தான் உள்ளன

 இந்தக் காதல் என்றால் என்ன? ஒருவரை பிடித்திருத்தல் என்பது என்ன? அவர் நலமுடன் வாழ நினைப்பது, அதுதானே காதல், அன்பு எல்லாம்?

 இந்தப் பிள்ளைகள் எல்லாம் ஏன் தோல்வியில் துவண்டு போகிறார்கள்? ஒருவர் ஏமாற்றினால், பிடிக்கவில்லை என்று அறிந்தால் ஏன் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள், ஏன் ஓர் உயிரை சிதைக்கும் அளவுக்குத் துணிகிறார்கள்? எனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற மனநிலை.

இங்கே காதலும் உறவுகளும் மனதுடன் சம்பந்தப்பட்டது, மனதில் ஏற்பட்ட பிரிவை, சரி செய்ய முடியா விட்டால், அதை ஏற்றுக் கொண்டு சரி செய்வதோ பிரிவதோ குடும்பச் சூழ்நிலையைப் பொறுத்து அமைய வேண்டும்,

 இந்திய திருமணப் பந்தங்கள், குழந்தைகள் என்ற ஆணி வேரினால் கட்டப்பட்டிருக்கிறது, கருத்து வேறுபாடு ஏற்படினும், மனமொத்து வாழும் தம்பதிகளை விட, குழந்தைகளின் வருங்காலம் கருதிச் சேர்ந்து வாழ்பவர்களே அதிகம், குழந்தைகள் ஒரு காரணம் என்றால், சமூகம், பணம், செல்வாக்கு,பெற்றோர், உறவினர்கள், மிரட்டல், மரியாதை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் என்று பல காரணங்களாலும் உறவு நீடிக்கிறது ...எந்த குழந்தைகளுக்காக இந்த உறவு காக்கப்படுகிறதோ, உண்மையில் பல வேளைகளில், இப்படிச் சகித்துக்கொண்டு வேறுபாட்டுடன் வாழும் தம்பதிகளின் குழந்தைகளின் மனநலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

 தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என்று குழந்தைகள் எதையும் எளிதில் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன, ஆனால் அவர்கள் எதைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதைத்தான் நாம் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது....

 காதல் ஒரு கெட்டவார்த்தை என்ற ரீதியில் குழந்தைகளுக்குப் போதித்து விட்டு, குடும்பத்துடன் காதல் சார்ந்த திரைப்படங்களுக்கே குழந்தைகளை அழைத்துச் சென்று காண்பிப்பது, பெரியவர்களுக்கு மரியாதையைத் தர வேண்டும் என்று போதித்து விட்டு, வீட்டில் இருக்கும் பெரியவர்களைப் பெருசு , கிழவி என்ற ரீதியில் பேசுவது, உறவுகளை மதிக்க வேண்டும் என்று போதித்து விட்டு, வீட்டுத் தொலைக்காட்சியில் எல்லா உறவுகளும் சதி செய்யும் என்ற ரீதியில் மனம் சிதைக்கும் தொலைகாட்சித் தொடர்களைக் குழந்தைகளுடன் பார்ப்பது.............போதனைகளு
ம் நடத்தையும் வேறு வேறு என்றால், குழந்தைகளின் மனநலம் குற்றவாளியின் மனநலம் போல் ஆகும். விதையைப் பொறுத்தே வளர்ச்சி !

 கொலைகளுக்கான தற்கொலைக்கான காரணங்கள் பலவாக இருக்கலாம், ஆனால் இவற்றிக்கான அடிப்படைக் காரணம், எதையும் தாங்கிக் கொள்ள முடியாத மனது,

 காதல் காதல் காதல், காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்று புனையப்பட்ட நம் சமூகம். ஒருவர் ஏமாற்றப்பட்டால், ஏமாற்றியவரைக் கொல்லுதல் என்று பொருள் கொண்டதோ?

 விதைக்கும் நிலம் மலடானால், அதில் மாற்று யோசிக்கும் சமூகம், காதல் வளர்த்த மனம் ஏமாற்றபட்டால், மாற்றி மனதைத் தேற்ற ஏன் கற்றுக் கொடுக்கத் தயங்குகிறது? திருமணம் என்றாலும் கூட எதற்காகவோ சகித்துக்கொள்ளும் நிலை இருந்தாலும் , எந்தக் கட்டாயமும் இல்லாத, உள்ளார்ந்த அன்பினால் நம்பிக்கையினால் அமைந்த காதல் தோற்றுப் போகுமென்றால், ஏதோ ஒரு புறம் அந்த அன்புப் பொய்த்துப் போனதென்றுதானே அர்த்தம்? பொய்த்துப் போன ஒன்றை வலுகாட்டயமாகத் திணிப்பதால் அது மீண்டும் காதல் ஆகுமா ? மீண்டும் உறவு மலருமா?

 இருவர் காதலித்தால் தான் அது காதல், அமரக்காவியம் என்றாலும் தோற்றுப்போயின் அமைதியாய் இருக்க வேண்டும், எத்தனையோ இருக்கிறது வாழ்க்கையில், பெற்றவர்கள், அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது, குறைந்தபட்ச அன்பும் இல்லாத வறியவர்கள், பெற்றவர்கள் இல்லாத பிள்ளைகள் இருக்கிறார்கள் ...நம்மைச் சுற்றி எத்தனையோ உயிர்கள் இருக்கிறது, , ஏமாற்றத்தைச் சகித்துக்கொண்டு எத்தனையோ மனிதர்கள் வாழ்கிறார்கள், வீடில்லாமல் உணவில்லாமல் சரியான ஆடையில்லாமல் வீதியில் பிச்சைக் கேட்கும் மனிதர்களும் , குப்பையில் இருப்பதை எடுத்து கஷ்ட ஜீவனம் செய்யும் உயிர்களும் கூட வாழத்தான் நினைக்கிறார்கள், யாரையும் கொன்று, தானும் சாக விரும்பவில்லை......

 அது வேறு இது வேறு என்று நினைக்கலாம்
 உண்மைதான், உடலால் வாழ்தல் வேறு உள்ளத்தால் வாழ்தல் வேறு, உண்மையான காதல் என்றும் பிரியாது, காதலுக்குக் காரணமே இருக்கக் கூடாது, இருந்தாலும் ஒத்தக் கருத்தில்லாமல் காதலித்தாலும் ஒருவருக்கு ஒருவர் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு இருந்துவிட்டால் அதில் பிரிவு வருவதில்லை!

 அட இந்தக் காதலைச் சுற்றி என்னதான் நிகழ்கிறது?
 அதீதமாய்க் காதலிக்கும் யாரோ ஒருவர் தங்களை மாற்றிக்கொள்வதில் தான் பெரும்பாலும் காதல் வாழ்கிறது, இப்படி எதுவுமே இல்லாமல், காரணமாய் வரும் காதல் காரணம் தீர்ந்து போனதும் நீர்த்துப் போகும் அல்லது முறிந்துப் போகும்! காரணம் பணம் என்றால், பணம் இல்லாவிட்டால் காதல் மரித்துப்போகும், காரணம் காமம் என்றால், தீர்ந்ததும் இதுவும் முறிந்துப் போகும், திரைப்படம் போலவே, ஒரு பாடலில் வாழ்க்கை மாறிவிடுவது போல், திருடன் திருந்தி நல்லவன் ஆவது போல், திரையில் மயங்கி, ஒருவரை திருத்திவிடலாம் என்று காதலித்தாலும் அது முறிந்து விடும், இப்படியே பல உண்டு, யாரையும் காதலிக்க எதுவும் காரணமாய் இருக்கக் கூடாது, ஆனால் கண்மூடித்தனமான கற்பனையோ நம்பிக்கையோ காதல் ஆகாது!

 சரி இந்தக் காதல் உடைந்தால் என்ன செய்ய வேண்டும்?
 எப்படி இருந்தாலும் தீர்க்க முடியாத பிரிவு என்று வந்துவிட்டால், அது உடைந்த கண்ணடித்தான் , கண்ணாடியைச் சிதைப்பதோ இல்லை ஓட்ட வைப்பதோ இல்லை வதைப்பதோ வேண்டாத வேலை!

 இழந்ததற்கு நீதி வேண்டும் என்று நினைத்தால் அதற்கான வழிமுறைகளைத் தேட வேண்டும், உடல் தேவைக்காக ஒருவன் ஒருத்தியை ஏமாற்றினால், பணத்திற்காக ஒருத்தி ஒருவனை ஏமாற்றினால் சட்டத்தை நாட வேண்டும் (சமூகமும் பத்திரிக்கைகளும் பெண்ணைக் கீழ்த்தரமாக விமர்சிக்கும் போக்கை மாற்றிக் கொள்ளும் நிலையும் வர வேண்டும்) அதை விடுத்து ஆசிட் வீச்சும் கொலைகளும் இழந்தக் காதலை நரகக்தில் கூடச் சேர்க்காது!

 ஓர் ஆண் பெண்ணைக் காதலிக்கிறான், அப்பெண்ணை மட்டுமே திருமணம் செய்து கொள்கிறான், ஒரு பெண் ஆணைக் காதலிக்கிறாள், அவன் குடும்பத்தையே திருமணம் செய்து கொள்கிறாள்,அவனுக்காகத் தன்னை மாற்றிக் கொள்கிறாள், முன்னதில் ஆண் கொடுத்து வைத்தவன், பின்னதில் பெண் நிர்ப்பந்திக்கபட்டவள், பெண்ணுக்காக ஆண் மாறினால் அந்த ஆண் அவளை அதீதமாய்க் காதலிக்கிறான் என்று அறிக, ஆணும் பெண்ணும் பரஸ்பரம் புரிந்துக்கொண்டு அவரவர் சுயத்தை இழக்காமல், காலத்தின் சூழலின் பொருட்டு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்கிறார்கள் என்றால் அங்கே காதல் கடைசி வரை வாழ்கிறது தெரிந்துக்கொள், என்று காதலைப் பற்றி என் தந்தை எடுத்துக் கூறியது நினைவுக்கு வருகிறது , எப்படி இருந்தாலும் வாழ்வதுதானே காதல்?

 சரியான புரிதலில் சரியான மனப்பக்குவத்தில் இருக்கும் பருவத்தில் வரும் காதலே நீடித்து நிற்கும், அடுத்தவரின் தயவில் வாழ்க்கையை நடத்தும் நிலையில், கல்வியில் கருத்தைப் பதிக்க வேண்டிய வயதில் வரும் காதல் தேவையில்லாதது, அப்படியே வரினும் , சுயமாய் நிற்கும் வரை, காதலாய் அது நீடித்திருக்குமானால் பெற்றவர்கள் சரியான வழிக்காட்டி ஆதரிக்கலாம்.

 காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் பிறகு கொல்லுதல், ஆசிட் வீசுதல், வன்கொடுமை செய்தல், இகழ்தல் என்று இருக்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது, காதல் என்றால் அன்பு செய்தல் மட்டுமே, இந்த உண்மையான காதலைத் தெரிந்து கொள்ள நீங்கள் திரைப்படத்தை, புத்தகத்தை, அல்லது நாடகத்தை என்று எதையும் காண வேண்டாம், முதியோர் இல்லத்தைச் சென்று பாருங்கள், பெற்று வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகள், வேண்டாத ஒரு பொருளைப்போல் பெற்றவர்களை ஒத்துக்கி வைத்தாலும், “எங்கே இருந்தாலும் எம்புள்ளைங்க நல்லா இருக்கணும்” என்று சொல்லும் அந்தக் காதலில் காதலைக் கற்றுக்கொள்ளாமல் நீங்கள் வேறு எதில் காதலைக் கற்றுக்கொள்வீர்கள்?

 பெற்று வளர்த்து ஆளாக்கியப் பிறகு, இறுதிக் காலத்தில் நீங்கள் ஒதுக்கி வைக்கும்போது அவர்களுக்கு வராத அந்தக் கோபம், யாரோ ஒருவர் பெற்று ஆளாக்கிய பெண்ணிடம், சிறிதுகாலமே பழகி, பிறகு அவள் ஏமாற்றிவிட்டால் என்று கொல்வதற்கும், உங்களை இத்தனை நாள் ஆளாக்கிய பெற்றவர்களின் உணர்வுகளைக் கொஞ்சம் கூடப் புரிந்துக்கொள்ளாமல், சிறிதுக் காலமே பழகி உங்களை ஏமாற்றிய ஒருவருக்காக, உங்களை நீங்களே மாய்த்துக் கொள்வதற்கும் பெயர், காதலா?

 காதல் என்பது தாய்மை உணர்வு கொண்டு இருக்க வேண்டும், தந்தையின் அரவணைப்பு இருக்க வேண்டும், எல்லா உறவுகளின் உணர்வுகளின் சங்கமமாய் இருக்க வேண்டும், காதல் என்பது வாழ்தல், வாழ்தலுக்குக் காதல் அவசியம், காதல் போயினும் வாழ்தல் அவசியம்!! 
 
http://www.pratilipi.com/read?id=4946718139351040

Tuesday, 4 August 2015

மாமழை

மழையில் நனைந்து
சன்னலோரம் ஒடுங்கும்
ஒரு பூனையாய்
காற்றில் சிதறிக்கிடக்கும்
குல்மொஹர் மரத்தின் பூக்களாய்
பாதையில் உதிர்ந்து நிறைந்து
மிதிபடும் இலைகளாய்
வெடித்த வெறுப்பில்
துவண்டுப் போய் இருக்கிறது உயிர்
எதையுமே கரைக்கவில்லை
ஆழிக்காற்றுடன் பெய்யும் இம்மழை ,
மாறாய் என்னுடனேயே கரைகிறது
இத்துயரத்தின் அந்திமப்பொழுதில் 
உற்ற ஒரு நண்பனைப்போல்,
இந்த மாமழை!

Monday, 3 August 2015

விடிந்ததும் பார்க்கலாம்!

கடைக்கோடித் தமிழனுக்கும் "தண்ணிக்" கொடுக்கும் மாநிலம்
மீசை முளைக்காப்  பிள்ளைகளுக்கும் ஊற்றிக் கொடுக்கும் மாநிலம்

நித்தமும் போதையில், விபத்துக்களை நிகழ்த்துமொரு மாநிலம்
போதையில் குற்றங்ளை நிறைக்குமொரு மாநிலம்

காவலரெல்லாம் ஏவலராகச் சாரயக்கூடம் காத்திடும் மாநிலம்
குற்றங்களின் மூலக்காரணம் கொல்லாத மாநிலம்

தள்ளாடும் தலைமுறையில் வன்முறை வளர்க்கும் மாநிலம்
குடிமக்களின் குடும்பங்களை வறுமைக்குத் தள்ளிடும் மாநிலம்

 ஆளும் ராசாக்களின் தொந்திகள் செழிக்குமொரு மாநிலம்
 பாய்ந்த அருவிகளைக் கட்டிடங்களாக்கிய ஒரு மாநிலம்

 மழைநீரை வீணடிக்குமொரு மாநிலம்
 சொட்டுநீர்ப்  பாசனத்துக்கும் கையேந்தும் மாநிலம்

 காலையின் உழைப்பை மாலையில் உறிஞ்சுமொரு மாநிலம்
 உழைப்பைத் தகர்த்து இலவசங்களை வீசியெறியும் மாநிலம்

 நித்தமும் பள்ளிகள் மூடப்படும் மாநிலம்
 மரத்தடிப் பிள்ளையாரையும் பெயர்த்துவிட்டுச் சாராயச் சாம்ராஜ்யம்
 நிறுவுமொரு மாநிலம்

 இத்தனையும் இல்லை இல்லை
முத்தமிழ் வளர்த்ததேன் மாநிலம்
வந்தாரை வாழவைத்துப் போற்றியதென் மாநிலம்
என்று சொல்லத்தான் ஆசைப்படுகிறேன் மக்கழே
சுருதிக் கொஞ்சம் குறைந்துவிட்டது
விடிந்ததும் பார்க்கலாம் விடிந்துவிட்டதா என்று!

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...