Monday, 19 November 2012

பெண் கல்வி

பெரும்பாலான பெண்கள், பள்ளி வந்து ஆசிரியரை பார்க்கும் போது, அவர் ஏதேனும் குறை சொன்னால், அங்கேயே குழந்தையை துணி துவைப்பது போல் அடிப்பதும், ஏதோ செய்ய கூடாத குற்றத்தை, தானும் தன் குழந்தையும் செய்து விட்டது போல பயப்படுவதும் வேதனை தருகின்றன!

பள்ளி கல்வி முறை பெற்றோருக்கும் ஒரு சுமையாகி விட்டதா, இல்லை இந்த பெண்களுக்கு வெறும் ஏட்டு கல்வி மட்டும் பழகி போனதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை!
 
சாலை கடப்பது முதல், குழந்தை வளர்ப்பது வரை, சரியான வழிகாட்டுதலை எந்த அரைகுறை கல்வியும், சமூகமும் பெண்களுக்கு தந்துவிடுவதில்லை.....பல பெண்கள் இன்றும் பட்டுப்புடவையும், தங்க நகைகளும், வரிசையாய் பிள்ளை பெறுவதுமே வாழ்க்கை என்று வாழ்கின்றனர், இதை விட குழந்தை கல்வி மந்திரத்தால் மாங்காய் பறிப்பது போன்று, தடியேடுத்தால் தானாய் நடந்து விடும் என்று நினைப்பதும் மாற வேண்டும்!

அடித்து அடித்து ஒரு ஏழு வயது குழந்தையை மனநிலை சிதைத்து, இருபது ஐந்து வயதில் அவன் காணாமால் போக செய்தார்கள், தினம் தினம் மனம் புழுங்கி அவனை இன்றும் தேடுகிறார்கள்!

என் மாமனையே நான் கட்டிக்கிட்டேன், குழந்தை மனவளர்ச்சி சரியில்லை, இதோட மல்லு கட்டுறேதே எனக்கு தலைவேதனையா போச்சு என்று அழும் பெண்கள் கூட அடுத்தடுத்து பிள்ளை பெறுவதிலும் சளைக்கவில்லை..........

ஆண்களை விட குழந்தையின் வளர்ப்பில் ஒரு பெண்ணின் பங்கு மிக பெரிது, அதற்கான சரியான கல்வி முறையும், மனப்பாங்கும் எல்லா பெண்களுக்கும் வேண்டும்!

உணவு படைப்பதை விட என்பது வேலை; சரியான ஊட்டம் நிறைந்த உணவு படைப்பது என்பது அக்கறை! குழந்தை உருவாகுதல் காதலோ, காமமோ; ஆனால் சுமப்பதும், பெறுவதும் ஒரு வரம், வளர்ப்பது ஒரு முக்கிய பொறுப்பு!.................எதுவாயினும் ஒரு பெண் எல்லாவற்றையும் விரும்பி செய்தால்தான் வாழ்க்கையில் சுவை இருக்கும்! அந்த சுவை வேண்டும் என்றால் இங்கே மாற்றம் வேண்டும்!

மாற்றமென்பது, ஒரு பெண்ணிற்கு சிறந்த கல்வியும், எதையும் தானே சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலும், சரிக்கு சரியாக தோழமையுடன் பார்க்கும் மனப்பாங்கும், அவள் துவள்கையில் தாங்கும் கரமுமாக எப்போது ஒரு வீடும், சமுதாயமும் மாறுமோ அப்போது இங்கே எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகளாக உருவெடுப்பார், புதியதாய் ஒரு சமுதாயமும் உருவாகும்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...