நான் சக்தி
அவன் ரஞ்சன்
பிள்ளைப் பருவத்தில்
தொடங்கி
உடன் பயின்ற
மற்ற நண்பர்களின்
திருமணம் வரையும்
தொடர்ந்த நட்பில்
ஒருநாள் அவன்
காணாமல் போனான்
உணவுன்னும் வேளையில்
எனக்குமுன்பே
என் உணவை தின்று தீர்ப்பவன்
"சாரிடா, காலையிலிருந்து
ஏதும் சாப்பிடலே"
என்று அவன் தலைகுனியும்
வேளையில்
"அச்சச்சோ இருடா"
என்று
பக்கத்தில் இருக்கும்
மகேஷின் உணவை
பிடுங்கி பங்குவைக்க
"நீ எனக்கு அம்மாடீ"
என்று
கலங்கி நின்றவன்,
ஒருநாள்
காணாமல் போனான்!
பாடம் படிக்கும்
வேளையில்
சாலையில்
நடந்து செல்லும்
நேரத்தில்
விழிகளால் துரத்தியவன்
மழைப்பெய்த நாளொன்றில்
அவனின் புத்தகப்பையை
என் தலைக்கு அணையாக
தந்தவன்
"அடேய் லூசு,
புக் நனையும்டா"
என்ற தருணத்தில்
"உன் கண்ணுல மழைநீர்
இறங்குதுடா சக்தி
என்னமோ அதைப்பார்க்க
எனக்குச் சக்தியில்லை"
என்றவன்
அன்பில் கரைந்தவன்
அவன் அன்பில்
காலத்தை
உறைய வைத்தவன்
உன்னதமான நண்பன்
ஒருநாள்
காணாமல் போனான்
பிறந்தநாளில்
நண்பர்கள் புடைசூழ
சந்தோஷ் காதணி தர
கவிதா புத்தகம் தர
நீலா அழகியதொரு
கவிதைப்புனைய
ஏதும் தராமல்
என் விழிகளையே
நோக்கியிருந்தான்
"அட ஏன்டா கிறுக்கா
உனக்கென்ன ஆச்சு?"
என்ற மணிக்கு
"ஒன்னுமில்லடா ஏதோ
தலைசுத்துற மாதிரியிருக்கு"
என்ற காரணங்களை
அடுக்கி தப்பித்தவன்
மாலையில் வீடுதேடி
வந்திருந்தான்
அவன் கைகளில்
வயலெட் பூக்கள்
வயலெட் நிறத்தில்
தலைக்கச்சுகளும்
கைப்பையும் மற்றும்
எல்லாமும்,
பிடித்த நிறம்
இவனுக்குத் தெரிந்தப்படி
எந்த ஐயத்தில்
நானிருக்க
தேடித்தேடி வாங்கிய
பொருட்களை
என் மடியில் வைத்தான்
"என்ன ஆச்சு உனக்கு
எதுக்கு இவ்வளவு,
இது ஜஸ்ட் என்
பிறந்தநாள் ரஞ்சன்"
என்று மறுத்துரைக்க
"ஹாப்பிப் பர்த்டே சக்தி"
என்று பெயரையே
உருப்போட்டுக்
கொண்டிருந்தவன்
ஏதும் சொல்லாமல்
நேரம் போக்கி
சட்டென்று ஒர் நொடியில்
கரங்கள் பிடித்து
விழி நோக்கி
"யாரையும் நம்பாதே சக்தி"
என்றவன்
ஏன் சொன்னான்
என்று பின்னாளில்
நான் அறியும்முன்பே
ஒருநாள்
காணாமல் போனான்
அத்தனைபேரும்
அரட்டையடிக்க
சில மாணவிகள்
அவன் பின்னே திரிய
எதிலும் சேராதவன்
அவன்
விழிகளை மட்டும்
என் முதுகில் பதித்திருந்தவன்
குறுகுறுப்பில்
திரும்பிப் பார்க்கும்
வேளைகளிலெல்லாம்
புன்னகையைப் பரிசளித்தவன்
பரீட்சை முடிந்து
இருவரும் வேறுவேறு
கல்லூரிச் சேர்ந்தாலும்
தினம்தோறும் சாலையிலோ
வீட்டிலேயோ சந்தித்தவன்
பார்வையில் வெளிச்சத்தை
தந்தவன்
என் நண்பன் ரஞ்சன்
ஒருநாள்
காணாமல் போனான்
காலம் புரட்டிப்போட்ட
திசையில்
வாழ்க்கைச்செல்ல
நான் ரஞ்சனை
மறந்திருந்தேன்
அவரவரவர் திருமணம்
முடிந்து
நண்பர்கள் புடைசூழ
எத்தனை அழைப்புகள்
வந்தாலும்
சந்திக்கும் வாய்ப்புகளை
அறவே மறுத்தவன்
ஆமாம்
ரஞ்சன்
காணாமலே போனான்
முதல் கரு வயிற்றில்
உதிக்க
மருந்துவமனையின்
சோதனைக்கூடத்தில்
காத்திருந்த வேளையில்
ஒரு கரம் தோள் தொட்டது
"நீ சக்திதானே?"
என்ற குரலில்
ரஞ்சனின் பரிவு கலந்திருந்தது
செவிலியாய் நின்ற
அவனது சகோதரியின்
சாயலில்
நான் மறந்திருந்தவன்
நினைவடுக்கில் மீண்டுவந்தான்
அவன் நலம் விழைய
"அவன் இன்னமும்
கல்யாணம் செஞ்சுக்கலே"
"எந்தப் பொண்ணைப்
பார்த்தாலும் அவபேர்
சக்தின்னு இருக்கணுமாம்!"
வரிசையாய் அடுக்கியவரின்
விழிகளில் இருந்தது
கோபமோ ஆதங்கமோ
நினைவடுக்கில்
எழும்பி நின்றவன்
மனதில் ராட்டினங்களை
சுற்றிச் சென்றிருந்தான்
எப்படியோ அவன்
கைபேசி எண் பெற்று
தன் முயற்சியில்
சற்றும் மனந் தளாராத
விக்கிரமாதித்தன் போல
அவனைத் திருமணம்
செய்ய வற்புறுத்திய
என் துன்புறுத்தலில்
அவன் திருமணம்
நடந்துவிட்ட செய்திவந்தது
அழைப்பனுப்பாத
அவனை
நினைவடுக்கில்
காணாமல்
போனாவனென்றே
சொல்லி வைத்தேன்
ஆண்டுகள் பல கழிந்து
ஒருநாள்
அழைத்திருந்தான்
"சக்தி" என்றழைத்து
ஊமையானான்
"ஏன் நீ சொல்லல?"
என்ற எனக்கு
"எதைச் சொல்லவில்லை?"
என்று அவன் கேட்டுவிடும்
அபாயமுணர்ந்து
"எப்படி இருக்கே,
உன் மனைவி எப்படியிருக்காங்க?"
நான் கேள்வியின் திசைமாற்ற
"சக்தி" என்றழைத்தான்
மறுபடியும்
"என்னடா?" என்று கோபம் கூட்ட
"அவபேரும் சக்திதாண்டி!"
என்றான்
"ஏண்டா!"
எனக் குரலுடைய
"மனைவி பேர் சக்திதான்
ஆனா நான்
சக்தின்னு கூப்பிடுறது
என் சக்தியைத்தான்!"
அழைப்பைத் துண்டித்த
காணாமல் போனவனால்
நான் முற்றிலும்
தொலைந்துப்போனேன்!
கண்ணீரில் காணாமல்
போகும் கதையாவும்
காற்றில் மிதக்கிறது
ரஞ்சனின் சக்தியும்
சக்தியின் ரஞ்சனும்
போல
காலம் பல கதைகளை
தன்னுள் ரகசியமாய்
பொதித்து வைத்திருக்கிறது
நான் சக்தி
அவன் ரஞ்சன்
காணாமல் போனவன்
பெயரைத் திருடிக்கொண்டு
போனதில்
நான் பெயரற்றவளாகி
சக்தியற்று நின்றேன்!
No comments:
Post a Comment