Sunday, 17 February 2019

எனினும்_விடியலழகு!

எகிறிநிற்கும் விலைவாசியில்
மாதச்சம்பளக்காரனின்
வருமானத்தில்
துண்டுவிழுவதற்குப்பதில்
வேட்டியே விழுந்திருக்கிறது
பொய்த்துப்போன மழையில்
கிடப்பில் கிடக்கும்
நதிநீர் இணைப்பில்
விவசாயிகளின்
கோவணம் என்பது
அம்மணமாய்
உருமாறியிருக்கிறது
சாராயத்தில் மூழ்கிய
தேசத்தில்
வீதிக்குவீதியும் வீட்டிலேயும்
சாராயமென்ற முன்னேற்றத்தில்
பிள்ளைகளின் கல்விக்கனவு
கேட்பாரற்று
நசிந்திருக்கிறது
பாரம்பரிய
உணவுகளும் மருந்துகளும்
கார்ப்பரேட் கைகளுக்கு
போனதில்
இந்தியர்கள் எல்லாம்
சோதனை எலிகளானதில்
பாரதத்தின் ஆரோக்கியம்
மருத்துவமனைகளை
நிரப்பிக் கொண்டிருக்கிறது
ஆண்டாளென்றும்
ஆரியனென்றும்
நாள்தோறுமொரு சர்ச்சையில்
சாதியும் மதமும்
இடைச்செருகலில்
அமோகமாய் நீர்ஊற்றி
வளர்க்கப்பட்டு
மக்களின் மனங்கள்
பகைமையால்
வார்த்தெடுக்கப்படுகிறது
நீரோ மன்னன்
வாசித்த ஃபீடிலின் சாயலில்
இந்திய மன்னர்களின்
அவசரக் கோல வரிவிதிப்பில்
அம்பானிகள் அதானிகள்
சாமியார்களின் வருமானம்
ஏற்றம் கண்டு
நாட்டின் தொழில்துறை
வீழ்ந்திருக்கிறது
எது எப்படியிருந்தாலும்
எனக்கென்ன வென்ற
சுரணையற்ற
மந்திரிகளைப்போல
இந்த விடியலில்
அந்த இயற்கையும்கூட
எப்போதும் போல்
விழித்தெழுந்திருக்கிறது
#எனினும்_விடியலழகு!
Image may contain: one or more people, ocean, sky, outdoor and nature

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!