Tuesday, 21 February 2017

மனசாட்சியைக் கேள்விக்கேட்டு ஒத்துக்கொள்ளுங்கள்

மனசாட்சியைக் கேள்விக்கேட்டு ஒத்துக்கொள்ளுங்கள், நம்முடைய இந்திய அரசாங்கத்துக்குப் பேரிடர் மேலாண்மையில் குறைந்தபட்ச அறிவோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஆர்வமோ அக்கறையோ இல்லையென்று!

திட்டங்களை அவசர அவசரமாக அறிவிப்பதும், தொலைநோக்குப் பார்வையில்லாமல், குறுகிய கால (பண) பலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு மீடியாக்களில் அறிவிப்புச் செய்து விளம்பரம் தேடிக்கொள்வதுமே முதன்மையானது!

ஒரு மழைவெள்ளம் நமக்கு மந்திரிகள் அதிகாரிகள் மக்களுக்காக இல்லை என்று தெளிவாகக் காட்டியது, நாம் விழிக்கவில்லை, மர்ம தேசமாய் 75 நாட்கள் ஆனது தமிழகம், இப்போதும் ஆட்சியும் அதிகாரமும் யார் கையில் என்பதும் மர்மம்தான்!

புயல் வந்தது, இப்போது கடலில் எண்ணெய் கொட்டியிருக்கிறது! மீடியாக்கள் தான் ஜனநாயகத்தின் தூண்கள் என்று நம்பினால், அதிலும் தென்னகத்தின் அவலங்கள் வருவதில்லை, மெரினா போராட்டத்தில் களத்தில் நின்ற மீடியாக்கள் சில வன்முறையின்போது பின்வாங்கின! களத்தில் இல்லாதவர்கள் ஆட்சியாளர்களுக்கு அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்கள்! அரசியல்வாதி தோற்று, பத்திரிக்கைகள் தோற்று, மக்கள் தோற்காமல் இருக்க, நீதிமன்றங்கள் வேண்டும், அந்த நீதிமன்றங்கள் யாவும் பொதுநல வழக்குக்காகக் காத்திருக்கிறது, சுவாதிக்காகத் தானே முன்வந்து பொங்கிய நீதிமன்றமும் பத்திரிக்கைகளும் அரியலூர் நந்தினி வழக்கில் மௌனமாய் இருக்கிறது!

நன்றாக யோசித்துப் பாருங்கள், மத்திய அரசாங்கம், அது காங்கிரஸ் ஆனாலும் பா.ஜ.க ஆனாலும், பேரிடர் மேலாண்மையில் தங்கள் பலவீனங்களை உணர்ந்தே இருக்கிறார்கள், ஒருவேளை உயிரிழப்புகள் ஏற்பட்டால் அது தமிழகத்தில் இருக்கட்டும் என்ற நிலைப்பாடுதான், அணுவுலை, கெயில், நியூட்ரினோ என்று எல்லா அழிவு திட்டங்களையும் தமிழகத்தை நோக்கியே நகர்த்தும் காரணம், பூகோள அறிவியல் உண்மைகள் என்று இதற்கும் முட்டுக்கொடுக்கத் தமிழர்களே வருவதுதான் மற்றுமொரு அவலம்!

தமிழகத்தை ஆள்பவர்களை எளிதாகச் சரிகட்டுவது போல, கேரளத்தையோ, கர்நாடகத்தையோ, ஆந்திராவையோ மத்திய அரசால் பணிய வைக்க முடிவதில்லை! முல்லைப்பெரியாரும், காவிரி வாரியமும் இன்னமும் உறங்கிக்கொண்டுதான் இருக்கின்றன!

பசுப் புனிதமானது என்று, பசுவின் பெயரில் தமிழகத்திலோ, பிற்படுத்தப்பட்ட வட மாநில மக்களையோ கட்சியினர் மிதிப்பது போல, மாட்டுக்கறியை உணவாக விரும்பி உண்ணும் கேரளத்துப்பக்கம் அவர்கள் நிழல் கூட விழாது! பிற மாநில அரசாங்கங்களும் தமிழகத்தின் பலவீனத்தை உணர்ந்தே தொடர்ந்து நீர் விஷயத்தில் ஏய்த்து வருகின்றன! கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படும் அவலமும் அதன் எதிரொலிதான்! ஆந்திரா தடுப்பணை சுவற்றை எளிதாக உயர்த்திக் கட்டிக் கொண்டதும் அதன் நீட்சிதான்!

இந்தக் கடல், பேரிடர் மேலாண்மையின் லட்சணத்தை நமக்கு உணர்த்தியுள்ளது! இன்னமும் கூடங்குளத்துக்காக ஆதரவு நிலைப்பாட்டைத் தேசப் பக்தர்கள் என்ற போர்வையில் எடுக்காதீர்கள்! தேசமென்பது மக்களைச் சார்ந்தே செழிக்கும்!

இதற்குத் தீர்வுதான் என்ன? தமிழகத்தின் இந்த நிலைக்குத் தமிழர்களே காரணம், குடிகாரர்கள் பெருகிப் போன நாட்டில் கல்விப் பெற வேண்டிய வயதில் பிள்ளைகள் பணிசெய்து பிழைக்கிறார்கள், இவர்கள்தான் அடிமட்ட கூலிகளாய், பிற்காலத்தில் அடிமையாட்களாய் படித்த பதவியில் இருக்கும் கூட்டத்திற்காக உருவாகிறார்கள், அல்லது உருவாக்கப்படுகிறார்கள்! தெளிவான கல்வியும் அறிவும் இல்லாத ஒரு சமுதாயம் யாரை எப்படிக் கேள்விகேட்கும்?

கல்விக் கற்ற மற்றொரு சமுதாயம் வெளிநாடுகளில் இருக்கிறது, முனைந்து போர் தொடுக்கும் மற்றொரு சமுதாயம் இந்த அடிமைப்பட்ட சமுதாயக் கூட்டத்தால் அச்சுறுத்தப்படுகிறது! மீடியா என்பதும் பலவான்களின் பிடியில் அல்லது கையில்!

கல்விக்கொடு என்று கேட்பதற்குப் பதிலாக இலவசப் பொருட்களில் திருப்தியடைகிறோம்! சாராயக் கடைகளைக் கண்டால், சாப்பாட்டைக் கண்ட மந்தைகளைப் போல் பாய்கிறோம், ஒருவன் குரல்கொடுத்தாலும் உடன் நிற்காமல் நமக்கென்ன என்று ஒதுங்கிப்போகிறோம், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்லிக்கொண்டு எல்லா வளங்களையும் சுரண்ட பன்னாட்டுகளுக்கு அனுமதித்தருகிறோம், போராட்ட களங்களில் இன்னமும் சாதி மதப் பேதங்களால் ஒன்றிணையாமல் தயங்கி நிற்கிறோம், இனி உண்மையில் வாழ வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் இயற்கையைப் பாதுகாக்க தன்னால் முடிந்ததைச் செய்யவும், தவறிழைக்கும் அரசு பணியாளர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கவும் பல மாற்றங்கள் மலர (மலர் டீச்சர் மாற்றத்தைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் , இந்த மாற்றம் எப்படி வரும் என்பதும் பெருத்த யோசனைதான்) வேண்டும்!

எல்லாவற்றுக்கும் மேலாக, "மறதி" என்பதில் இருந்து எழுந்து, தேர்தலில் சரியானவர்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுக்க வேண்டும்! வாக்குகளை விற்றுவிடாதீர்கள் மீண்டும், தேசத்தை இழந்துக்கொண்டிருக்கிறோம், இன்னுமொரு முறை தவறு செய்தால், நம் சந்ததிகளுக்குத் தமிழக எல்லையில்லை!
#Chennaioilspill

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!