Tuesday, 21 February 2017

மக்களுக்கு விருப்பமில்லாத ஒருவர்

மக்களுக்கு விருப்பமில்லாத ஒருவர், சட்டப்படி ஆட்சிக்கு வந்தாலும், அது மக்கள் விரோத ஆட்சிதானே? இங்கே யாரை எதிர்ப்பீர்கள், ஓட்டை உடைசலான சட்டத்தையா, இல்லை நம்மை ஏமாற்றி ஓட்டுவாங்கி ஆட்சியைக் கைமாற்றி விட்டவர்களையா?
இந்தியாவில் சராசரியாக ஒரு வழக்கை விசாரித்து முடிக்க நீதிமன்றங்கள் 5 வருடங்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்று எங்கோ படித்தேன், ஓட்டை உடைசலான எல்லாச் சட்ட முறைகளையும், சட்டங்களில் உள்ள ஓட்டை உடைசலை அடைக்கவும் இன்னொரு அம்பேத்கர் வரமாட்டார், மக்கள் நலன் விரும்பும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் தாமே முன்வந்து அதைச் செய்ய வேண்டும் அல்லது அரசாங்கத்துக்கு அதை முன்மொழிய வேண்டும்! அரசியல்வாதிகள் தாமே முன்வந்து மக்களுக்காக எதையும் மாற்றமாட்டார்கள், பெரிதாய் எழுச்சி வரும்போதே செவிசாய்ப்பார்கள்!
அதற்கு மூன்று உதாரணங்களைச் சொல்கிறேன்;

1. டெல்லியில் ஜோதிசிங் கொடூரமாய்க் கொல்லப்படும்வரை பெண்களின் பாதுகாப்புக்கு அவர்கள் அவசரச் சட்டம் இயற்றவில்லை, ஆனால் ஒரு ஜோதிசிங்கின் மரணம் புதிய சட்டங்களை இயற்ற வைத்தது, அவ்வளவே! எனினும் தண்டனைகளைக் கடுமையாக்கவும், சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்குப் பரப்பவும் இன்னமும் போதிய நடவடிக்கை இல்லை! வரிசையாய் பெண்கள், குழந்தைகள் சாக "தண்டனைக்கான" அழுத்தம் வரவில்லை, மற்றுமொரு கொடூர முறையில் சுவாதி கொல்லப்பட, நீதிமன்றம் தாமே முன்வந்து அழுத்தம் தர அந்த வழக்கு "முடித்து" வைக்கப்பட்டது, இப்போதும் வயது வித்தியாசமில்லாமல் கொடூரமாய்ப் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள், கடுமையான சட்டம் கொண்டு கொலையாளிகளைத் தண்டிக்க இந்த மரணங்கள் போதவில்லை என்றே தோன்றுகிறது, சட்ட வல்லுநர்கள் அரசுக்கு அழுத்தம் தந்தாலொழிய இதில் மாற்றம் நிகழாது!

2. பெருகும் சாலை விபத்துகளால், "தலைக்கவசம் போடு, இல்லையென்றால் அபராதம்" என்று பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டு, பிறகு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டாலும், அதைச் செயல்படுத்துவதில் சுணக்கம்!

மேடும் பள்ளமுமாய் ஆகிறது சாலைகள், சுங்கச்சாலைக் கட்டணம் கட்டினாலும், பல நெடுஞ்சாலைகள் புயலுக்குப் பின்பு சீரமைக்கப்படாமலேயே உள்ளன, கட்டணம் மட்டும் கட்டிக்கொண்டே இருக்கிறோம்! சாலையைச் சீர்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை, வாகனம் வாங்கும்போது சாலைக்கும் சேர்த்தே வரிக் கட்டுகிறோம், எனினும் தனியாருக்கு விட்டு, கூடுதல் சுமையை ஏற்றுகிறது அரசு! பிறகு ஏன் சாலைக்கு வரி வாங்குகிறீர்கள் என்று அரசை யார் கேட்பது?
விதிகளை மதிக்காத சில மனிதர்களால் பல நூறு பேர்கள் உயிரிழக்கின்றனர், விபத்துக்கள் தொடர்கதையாகின்றன, சாலை கட்டமைப்புக்களைக் கண்காணிக்கும் முறைகளை, செயல்படுத்துதலை எப்போது தீவிரப்படுத்துவார்கள்? மாசத்தின் இறுதி நாட்களில் மட்டுமா?
மந்திரிகள் வரும்போது சாலையே ஸ்தம்பித்துப் போவதால் ஒரு விபத்தின் பாதிப்பு அவர்களுக்குப் புரியவில்லை, புரியும் நாளில், இருக்கும் சட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும், அப்படி வந்தால் அதுகூடப் போதும் விபத்தைத் தடுப்பதற்கு!

3. இது ஜல்லிக்கட்டு, அவசரச் சட்டம் கொண்டுவருவதெல்லாம் ஆள்பவர்களுக்குத் தெரியாததல்ல, மாணவர்கள் போராட்டத்தின் பின்னே நிகழ்ந்ததற்கு ஆயிரம் அரசியல் இருந்தாலும், மக்கள் இன்னமும் முழுதாய் உறங்கிடவில்லை, போராட்டம் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதற்கு இது மாற்றுமொரு சான்று!

அதேபோல அரசு அவசரமாய் இயற்றும் சட்டங்கள் எல்லாம் மக்களின் நேரடி நன்மைக்கு என்று நம்புவதும் முடியாது, அந்த அளவுக்கே இருக்கிறது மக்களின் அனுபவங்கள்! புதிபுதிதாய் வரும் மருந்துச் சந்தைகள், மரபணு மாற்றுச் விதைகளுக்கான அனுமதி, கூடங்குளம் எல்லாம் அதற்குச் சில பருக்கை உதாரணங்கள்!

பொதுநல வழக்குகளும், நீதிமன்றங்களும் சில நியாயங்களை மக்களுக்குப் பெற்றுத்தந்திருக்கின்றன, போராடியே ஒவ்வொன்றையும் பெரும் நிலைக்குக் காரணம் யார், உண்மையில் எந்தச் சட்டமுறைகளை முதலில் மாற்ற வேண்டும் என்று சிந்திக்க வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம் நாம்!
"ஒட்டுப் போட்டாச்சு இல்லே, யாரை வேணும்னாலும் நாங்க முதல்வரா தேர்ந்தெடுப்போம்" என்று ஓட்டுப்போட்ட மக்களை நோக்கி இகழ்வாகப் பேசும் நிலையில் இருக்கிறது இன்றைய விதிமுறைகள், உண்மையில் இதுதானே மாற்றப் படவேண்டும்?

ஒரு மாநிலத்துக்கே முதல்வர், அவரின் உடல்நலம், அவரைப் பற்றிய தகவல்களைக் கூட நம்மால் தெரிந்துக்கொள்ளமுடியவில்லை, தாம் தேர்ந்தெடுத்த தலைவரின் நலனைக் கூடத் தெரிந்துக் கொள்ளமுடியாத அளவுக்கு இருந்தது மக்களுக்கான ஜனநாயக உரிமை, இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்!

இதையெல்லாம் சொல்வதற்கு யாரும் சட்ட வல்லுனர்களாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன், சட்டம் என்பது மக்களுக்காக இருக்க வேண்டும், மக்களுக்கும் காலத்துக்கும் ஒவ்வாத விதிமுறைகளை மாற்றி அமைத்து மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் அடிப்படை உரிமைகளை, வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் சட்டமானது இருக்க வேண்டும், அதிலும் இதெல்லாம் "உரிய காலத்தில்" "விரைவாக" கிடைக்க வேண்டும்! இன்று நான் வழக்குப் போட்டால் என் கொள்ளுப்பேரன் காலத்தில்தான் நீதி கிடைக்கும் என்ற அளவில் தாமதமாகும் நடைமுறைகளில் தான் ஊழல்கள் ஒரு முடிவேயில்லாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது, மக்களின் உணர்வுகளும் எள்ளல் செய்யப்படுகிறது, குற்றங்களும் தொடர்கதையாகிறது!!

ஏனோ தோன்றுகிறது, வெகு காலத்திற்கு மக்களை முட்டாள்களாக வைத்திருக்க முடியாது!

#நம்பிக்கை

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!