Thursday 16 November 2017

எண்

இரண்டு வருடங்களுக்கு முன்பு பீகாரில் இருந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து கொண்ட ஒரு இந்திய-அமெரிக்க தம்பதி, சமீபத்தில் இரவு மூன்று மணிக்கு அந்தக்குழந்தை (ஐந்து வயது) சரியாக பால் குடிக்கவில்லை என அதற்கு தண்டனையாக வீட்டு வாசலில் நிற்க வைக்க அந்தக்குழந்தை காணாமல் போய், இப்போது வீட்டை விட்டு சற்றுத்தள்ளி சந்தேகத்திற்குரிய வகையில் இறந்திருப்பதாய் செய்தி,
குஜராத் கலவரத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் தொடுத்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு, தண்டனைப் பெற்ற காவல்துறையினர் இன்னமும் பணியில் நீடிப்பதாக மேல் முறையீட்டு வழக்கு
சென்னையில், குடிசை மாற்று வாரியத்தின் அலட்சியத்தால், வீடு பறிக்கப்பட்டு வீதியில் விடப்பட்ட எழுபது வயது மூதாட்டி, சமீபத்தில் வீடு ஒதுக்கப்பட்டும், அதை நகராட்சி அதிகாரிகள் வழங்காததால், வீடின்றி, சாலையில் கிடந்து நலிந்துப்போய் இறந்திருக்கிறார்
இந்தியச் சாலைகளில் ஏற்படும் விபத்துகளில், ஏறக்குறைய ஒவ்வொரு நான்கு நிமிடத்துக்கும் ஒருவரும், தினமும் 16 குழந்தைகளும், டெல்லியில் தினமும் 5 பேரும் சாலை விபத்துகளால் இறந்துப்போகிறார்கள்
35 பேருக்கும் மேற்பட்டோர் இந்தக் குறுகிய காலத்திற்குள் டெங்குவால் இறந்திருக்கிறார்கள்

பல்வேறு விதங்களில் பல்வேறு வழிகளில், வீடுகளில், சாலைகளில், பள்ளிகளில், மருந்துவமனைகளில் (உபி) குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்

நெல்லையில் உச்சகட்டமாக கந்துவட்டிக்கொடுமையால், காவல்துறையின், ஆட்சியரின் அலட்சியத்தால், ஒரு குடும்பமே தீயில் எரிந்திருக்கிறது!
சரி இதெல்லாம் என்ன, இத்தனை செய்திகளும் இனி மாறிவிடுமா? இல்லை, விஜய் மல்லையாக்கள் வெட்கமின்றி பணம் திருடும் நாட்டில், கல்விக்காக பிள்ளைகள் தற்கொலை செய்துக்கொள்ளும் நாட்டில், பண்டமாற்று போல் குழந்தைகளை விற்கும், சோதனை எலிகளாக்கும் நாட்டில், ஆட்சிக்காக வெட்கமின்றி காலில் விழும் தேசத்தில், மரணங்கள் எல்லாம் புள்ளி விவர கணக்குகளே!

ஒருபக்கம் மக்கள் எரிய, மறுபக்கம் ஆட்சி அதிகாரம் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது, மத்திய அரசு வருமானத்துறை ரெய்டுகளையும், மாநில அரசு விழாக்களையும் தாண்டி சாதித்தது என்ன என்று நாம் கேட்டுவிடக்கூடாது, சுதந்திரம் அடைந்த நேரத்தில் 36 கோடியாக இருந்த மக்கள்தொகை இன்று 134 கோடி, ஆதலால் சதவீத கணக்குப்படி பார்த்தால் 134 கோடியில் நிமிடத்திற்கு நால்வர் சாவதும், கோடியில் சில குடும்பங்கள் தீ வைத்துக்கொளுத்திக்கொள்வதும், 250 குழந்தைகள் மூச்சுத்திணறி சாவதும், நூற்றுக்கணக்கில் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதும் வெறும் செய்திகள் தாம், "இதுகளுக்கு ஆயிரமோ இரண்டாயிரமோ தூக்கிப்போட்டா போதும்" என்று இவர்கள் திரும்பவும் ஓட்டுக்கேட்க வருவார்கள், இந்தப் புள்ளிவிவர கணக்குப்படி நாம் ஒவ்வொருவரும் வெறும் "எண்" தான் என்று மனதில் இருத்திக்கொள்ளுங்கள்! போதும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!