Thursday 16 November 2017

இடஒதுக்கீடு

ஊட்டச்சத்துமிக்க உணவோ, பெரிய வீடோ, வாகனமோ, மின்விசிறியோ, குளிர்சாதனமோ, இப்படி எந்த வசதியும் இல்லை என்று ஏழைகள் தற்கொலை செய்துக்கொள்வதில்லை! கல்விக்கு மட்டுமே அவர்கள் ஆசைப்படுகிறார்கள், அது என்ன குற்றமா? படிக்காத பெற்றோர்களின் வறுமையை கல்வி மாற்றும் என்று நினைக்கிறார்கள்? அது குற்றமா? அடிமைப்பட்ட சாதிநிலையை, குனிந்தே நிற்கும் வாழ்க்கை நிலையை, கல்வி உயர்த்தும் என்று கனவு காண்கிறார்கள், அது குற்றமா?
இதுவரை நான் சாதியைப்போற்றியதில்லை, மிக நெருங்கிய நட்பில் எல்லா இனங்களும், எல்லா சாதியும் உண்டு, அவர்கள் எல்லாம், இந்த வேறுபாடுகளை மறந்து சமூகத்தின் மீது மிகுந்த அக்கறைக் கொண்டவர்கள், அதன்வழி செயல்படுபவர்கள், இந்த முகநூலிலும், சில அலுவலக வழி வந்த நட்பிலும் கூட நான் சாதியைத் தேடியதில்லை, கேட்டதும் இல்லை, எனினும் இன்று அனிதாவின் தற்கொலை, இங்கு இருப்பவர்களில் சிலரின் முகமூடியைத் தெளிவாக உரித்து காட்டியிருக்கிறது, அவர்களின் சாதி அவர்களின் வாயிலாக தெரிந்திருக்கிறது, நன்றி உங்களுக்கு, நீங்கள் பிணத்தையும் கூட சாதிய சாயத்தோடு பார்த்து மகிழும் கூட்டமே, கொஞ்சம் விலகி நிற்கிறேன்! 

உங்களுக்கு நீட் அவசியம் வேண்டும் என்றால்;
இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வி முறையை, அதையும் அரசே இலவசமாய் எல்லோருக்கும் பொதுவாய் வைக்குமாறு சொல்லுங்கள்,
நீட் பயிற்சியையும் அரசையே நடத்தச்சொல்லுங்கள் இலவசமாய்
பிற்படுத்தப்பட்ட, பின்தங்கிய குழந்தைகளுக்கு அவர்கள் மொழி, ஆளுமை, பாடங்களில் சிறப்புற பயிற்சி வகுப்புகளையும் அரசையே செய்ய சொல்லுங்கள்!

தேர்வில், பின்பு அதை திருத்துவதை, பின் மதிப்பெண் பட்டியலை, பின் நேர்காணலை, பின் அட்மிஷன் காட்சிகளை எல்லாவற்றையும் கணினி மயமாக்கி, பொதுமக்களுக்கு தொலைக்காட்சியில் நேரலையாக காண்பிக்கச்சொல்லுங்கள்!

28% சதவீதம் முதல் 50% சதவீதத்திற்கும் மேலாக வாங்கும் வரிகளை இதற்கும் செலவுசெய்ய சொல்லுங்கள்!

பிறகு, இதையெல்லாம் செய்ய அரசுக்கு வக்கில்லையென்றால், ஆட்சியைக்கூட தனியார் வசம் குத்தகைக்கு விட்டுவிட சொல்லுங்கள்!
இறுதியாக, "ஸ்டாண்டர்ட் வேண்டும்" அதனால் தேர்வு வேண்டும் என்றும், ஒரே வினாத்தாள் எல்லோருக்கும் என்று வழிமொழிபவர்கள், #கோயில்களில் #அர்ச்சகராக யார் வேண்டுமானாலும் ஆகலாம், இதற்கும் ஓரே நுழைவுத்தேர்வு வைத்து, மந்திரங்களை எல்லோரும் பயிற்சி வகுப்புகளில் கற்றுத் தேர்வு எழுதட்டும் என்றும் முன்மொழியுங்களேன் பார்க்கலாம்!

உங்களுக்கென்று ஒரு இடஒதுக்கீட்டை யாரையும் அண்ட விடாமல் பிடித்துக்கொண்டு, மற்றவர்களின் அடிப்படைக்கல்விக்கு தரும் இடஒதுக்கீட்டை எதிர்க்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை!

இப்போது நிவாரணம் அளிக்கும் தமிழக அரசும், ஆறுதலில் வேஷம் காட்டும் மத்திய அரசும், அரசின் மழுப்பலால் தமிழக மாணவர்களுக்கு இழப்பு ஏற்பட்ட போது, தானாய் முன்வந்து, எல்லோருக்கும் இலவச பயிற்சி இந்த வருடம் நாங்களே வழங்கி உங்களை நீட் தேர்வுக்கு தயார்ப்படுத்துகிறோம், கவலை வேண்டாம் என்று உறுதிமொழி தந்து செயல்படுத்தியிருக்கலாம்!
இறுதிவரை போராடிய பெண்ணை, காதல் தோல்வியால் செத்திருப்பாள் என்று உங்கள் வக்கிரங்களை வார்த்தைகளாக வடிப்பவர்கள் உங்கள் வீட்டுப்பெண் ஓடிப்போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் போதும்!
இந்தநாடு எல்லா மக்களுக்கும் ஒரே நீதியை தரும்போது, நீங்கள் உங்கள் நியாயங்களைப் பேசுங்கள் அதுவரை ஒரு மரணத்திற்கு கீழ்த்தரமாய் காரணங்களைக் கற்பித்து, உங்கள் சாதிய அழுக்குகளைக் கொட்டாதீர்கள்!
#அனிதா #Anitha #Neet #நீட் #இடஒதுக்கீடு

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!