Thursday, 3 August 2017

பிக் பாஸ்

சுற்றிலும் தங்களுடைய நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது என்று தெரிகிறது, அதையே அவர்களிடம் திரும்பவும் போட்டுக்காட்டியும் கதைக்கேற்ப மீண்டும் மீண்டும் சிலர் அதே தவறுகளைச் செய்கின்றனர், யாருக்கு மக்கள் பொங்க வேண்டும், யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிற அளவுக்கு சரியாய் காட்சிகள் கட்டமைக்கப்பட்டு ஒளிப்பரப்பப்படுகிறது! இத்தனை தெரிந்தும் இதனை உண்மையென்று நம்பி தினந்தோறும் இதே மயக்கத்தில் தானாறியாமல் நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்யும் ஆர்வலர்கள் மத்தியில் இப்போது பத்திரிக்கையாளர்களும் சேர்ந்து கொண்டனர்! 

இதற்கிடையில் மாணவி வளர்மதியின் கைது, போராட்டங்கள் , தடியடிகள், அடக்குமுறைகள் பற்றி பேசும்போது, ஒரு முன்னாள் காவல்துறை நண்பர், வடக்கை ஒப்பீடும்போது, தமிழ்நாட்டில் மக்கள் சாதுவானவர்கள், பெரிதாக எந்தப்போராட்ட வடிவமோ அவர்களால் வராது, இந்த சில நடவடிக்கைகளிலேயே அவர்கள் பயந்துவிடுவார்கள், ப்ராவிடண்ட் ஃபண்ட பிரச்சனையில் கூட போராடியது எல்லாம் பெங்களூர்வாசிகளே என்றார், ஜல்லிக்கட்டு போராட்டம் நினைவில் வந்தது, அதையும்
கூட தங்கள் இலக்கை அடைந்ததும், அந்தப்போராட்டம் அதிகாரிகளால் கலைக்கப்பட்டவிதம் நாடறியும்! தமிழ்நாடு அமைதிப்பூங்கவாக திகழ எப்போதும்
அதன் தனித்துவம் தெரியும்!

நிச்சயம் தமிழ்நாட்டின் மக்கள் தனித்துவமானவர்கள், எனினும் சினிமா விமர்சனங்கள் செய்து கடந்துவிடுவது போலல்லாமல் ரியாலிட்டி ஷோக்களில் மூழ்கியும், அதற்கு கோனார் உரை முதற்கொண்டு உளவியல் கட்டுரைகளை எழுதியும், கதாபாத்திரங்களுக்காக கண்ணீர் விட்டும், வீட்டில் உள்ளவர்களையோ, உடன் பழகும் மனிதர்களையோ வாய்விட்டு மனம்விட்டு பாராட்டாதவர்கள், நடிக நடிகயரை பாராட்டியும், தூற்றியும் என்ன உளவியலை கற்றுக்கொள்கிறார்கள், அதை யாரிடம் பயன்படுத்தப்போகிறார்கள் என்பதெல்லாம் அடடா என்ற ஆச்சரியக்குறி! இதையெல்லாம் பார்க்கும் போது எத்தனை நெடுவாசல் களம் கண்டாலும், எத்தனை வளர்மதிகள் கைதுசெய்யப்பட்டாலும், இன்னும் எத்தனை ஊழல்கள் நிகழ்ந்தாலும் இன்னும் பலநூறு வருடங்களுக்கு இதே கட்சிகள் இதே அரசியல்காட்சிகள் மாற்றமில்லாமல் தொடர்ந்துகொண்டேயிருக்கலாம், தமிழ்நாடு பொட்டல்காடாகும்வரை அல்லது மக்கள் தெளியும்வரைச் சுரண்டல்கள் தொடரவும் செய்யலாம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!