Thursday 3 August 2017

மூன்று கண்கள் நான்கு கால்கள்

ஆடை அவிழ்த்துப் பார்த்தபின்
பெண்ணுக்கும் ஆணுக்கும்
சாதியைப் பொறுத்து
உறுப்புகள் மாறியிருந்ததா?

உயர்சாதி மேல்சாதி
என்று வகுத்த நியதிப்படி
மூன்று கண்கள்
நான்கு கால்கள் என்று
உறுப்புகள் பெருகியிருந்ததா?

கர்ப்பிணிப் பெண்ணின்
வயிற்றைக் கிழித்தபோது
அவளின் சாதியைப்பொறுத்து
கர்ப்பப்பை இடம் மாறியிருந்ததா?

உயர்சாதிக் காதலில்
கலவி வாய்வழியாகவும்
கீழ்சாதிக் காதலில்
கலவி கால்களுக்கிடையேயும்
நிகழ்ந்திருந்ததா?

சாதிக்கண்டு ஒருவனை
வெட்டிச் சாய்த்தபோது
வீழ்ந்தவனின் குருதி
நீலமாகவும்
வெட்டியவனின் நரம்பில்
குருதிச் சிகப்பாகவும்
ஓடியிருந்ததா?

மனங்களின் அழுக்கெல்லாம்
சாதியாக ஓடும் நாட்டில்
ஆறுகளெல்லாம் மணலோடி
கிடக்கும் காட்சியில்
வியப்பேதும் தோன்றியிருந்ததா?

கீழென்றவன் கைகட்டி
நின்றாலும்
மேலென்றுரைத்தவன்
மீசை முறுக்கினாலும்
தன்னுயிர் போல
மண்ணுயிர் காக்கும்
கடையெழு வள்ளல்களில்
ஒருவன் இல்லாவிட்டாலும்
சொல்லாலோ செயலாலோ
பிற உயிரை வஞ்சனை
செய்யாத எல்லோரும்
உயர்சாதிதான்
ஒருவரின் உரிமையை
உயிரை
மிரட்டிப் பறிப்பவன்
எல்லாம் கீழ்சாதிதான்
இதில் மாற்றுக்கருத்தும்
இருக்கிறதா?

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!