Wednesday 16 August 2017

கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்துக்கொண்டு கற்களை எறிகிறீர்கள்



தெரிந்த குடும்பம், கணவன் குடித்துவிட்டு, மனைவியைப் பிடித்து இழுத்து அடிப்பான், அவனுடைய வாயில் இருந்து வராத வார்த்தைகளே கிடையாது, அத்தனை நாராசமாகப் பெண்ணின் ஒழுக்கத்தைக் கேலிப்பொருளாக்கும் அவன், அவளுடனே குடும்பம் நடத்தி, பிள்ளைகளைப் பெற்று, வளர்க்க துப்பில்லாமல், மனைவியின் உழைப்பில், உடலில், சுகம் கண்டு வீணாய்ப்போனவன். இதுபோன்ற வீணாய் போனவர்களைப் பலரும் கடந்திருக்கக் கூடும், அல்லது அந்த வீணாய்ப்போனவர்களில் ஒருவர் நம் குடும்பத்திலும் இருந்திருக்கக் கூடும்

ஒரு பெண்ணை இகழும்போது, அவள் மனைவி என்றாலும், தோழி என்றாலும், காதலி என்றாலும், அல்லது யாரோ ஒரு பெண் என்றாலும், சில ஆண்கள் பெண்களை இகழ்வதாய் நினைத்துக்கொண்டு தங்களைத் தாங்களே வெளிப்படுத்தி, பறைசாற்றிக்கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆண்கள் இப்படியென்றால், சில பெண்களும் சளைத்தவர்கள் இல்லை. ஓர் ஐந்தாறு வயது சிறுவனைக் கையில் பிடித்துக்கொண்டு கணவன் நடக்க, உடனொற்றி நடந்து வந்த மனைவி, அவன் ஒரு ஐந்து ரூபாயை தொலைத்துவிட்டான் என்று, கேட்பவர் கூசும் வண்ணம், அவனைக் கையாலாகாதவன், பொட்டை என்று நடுத்தெருவில் ஏசிய காட்சிகளைக் கடந்ததுண்டு.

ஒருவரை இகழும்போது, அதை எதிர்கொள்பவரை விட, வார்த்தைகளை விடும் மனிதர்களின் நிலையே கேள்விக்குரியது. கணவன் மனைவிக்குள், பிள்ளைகளுக்குள், நண்பர்களுக்குள், உறவுக்குள் கருத்து மோதல்கள் இருக்கலாம், அது கருத்தளவில் மட்டுமே இருந்துவிட்டால் பரவாயில்லை. யாரோ ஒருவர் தோற்கும்போது, அல்லது யாரோ ஒருவர் சலிப்படையும்போது, கருத்தை, காற்றில் விட்டுவிட்டு, தனிநபரின் ஒழுக்கத்தை, உடையை, வெளிப்புறத் தோற்றத்தை, பாலினத்தை, உறுப்புகளை, அவர்களின் திறமையின்மையை என்று மோதலாக மாற்றி, செவிகளில் அறைந்து, மனதைச் சுருக்கும் வார்த்தைகளாக மாற்றும் போது, அந்த உறவு சேதமடைகிறது.

தன்னைப் பெற்றவளை "தே $%*" என்று இகழும் மகன்களைக் கண்டிருக்கிறேன், அவன் தன்னை இகழ்ந்துகொள்ளும் கவலையின்றிச் சேற்றை வாரித்தூற்றிக்கொள்வதை என்ன சொல்வது? பொதுவாகப் பெரும்பாலும் இந்திய ஆண்களின் எண்ண ஓட்டம், சேலை கட்டி, நெற்றியில் குங்குமம் இட்டவள் குடும்பப்பெண் என்றும், கால்சராய் அணிந்துக்கொண்டு, கூந்தலை விரித்துக்கொண்டு செல்பவள், அழைத்தால் வந்து விடுபவளாகவும் தோன்றும் ஒரு வளர்ப்பின் போக்கும், ஆணுக்குரிய இலக்கணம் என்று இந்தச் சமூகம் கட்டமைக்கும் போக்கும், அவனை ஒரு பெண்ணிடம் வாதத்தில் போட்டியிட முடியாமல், கொச்சையான வார்த்தைகளில் தான் ஆண் என்று நிரூபிக்க நினைக்கிறது.
இந்தியாவில் எந்தத் திரைப்படங்களைக் கண்டாலும், எந்தக் கதைகளைப் படித்தாலும் (பெண் எழுத்தாளாராய் இருந்தாலும் கூட) ஆண் எந்தத் தவறு செய்தாலும் அது சாதாரணம் என்றும், பெண் என்பவள் ஒழுக்கத்தின் இருப்பிடமாகவும் இருக்க வேண்டும் என்ற போதனையையே மீண்டும் மீண்டும் இந்தச் சமூகம் பறைசாற்றுகிறது.

ஆடையில் ஆரம்பித்துப் பெண்ணின் உச்சகட்ட ஒழுக்கத்தை அவளின் யோனியில் வைத்திருக்கும் சமூகம், ஆணின் ஒழுக்கத்தை மட்டும் வரையறுக்கவில்லை.

சூப்பர் ஸ்டாரின் இருந்து நேற்று வந்த விடலைப்பையன் வரை திரைப்படங்களில், ஸ்டைலாகப் புகைவிட்டு, தண்ணியடித்து, பெண்ணின் கையைப்பிடித்து இழுத்து, அவளை வன்புணர்ச்சி செய்து, அவளை அவமானப்படுத்தி, அவளைக் கொன்று, அவளுக்குப் பெண்மையின் மகத்துவத்தைப் போதித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
இன்னமும் காதலை ஆண் சொன்னால் அவன் யோக்கியன் போலவும், பெண் சொன்னால், அவள் காமத்துக்கு அலைபவள் போலவும் காட்டுகிறது பெரும்பாலான திரைப்படங்கள். பெண்ணின் முலையைத்தாண்டி, யோனியைத் தாண்டி, பெண் என்பவளின் மனஉணர்வுகளைப் பெரும்பாலான ஆண்கள் உணர்வதேயில்லை. அதுதான் ஒரு பெண் தான் பார்த்தத் திரைப்படத்தை விமர்சனம் செய்ததைக் கூடத் தாங்கமுடியாமல் பொங்குகிறது. தமிழ்நாடு சாராயத்திலும், நடிக நடிகையரின் வழிபாட்டிலும், வெறிபிடித்த ரசனையாலும் நாசமாய்ப் போகிறது, எந்நாளும் பிம்பங்களின் விமர்சனத்தில் மக்கள் மூழ்கிக்கிடக்க, ஆளும் நாட்டாமைகளுக்குக் கேள்வியற்றுப் போய்விட்டது.

பெண்ணை ஆண் அடக்கி ஆள்வதோ, ஆணைப் பெண் அடக்கி ஆள்வதோ சிறந்த குழந்தைகளை உருவாக்குவதில்லை, பாதுகாப்பான சமூகத்தைக் கட்டமைப்பதில்லை. படித்தவர்களோ, படிக்காதவர்களோ, தெளிந்த அறிவு கொண்ட பெற்றோர்கள், ஒருவர் சுயத்தை ஒருவர் மதிக்கும் பண்பு கொண்டவர்கள், ஒரு சிறந்த ஆண்மகனையும், ஒரு சிறந்த தெளிவுமிக்கத் துணிச்சலான பெண்மகளையும் வளர்த்தெடுக்கிறார்கள். இணையர் இருவரில் ஒருவருக்குப் போதிய அறிவோ, சுறுசுறுப்போ, தெளிவின்மையோ, கண்மூடித்தனமான கோபமோ, பிறரைப் பற்றிய கீழ்த்தரமான எண்ணங்களோ இருந்தால், கூடுதல் சுமையை மற்றவர் சுமக்க வேண்டியிருக்கலாம், இல்லையென்றால் பெண்ணை இகழும் ஆணும், ஆணை இகழும் பெண்ணும் என வித்துகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம், அப்படிப்பட்ட வித்துகள் சமூகத்தின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும், கொலை செய்யும், சேற்றை வாரிப்பூசும், ஊழல் செய்யும், பெண்ணைப் போகப்பொருளெனக் கொள்ளும் / கொல்லும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும், பொதுவெளியில், அல்லது நான்கு சுவர்களுக்குள், எந்தக் காரணங்களுக்குச் சண்டை வந்தாலும், கருத்து முரண்பட்டாலும், காரணத்தையோ, கருத்தையோ விட்டுவிட்டு, பெண்ணின் நடத்தையை, உருவத்தை, உடல் உறுப்புகளை, அவளின் வளர்ப்பை, அவளின் உறவுகளை, அவளின் ஆடைகளை, என்று தான்தோன்றித்தனமாகத் தாக்கும் ஆண்கள், அல்லது பெண்கள், சமூகத்தில் பிச்சைக்காரர்களாக, எழுத்தாளர்களாக, பெரிய கூத்துக்காரர்களின் ரசிகர்களாக, அல்லது சமூகத்தில் எந்த நிலையில் இருப்பவர்களாக இருந்தாலும், ஒன்று அவன் மனநிலைப்பிறழ்ந்தவர்களாகவோ, அல்லது நல்ல தகப்பனை வழிகாட்டியாய் கொண்டிருக்காதவர்களாகவோ, அல்லது தாயை மதிக்காதவர்களாகவோ, ஆண்மை, பெண்மை என்பது உடல் உறுப்பைப் பொறுத்து மட்டுமே என்று தவறாகக் கற்பிக்கப்பட்டவர்களாகவோ இருக்கக்கூடிய சாத்தியங்களே அதிகம்!

மரபணு மாற்ற விதைகளைப் போல இந்தியாவில் இதுபோன்றவர்களின் மக்கள்தொகைப் பெருகிக்கொண்டே போனாலும், சீரான ஆரோக்கியம் மிக்க மலர்கள் மலர்ந்துகொண்டுதான் இருக்கின்றன, அவர்கள் மாற்றத்தைக் கொண்டு வரலாம் வருங்காலத்தில்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!