Tuesday, 29 August 2017

அங்கிள் கேஎப்சி சாம்பார் இருக்கா?

Image may contain: one or more people and people sitting

கரித்தூள், உப்பு போன்றவற்றை தேய்க்காதீர்கள், அது உங்கள் ஈறுகளை சேதப்படுத்தும். மஞ்சளை முகத்தில் பயன்படுத்தாதீர்கள், அது உங்கள் முகத்தை மிக விரைவில் முதுமையடையச் செய்யும். செக்கு எண்ணெய் அடர்த்தியாய் மிகுந்த கொழுப்பு நிறைந்து உள்ளது, பளீரென்று அடர்த்திக்குறைவாய், சுத்திகரிப்புச் செய்த எண்ணெயை உபயோகப்படுத்துங்கள், உங்கள் உடலில் கெட்டக்கொழுப்பு சேராது! இதெல்லாம் என்ன என்று உங்களுக்குத் தெரிகிறதா?

இந்தியப் பராம்பரியம், உணவு பழக்கம் எல்லாவற்றையும் குறை சொன்ன கார்ப்பரேட்டுகள், இந்திய மக்களை அவர்கள் பழக்கத்தை விட்டு, மேலே கூறியது போல் விளம்பரம் செய்து, நெடுந்தொலைவுக்குத் தள்ளி, பின்பு வியாதிகளை அதிகரித்து, அதற்கும் மருந்துகள் கொடுத்து, அப்படியே ஒரு யூ டர்ன் போட்டு, "என்ன உங்கள் பேஸ்ட்டில் உப்பு இல்லையா? மஞ்சளும், கற்றாழையும் கலந்த சிறந்த கிரீம்கள், கெட்டக்கொழுப்பு நல்ல கொழுப்பு என்றில்லை, கொழுப்பு அவசியம், செக்கு எண்ணெய் நல்லது, உங்கள் ஆரோக்கியத்திற்கு செலவு செய்யுங்கள், பளீரென்ற அரிசி வேண்டாம், கருப்பருசி, பழுப்பரிசி சாப்பிடுங்கள், நார்ச்சத்து சேரும்", இப்படியே மாற்றிப் பேசுபவர்கள் யார்? அதே கார்ப்பரேட்டுகள் தான்!

முதலில் சொன்னது சரியா அல்லது இப்போது சொல்வது சரியா? முதலில் சொன்னது தவறென்றால், அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிரையும் விட்டவர்களுக்கு இந்தக் கார்ப்பரேட்டுகள், பணத்தை வாங்கிக்கொண்டு எல்லாவற்றிற்கும் அனுமதிக்கொடுத்த அரசாங்கம் சொல்லும் பதிலென்ன, தரும் நீதி என்ன? இந்தியாவில் சர்க்கரை வியாதியும், புற்றுநோயும் ஏன் அதிகரித்தது? இந்திய மக்கள் ஏன் சர்வதேச மருந்து சந்தைக்கு சோதனை எலிகளாக ஆனார்கள்?

உண்மையில் இதற்கெல்லாம் பல்வேறு காரணங்களை அடுக்கினாலும், யார் என்ன சொன்னாலும், குறிப்பாய் திரைத்துறையைச் சார்ந்தவர்களோ, விளையாட்டு, மருத்துவம் இன்னபிற துறைகளைச் சார்ந்த பிரபலங்களோ வந்து எதைச்சொன்னாலும் நம்பிவிடும் அறியாமையும், தெளிந்த கல்வி இல்லாமையும், இன்னமும் பல இடங்களில் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்னும் பிற்போக்குத்தனமுமே பிரதான காரணங்கள் என்று சொல்லலாம் அல்லவா?

எப்போது வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று பிரபலங்கள் சொல்வதை உண்மையென்று நம்பி, நம் ஆரோக்கிய, நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவுப்பழக்கவழக்கங்களில் இருந்து மாறிப்போனோமோ அப்போதே நம் ஆரோக்கியமும் சீர்குலைய ஆரம்பித்துவிட்டது! எப்போது ஆரோக்கியம் சீர்குலைய ஆரம்பித்ததோ, அப்போதே நமக்குச் சோம்பலும் சோர்வும், வியாதிகளும் வந்து சேர்ந்துவிட்டது!

நிறைந்திருக்கும் வியாதிகளை மருந்துகளின் மூலம் வியாபாரமாக்கும் கார்ப்பரேட்டுகள், மக்களின் சோம்பலையும் கூட மூலதானமாக்கிக்கொண்டார்கள், குறைந்தப்பட்சம் ஒரு மஞ்சளையோ, மிளகையோ கூட பெரும்பாலானோர் வீட்டிலேயே வறுத்துப் பொடி செய்துக்கொள்வதில்லை, இன்று சாம்பார் வைப்பதும், ரசம் வைப்பதும் கூட ரெடிமேட் பொடிகளால் முடிந்துவிடுகிறது, அப்பாத்தாக்களுக்கு தெரிந்த சமையல் ரகசியம், உழைப்பு, அம்மாக்களிடம் பாதி வந்தது, அம்மாக்களின் மசாலாக்கள் இப்போதுள்ள சமைக்கும் இல்லத்தரசிகளிடம், இல்லத்தரசன்களிடம் கலர் கலராய் பிளாஸ்டிக் கவர்களில் வந்துச் சேர்ந்திருக்கிறது, நாளை பிள்ளைகளுக்கு உணவே கூட கவர்களில் வரலாம், இப்போதே வந்திருக்கிறது! ஏதோ காரணத்தால் முடியாதவர்களைத் தவிர்த்து விடுவோம், மற்றவர்களுக்கு இருப்பது சோம்பல் இல்லாமல் வேறென்ன? தோழியொருவர் சொன்னது, "காய்கறி கட் பண்ணியே கைவலிக்குது அமுதா!?" வெறும் இரண்டு பேருக்கான மதிய சமையலுக்கு சொன்னது!

வெளியே சாப்பிட்டுக்கொள்ளலாம், ரெடிமேட் உணவுகளை வாங்கிக்கொள்ளலாம், எப்போதும் விருந்து மருந்து என ஊர்சுற்றலாம், பல மணிநேரம் சீரியல்கள் பார்க்கலாம், சினிமா பார்க்கலாம், பிள்ளைப்பேறைக்கூட கத்தி வைத்து முடித்துக்கொள்ளலாம் என்றிருந்தால், ஆரோக்கியம் என்பது எங்கிருந்து வரும்?! இப்போது சொல்லுங்கள், உடலுழைப்பில்லாமல் வியாதிகள் சேர்ந்து அதற்கு மருந்துகள் என்று கொள்ளையடிக்கும் நிறுவனங்கள், சோம்பலையும் கூட எவ்வளவு அழகாக மூலதனமாக்குகிறார்கள்?

உதாரணத்திற்கு ஒன்று, சமோசா என்பது பெரும்பாலானோருக்கு பிடித்த நொறுக்குதீனி, அதுவும் மைதாவில் செய்யப்படும் ஆரோக்கியமில்லாத நொறுக்குத்தீனி, ஒரு விளம்பரம் பார்த்தேன், ஒரு விடுமுறையின் மாலையில் பிள்ளைகள் கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருக்க, விளம்பர இடைவெளியில், "இரண்டு அம்மாக்கள் சமோசா செய்கிறார்கள், ஒரு அம்மா இரண்டு மணிநேரமோ மூன்று மணிநேரமோ சமோசா செய்கிறார், அதாவது, உருளைக்கிழங்கை வேக வைத்து, மாவு பிசைந்து, வடிவமாக்கி, இன்னொருபுறம் மற்றொரு அம்மா, பாக்கெட்டைப் பிரிக்கிறார், ஏற்கனவே அதில் உள்ள சமோசாவை எண்ணெயில் போடுகிறார், பொரித்தெடுக்கிறார், அவ்வளவுதான் சில நிமிடங்களில் சமோசா ரெடி!" இதில் இரண்டு உத்தி உள்ளது, ஒன்று இரண்டு குழந்தைகளுக்கு சமோசா செய்வது மலைப்போன்ற காரியமென்றும், வேர்த்து விறுவிறுத்து பலமணிநேரம் வீணாகும் என்றும், அதே சமயம் இந்த விளம்பரம் குழந்தைகளை மையப்படுத்தி அவர்கள் காத்திருந்து சோர்வுறுவது போலவும், எது சிறந்தது?" என்று அவர்களை மையப்படுத்தி வரும் விளம்பரம்! அன்று நானும் மகனும் உண்மையில் சமோசா செய்ய பலமணிநேரமாகுமா என்று சோதிக்க முடிவு செய்தோம், அதுவரை நான் சமோசா செய்ததே கிடையாது, சில நிமிடங்கள் நெட்டில் குறிப்பெடுத்து, மைதாவை தவிர்த்து, கோதுமையை மாற்றாக்கி, மசாலா செய்வது முதல், மாவுப்பிசைந்து வடிவமாக்கி, சமோசா செய்து, சிறிது புதினா கொத்தமல்லிச் சட்னி செய்து, தட்டில் பரிமாறும்வரை ஆன நேரம் ஒரு மணிநேரத்திற்கும் குறைவே, அதுவும் 7 பேர் சமோசாவை சுவைத்தார்கள்! எனக்கு மூன்றுமணிநேரம் ஆகவில்லை!
 
இப்போது வரும் விளம்பரங்கள் மக்களின் உளவியலை சரியாக வியாபாரமாக்குகிறது, அது சிறந்ததாய் இருந்தால் பரவாயில்லை, இது சிறந்தது என்று பணம் வாங்கி, வாய்கூசாமல் பொய் சொல்லும் பிரபலங்கள் அதை பயன்படுத்துவதில்லை, எத்தனைப்பெரிய மோசடி இது!
உணவென்றில்லை, இன்றைய பிள்ளையார் சதுர்த்தியில், சும்மா போடச்சொன்னால் போட மாட்டார்களென்று முன்னோர்கள் பிள்ளையாருக்கு போடச் சொன்ன தோப்புக்கரணம் எப்படி பலனளிக்கிறது என்பதையும் நமக்கு வெள்ளைக்காரர்களே சொல்ல வேண்டியிருக்கிறது, நண்பர்கள் தோப்புக்கரணம் நல்லது என்ற வெள்ளைக்காரர்களின் ஆராய்ச்சி காணொளியை அனுப்பி வைத்திருக்கிறார்கள்! உணவே மருந்து, மருந்தே உணவு என்று கரடியாய் கத்தினாலும் இவர்களுக்கு காதில் ஏறாது, பார் கமல் சொல்லியிருக்கிறார், நயன்தாரா வந்திருக்கிறார், வெள்ளைக்காரன் சொல்லியிருக்கிறான் என்றால் உடன் காதுகொடுப்பார்கள்!

பல்வேறு ஆங்கில எழுத்தாளர்களின் புத்தங்களை படிக்கும் போதெல்லாம் இவர்கள் நம்முடைய முன்னோர்கள் சொன்னதைத் தாண்டி எதையும் சொல்லிவிடவில்லை என்று ஆணித்தரமாக தோன்றுகிறது, உதாரணத்திற்கு, இந்த இயற்கைக்கு நன்றி சொல்லுங்கள் என்று ஒருவர் சொல்கிறார், நம்முடைய பொங்கல் பண்டிகை அதைத்தான் செய்கிறது, அதை ஏன் நாம் உணரவில்லை,ஏனேனில் நம் முன்னோர்கள் எதையும் சரியாக ஆவணப்படுத்தவில்லை, ஏன் எதற்கு என்று கேள்விகளை ஊக்குவிக்கவில்லை, அதை நம்முடைய பெற்றோர்கள் கேட்டுத்தெளியவில்லை, ஆவணப்படுத்தவில்லை, வேப்பிலை நல்லது என்று ஆராய்ச்சி செய்து வெளிநாட்டவன் காப்பீட்டு உரிமை என்று வரும்போது பொங்கி எழுகிறோம், உடற்பயிற்சி முறைகளான யோகாவை, உடற்பயிற்சி என்று சொல்லாமல் சாமியார்களை வைத்து மதமாக்குகிறோம், நல்ல கருத்துகளை, ஆவணங்களை அரசுடமையாக்கமால் விட்டு விடுகிறோம், கேடுகெட்ட ஊழல்வாதிகளால் நிரம்பிய ஆட்சிகள் பணத்தையும் பதவியையும் தவிர எதிலும் அக்கறைக்கொள்வதில்லை!

சரி நாம் என்ன செய்கிறோம், ரசம் பொடியில் வருவதில்லை, அதை மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து, தாளித்து வருவது என்ற அடிப்படை விஷயங்களை, மஞ்சள், கற்றாழை, நலங்கு மாவு, சீயக்காய், என்ற பாரம்பரியங்களை, குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது, பலமணிநேரம் பார்க்கும் தொலைக்காட்சியின் நேரத்தை குறைத்துக்கொண்டு, உணவு, ஆரோக்கியம், உடற்பயிற்சி, உழைப்பு, நல்ல புத்தகங்கள் என்று இந்த தலைமுறை தன்னையும் மாற்றிக்கொண்டு, வருங்காலத் தலைமுறைக்கு நல்ல செய்திகளைக் கடத்தலாம், ஆவணப்படுத்தலாம், இல்லையென்றால், "அங்கிள், உங்க கடையிலே கேஎப்சி சாம்பார் வந்துடுச்சான்னு அம்மா கேக்கச் சொன்னாங்க" என்று அடுத்த தலைமுறை கேட்கும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!