Thursday 16 May 2019

இன்னொரு தகப்பனும் இல்லை


அழுக்கு துணிபோடும்
கூடையின் மூடியை
திறக்க எத்தனப்பட்டு
மூடியின் மீது
துணிகள்
குவிந்துக்கிடக்கின்றன
மூடியைத்திறந்து
கசங்கிய துணிகளை
சீர்செய்கிறாள்
வேலைக்காரியொருத்தி

அழகான விடியலில்
எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்க
விடியலின் ஈரத்தில்
பம்பரமாய் சமையல்கட்டில்
சுழன்றுக்கொண்டே
அவ்வப்போது எட்டிப்பார்க்கும்
காகத்தோடு பேசிக்கொண்டிருக்கிறாள்
ரசனைக்காரியொருத்தி

வீட்டின் பூஜையறைத் தொடங்கி
கழிவறை முடுக்குவரை
கலைந்தவைகளை சீர்செய்து
குப்பைகளையும் கறைகளையுமகற்றி
மனதுக்குள் தனித்தப்பாடலோடு
அலுவலகம் கிளம்புகிறாள்
எந்திரமொருத்தி

காலையில் தொடங்கி
இரவுவரை கசங்கி
அன்பாய் இரண்டு வார்த்தைகள்
எதிர்ப்பார்த்து
வசவுகளை வாங்கிக்கொண்டு
கோபத்துக்கும் அவள்தான்
காரணமென
பிச்சைக்காரியைப் போல்
நடத்தப்பட்டும்
தானாய் சிரித்துக்கொண்டு
பணிகளைச் செய்கிறாள்
பைத்தியக்காரியொருத்தி

பிய்ந்துப்போன
காலணியை மாற்றமுடியாமல்
போக்குவரத்தில் சிதைந்து
சம்பளம் அத்தனையையும்
கணவனிடம் கொடுத்து
காலின் தழும்புகளுக்கு
எண்ணெய் ஈட்டுக்கொண்டு
பளிச்சென்ற புன்னகையில்
மனதுக்குள் அழுகிறாள்
அடிமையொருத்தி

காதலால் களவாடிய
பொழுதுகள் எல்லாம்
கற்பனையான பொழுதுகளென்று
கொடூரத்தின் உண்மைமுகம்
சகிக்கமுடியாமல்
சுயத்தில் வழியும் குருதியோடு
சாவுக்கும் வாழ்வுக்கும்
இடையே
ஊசலாடுகிறாள்
மெல்லிய மனம்
கொண்ட மகளொருத்தி!

இப்படியே
ஒருத்தியையோ
ஒவ்வொருத்தியையோ
ஆசைகள் துறந்து
கற்றக் கல்வி மறந்து
உழைப்பை ஈந்து
மரியாதை இழந்து
காதலில் சிதைந்து
உறவில் முறிந்து
குப்பைகள் சுமந்து
எந்திரமாய் மாறி
எதிர்ப்பார்ப்புகள் துறந்திருக்கச்
சொல்லும் உறவுகளில்
யாருக்கும் பெண் மனம்
புரிவதில்லை
சட்டென தாயாய் மாறி
தாங்கும் மகள்களுக்கு
அப்பனுக்கு பிறகு
இன்னொரு தகப்பனும்
கிடைப்பதேயில்லை!



Image may contain: one or more people, people standing, ocean, sky, outdoor and water

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!