உடைந்து சிதறிய
கோள்கள்
சிதைந்த கற்களாக
புதிய கோள்களாக
பிரபஞ்சத்தில்
சுற்றிக்கொண்டிருக்கலாம்
திட்டமிட்டு
சீறிப்பாய்ந்த தோட்டக்கள்
சில குற்றவாளிகளின்
உயிர்களையும்
பல அப்பாவிகளின்
குருதிகளையும்
ருசித்திருக்கலாம்
சுற்றிலும்
வஞ்சகத்தால்
ஏமாற்றப்பட்ட மனிதர்கள்
எங்கோ வாழ்பவர்களாக
முற்றிலும் மடிந்தவர்களாக
மாறியிருக்கலாம்
பிறந்த உயிர்கள்
எல்லாம்
பிறந்ததின் பொருட்டு
விதையையோ
வினையையோ
விதைத்துவிட்டு
போயிருக்கலாம்
வறண்ட பூமியென்றும்
வளம் நிறைந்த பகுதியென்றும்
கருதாது
மழை தன் போக்கில்
பெய்யென பெய்திருக்கலாம்
இந்தப் பூமியில்
பசுமையாய்
அன்பும்
பகைமையுடன்
சிவப்பும்
இரகசியமாய்
நிரவியிருக்கலாம்
கைநிறைய
காசுடன்
பிச்சைக்காரனும்
அடுத்தவேளையின்
தேவையின் அழுத்தத்தில்
இயலாமையுடன்
ஒருவனும்
எங்கோ
நின்றுக்கொண்டிருக்கலாம்
அவரவர் கணக்கில்
வாழ்க்கை உழன்றுக்கொண்டிருக்க
காலம் யாருக்காகவும்
காத்திராமல்
வலிகளின் சுவடுகளை
பூமியில் பொதித்து
வைரமாய்
மாற்றிக்கொண்டிருக்கிறது
வாழ்ந்து விடுங்கள்!
No comments:
Post a Comment