சந்தித்துப் பேச
அழைத்துவிட்டு
கைபேசியில் யாருடனோ
நீண்ட நேரமாய்
கதைக்கிறார்கள்
மனமுருகி பாடும்
வேளையில்
வேறு எதிலோ லயித்துவிட்டு
மீண்டும் பாடச்சொல்லி
கேட்கிறார்கள்
அக்கறையாய்
கேட்பது போல்
எதையோ கேட்டுவிட்டு
பதில் தருமுன்
அவசர வேலையென
பறக்கிறார்கள்
புகைப்படங்களின்
நினைவூட்டல்களில்
ஆர்வமாய் பார்வையை
தந்துவிட்டு
வேறு ஏதோ நினைவில்
அத்தனையும் பொய்யென
மெய்பித்து நகர்கிறார்கள்
உருக்கமாய்
கேள்விகள் கேட்டு
காதுகளை இரவலாய்
நிறுத்தி
மனதை எதிலோ
மூழ்கடித்து
ம்ம் மென்று
அவமதித்து
மறந்துபோகிறார்கள்
அழகாய்
வரைந்த ஓவியங்களின் மேல்
ஆயிரம் கருத்து நிறத்தெளிப்புகள்
கொட்டிவிட்டு
நிறச்சேர்க்கை கோளாறென
பூதக்கண்ணாடி
அணிகிறார்கள்
தன்னை மதிக்கவேண்டும்
என்று விரிவுரை
நிகழ்த்திவிட்டு
இன்னொருவரின்
உணர்வுகளை மிதித்து
முடிவுரை எழுதுகிறார்கள்
நேசிக்கும்
மனித உறவுகளுக்கு
இரத்தமும்
சதையுமுமாய்
நாம் இருப்பது தெரிய
கைபேசியாய்
இருத்தல் வேண்டுமோ
இல்லை
கடன் தரும் வங்கியாய்
மாற வேண்டுமோ?
யோசித்து நிற்கையில்
“நலமா?” என்று கேட்டு
நகர்கிறான் ஒருவன்
அவன் முதுகுக்கு
புன்னகையை பரிசளித்து
மௌனமாய்
பயணம் தொடர்கிறேன்!
#கைபேசி_உலகம்!
No comments:
Post a Comment