Saturday, 20 April 2019

சோ வாட்

#சோ_வாட்?
————
கல்லூரியின்
விண்ணப்பப்படிவம் பெற
அவளின் விருப்பப்படி
பேருந்து நிலையத்தில்
குறித்த நேரத்தில் வந்து
இரண்டுமணி நேரத்திற்கும் மேல்
கால்கள் கடுக்க நிற்கிறேன்
அவள் வரவில்லை
இரண்டுச் சாலைகள்
தாண்டியிருந்த
அவள் வீட்டிற்கு செல்ல
அப்போதுதான் தூங்கி
விழித்திருந்தாள்
“ஓ வெயிட் பண்ணியா”
என்று சொல்லிவிட்டு
பல்விலக்க சென்றுவிட்டாள்
“இத்தனை நேரம்
காக்கவைத்ததற்கு
உனக்கு கொஞ்சம்கூட
உறுத்தலில்லையா?”
என்றதற்கு
“சோ வாட்?”
என்றாள் தோழி

அடுத்தநாள்
பத்தாம் வகுப்பின்
ஆங்கிலப்பொதுத்தேர்வு
படித்துக்கொண்டிருந்தப்
புத்தகத்தையும்
என்னுடைய குறிப்புத்தாள்களையும்
வீடு வந்து
வெடுக்கென்று பறித்தாள்
“அட ஏனடி பிடுங்குகிறாய்?”
என்றதற்கு
“உன் அழகான கையெழுத்தில்
குறிப்புகளைப் படித்தால்
எனக்கு விளங்கிவிடும்
இரண்டுமணி நேரத்தில்
தந்துவிடுகிறேன்”
என்றாள்
நடுஇரவுத்தாண்டியும்
வராத புத்தகத்திற்கு
மேல் மாடியில் இருந்த
அவளின் வீட்டுக்கதவை
அதிகாலைத்தட்டி
“ஒன்பது மணிக்கு பரீட்சை
நான் எப்போ படிக்க?”
என்று கோபப்பட
“சோ வாட்?”
என்றாள் தோழி!

உன் கண்ணில்
விழுந்தேனென்று
காதல்
கதைப்பேசி திரிந்து
ஓடிப்போகலாம் வா
என்றவன்
அய்யானாரைப் போல
அப்பன் மாப்பிள்ளை
பார்த்திருக்கிறான்
சீக்கிரம் வா
என்றதற்கு
வசதி வாய்ப்புகளோடு
தன் அம்மாவும்
பெண் பார்த்திருக்கிறாள்
“டேக் இட் ஈஸி”
என்றான்
“இந்தக் காதல்
செத்துவிட்டதா?”
என்ற கேள்விக்கு
“சோ வாட்”
என்றான் காதலன்!

அப்பன்
காட்டிய அய்யனார்
அவன் விருப்பமெல்லாம்
என் விருப்பமென்றான்
என் விருப்பமென்றால்
“அப்படியொன்று வேண்டுமா?”
என்றான்
விழிகளில் காதல்
செய்வதாய் எப்போதும்
பிதற்றி
அவ்வப்போது கட்டளையிட்டு
நாய்க்குட்டியாய்
நடத்தக் கற்றுக்கொண்டான்
“பிறந்த முதல் குழந்தை
உன் சாடையில் இல்லை
சரியா விசாரிச்சு இருக்கனுமோ?”
அவன் அம்மையின் நெருப்பில்
ஊமையாய் இருந்து
எண்ணெய் ஊற்ற
“ஏன் இப்படி?”
என்றதற்கு
“சோ வாட்?”
என்றான் கணவன்

இப்படியே வளர்ந்த
இந்த
“சோ வாட்” ஆட்களின்
வார்த்தைகள் எல்லாம்
வாட்களாய் அறுத்துக்
குருதி உறிஞ்சியபின்
அதெ “சோ வாட்”
மனிதர்களை
எதற்கெதற்கோ
எனையண்டி
எதிர்ப்பார்த்து
நிற்க வைத்த
காலத்தின் கோலத்தில்
நான் வெறுமையாய்
சிரிக்கிறேன்
உதவி வேண்டி
நிற்பவர்களிடம்
அந்த “சோ வாட்” டை
கவனமாய் தவிர்க்கிறேன்
எத்தனை இடர்
செய்தாலும்
அவமதித்தாலும்
“சோ வாட்?”
என்று மனதுக்குள்
நினைத்துப் புன்னகைத்துக்
கடக்கிறேன்
“சோ வாட்?!”



No photo description available.

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!