Saturday, 20 April 2019

மரமென்பது_மரமில்லை

“யாரிடம் பேசுகிறாய்?”
என்றாள்
“அதோ அந்த அரசமரத்திடம்!”
என்றேன்
“அது பேசுமா?”
என்றாள்
“ஆமாம் நீயும்
கொஞ்சம் கேட்டுப்பாரேன்
உயரம் தொட்டக்கதையை
சொல்கிறது
கிளைப்பரப்பிய கதையைச்
சொல்கிறது
தான் கண்ட
முறிந்துபோன
ஒரு காதலையும்
இங்கு பசியால் மறித்து
புதைந்துப்போன
ஒரு நாயைப்பற்றியும்
சொல்கிறது”
என்றேன்
“ம்ம் நீ என்ன
சொல்கிறாய் அதனிடம்?”
என்றாள்
“ஏதோ சொல்கிறேன்
இழந்ததை,
பெற்றதை சொல்கிறேன்
யாரும் கேளாமல் விட்ட
துயரனைத்தும் சொல்கிறேன்
வெற்றியையும்
தோல்வியையும் சொல்கிறேன்
மானுடம் தோற்றதை சொல்கிறேன்
இவையனைத்தும் யாரிடமும்
சொல்லாதே என்றும்
சொல்கிறேன்”
என்றேன்
“ம்ம் உனக்கும் அதற்குமான
மொழியென்ன
எப்படி புரிந்துக்கொள்வீர்கள்?”
என்றாள்
“நீயும் நானும்
பேசிக்கொள்ள
மொழியுண்டு
எனினும் நம்மிடம்
வார்த்தைகளில்லை
பிறந்தநாள் வாழ்த்துக்கூற
நேரமில்லை
இறந்ததற்கு வருவதற்கோ
நலமா என்று கரம்பிடித்து
விழிப்பார்த்து பேசுதற்கோ
கைபேசி எடுத்து
சில நிமிடம்
கதைப்பதற்கோ நம்மிடம்
நேரமேயில்லை
என்னிடம் உனக்கு
அவசியம் ஏதோ வேண்டுமென்ற
பொழுதில்
நீ வந்துநிற்பாய் இப்போதுபோல
இந்த மரத்திடம்
நான் பேச
என்னிடம் அதுபேச
இருவருக்கும்
காத்திருக்கும் அவசியமில்லை
எதையும் புரிந்து
தீர்க்க வேண்டிய
லாப நஷ்ட கணக்குகள்
ஏதுமில்லை
இருவருக்கும் அன்புண்டு
நிறைந்த அன்பில்
நேரமும் காரணமும்
இடையில் வருவதேயில்லை
இதோ காற்றாக கலந்திருந்து
நலம் விசாரிக்கிறது
நேசம் பரவியிருக்கிறது
இந்த வெளியெங்கும்
வா வந்தமர்
மௌனமாய் கதைப்படிக்கலாம்!”
என்றேன்
விழிகளில் பரிகாசத்துடன்
“நேரமில்லையென்று”
பறந்துவிட்டாள்
சில்லறையை சிதறடித்தது
போல் அப்போதும்
சிலிர்த்து தழுவியது மரம்
நானிருக்கிறேனென்று!

#மரமென்பது_மரமில்லை!


Image may contain: one or more people, outdoor and nature

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!