Saturday, 20 April 2019

காட்சிப்பிழைகள்


போர்க்களத்தில்
நிற்கிறாள்
எதிர்மறையாளார்கள்
உக்கிரமாய்
போர் புரிகிறார்கள்
பெரும் வார்த்தை வன்முறை
ஆயுதங்களோடு!

ஆயுதமற்று
நிற்பவள் கையேந்துகிறாள்
தூர ஒளிந்திருப்பவர்கள்
அவசரமாய் ஆயுதம்
மறைக்கிறார்கள்
நேர்மறையென
போதிக்கிறார்கள்

நேர்மறையின் எண்ணம்
கொண்டுதானே
போர்க்களம் ஏகினேனென்று
உதவி வேண்டி
கையேந்துகிறாள் மீண்டும்
அவசர வேலையிருக்கிறது
பிறகு வருகிறோமென்று
சிந்தனையாளர்கள்
விலகி ஓடுகிறார்கள்
எண்ணம் கொண்டும்
கைகள் கொண்டும்
போராடி களைத்தவளின்
மனதையும் உடலையும்
அத்துமீறி கொய்கிறார்கள்
கொழுக்கொம்பென
அவள் பற்றியதும் பாம்பாகி
கொத்திவிட்டு
வழுக்கியோடுகிறது அவசரமாய்

நீலம் பூத்த உடலோடும்
தேடும் கண்களோடும்
நிலம் சாய்கிறாள்
ஏதோ ஒரு மாலை
அவள் உடலில் விழுகிறது
வீரமென்று
நேர்மையாளர்கள்
கைதட்டி ஆர்பரிக்கிறார்கள்
தியாகமென்று
சிந்தனையாளர்கள்
கவிதையெழுதுகிறார்கள்
பாம்பாய் மாறிய
உறவுகளெல்லாம்
அன்பென்று
முதலைகண்ணீர்
வடிக்கிறார்கள்

காட்சிப்பிழைகளென
மனிதர்களை
தாங்க முடியா காற்றொன்று
ச்சீ ச்சீ யென்று
அந்த மாலையை
புரட்டி வீசி
வேகமாய் புழுதிவாரி
குழியொன்றெடுத்து அவளை
இட்டு நிரப்பி
பூமியோடு சேர்த்துக்கொண்டு
கண்ணீர் பெருக்க,
வாழ்க்கையின் உன்னத
அன்பையெல்லாம்
பெரும் மழையாக பெய்த
மேகங்களின் ஈரத்தில்
புதைந்த பூமியிலிருந்து
அவள் மலர்ந்திருந்தாள்
பூவாக!

#காட்சிப்பிழைகள்


Image may contain: one or more people

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!