Saturday, 20 April 2019

இரகசிய_மரணங்கள்


இரகசிய_மரணங்கள்

பள்ளிக்குச்
செல்லும் வழியில்
மாதா கோவிலின்
மரத்தடியில்
குழுமியிருந்த காகங்களின்
இரைச்சலை
விடலைகள் கல்லெறிய
பட்டென்றுப் பறந்த
அவைகள்
நம் தலையில்
இட்ட எச்சங்களை
அதனை
ரகசியமாய் அவசரமாய்
துடைத்தெரிந்த செய்திகளை
அவ்வப்போது பின்னால்
தொடர்ந்து வந்து
பூவைத் தந்தோடிய
அடுத்த வீட்டு சண்முகத்தின்
முகபாவனையை
ஆசிரியரின் கேள்விக்கு
மரப்பெஞ்சின் அடியில்
புத்தகத்தை ஒளித்து
கேள்விக்கு விடையை
நான் திறந்துக்காட்ட
விடையோடு கேள்வியையும்
நீ அப்படியே படித்துக்காட்டி
இருவருக்கும்
வாங்கித்தந்தக் கொட்டுகளை
பள்ளிவிட்டு மாலையில்
தள்ளுவண்டியில்
வாங்கிய நாவல்பழங்களையென
வகைதொகையில்லாமல்
ஒன்றுவிடாமல்
எல்லாவற்றையும்
பகிர்ந்துகொண்டோம்

இப்போதும் நீ
உன் பிள்ளைகளோடு
இன்னமும்
அதே பள்ளிச்சிறுமியாய்
என்னோடு எல்லாமும் பகிர்கிறாய்
அப்படியே சிரிக்கிறாய்
உடல் தளர்ச்சியையும்
மன அயற்ச்சியையும்
பகிர்ந்துக்கொண்டு
உன்னால்தான்
துணிச்சலாய் வாழ்கிறேன்
என்கிறாய்
எப்போதும் துணிச்சலாய்
இருப்பதும்
பொய்யான ஒரு வேடம்தான்
என்று எப்படி உன்னிடம்
சொல்ல?

உறைந்திருக்கும்
புன்னகையின் பின்னே
ஒளிந்திருக்கும் சோகத்தை
உன் விழிப்பார்த்து
எப்படிக் கடத்த?
கொஞ்சம் கொஞ்சமாய்
உயிரை தின்றுக்கொண்டிருக்கும்
மனத்தளர்ச்சியை
எப்படி எடுத்துக்காட்ட?
உற்றத்தோழியிடம்
பொய்யுரைக்கிறேனென்ற
உண்மையை எப்படிப் பகிர?

இதுவும் கடந்துப்போகுமென்று
இறுக்கமாய் உனையணைத்து
உன் விழிகளில் வெளிச்சமேற்றி
என் பிரிவையும் மறைவையும்
எப்போதும் அறியாமல்
வாழ்க்கையை நீ வாழ்ந்து
கடக்கவேண்டுமென்று
உன் விழிகள் காணா தூரத்திற்கு
நான் விலகிச்செல்கிறேன்

சில பிரிவுகள்
ஏமாற்றமோ துரோகமோ அல்ல
அவசியமானதாகவும்
இருக்கலாம் தோழி
அவையெல்லாம்
இரகசிய மரணங்கள்
மறைவாய் நின்று
நேசிக்கும் உயிர்களிடம்
மன்னிப்புக்கோரும்
நானும் கேட்பேன்
உன்னிடம் ஓர்நாள்!


Image may contain: 1 person, ocean, outdoor and water

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...