Saturday, 20 April 2019

விடுதலை

தன் அறுபதாவது
வயதில் கணவனை
இழந்தக் கோமுப்பாட்டி
அன்று மலர்ந்த மலர் போல
சிரித்தாள்

உங்க பையனுக்கு
படிப்பும் வராது
ஒரு மண்ணும் வராது
என்ற ஆசிரியரின்
வார்த்தைகளில்
வெளியே வந்த விஜயன்
இருபது வருடமாக
வெள்ளித்திரையின் நாயகனாக
பல்வேறு பரிணாமங்களில்
மின்னிக்கொண்டிருந்தான்

விஷச்சாராயத்தில்
அப்பன்
இறந்தச்செய்திக்கேட்டு
அழும் அம்மாவின்
கண்ணீர் துடைத்த
பத்துவயது மகேஷ்
நண்பர்களுக்கு
இனிப்பு வழங்கினான்

வயிற்றில் உதித்தக்
கருவுக்காக
கணவனின் பேராசையில்
அப்பனை கடன்காரனாக்கிய
மகள்
சட்டென்று ஏற்பட்ட
கருச்சிதைவில்
விட்டு விடுதலையாகிப்போனாள்

பின்வாசல் வழியாக
மந்திரியான அழகேசன்
சாராய வியாபாரத்தை
அரசுடமையாக்க
முழுப்போதையில் வந்த
லாரியொன்று
சொகுசுக்காரில் சென்ற
அவனின் வாரிசுகளைக்
கொன்றுபோட
அழகேசன் சித்தம்
முறிந்துப்போனான்

காடழித்து
வயிறு வளர்த்த
கஞ்சா கருப்பன்
சாமியாராக
மகிழுந்தில் உலாவர
ஓங்கி ஒலித்த இடியொன்று
உயர்ந்த மரத்தை முறித்து
வண்டியின் தலையில் வீச
அந்தக்கடைசி மரத்தைக்
காசாக்க முடியாமல்
அவன் நசுங்கிப்போனான்

மனிதர்களுக்கும் இயற்கைக்கும்
உள்ளும் புறமும்
எந்த விடுதலையும்
இழப்பில்லாமல்
கிடைத்துவிடுவதில்லை!

#விடுதலை


Image may contain: sky, bird, cloud, outdoor and nature

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!