Saturday, 20 April 2019

பிறக்காமல் இருக்கட்டும்

சிறு வயதில் மணம் முடித்து, அடுப்படியிலும், படுக்கையறையிலும், பின் கணவன் இறந்தால் அவனுடன் பிண மேடையிலும் உயிருடன் எரிக்கப்பட்ட பெண்களின் நிலைமை ஒரு நாளில் மாறிவிடவில்லை, எத்தனையோ கோடிப் பெண்கள் மாற்றம் வரும் என்று எதிர்ப்பார்த்து, தியாகம் மட்டுமே வாழ்க்கை என்று முடிந்துபோனார்கள், பல நூற்றாண்டுகள் கடந்து, இன்று பெண்களுக்குக் கிடைத்திருக்கும் கல்வி, பள்ளியில் சில ஆசிரியர்கள் செய்யும் பாலியல் பலாத்காரத்தில் , மேல்படிப்பிற்கு சில பேராசிரியர்கள் பெண்கள் உட்பட பெண்களைப் படுக்கைக்கு அழைக்கும் வியாபாரத்தில் மீண்டும் பெண்களை கற்காலத்திற்கே இட்டுச்செல்லும் நிலைமையை மெதுவாக உருவாக்கிக்கொண்டிருக்கிறது, இன்னமும் ஒரு தலைமுறைப் பெண்களின் கல்வி அவசியத்தை உணராத குடும்பங்கள் உள்ளன, இதுபோன்ற நிகழ்வுகள் பெற்றோர்களுக்குப் பெரும் அச்சத்தையே ஏற்படுத்தும்!

ஆடையின் காரணம் என்று பாலியல் கொடுமைகளை நியாயப்படுத்தியவர்களுக்கு, இன்று பிறந்தக் குழந்தைகளையும், சிறுமிகளையும் கொன்றுப் புதைக்கும் நிலைக்கு சப்பைக்கட்டுக் கட்ட முடியவில்லை.
எல்லைப்பாதுகாப்புக்காக என்று நம்பிக்கொண்டிருக்கும் இந்திய இராணுவம், பெண்களையும் குழந்தைகளையும் காஷ்மீரில் வேட்டையாடியச் செய்திகள் கேட்கவும் காணவும் சகிக்கவில்லை!

சிறுவன் முதல் கிழவன் வரை பெண்குழந்தைகளை, பெண்களைப் புணருவதை, கொல்வதைத் தடுக்க இதுவரை எந்தக்கடுமையானதொரு சட்டமும் இயற்றப்படவில்லை, ஆஸிபா வின் வழக்கு முதல் இதற்கு முன் பல வழக்குகள் வரை, “பாலியல் பலாத்காரம், அதனால் என்ன?” என்ற அதிகாரப்போக்கே இனி எந்தக்கடுமையான சட்டமும் இயற்றப்படாது என்பதற்கு சாட்சி!

எந்தச் சட்டம் இயற்றப்பட்டாலும், அதை நியாயமாக செயல்படுத்தினால் முதலில் தண்டனை பெறுபவர்கள், சட்டம் இயற்றியவர்களின், சட்டத்தைச் செயல்படுத்தியவர்களின் வீட்டு வாரிசுகளே! எப்படி சட்டம் இயற்றுவார்கள்?!

இந்தத் தேசம் ஆண்களின் தேசம், கல்வியில், காதலில், திருமணத்தில், வேலையில், கலவியில், வாழ்க்கையில், மரணத்தில் கூட பெண்களுக்கு எந்தச்சுதந்திரமும் இல்லை, எல்லாமே ஆண்களின் தீர்மானத்தில்தான் உள்ளது!

சற்று சுதந்திரமாய் சிந்திக்கும், ஆடையணியும், தன் முடிவைத்தானே எடுக்கும், தன் துணையைத்தானே தேர்ந்தெடுக்கும் அல்லது பிரியும் அத்தனைப்பெண்களையும் ஆண் சமுதாயம், “தேவரடியாள்” என்ற வார்த்தையை மருவி அழைக்கும், ஒரு பெண்ணை இகழ பெண் குலத்தை இகழும், பயணத்தில் உடன் பயணிக்கும் பெண்களின் கால்கள் சற்றே விலகியிருந்தால் தன் நடுவிரலை உயர்த்தி காண்பிக்கும், தான் எத்தனை அவலட்சணமாய் இருந்தாலும் தனக்கு துணையாய் லட்சணமான பெண்ணைத்தேடும், பிற பெண்களைப் புறத்தோற்றத்தைக் கொண்டு கேலிப் பேசும், எந்தப்பகையென்றாலும், வயது வித்தியாசம் இல்லாமல் யோனியைக் குறிப்பார்க்கும், பெண்ணின் ஆடைகளில் கற்பனையில் ஆடையவிழ்த்துக் கிளர்ந்தெழும், வேலையிடத்தில், பெண்ணின் புத்திசாலித்தனத்தை எதிர்கொள்ள முடியாமல், அவள் ஒழுக்கம் பற்றிப் புறம் பேசும், இத்தனை மனக்கேவலத்துடன் உலா வரும் ஆண்குலத்தை பெற்றதும் வளர்த்ததும் பெண்
குலம்தான் என்பதே வாழ்க்கையின் முரண்!

என்னுடன் பணிபுரிந்த சமபதவியில் இருந்த ஒருவனுக்கு இதே மனவியாதி இருந்தது, “உன் அம்மாவும் சகோதரியும் பெண்கள்தானே?” என்றால் “அவர்கள் exception” என்பான், இதே மனவியாதி இங்கே பல ஆண்களுக்கு உள்ளது, தன் அம்மா தெய்வம், பிற தாய்மை அரக்கி,தன் மனைவி ஒழுக்கத்தின் சிகரம், பிறரின் மனைவி விலைமாது, தன் மகள் தேவதை, பிறரின் மகள் காமத்தின் வடிகால், உண்மையில் “புறம்” பேசுவது ஆண்களே, எந்தவொரு பெண்ணைப்பற்றிய சிந்தனையும் எந்தவொரு ஆணுக்கும் “மரியாதைக்குரியதாக” எல்லா சந்தர்ப்பத்திலும் இருப்பதில்லை!

எல்லாப் பெண்களையும் ஆண்கள் அம்மாவாக, சகோதரியாக நினைக்க வேண்டாம், அவர்களை சகமனுஷிகளாக மதிக்க கற்றுத்தந்தால் போதும், அதுவரை இந்தப்பூமியில் பெண்குழந்தைகள் பிறக்காமல் இருக்கட்டும்!

No photo description available.

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!