Saturday, 20 April 2019

ஒழுக்கம்_ஒரு_சிக்கலான_விஷயம்

#ஒழுக்கம்_ஒரு_சிக்கலான_விஷயம்
-------------------------------------------------------------

நான் அறிந்தப் பெண்மணியொருவர் கணவர் விடாது கொடுமைப்படுத்துகிறார் என்றும், எத்தனை முறை காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், தம் பெண்குழந்தைகளுக்காக மறைந்து வாழ தலைப்பட்டதைப் பகிர்ந்துக்கொண்டார், அதுவும் காவல்துறையில் ஒருவர் “யார்தான் குடிக்கல, அடிக்கல, புருஷன் இல்லாம வாழ்ந்துடுவியா நீ?, வேற யாராச்சையும் பார்த்துகிட்டியா?” என்று கேவலப்படுத்தியதால் மனம் நொந்தததையும் பகிர்ந்துக்கொண்டார்!

நேற்று ஒரு பெண், வாட்ஸ் அப்பில் தன் கணவர் தன்னையும் தன் ஆறு வயது மகனையும் கொடுமைப்படுத்துவதை பகிர்ந்துக்கொண்டு தற்கொலையும் செய்துக்கொண்டார் என்ற செய்தியையும், இன்று அந்தக் காணொளியையும் காண நேர்ந்தது, தன் பிள்ளைக்காக வாழ வேண்டும் என்றும், யாராவது தம்மை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார், தன் கைபேசியைக் கொடுத்து உதவியவரும், அந்தக் காணொளியைக் கண்டவர்களும் உதவும் முன் வாழ்க்கையை முடித்தும் கொண்டார், கணவனை காவல்துறை கைது செய்திருக்கிறது, பிள்ளை பெண்ணின் தாயிடம் அடைக்கலம் ஆகியிருக்கலாம்!

இரண்டிலும் நாட்டில் நிகழும் அவலம் பின்வருமாறு வெளிப்படுகிறது;
1. குடியால் கெடும் குடிகள்
2. ஆண்களுக்கு வாக்கலாத்து வாங்கும், கலாச்சாரக் காவலர்களாக காவல்துறையில் இருக்கும் அதிகாரிகள்
3. “கள்ளக்காதல்” என்ற பதத்தில் பெண்கள் மீது கட்டவிழ்க்கப்படும் மனரீதியான வன்முறை
4. இயலாமையும் தற்கொலைகளும், கொலைகளும்
5. மனச்சிதைவுக்கு உள்ளாகும் இளைய தலைமுறை, பெருகும் ஆதரவற்றப் பிள்ளைகளின் எண்ணிக்கை.

குடியைப் பற்றி சொல்லுவதற்கு ஏதுமில்லா அளவு உலகம் சொல்லிவிட்டது, ஆட்சியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை குடி பரவி இருக்கிறது, குடிகாரர்களிடம், குடியை வளர்ப்பவர்களிடம், குடியால் ஏற்படும் வன்முறைகளுக்கு எந்தத் தீர்வும் கிடைத்துவிடப்போவதில்லை, நாட்டில் நடக்கும் பெரும்பாலான வாகன விபத்துக்களும் குடியால் (?!) என்று பதிவாகி, பின்பு குற்றம் செய்தவர்கள் வெளியே எளிதாய் வர ஏதுவாகிறது!

இந்தத் தற்கொலைகளைப் பற்றி என்ன சொல்வது, தற்கொலை கோழைத்தனம் என்று எளிதாய் சொல்லிக்கடந்துவிடலாம், சம்பந்தப்பட்டவர்களின் மனநிலையும் சூழ்நிலையும் முற்றிலும் உடைந்துப்போகும்போதே தற்கொலைகள் நிகழ்கின்றன, இந்தச் சூழ்நிலை கொஞ்சமேனும் மாறினால் மனநிலையும் மாறும் தானே? குடியால் ஏற்பட்ட ஒரு வன்முறைச் சூழலை ஒரு பெண் எப்படிக் கடப்பது? ஒன்று ஆடவன் குடியை விடவேண்டும் இல்லை இந்தச் சமூகம் பெண்ணின் மணவிடுதலைக்கு ஒரு அச்சுறுத்தல் இல்லா சூழ்நிலையை உருவாக்கவேண்டும், இரண்டுமே சாத்தியமில்லை என்றால் பெண்கள் சுயசிந்தனையுடன், தற்கொலைச் செய்துக்கொள்ளும் நேரத்தில் இந்தச் சமூகத்தைப்புறந்தள்ளி வாழ்ந்தால் என்ன என்று சிந்தித்தாலே மற்ற மாற்றாங்களும் தானாய் வந்துவிடும், அதுவும் ஒரு மூன்றாம் உலகப்போர்தான்!

தற்கொலையைத் தவிர்க்க நினைக்கும பெண்கள் ஓடிவிட்டால், “அவள் யாருடனோ ஓடிவிட்டாள்” என்பதாகவே பழிச்சொல் சுமத்தப்படுகிறது, சிலர் மாற்றுக்காதலால் ஓடினாலும், வாணலியில் இருந்து நெருப்பில் விழுந்தக் கதையாக அதுவும் மாறி, அப்போதும் பெண்கள் தற்கொலைச் செய்துக்கொள்கிறார்கள், அந்தக் தற்கொலைக்குக் காரணம் இன்னொரு ஆணுடனான தோல்வி என்பதைவிட, ஏற்கனவே பழிச்சொல் சுமத்திய சமூகம், “உடல் அரிப்புக்காக” சென்றவளுக்கு இதுதான் கிடைக்கும் என்று மீண்டும் ஒரு ஏளனச்சொல் வந்துவிடுமே என்று பதைக்கிறார்கள், அதுவே அவர்களின் முடிவுக்கும் காரணமாகவிடுகிறது!

சிலவேளைகளில் விட்டில் பூச்சிகளாய் பெண்கள் தகுதியில்லாத, தகாத மாற்றுக்காதலில் விழும்போது, அது பிள்ளைகளின் மீது வன்முறையாய், கொலையாய் மாறிவிடுகிறது! சிலரைத் தவிர பெரும்பாலான பெண்களின், ஆண்களின் மாற்றுக்காதல் எல்லாம் காமம் தீர்ந்ததும் பல்லிளித்துவிடுகிறது, பல ஆண்களின் மாற்றுக்காதல் என்பதெல்லாம் இன்னொரு உடலின் தேவைக்காக என்பதாகவே அமைந்துவிடும் சமூக மனநிலையே உள்ளது, ஒருவன்/ஒருத்தி பிடிக்கவில்லையென்றால் மணவிலக்கு பெற்று பிடித்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் சமூகச்சூழலும், மனதைரியமும் வாய்ப்பதில்லை, கணவனை உதறிவிட மனைவி துணிந்தால் அவளை கூர்மையாகவும், மனைவியை விடுத்து கணவன் அகன்றால் அவனை சாதாரணமாகவும் உலகம் விமர்சனம் செய்கிறது! அதுவும் ஆண்களுக்கு சாதகமான சூழலை அமைத்துத்தருகிறது!

குடும்ப வன்முறையென்பது பெண்களுக்கு மட்டும்தானா என்றால், இல்லை, அது ஆண்களுக்கும் இருக்கிறது, கணவனின் வயிற்றுக்கும், மனதுக்கும் இதமளிக்காத பெண்கள் கணவனை தம் கைக்குள் பொம்மையாக வைத்திருக்கும் நிலையையும், அவன் பெற்றவரை பிரித்து, வெறும் மண்டையாட்டும் ஆட்டைப்போல், தகாத சொற்களால் வசைப்பொழிந்து ஆட்டுவிப்பவர்களும் உண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் நில வழக்கு சம்பந்தமாக சென்றிருந்தப்போது, விவாகரத்து வழக்கு முடிந்த வெளியே வந்தவரை அவரின் மனைவி பாய்ந்து வந்து செருப்பால் அடித்தும், காதுக்கூசும் வண்ணம் தடித்தச்சொற்களால் வசைப்பாடியும் கொண்டிருந்தார், அத்தனை அடிகளையும், வசைகளையும் ஒருவித அழுத்தத்துடன் உடல் விறைப்புடன் ஏற்று கணவர் எங்கோ பார்த்தபடி நின்றிருந்தார், பெண் காவலர்கள் வந்து அந்தப்பெண்ணை இழுத்துச்சென்றனர், ஓடிவந்த ஒரு முதியப்பெண்மணி, “இந்த வாயாலதான் உன் தலையில நீயே மண்ணை வாரிப்போட்டுகிட்டே, இன்னுமா நீ திருந்தல?” என்று அவரை இழுத்துச்சென்றார். எல்லா இடங்களிலும் குடிகார கணவர்களிடம் பெண்கள் அடிவாங்கும்போது, ஆறடிக்கும் உயரான ஒரு ஆணை, ஐந்தடிக்கும் குறைவான ஒரு பெண் அத்தனை ஆக்ரோஷமாக அடித்ததும், தகாத சொற்களால் அர்ச்சனை செய்ததும், யார் மீதான பரிதாபத்தையும் விட ஒரு வேடிக்கை மனநிலையே எல்லோருக்கும் ஏற்படுத்தியது!

படித்தவர், படிக்காதவர் என்ற வரைமுறை இல்லாமல், வாழ்க்கையின் முடிவு எல்லாம், பெண்களின்/ஆண்களின் மன உறுதியையும் பொருளாதாரச் சுதந்திரத்தையும், பிள்ளைகளின் நலத்தையும், தெளிந்த அறிவையும் கொண்டே அமைகிறது!

தெளிந்த அறிவுக்கொண்டவர்கள் ஓடிப்போக மாட்டார்கள், மறுமணம் செய்துக்கொள்ள மாட்டார்கள் என்றும், ஒடிப்போனவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்கள் என்றும் எதையும் நாம் அறுதியிட்டுக் கூறிவிடமுடியாது, அதுபோல ஓடிப்போனவர்கள்/காணாமல் போனவர்கள் எல்லாம் ஒழுக்கம் பிறழ்ந்தவர்கள் என்றும் நிச்சயம் சொல்ல முடியாது, பதினெட்டு வயதுக்கு மேல் பெண்கள் காணாமல் போனால் இந்தச் சட்டமும் சமூகமும் அவர்களை “எவனுடனோ ஓடிப்போனவள்” என்றே கருதி வழக்கை முடித்துக்கொள்கிறது, முதற்பத்தியில் கூறியது போல உண்மையில் முப்பதுகளில் தன் உழைப்பை மட்டுமே நம்பி குழந்தைகளுக்காக தனியே வாழும் பெண்களும் இருக்கிறார்கள்! சகித்துக்கொண்டு துணையுடன் வாழ்பவர்களை, மாற்றுக்காதலால் மணம் முறித்து வேறு துணையுடன் வாழ்பவர்களை விட ஆபத்தான ஒரு கூட்டம் இருக்கிறது, அது துணையுடன் வாழ்ந்தாலும், மேலே கூறிய வகைகளைக்கேலி செய்து, பிறர் ஒழுக்கத்தை எப்போதும் எள்ளல் செய்து, தம்மை ஒழுக்கத்தின் பிரதிநிதியாக காட்டிக்கொண்டு மனதளவில் ஒப்புமைப் படுத்திக்கொண்டு, பெருமூச்செறிந்து கொண்டிருக்கும்!

பல ஆண்டுகளுக்கு முன்பு, உடன் பணிபுரிந்த பெண்ணொருவர் (இப்போது மத்திய அரசுப்பதவியில் இருக்கிறார்) எப்போதும் தன் காதல் கணவரை பற்றி அவரின் அருமைப்பெருமைகளைப் பற்றி அளவளாவிக்கொண்டிருப்பார், “ஆகா எத்தனை அருமையான ஜோடி, எத்தனை அருமையான காதல்”, என்று எல்லோரும் புகழ்ந்திருக்கிறோம், ஒருநாள் அந்தப்பெண் வழியில் தன் முன்னாள் காதலரை கண்டிருக்கிறார், அவர் தன் மனைவியுடன் நல்ல வசதியான நிலையில் இருப்பதை அறிந்துக்கொண்டார், அவருடன் மீண்டும் பேச ஆரம்பித்தவர், அவர் வேற்று மதத்தைச் சேர்ந்தவராய் இருந்ததால், தாம் அவர் காதலை நிராகரித்துவிட்டதாகவும், அது தான் செய்த பெரிய தவறென்றும் புலம்ப ஆரம்பித்தார், நடுத்தரமான தம் குடும்பச்சூழலும், முன்னாள் காதலிரின் செல்வச்செழிப்பும் அதுவரை அவர் கொண்டாடி வந்த கணவரின் அன்பை ஒன்றும் இல்லை என்று சொல்லச்செய்தது, “யூஸ்லெஸ் பெல்லோ” என்று பிற்பாடு அவர் தன் கணவனைப்பற்றி பேச ஆரம்பித்தார், பூனைக்கு யார் மணிக்கட்டுவது என்ற குழப்பத்தில் எல்லோரும் சலம்பிக்கொண்டிருக்க நானே ஒருநாள் அன்பை காசு பணம் ஜெயிப்பது போல, காசு பணத்தை அன்பும் ஜெயிக்கும் என்று எனக்குத்தெரிந்த அளவில் கூற, பேசுவதை குறைத்துக்கொண்டார்!

ஆணுக்கும் பெண்ணுக்குமான இந்த மன இடைவெளியை, பாதுகாப்பற்ற, வாழ்க்கைக் சுதந்திரம் இல்லாத இந்தக்குடிகார தேசத்தை மாற்றாத வரை, ஒழுக்கத்தை ஆணுக்கும் என்று அமைக்காத வரை, மனப்பாடக் கல்வித்துறையில் சீர் செய்யாத வரை, விரும்பாத ஒருவரை வற்புறுத்திக் காதல் செய்வதும், திருமணத்திற்கு பின் வாழ்க்கையைச்சிதைப்பதும், விலகிச்செல்லும் சுதந்திரம் மறுப்பதும், இங்கே வழக்குகளை மட்டுமே அதிகரிக்கும்!

கொலைகள், தற்கொலைகள், பிள்ளைகளுக்கான மனஅழுத்தம், உயிர்பறிப்புகள், சமூக குற்றங்கள், விவாகரத்துக்கள் எல்லாம் எண்ணிக்கையில் ஏறிக்கொண்டேபோகும்!

ஒழுக்கம் ஒரு சிக்கலான விஷயமாகிக்கொண்டிருக்கிறது, வேறு என்னதான் செய்வது என்றால், “வாழ்வதை, நம்பிக்கையுடன் வாழ்வதை, பிற உயிர்க்கொலை செய்யாமல் வாழ்வதை மட்டும் ஆணோ, பெண்ணோ குழந்தைகளின் மனதில் விதைத்து, ஒர் நிமிர்வான வருங்காலத்தைச் சாத்தியப்படுத்துங்கள், போதும்!”


March 3, 2018

Image may contain: text

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!