Thursday, 29 September 2016

நட்பு


எதற்கோ
அழுதழுது வீங்கிய
இமைகளைக் கழுவி
பூச்சிக் கடித்ததென்றும்
உறக்கமின்மையென்றும்
ஒவ்வாமையென்றும்
சொல்லக் காரணங்களுண்டு
ஏனையோரிடம்

விழிவட்ட வளைவிலிடும்
மையை
இமைகளின் மேலோரத்தில்
மெலிதாய் வரைந்து
மிகக் கவனமாய்
செய்யப்பட்ட
ஒப்பனைகளுடனும்
ஓட்ட வைத்த புன்னகையுடனும்
எப்படிச் சென்றாலும்
படித்து விடுகிறாள்
உயிர்த்தோழி
விழியினூடே ஆழ்மனதை

"அழுதியா என்ன?"
அவளின்
ஒற்றைக் கேள்வியில்
உதிர்ந்துவிடுகிறது 
ஒப்பனைகள்!!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!