Wednesday 30 January 2013

பார்வை!


இழப்பு இரண்டு பக்கமும்


ஆண்களின் எதிர்பார்ப்புதான் என்ன?

பெண்கள் பளிங்கு பொம்மைகளாக, உழைக்கும் எந்திரமாக, பிள்ளைகளுக்கு நல்ல தாயாக, உணவு சமைப்பவளாக, ஆதரவு தரும் தோளாக, பல இடங்களில், கேட்க கேட்க கொடுக்கும் அமுத சுரபியாக, தன் கருத்துக்கு உகந்தவளாக, தன் பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவளாக, தன்னைத் தவிர பிற ஆடவரை ஏறெடுத்தும் பாராதவளாக, எப்போதும் சீதையாக, ஆண்கள் வேண்டிய சமயம் அவனை தூக்கி சுமந்து செல்லும் கண்ணகியாக.......ஏதும் முடியாத போது துவண்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நல்லதங்காளாக! 
வளரும் போது தந்தையை சார்ந்து, சகோதரனை சார்ந்து, பின் கணவனை சார்ந்து, பின் பிள்ளையைச் சார்ந்து, இறுதியில் துவண்டு விழும் பெண், மகாலட்சுமியாக, பொறுமையின் சிகரமாக போற்றப்படுகிறாள்! நீங்கள் போற்றுவதற்காக அவள் பொறுமையாய் இருக்க வேண்டுமா?
நான் எடுத்தால்தான் என் மகளுக்கு, என் மனைவிக்கு, என் அம்மாவுக்கு பிடிக்கும் என்று சொல்லும் அத்தனை ஆண்களும், சிலவேளையேனும், உங்களை சார்ந்து வாழத் தலைபட்டவளுக்கு என்ன பிடிக்கும், என்ன வேண்டும் என்று கேட்டதுண்டா? அப்படியே கேட்டு விட்டாலும், அவர்கள் விருப்பதை மறுபேச்சு பேசாமால் நிறைவேற்றியதுண்டோ 
உனக்கு தெரியாது, அவளுக்கு, அதுக்கு ஒரு மண்ணும் தெரியாது..அவள், அது மண்ணாய் போனது எதனால்?
கல்வி மறுக்கப்பட்ட பெண், அல்லது அதை விரும்பாத பெண், அல்லது அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டப் பெண், அல்லது அடங்கி வாழப் பழக்கபடுத்தப்பட்ட பெண், அல்லது உடையிலோ, நகையிலோ, வாழ்க்கை வசதியிலோ சுகம் கண்ட பெண், சிந்திக்க தலைப்படாத பெண், அல்லது வறுமையையும், கொடுமையையும் கண்ட பெண், அல்லது பலநேரங்களில் சும்மா இருந்து சுகம் கண்ட பெண், கற்பனையிலேயே சஞ்சரிக்கும் பெண், ஏதும் செய்ய இயலாமல் பிழிய பிழிய அழுது கொண்டிருக்கும் பெண்..... 
இப்படி பல்வேறு..அல்லது ஏதோ ஒரு சுழலில் வளரும் பெண், ஒருவனை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி விட்டால், அந்த குழந்தை வளர்ப்பு அந்த தாயின் வளர்ப்பு பின்னணியையும் சார்ந்தே தொடரும்...தலைமுறை தலைமுறையாய் ஆடவனை சார்ந்து இருக்க பழக்கப்படுத்தபட்ட பெண்கள், தலைமுறை தலைமுறையாய் பெண்கள் வீட்டின் கண்கள் என்றும்..அவர்கள் எப்போதும் நமக்கு அடிமைப்பட்டவர்கள் என்பதை தன் செயலில் காட்டும் தந்தையும், அதை ஏற்றுக்கொள்ளும் தாயும், அதை ஆதரிக்கும் சொந்தமும், சமூகமும் இருக்கும்வரை...மாற்று கருத்து கொண்ட ஒரு தலைமுறை உருவாகாத வரை..பெண் அடிமைத்தனம் பெண்களின் ஆதரவோடு தொடரும்!
நன்றாய் படித்து, ஒரு கணவனுக்கு, தோழியாய், காதலியாய், தாயாய் வாழும் பெண்ணுக்கும் கூட பெரிதாய் ஒரு மரியாதையும் இல்லை.
காதலித்து, மணந்து, இரண்டு குழந்தைகளுக்கும் தாயான பின், தவறான பழக்கவழக்கத்தாலும், கெட்ட சகவாசத்தாலும் சீரழியும் ஒரு ஆண், ஒரு இரவில் தன் மனைவியையும், பிள்ளைகளையும் துன்புறுத்தி துரத்துக்கிறான்....மொத்தமாய் ஒரு பெண்கள் கூட்டம், யார் வீட்டில் தான் இல்லை பிரச்சனை, அவனிடம் சமரசம் செய்து கொண்டு திரும்பவும் போய் அந்த வீட்டில் வாழு என்று புத்திமதி சொல்கிறது. 
இதையே சற்று மாற்றி பார்ப்போம்..ஒரு பெண் குடித்து விட்டு, பல சகவாசம் வைத்துக் கொண்டு தன் கணவனை வெளியே, அடித்து துரத்துகிறாள், மொத்தமாய் அவர் வீட்டு ஆண்களும், பெண்களும் சேர்ந்து..என் மகள், என் மருமகள் அப்படித்தான் இருப்பாள், நீதான் கொஞ்சம் புத்தி சொல்லி, அவளிடம் சமரசம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்று சொல்வதுண்டா? அப்படியே சொன்னாலும் ஏற்று கொள்ளும் ஆண்களுண்டா?
இது போலவே பல அநீதி இழைக்கும் சம்பவங்கள், வன்கொடுமைகள் ஆண்களால் இழைக்கப்படும்போது, அது எல்லாராலும் ஏற்று கொள்ளப்பட்ட ஒரு சாதாரண நிகழ்வு..அதுவே பெண்ணால் என்றால் அது தாங்க முடியாத ஒரு சமுக சீர்கேடு...அப்படித்தான் நினைக்கிறார்கள் ஆண்களும், அப்படிதான் நினைகிறார்கள் பெண்களும்!  
ஒரு பிரபல நடிகர் நடித்த ஒரு திரைப்படத்தில், ஆணுக்கும், பெண்ணுக்கும் நடக்கும் நடன போட்டியில், நடனத்தை விடுத்து, உடைகளை ஒவ்வொன்றாய் கழட்டி வீசி எரியத்  தொடங்குவார்...ஒரு கட்டத்தில் ஆண் தன் மேலாடையையும் கழற்றி வீசி எறிய, பெண் தன் உள்ளாடைகளை களைய முடியாமல் வெட்கி தலைகுனிவாள்...ஆண் வென்றவனாகவும், பெண் தோற்றவளாகவும் ஆகி விடுவார்....  உடையில்லாமல் திரிந்தவர் தாமே மனிதர் முன்பு? ஆண் வெறித்து நோக்க மாட்டான் என்றால், தன்னை வன்புணர்ச்சி செய்யமாட்டான் என்றால் பெண்ணிடத்திலும் ஆடையற்ற நாகரிகம் தோன்றும்....ஆனால் மிருக விந்து மாறி, மனித தன்மை கொண்ட விந்து கலந்து, ஒரு தலைமுறை மாறும் வரை, மனிதம் கொண்ட நாகரிகம் வளரப் போவதில்லை. 
நாகரிகம் வளர்ந்து ஆடை முக்கியம் என்று ஆனபின், ஆண் ஆடை இன்றி திரிந்தாலும், குடித்துவிட்டு ஆடை இன்றி ஒரு சேற்றில் புரண்ட பன்றியை போல் சாலையோரம் விழுந்து கிடந்தாலும்..எந்த பெண்ணும் அவனை வன்புணர்ச்சி செய்வதில்லை, செய்து விட்டு அவன் உடை களைந்து இருந்து என்னை தூண்டிவிட்டான் என்றும் சொல்வதில்லை, இதற்காக சில பெண்கள் அமைப்பும், அவன் தங்கையே, சகோதரியே என்று கதறி இருந்தால் அவள் அவனை விட்டிருப்பாள் என்று அறிக்கை விட போவதும் இல்லை!
ஒரு பெண்ணின் காதல் வேண்டி நிற்கும் ஆணுக்கு, அவள் அழகோ, அறிவோ, அன்போ பிரதானமாய் பட்டு, ஒரு நாளில் அவனின் அன்பு ஏற்று கொண்டபின்னர், அங்கே மணமான பின்னர், அந்த அன்பு, காதல் எல்லாம் மறைந்து, வெறும் ஆராய்ச்சி மனப்பாங்கும்,  எனக்கு பிடித்தமாதிரி நடந்துகொள்ளேன் என்ற அறிவுரையும் மட்டுமே மிஞ்சும்...அவள் அன்பு வேண்டி அவளுக்கு பிடித்த மாதிரி நடந்ததெல்லாம் பின்னாளில் வெறும் நடிப்பாகி போகும்.   
பெண்களுக்கும் தங்கள் சுயத்தை தொலைத்து, அல்லது மறந்து பல்வேறு காரணங்களுக்காக சமரசம் செய்து வாழ்வதும் இயல்பாகி போகும்!  
பெரும்பாலான ஆண்களுக்கு எப்போதும் ஒன்றில் நிரந்தரமான பிடிப்பு இருப்பதில்லை, தொடர்ந்த வேகமோ, உத்வேகமோ இருப்பதில்லை, உண்மையில் எளிதில் உணர்ச்சிவசப்படுவதும், தோல்வியில் துவண்டு விழுவதும் ஆண்கள்தானே அன்றி பெண்கள் இல்லை! எளிதில் காதலிப்பது, எளிதில் ஏமாற்றி விடுவது, அல்லது சில பெண்களால் ஏமாற்றப்படுவது, அவதூறு பேசுவது, ஆசிட் வீசுவது, முழுதாய் உடை அணிந்தால் கூட மோகம் கொள்வது பின் வன்புணர்ச்சி செய்வது, காதல் இல்லாமல் கலப்பது, குழந்தையையும் கொல்வது, தன்னிடம் பேசாத பெண்ணை, ஏறிட்டும் பார்க்கவில்லை என்றால் திமிர் பிடித்தவள் என்பது, பெண் போ என்றால், ஏன் என்று ஆராயாமல், அமைதி கொண்டு வாழ வழி காணாமல், மனதும் புரியாமால் உணர்ச்சி வசப்பட்டு அவளையும் கொன்று, தன்னையும் மாய்த்து கொல்வது, வேலையில், தொழிலில் முன்னேற்றம் காண சிந்திக்காமல், முடியவில்லை முடியவில்லை என்று தோல்விக்கான காரணத்தை மட்டுமே பேசி ஒடுங்கி விடுவது...இப்படி எத்தனையோ!
ஆணின் வக்கிரம் தான் விளம்பரங்களில் கூட ஒரு ஆணின் உள்ளாடை முதற்கொண்டு எல்லாவற்றிற்கும் பெண்ணை ஒரு போகப் பொருளாய் பயன்படுத்துகிறது.  
இத்தனையும் ஏன் இங்கு நிகழ்கிறது? மாற்றம் எப்போது வரும்?
 மாற்றம் என்பது குழந்தை வளர்ப்பில், திறன் கனவு சார்ந்த கல்வியில், சமூகத்தில், அறத்தில், வீரம் எது என்ற கூற்றில், பாலியல் அறிவில், மூட நம்பிக்கைகளின் முடிவில், கடவுள் வழிபாட்டில், சாதி, மதம் என்பதின் தெளிவில், சட்டம் என்பது சமமானது என்ற நம்பிக்கையில், பணம் என்பது பண்டமாற்று முறையின் மாற்றுதான் என்ற உணர்வில், உறவின், நட்பின் புரிதலில் என்று பல துறைகளில், பல கோணங்களில், பல்வேறு இடங்களில் நிகழ வேண்டும்!    
இந்த மாற்றங்கள் நிகழாமால், ஒரு பெண்ணை நீங்கள் வீட்டிலே பூட்டி வைத்தாலும் குற்றம் நிகழும்! பணத்தை நீங்கள் பதுக்கி வைத்தாலும், சுவிஸ் வங்கியில் போட்டாலும் கொள்ளை போவது கொள்ளை போயே தீரும், திருட நினைப்பவன் தன் புத்தியை தீட்டி கொண்டே இருப்பதால்! அது போலவே ஒரு பெண் உடை அணிந்தாலும், அணியா விட்டாலும், மோகம் தலைக்கேறி விட்டால், அங்கே மிருகம் மட்டும் இருந்தால், வன்புணர்ச்சி நடக்கும், வீட்டில் வைத்தாலும் கொடுமை நிகழும், உதாரணங்கள் பல உண்டு நம் நாட்டில்!
ஒருபக்கம் கொடுமை செய்யும் ஆண் கூட்டம் இருந்தாலும், தாய்மை உணர்வு கொண்ட ஆண்களும் உண்டு. ஒரு பெண்ணைத்  துன்புறுத்த பெரும் பெண் கூட்டமும், ஆண் கூட்டமும் வெவ்வேறு பெயர்களில், உறவுகளில் இருந்தாலும், இருபாலரின் நன்மைக்கும், வெற்றிக்கும் பின்னே ஒரு எதிர்பாலினர் நிச்சயம் உண்டு.
பெண்ணென்றும், ஆணென்றும் பேதம் காட்டி, பெண் என்றால் சமைப்பவள் என்றும், ஆண் என்றால் ஆள்பவன் என்றும் நச்சு விதைகளை ஊன்றி வளர்க்காமல், உடல் கூற்று மாறுபாட்டைத் தவிர, இருவரும் மனிதர் என்றும், பரஸ்பரம் அன்பு கொண்டு, நட்பு பாராட்டி, எந்த வேலையையும் பகிர்ந்து செய்யலாம் என்றும், எதிலும் பேதமில்லை, வன்முறையில் அர்த்தமில்லை என்று ஒரு தலைமுறையேனும் மாறுபட்டு வளரட்டும்!

Friday 25 January 2013

பெண்ணின் சூழல்

கையில் பத்து மாத குழந்தை, வயிற்றில் ஒரு ஆறு மாத குழந்தை, பத்து மாத குழந்தையை அதட்டி உருட்டி மிரட்டுகிறாள் தாய் அதன் அழுகையை நிறுத்த......மேலும் வீரிட்டு அழுகிறது குழந்தை!

ஒரு இரண்டு வயது குழந்தை, அருகே ஒரு வயது குழந்தை, ஒரு வயது குழந்தை ஏதோ கேட்க அதை கொடுக்கவில்லை என்று இரண்டு வயது குழந்தைக்கு சரியான அடி கொடுக்கிறார் தாய்....
அதுவும் குழந்தைதானே அடிக்காதீர்கள் என்றேன், ஏன் அவன், இவனை விட ஒரு வயது பெரியவன் தானே, இதெல்லாம் தெரிய வேண்டாமா என்றாள்....வளர்ந்த உனக்கே, எது குழந்தை என்று தெரியவில்லை, இரண்டு வயதுக்கு எப்படி தெரியும் என்றேன்! 

கல்வி அறிவு இல்லாதிருத்தல், இருந்தாலும் அறிவு முதிர்ச்சி இல்லாமல் இருத்தல், குழந்தைகளை தன் கோபதாபங்களின் வடிகாலாக பயன்படுத்துதல், ஊட்டச்சத்து மிக்க உணவு தாராதிருத்தல், பிற குழந்தைகளை வைத்து தன் குழந்தையை தாழ்த்தி பேசுதல்........எத்தனையோ நிகழ்வுகள் தினம் தினம் நிகழ்கிறது பெண்களாலும், ஆண்களாலும்.....வீட்டில் வன்முறை காணும் குழந்தை, அரவணைப்பு இல்லாத குழந்தை, பிறிதொரு நாளில் ஏதாகவும் ஆகலாம், சில கொடுமைகளுக்கு, சில விலங்குகளுக்கு இரையாகவும் ஆகலாம்!

பெண்களுக்கு சரியான கல்வியறிவும், சரியான வயதும், குறைந்த வயது வித்தியாசமும், பொருளாதார அறிவும், சுய சிந்தனையும்,  அவர்களின் திருமண வாழ்விற்கும், குழந்தை வளர்ப்பிற்க்கும் மிகவும் அவசியம்.....எல்லாவற்றிற்கும் மேல் உயிரின் அருமை தெரியாமல், தாய்மை உணராமால் இருக்கும் ஒரு பெண் தாயாவதே பெரும் தவறு......அவளை தாய்மை அடையச் செய்யும் ஆணும் தவறிழைத்தவனே! 

Thursday 24 January 2013

அரசியல்


நிதம் தேடும் ஓட்டம்
சிலர் விழ, சிலர் அழ
ஓயாமால் தொடருகிறது
சிப்பி கிடைக்கிறது,
முத்தும் கிடைக்கிறது
முள்ளும் தட்டுப்படுகிறது
கொலையும் நடக்கிறது -
கொள்ளையும் நிகழ்கிறது
குழந்தை அழுகிறது - காதல்
போகிறது - அம்மா சாகிறாள்
சில வயிறு வாடுகிறது - சில
மனம் நோகிறது - சில
துரோகம் நிகழ்கிறது - காட்சி
மாறுகிறது...ஓட்டத்தில் சிலர்
வீழ்கின்றனர், சிலர் மறைகின்றனர்
வென்றவன் நிற்கிறான் - வாரிசு
ஓட்டம் தொடங்குகிறது...
ஓட்(டு)டப்போட்டியில் 
கல்லறை தோட்டம் நிரம்புகிறது!

அவள் மழை வேண்டி நின்றிருந்தாள்


அவன் உழைத்து கொண்டிருந்தான் 
இறைக்கும் கிணறுப் போல....
அவர்கள் சேந்திக் கொண்டிருந்தார்கள்
அவனால் சிரித்துக் கொண்டிருந்தார்கள்
அவள் ஓரமாய் நின்று ஊற்றுகளை
இணைத்துக் கொண்டிருந்தாள்....

நிலம் உழுதான், விதை விதைத்தான்
நீர் பாய்ச்சினான்...
அவர்கள் அறுவடை செய்தார்கள்
அவள் மழை வேண்டி நின்றிருந்தாள்
உயிர் நனைய உதிரம் தந்தாள்

ஓடிய மாடு உழைத்து களைத்தது
கொட்டிலை விட்டு துறந்து வந்தது
கூடு விரிந்து பறவைகள் பறந்தது
நிழலாய் அவள் மட்டும் தொடர்ந்தாள்

உழைக்கையில் உன்னை கண்டதில்லை
நீயும் என்னை அண்டியதில்லை
ஏதுமற்றவன் நான் - எதை
வேண்டி வந்தாய் இப்போது?
விலகிச் செல் பெண்ணே - இதயம்
கூட நின்றுவிடும், பாழ்பட்ட பொருளை
தருவதற்கில்லை போய்விடு என்றான்

நிழல் வருவது நினைவுக்குத் தெரியாது
பெறுவதற்கு ஏதுமில்லை - தருவதற்கே
வந்தேன் - என் இதயம் பொருத்தி
உன் உயிர் மீட்ட என்றாள் - உணர்வு
விழிக்கையில், மனம் துடிக்கையில் 
உயிர் தந்து நிழல் மறைந்தது! 
 

Wednesday 23 January 2013

முகப்பு விளக்கு

















 
கருப்பு பூனை ஒன்று இருட்டில் ஓடுது,
பளீரிடும் கண்கள் மின்னலாய் ஒளிருது,
இறைவன் தந்த
பாதுகாப்பு அம்சம் - அதன் உயிரைக் காக்குது!

மனிதன் அமைத்த சாலையிலே,
வாகனம் விரையும் இருட்டு வேளையிலே,
பளீரிடும் முகப்பு விளக்கோ
கண்களைக் கொல்லுது
சில நேரங்களில் உயிரையும் எடுக்குது!

Friday 18 January 2013

மன இருள்






 
 பஞ்சடைந்த விழிகளில்
தெரியும் பசி
கண்ணீர் நிறைந்த விழிகளில்
தெரியும் வேதனை
சலனமற்ற விழிகளிலோ
தெரியாத செய்தி

ஏதும் தெரிவதில்லை....
உண்மை அறிவதுமில்லை - நாம்
அவனாக/அவளாக மாறும் வரை!

Sunday 13 January 2013

அவசர ஊர்தி


இரவின் அமைதியில்
எங்கோ ஒரு அவசர ஊர்தி
விரையும் சத்தம்!

யாருக்கோ வேதனை
தினம் தினம்!

காமுறுபவனுக்கு தெரிவதில்லை
மனத்தின் கற்பு!

கொல்பவனுக்கு தெரிவதில்லை
உறவுகளின் இழப்பு!

கொள்ளையடிப்பவனுக்கு தெரிவதில்லை
இழந்தவனின் துடிப்பு!

ஏய்ப்பவனுக்கு தெரிவதில்லை
இதயத்தின் கொதிப்பு!

ஆள் கடத்துபவனுக்கு தெரிவதில்லை
கருணையின் மதிப்பு!

கடுமை பேசுபவனுக்கு தெரிவதில்லை
வார்த்தையின் பாதிப்பு! 

எங்கோ ஒரு உயிர்
எங்கோ ஒரு மனம்
தினம் தினம் வதைப்படும் - எல்லா
இடத்துக்கும்
செல்வதில்லை அவசர ஊர்தி!

நிலவும் போகட்டும்!


சுட்டெரித்த சூரியன்
மேற்கில் இறங்கியோட

ஊர்க் குருவியாய் தென்றல்
மரங்களின் ஊடே தவழ்ந்தோட

செய்தி வேண்டி மேகங்கள்
தென்றல் நோக்கி ஒன்று கூட

தெரியும் செய்தி என்று
விண்மீன் கூட்டம் கிசுகிசுப்பாய் கண்சிமிட்ட

நெருப்புக்கும் நீருக்கும் இடையில்
நிலவு ஒன்று தேய்பிறையாகி
நீண்ட நேரம் வாழ்ந்திருந்தது

பூமியின் மேல்
தேய்ந்து கொண்டிருக்கும்
கருணையைக் கண்டு
மௌன சாட்சியாய் கலங்கி நின்றது!
 

Thursday 10 January 2013

வானம் இருண்டிருக்கிறது
மழை மேகமா, புகை கூட்டமா
தெரியவில்லை,
மழை பொருத்து தெரிந்துவிடும்
கார்மேகமோ? காரிருளோ?
.
.
.
.
கார்த்திகை மாசமாம்! :-)

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!