Thursday, 27 December 2012

நம்பிக்கைப் போராட்டம்


மழை மேகத்துக்கும் மனதில்லை
கோடையின் வெப்பமும் குறையவில்லை
தோட்டம் காக்க பூக்கள்தான் உதிர்கின்றன

மேகத்தின் தாகம் தீர்ந்திடும்
கோடையின் வெப்பமும் ஓய்ந்திடும்
உதிர்ந்த மலர்கள் மட்டும் உரமாகும்
நாளையேனும் ஒரு மலர் நல்விதையாக!

Monday, 24 December 2012

தட்சணை

தேர்ந்தெடுக்கப்பட்ட வன்பொருளாகவே
ஆண்கள்...அவரவர் செயல்திறன்..பொருள்திறன்
கொண்டு சந்தையில் விற்க்கப்படுகின்றனர்  
வடிவமைக்கப்பட்ட மென்பொருளாகவே
பெண்கள்...வன்பொருள்களுக்கு பிடிக்கப்பட்ட விதத்தில்
மாறிக்கொண்டே இருக்க வேண்டும்!

மாற்றம் இல்லையெனில் ஏற்றம் இல்லை
மென்பொருளுக்கும் அதை சார்ந்த வன்பொருளுக்கும்!

Monday, 17 December 2012

விவாகரத்து


யாரோ ஒருத்தியும் யாரோ ஒருவனும்
நேசம் கொள்கிறார்கள்
அந்த யாரோ இருவர்கள் திருமணம்
செய்து கொள்கிறார்கள்
ஏதோ ஒரு வேற்றுமையில் இருவரும் 
யாரோ ஒருத்தியாய், யாரோ ஒருவனாய் 
பிரிந்து போகிறார்கள்!
யாரின் ஒருவராய் மாறுவது என்று
பிஞ்சுகளுக்குதான் குழப்பம்!

Sunday, 16 December 2012

இன்னாச் சொற்கள்


 நல்வார்த்தைகளை  சேர்த்து வைக்கிறாய்
நேரமில்லை என்னும் திரைக்கு பின்னே
சேமித்த வார்த்தைகளை மலர்களாய்
தூவு, நேரமெடுத்து என் கல்லறையில்!
 
நெருப்பு கங்குகளாய் உன் வார்த்தைகள்
சிதற விட வேண்டாம் - சேர்த்து வைத்துக்
கொள் - என் இறுதி தகனத்திற்கு
நெருப்பு வேண்டும்!

விட்டில் பூச்சி

Photo: Lightning bug or firefly
விடிவதற்குள்
வெளிச்சம் தூவ வேண்டும்
விடிவெள்ளி வந்து
மலர் தூவும் முன்
நான் விட்டில் பூச்சி!

அன்பே சிவம்!

 
போதி மரத்துப் புத்தனோ 
கொல்லிமலைச் சித்தனோ 
எல்லாம் துறந்து நீ போக
பொம்மை ஒன்று சுழலுதடா
பம்பரமாய் உழலுதடா
நீ விட்டுச் சென்ற கடமைதனை 
தட்டி முட்டிச் செய்யுதடா

விந்து தரும் செயல் தவிர்த்து
முக்தி காண வேண்டுமென்று
பக்தி மார்க்கம் செல்கின்றாய்
கைப்பற்றி வந்த வாழ்க்கைதனை
சூழ்ந்து நிற்கும் கடமைதனை
எளிதாய் உதறிச் செல்கின்றாய்
சுருங்கி விட்டது உன் மனம்
எதைச் சுருக்க இந்த ஓட்டம்

ஓடி ஒளிபவனுக்கு சிவன் எதற்கு - கடமை
தவிர்த்து வாழ சக்தி எதற்கு
செயல்கள் தானடா சிவனும் சக்தியும்
பெண்மைக்குள் வாழ்கின்றனர் அம்மையும் அப்பனும்!
பொம்மைகளால் இயங்குதடா உலகம்!

காரணம் தேடு...காரியம் தவிர்
புத்தனாய் சித்தனாய் நீ வாழ
பொம்மைகள் படைத்திடும்
காடும் வீடும்!

Saturday, 15 December 2012

பெண்கள்


 நிலவென்று ஒப்பிட்டு
தேய்ந்து போகிறோம்
நீரென்று ஒப்பிட்டு
கரைந்து போகிறோம்
நிலமென்று ஒப்பிட்டு
பகுக்கப் படுகிறோம்
மலரென்று ஒப்பிட்டு
கசக்கப் படுகிறோம்
எப்போதும்
சக உயிராய்
மறுக்கப்படுகிறோம்
ஆகையால்
எளிதாய் பலியாடாகிறோம்!

போதும் இது போதும்
தேவதையாய் தேய்ந்தது போதும்
அன்பால் கரைந்தது போதும்
நெருப்பிற்கு இரையானது போதும்

பொய் முகம் புறந்தள்ளி
நிஜ முகம் அறிவோம்!
மென்மை எரித்திட்டு
வன்மை பழகுவோம்!

Thursday, 13 December 2012

இன்றே நன்று


தினம் பிறக்கும்,
மணம் பரப்பும் - மலர்கள்
வாடி உதிரும்வரை!

ஒரே நாள் வாழும்,
மகரந்தம் பரப்பும் - பட்டாம்பூச்சிகள்
உயிர் பிரியும்வரை!

நூறு ஆண்டுகள் வாழும்,
வன்முறை பரப்பும் - மனிதர்கள்
வாழ்வதேயில்லை கூடு பிரியும்வரை!

Tuesday, 11 December 2012

மேன்மக்கள்மலர்ந்ததில் உள்ள நளினம்
விழுவதிலும் தொடர்கிறது!
ஒவ்வொரு இதழ்களாய்
உதிர்ந்தாலும் - கடைசித்
துளி வாசம் கூட காற்றில்!

மலர்ந்தாலும், விழுந்தாலும்
மலர் முல்லாவதில்லை
மகரந்தம் நஞ்சாவதில்லை!

Gist

Hatred and enmity would disappear mostly in two events, one is birth and the other one is death! In between these two events, we neither have time to think about what he or she wants nor have that heart to dedicate that time and effort to care or even pretend to care!

The love, the care, the wish, the desire...all will clog a person's memory only in the absence of his or her beloved!

Learn to live and make others live when we are alive!

மாயத் திரை!


வாராத உறவெல்லாம் வந்துவிடும்
தீராத பகையெல்லாம் தீர்ந்துவிடும்
மரணத்திலும்.....பிறிதொரு
ஜனனத்திலும்!

Monday, 10 December 2012

விலங்கு வாழ்க்கை

முயல் போல் மென்மை சில வேளைகளில்
மான் போல் ஓட்டம் பல நேரங்களில்
நாய் போல் நன்றி உணர்வு பல காலங்களில்
நரி போல் சாமர்த்தியம் ஒன்றிரண்டு பொழுதுகளில் 
கழுதை போல் சுமை தாங்கி பெருங் காலங்களில்!

பிறக்கையில் தோன்றும் மனிதன் - மீண்டும்
தோன்றி மறைவது இறக்கும் வேளைகளில்,

வெறும் வார்த்தைக்கு கூட யாரும் இல்லை
நம்முடன் வாழும் காலங்களில்!

Sunday, 9 December 2012

அட போங்கடா!

மரம் வெட்டி மழை இல்லை என்று யாகம்
நீர் வேண்டி நெருப்பு ஏற்றுகின்றனர்

குடி வளர்த்து குடி கெடுக்கும் நோக்கம்
பணம் கொடுத்து குணம் தொலைக்கின்றனர் 

வேரில் விஷம் ஊற்றி விளைச்சல் போராட்டம்
மண் மாற வளம் குலைக்கின்றனர்

வார்த்தையில் கடுமை கொட்டி அன்பு ஊட்டம்
கொன்றபின் நின்று அழுகின்றனர்!

அட போங்கடா!

Monday, 3 December 2012

பணம்

எல்லாம் தாழ்ந்துவிடுகிறது
எல்லாம் தொலைந்துவிடுகிறது
எல்லா மனமும் காயப்படுகிறது
நீ இருக்குமிடம் மாறி இருந்தால்!

இருப்பவன் புலிவால் பிடித்தவன்
இல்லாதவன் கழுகாய் மாறியவன்
இருவருக்குமே இரை நீதான் -
இரையே புசிப்பவரை கொல்வதும்
ஒரு மாய வித்தைதான்!

அடிப்படை வேண்டி நின்றாலும்
அன்பு வேண்டி சென்றாலும் - யாசித்து
நிற்பவருக்கு வாய்க்கருசியேனும் போட
இரத்தல் வேண்டும் இறத்தலாயினும்!

அன்பு இடம் மாறிச் செல்லும் 
நட்பு வலம் இடம் மாறிக் கொல்லும்  
தீர்ப்பு மாறி நீதி சாகக் கூடும்
எழுவதும் விழுவதும் யாராயினும்
வெல்வது என்றுமே நீதான்!

எல்லாம் போனபின் உன் பயனென்ன?
நிரப்பவே முடியாத மனக்கிணறுகளை
கட்டிக் காக்கும் வேதாளமாய் வாழுவதென்ன?
தனியே நீ விசித்து அழுவது மரங்களுக்கு
மட்டும் கேட்கும் - எப்போதும்
மனிதர்களுக்கு அல்ல!
பணமே!