Wednesday, 4 May 2016

மே 16

மே 16 வரை மக்களே மக்களே என்று எங்குத் திரும்பினும் குரல்கள், அடடா என்று மகிழ்வீர்கள் என்றால், மே 16 க்கு பிறகான இந்தக் காட்சிகளுக்கும் இப்போதே தயாராகிக் கொள்ளலாம், ஜெயிக்கும் கட்சியைப் பொறுத்துக் காட்சிகள் மாறும், அல்லது கூடும்;

1. வெயிலில் பறந்த அலுப்புத் தீர ஏதாவது ஒரு பழைய எஸ்டேட்டில் அல்லது புதிதாய் ஒன்றை விலைக்கு (?!) வாங்கி ஒய்வு!

2. ஏதோ ஒரு வாரிசுக்கோ பிறக்கப் போகும் ஏதோ ஒரு பேரனுக்கோ பேத்திக்கோ புதிதாய் ஒரு தொழில் தொடங்க, அல்லது மத்தியில் வாய்ப்புக் கேட்டு டெல்லி பயணம்!

3. திரை நட்சத்திரங்களின் போற்றிப் புகழும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்!
4. ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் கொடுக்கப் போகும் ஏதோ ஒரு டாக்டர் பட்டம்!

5. முதுகு வலிக்கு மருத்துவரிடம் சிகிச்சை (இங்குக் கூட்டம் அதிகமாய் இருக்கும்)!


6. பதவி ஏற்பில் தொடங்கி அடுத்த ஐந்து வருடங்களுக்கு அலுவலகம் செல்வதற்கும், கட்சி அலுவலகம் செல்வதற்கும் சாலை போக்குவரத்து, பலமணி நேரம் நிறுத்தப்படும், சென்னை மக்கள் வெயிலில் கறுத்து, பின்வரும் மழை வெள்ளத்தில் வெளுப்பார்கள்!

7. எல்லாத் தொலைக்காட்சிகளும் இங்கே அடித்தார் அங்கே அடித்தார் என்று காமெடி தர்பார்களாய் மாறிப்போகும்!

8. திடீரென்று கூட்டணிகள் உடையும், எங்காவது இடைத்தேர்தல் வரும்!

9. புதிதாய் ஊழல் வழக்குகள் பாயும்!

10. பழைய வழக்குகள் புத்துயிர் பெரும், அல்லது பரணில் ஒளித்து வைக்கப்படும்!

11. கோடிக்கணக்கில் புதிய திட்டங்களின் அறிக்கைகள் மட்டும் ஐந்து ஆண்டுகளுக்கு வரும்!

12. இலங்கைத் தமிழர்கள், தமிழக மீனவர்கள், மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் எல்லாம் அடுத்தத் தேர்தல் வரை அப்படியே காத்திருக்கும்!
முக்கியமாய் "மக்களே" என்று யாரும் நம்மை உருகி உருகி அழைக்க மாட்டார்கள்!!!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!