Friday 10 April 2015

காதல்

காதல் தவறு என்று பொங்கும்
காலச்சாரக் காவலர்கள்
காதலர்களைத் தடியால் அடிக்கிறார்கள்
பெண்களையோ கைபிடித்துத் தடவி இழுக்கிறார்கள்

காதலன் கைப்பிடித்துச் செல்லும்
காதலியைக் கண்டு
முகம் சுளிக்கும் ஆண்களும் பெண்களும்
காதலற்றக் கலவி செய்து
பிள்ளைப் பெற்று
வம்சம் வளர்க்கிறார்கள்

 பள்ளிப்பிள்ளைகளுக்குக் காதல்
 என்பதைக் காவியமாக்கித் திரையில்
 வழிபடும் இயக்குநர்கள்
 வளர்ந்த தம் பிள்ளைகளின் காதலில்
 நிலைகுலைந்துப் போகிறார்கள்

 காதலும் கண்றாவியும்
 என்று சொல்லும் கனவான்கள்
 ரகசியமாய் இரவில்
 கனவில் கனவுகன்னிகளோடு
 திரை கிழிக்கப் போராடுகிறார்கள்

 காமம் இல்லாத காதலே
 நாட்டில் இல்லை - என்னுடைய
 காதல் போல் தெய்வீகம் இல்லை
 என்பவர்கள் நேற்றுதான் ஒருதலைக் காதலில்
 தோற்றுப்போனார்கள்

 இந்தக் காலத்துல என்று
 காதலை கரித்துக் கொட்டும்
 மாமாக்களும் அத்தைகளும்
 அவ்வபோது தம் காதலைப் பிரித்த
 தாத்தாக்களையும் பாட்டிகளையும்
 மனதில் எரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்

 பேதம் பார்க்காமல் வருவது
 காதல் என்ற கவிஞர்கள்
 நிதர்சனத்தில் ஜாதகத்தையும்
 மருதலிக்கமுடியாமல் யாருக்கோ
 மாலை சூட்டினார்கள்

 திரையில் ஏழைப்பெண்ணை
 காதலித்து மணந்த நாயகர்கள்
 நிதர்சனத்தில் சிலநூறு கோடிகளோடு
 வந்த பெண்ணையே மணந்தார்கள்

காதல் காதலென்று
பின் சாதல் சாதலென்று 
நெகிழ்ந்தும் வஞ்சித்தும் மனிதர்கள்
காதலைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்க, 
காதலோடு கலவியும், காதலோடு நேசமும்
காதலோடு தியாகமும் எனக் காதல்
ஒவ்வொரு பருவத்திலும், காதலாகவே வாழ்கிறது!
காதலின் மேல் கல்லெறிந்து மனிதர்கள்தாம்
தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள்!!

Thursday 9 April 2015

இது பூக்களின் சுயத்துக்காக!


சுயம் என்பது எல்லோருக்கும் உண்டு, அது பெரியவர்கள் என்றாலும் குழந்தைகள் என்றாலும்!

1. ஆசையாய் ஓடிவரும் பிள்ளைகளிடம், தள்ளிப் போ இம்சைப் படுத்தாதே  என்று நீங்கள் தள்ளிவிடும்போது, நீங்கள் எதிர்கொள்பவர்கள் உங்களைத் தள்ளிவிட்டால் உங்களுக்கு எப்படி வலிக்குமோ அப்படித்தான் அவர்களுக்கும் வலிக்கும்

2. ஏதோ ஒரு தேவையை எதிர்நோக்கி உங்களிடம் கேட்க வரும் பிள்ளையை, பொய்யான உங்கள் காரணங்களுக்காக, அந்தத் தேவையைக் கேட்காமல் நிராகரிக்கும் போது, நீங்கள் எதிர்கொள்ளும் கையறு நிலைப் போல அவர்களுக்கும் அது நிகழும்

3. அன்பும் அரவணைப்பும் உங்களிடம் இருந்து கிடைக்கவில்லையென்றால் வளரும்போது அது கிடைக்குமிடம் நோக்கி பிள்ளைகளின் மனம் நகரும், நன்மையோ தீமையோ ஒரு விதத்தில் அந்தச் சூழ்நிலைக்குச் சூத்திரதாரியும் நீங்கள்தான்

 4. ஆசையாய் பேச வரும் பிள்ளைகளுக்கு அலுப்பும் சலிப்புமாய்ப் பதில் சொல்லி ஒதுக்கி நீங்கள் தள்ளும்போது, பிற்காலத்தில் நீங்களும் ஒதுங்க நேரிடும்

 5. கொடூரமாய் உறவுகளைச் சித்தரிக்கும் தொலைகாட்சித் தொடர்களில், மட்டமான திரைப்படங்களில், அனாவசிய அரட்டைகளில், வீண் விவாதங்களில், புரளி பேசும் தருணங்களில், நீங்கள் ஊன்றி திளைத்து, பிள்ளைகளை நிராகரித்து, அவர்களின் பிற்பாடு நடத்தையையும் ஒழுக்கத்தையும் நீங்களே தீர்மானிக்கிறீர்கள்

 6. புகையும் போதையும் சுகமென வாழும் தகப்பனே தன் பிள்ளையின் ஒழுக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் எமனாகிறான்

7. பிள்ளைகள் முன் சண்டையிட்டுக் கொள்ளும் பெற்றோரை ஒருநாளும் தம் நட்பாகக் குழந்தைகள் ஏற்றுக்கொள்வதில்லை 

 8. அன்பில்லாமல் உணவு படைக்கும் பெற்றோருக்குப் பின்னாளில் பிள்ளைகளிடம் இருந்து எந்தப் பாசமும் கிடைக்காது

9. வேண்டிய போது குழந்தைகளுக்கென நீங்கள் ஒதுக்காத நேரத்தை, பின்னாளில் நீங்கள் எத்தனை தர முயன்றாலும் வளர்ந்த பிள்ளைகள் அதை ஏற்காது, பிள்ளைகளின் மொழியைக் கேட்க நேரம் மறுத்த பெற்றோரின் நேரத்தைப் பற்றிப் பிள்ளைகளும் பிறகு கவலைப்படுவதில்லை

 10. நான்கு பேர் முன்னியிலையில் அல்லது நான்கு சுவற்றின் இடையில், எந்தச் சூழ்நிலையிலும் பிள்ளைகளை அடித்து, திட்டி காயப்படுத்தாதீர்கள், தவறுகள் இயல்பு, நீங்கள் தவறும்போது மற்றவர்கள் உங்களை எப்படி நடத்தினால் உங்களுக்குப் பிடிக்காதோ அதுபோலவே பிள்ளைகளிடம் நடந்து கொள்ளாதீர்கள்!

11.  பூக்களுக்குக் கைகால் முளைத்தது போல் இருக்கும் அவர்கள் உண்மையில் உருவில் சிறிய மனிதர்கள்தாம், அவர்கள் காயப்பட வேண்டாம், அவர்களை வழிநடத்த நல்ல உணவோடு, சிறந்த கல்வியோடு உங்கள் அன்பையும் பரிவையும், பாதுகாப்பு உணர்வையும் மட்டுமே அவர்கள் வேண்டுகிறார்கள்!

12. அன்பு செய்யுங்கள் அவமதிக்க வேண்டாம்!

கடக்கும் வாழ்க்கையில்

பிறப்பும் நம் விருப்பத்திலில்லை
இறப்பையும் நாம் விரும்பவதில்லை
இடைப்பட்ட நாட்களும் கூட
நம் வசத்திலில்லை,
எனினும்
அன்பை விதைத்து,
எதிர்ப்பார்ப்பு துறந்து,
கடக்கும் வாழ்க்கையில்
எப்போதும் ஏமாற்றமில்லை!

கீச்சுக்கள்!

பிறக்கும்போது தொடங்கும்
பாடங்கள்....இறக்கும்வரை முடிவதில்லை!
ஒவ்வொரு நாளும் ஓர் அனுபவமே!

--------------------------------------------------------------------
எழுநூறு கோடி ஏழாயிரம் கோடி என்று ஊழலும், பென்ஸ், லம்போகினி என்று கார்களும், ஐந்து மாடி, அம்பதாயிரம் கோடி என்ற அளவில் வீடுகளும், நூறு ஏக்கர், ஐநூறு ஏக்கர் என்ற ரீதியில் நிலங்களும், கோடிகளில் புரளும் வங்கிக் கணக்குகளும், பண்ணை, நாட்டாமை, மந்திரி என்ற பதவிகளும், கண்ணில் படும் பெண்கள் எல்லாம் கட்டிலுக்கென்றெ என்ற காமவேட்கையும்..........எத்தனை எத்தனை இருந்தாலும் தங்கமே, மரக்காடு என்றில்லை இடுகாடுக் கூட இல்லாத அளவுக்குப் போய்க்கொண்டிருக்கும் தேசத்தில், மின்சாரத் தகனம் தான் இறுதியில், அதுவும் உன் அதிர்ஷ்டம் அன்று மின்சாரம் இருந்தால் மட்டுமே!
‪#‎இப்படிக்கு‬ ஜலகண்டேஸ்வரக் கம்ப்யூட்டர் சித்தர் ப்ரம் வாரணாசி ஜெயில்!

---------------------------------------------
நாட்டில் டாஸ்மாக் கடைகள் நிறையும்போது, குடிமகன்களுக்கு இறுதியில் தேவைப்படுமெனப் புதிய சட்டமன்றக் கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றும் முயற்சி......................உண்மையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி அல்ல யுவர் ஆனர், அது குடிமக்களின் நலனுக்கான தீர்க்க தரிசனமும் கரிசனமுமே!
‪#‎குடி_காக்கும்‬ ‪#‎குடி_அரசு‬!
feeling நாம சொன்னா யாரு நம்பப் போறா 
----------------------------------------------------


 
 


புகைப்பட சட்டம்


நானே, நானே எல்லாம்
என்ற மாயையை மோதித் தகர்க்க
"நீயே நீ இல்லை" என்ற
கெக்கலிப்பை, அடைப்புக் குறியிட்டு
ஒரு புகைப்படச் சட்டத்துடன்
சிறைப்படுத்தக்
காத்திருக்கிறது காலம்,
எங்கோ தூரத்தில்!

Thursday 2 April 2015

பிச்சையெனும் அவலம்!



அவசரக் கதியில் வாகனங்கள் விரையும் திருவான்மியூர் சாலையில், அவ்வப்போது கண்ணில் பட்ட மூன்றரை வயது குழந்தை ஒன்றை, நேற்று வாகனத்தில் கடக்கும் போது மிக அருகில் காண நேரிட்டது, நின்று நிதானிக்க அவகாசம் தராத வாகனத்திரளில், அந்தக் குழந்தையின் அழுக்கடைந்த ஆடைகளும் கோலமும் ஏதோ ஓர் இம்சையை உள்ளுக்குள் அழுத்திச் சென்றது, நாங்கள் கைகோர்த்திருக்கும் சில காப்பகங்களில் ஒன்றைத் தொடர்பு கொண்டு அந்தப் பெண் குழந்தையின் நலனுக்கு எங்களுடன் ஒத்துழைக்குமாறு  பேசி, அலுவலகக் குழுவின் உதவியோடு அந்தக் குழந்தையைத் தேடிச் சென்றால், ஓர் அரைமணி நேர இடைவெளியில் அந்தக் குழந்தை அங்கில்லை!

 அங்கிருந்த ஒரு போக்குவரத்து அதிகாரி, "ஏன் அந்தக் கும்பலைத் தேடுகிறோம், யார் சொல்லி எங்கள் குழு அவர்களைத் தேடுகிறது" என்று பதட்டத்துடன் கேள்விக் கேட்டதை அறிந்த போது, அவரின் ஏதோ ஒரு வருமானம் பாதிக்கக் கூடாது என்ற பதட்டம் மட்டுமே புரிந்தது, காப்பகத் தோழர்கள் அந்தக் குடும்பத்தை இன்று தேடிக் கண்டுப்பிடித்து, அவர்களிடம் பேசியபோது, ஏதோ ஒரு வடமாநிலத்தில் இருந்து அவர்கள் வந்திருப்பதாகவும், கணவர் இறந்து விட்டதால் இங்கே பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்துவதாகவும் சொல்ல, அந்தப் பெண்ணின் குழந்தையை நாங்கள் காப்பகத்தில் சேர்த்து அந்தக் குழந்தைக்குப் புகலிடமும், நல்ல கல்வியும் தருவோம், அவர்கள் குழந்தையைப் பார்த்துச் செல்லலாம் என்று எத்தனை எடுத்துக்கூறியும் அந்தக் கும்பல் மறுத்துவிட்டது........கனரக வாகனங்கள் விரையும் சாலையில், விபத்து பற்றிய பயமில்லாமல், குழந்தையின் உயிரைப் பற்றிய அக்கறையில்லாமல், மூன்று வயது பெண் குழந்தையை யாருடைய துணையும் இன்றிப் பிச்சை எடுக்க வைக்க இருக்கும் மனது, அந்தக் குழந்தைக்கு வரும் கல்வி வாய்ப்பை ஏற்பதில் இல்லை.

ஓர்  ஆய்வின்படி இந்தியாவில் நாற்பது லட்சம் பிச்சைகாரர்கள் இருக்கிறார்கள் (லஞ்சம் கேட்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் தவிர்த்து) அதில் தோரயமாக அறுபதினாயிரம் பேர் தலைநகரில் (டெல்லி) இருக்கிறார்கள்,

நாடெங்கும் பிச்சை எடுக்கும் கும்பல், குழந்தையை வைத்து வருமானம் தேடும் போக்கு பெருகிக் கொண்டே இருக்கிறது, சக மனிதர்கள் என்று நாம் சொல்லும் தீர்வையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.......இனி என்ன செய்வது? எப்போதும் போல் பிச்சையிட்டு கடந்து செல்வதா? இல்லை பிச்சை மறுத்து நம் மனதை வதைத்துக் கொள்வதா?

இதுபோன்ற எந்தக் கொடுமைக்கும், மண்சோறு சாப்பிட்டு, அலகு குத்தி காவடி தூக்கி என்று கோவில்களில் அலைமோதும் அமைச்சர்கள் கூட்டம் ஏதும் செய்யாது,காவல்துறையும் சட்டமும் கூட ஏதும் செய்யாது ....குறைந்தபட்சம் மோடி ஜி, இவர்கள் எல்லோரும் இந்திதான் பேசுகிறார்கள், தமிழ் பேசும் மடையர்கள் தாம் உங்களுக்கு ஓட்டுப் போடவில்லை, ஒட்டுப்போட்ட இந்த இந்தியர்களுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
 ஆப் கி பார் ...ப்ளீஸ் இந்தப் பிச்சைகாரர்களையும் கொஞ்சம் பார்

 (புகைப்படம்: கூகிள்)
 



Wednesday 1 April 2015

கடைசி நேர மனிதர்கள்!

angel,forest,beauty,girl
என் வலப்புறம்,
யாரோ ஒருத்தியின் கணவன்,
மனைவியின் விரல்களுக்கு முத்தமிடுகிறான்,
என் இடப்புறம்
யாரோ ஒருவனின் மனைவி
கணவனின் தலைமுடி கோதுகிறாள்,
என் இடப்புறத்தின் கடைகோடியில்
யாரோ ஒரு காதலன்
நீலம்பாரித்த காதலியின்  இதழ் வருடுகிறான்,
என் எதிரே நான் முகம் பார்த்திடாத
அந்தக் குழந்தைக்குப் பொம்மைகள் தருகிறார்கள்,
என் முதுகுக்குப் பின்னால்
ஏதோ ஒரு முதியவளுக்குப் பால் ஊற்றுகிறார்கள்!!!
 
ஆமாம் உங்கள் யூகம் சரிதான்,
நான் இடுகாட்டில் இருக்கிறேன்
என்னிடம் ரகசியங்கள் ஏதுமில்லை,
இன்னும் சற்றுநேரத்தில் பிரியப்போகும்
இந்த உயிரின் உடலை கிடத்திவிட்டுப் போக வந்தேன்
நான் யட்சிணி, மரணங்களைக் கடந்து இன்று
மரணிக்க வந்தேன்,
நீங்கள் நம்ப மறுத்து நகைக்கிறீர்கள்,
நல்லது,
சுற்றி எழும் இந்த ஆன்மாக்களின் 
சிரிப்பொலியாவது  உங்களுக்குக் கேட்கிறதா?

வாழும்போது தராத எதையும்
இறுதியாய் ஒருமுறை என்பதால் மட்டுமே
நீங்கள் தருவதாய்ச் சொல்கிறார்கள்,
உங்கள் முத்தங்களையும் பரிசுகளையும்
மாலைகளையும் கண்ணீர்த்துளிகளையும் தர 
இது கடைசிநாள் என்பதால் மட்டுமே
தருவதற்குச் சிரமேற்கொண்டு
வந்திருப்பதாய் நினைக்கிறார்கள்,
உங்களுக்குத் தர,
அவர்களிடம் இப்போது ஏதுமில்லாததால்
உங்கள் முத்தங்களையும் பரிசுகளையும்
மாலைகளையும் கண்ணீர்த்துளிகளையும்
நாளை வரும் ஏதோ ஒரு மரணத்திற்கு
உங்களுக்கு உதவுமென்று
எடுத்துசெல்ல வேண்டுகிறார்கள்,
அவர்களின் பரிசாய்
சில நல்வார்த்தைகளைப் பிறருக்கேனும்
தரச் சொல்கிறார்கள் !!!
இதையும் கூட
நீங்கள் நம்பவில்லையென்றால்,
இங்கே நின்றுக்கொண்டு, கடைசி நேரத்தில்
காதல் செய்பவர்களையும் கண்ணீர் விடுபவர்களையும்
கொஞ்சம் அரவணைத்து அழைத்துச் சொல்லுங்கள் 
எப்போதோ இறந்துவிட்டு - இப்போது
வந்திருக்கும் வெறும் உடல்கள்தாமே அவைகள்?!
 


வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!