Friday, 10 April 2015

காதல்

காதல் தவறு என்று பொங்கும்
காலச்சாரக் காவலர்கள்
காதலர்களைத் தடியால் அடிக்கிறார்கள்
பெண்களையோ கைபிடித்துத் தடவி இழுக்கிறார்கள்

காதலன் கைப்பிடித்துச் செல்லும்
காதலியைக் கண்டு
முகம் சுளிக்கும் ஆண்களும் பெண்களும்
காதலற்றக் கலவி செய்து
பிள்ளைப் பெற்று
வம்சம் வளர்க்கிறார்கள்

 பள்ளிப்பிள்ளைகளுக்குக் காதல்
 என்பதைக் காவியமாக்கித் திரையில்
 வழிபடும் இயக்குநர்கள்
 வளர்ந்த தம் பிள்ளைகளின் காதலில்
 நிலைகுலைந்துப் போகிறார்கள்

 காதலும் கண்றாவியும்
 என்று சொல்லும் கனவான்கள்
 ரகசியமாய் இரவில்
 கனவில் கனவுகன்னிகளோடு
 திரை கிழிக்கப் போராடுகிறார்கள்

 காமம் இல்லாத காதலே
 நாட்டில் இல்லை - என்னுடைய
 காதல் போல் தெய்வீகம் இல்லை
 என்பவர்கள் நேற்றுதான் ஒருதலைக் காதலில்
 தோற்றுப்போனார்கள்

 இந்தக் காலத்துல என்று
 காதலை கரித்துக் கொட்டும்
 மாமாக்களும் அத்தைகளும்
 அவ்வபோது தம் காதலைப் பிரித்த
 தாத்தாக்களையும் பாட்டிகளையும்
 மனதில் எரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்

 பேதம் பார்க்காமல் வருவது
 காதல் என்ற கவிஞர்கள்
 நிதர்சனத்தில் ஜாதகத்தையும்
 மருதலிக்கமுடியாமல் யாருக்கோ
 மாலை சூட்டினார்கள்

 திரையில் ஏழைப்பெண்ணை
 காதலித்து மணந்த நாயகர்கள்
 நிதர்சனத்தில் சிலநூறு கோடிகளோடு
 வந்த பெண்ணையே மணந்தார்கள்

காதல் காதலென்று
பின் சாதல் சாதலென்று 
நெகிழ்ந்தும் வஞ்சித்தும் மனிதர்கள்
காதலைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்க, 
காதலோடு கலவியும், காதலோடு நேசமும்
காதலோடு தியாகமும் எனக் காதல்
ஒவ்வொரு பருவத்திலும், காதலாகவே வாழ்கிறது!
காதலின் மேல் கல்லெறிந்து மனிதர்கள்தாம்
தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள்!!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...