Friday 31 October 2014

புரட்சியாளர்களின் பூனைகள்!

சேகுவரா படமிட்டு புரட்சி செய்து,
இரட்டைக் குவளை, இலங்கைக் கொலை - எனச் 
சமூகத்தைப் பிரித்து, இனத்தைச் சாகடிக்கும் 
அவலங்களைச் சாடி,
சாதியென்ன மதமென்ன,
தமிழர்தாமே இந்தியர்தாமே என உணர்வுக் காட்டி,

பெண்மையின் பிம்பமாய் வடிவம் காட்டி, 
அறசீற்றத்தில் பொங்கி எழுந்து -
பன்முகம் காட்டி  உலவும் 
ஒரு சமூகவலைத்தளத்தில்,
 
முகமறியா நட்பெனினும், 
நியாமில்லை என்று அறிந்திடினும்,
சட்டென்று வெளியில் வரும் 
மொழி, இனமெனும் பூனைகளின் 
அறிமுக மையப்புள்ளியில் - உங்களின் 
அத்தனை நியாயங்களும் செத்துவிழும் - பின் 
எழுதிக் களைத்து புரட்சி அலுத்து - நீங்கள் 
 வெளியில் வரும் வேளையில்,
கையேந்தி  நிற்கும் வறியவர்க்கு,
சட்டென்று பிச்சை மறுத்து,
மெலிந்துக் கிடந்த நாயின்மேல் 
வீசிக் கல்லெறிந்து,
பெண்ணின் விழித் தவிர்த்து,
அறிவின்கண் பார்வையை
அவள் அங்கங்களில் உறுத்து,
ஊசிப்போன உப்புமாவையும் 
வயிற்றுக்குள் உகுத்து,
கொஞ்சம் புகையில், கொஞ்சம் பானத்தில் 
இலக்கியம் பிதற்றி,
இயல்பாய் வெளியில் வரும் பூனைகள் - 
மெல்ல அவிழ்க்கும் 
உங்களின் நிஜங்களின் முகங்களை!

Thursday 30 October 2014

மௌனத்தின் வலி

காலையில் பூத்த நீலமலர்,
குழந்தைகளின் செல்லச் சேட்டை,
வெட்கமுறச் செய்த ஒரு நினைவு,
வெகுண்டெழுந்த சிறு நிகழ்வு,
கண்ணீர் உகுத்துதிர்த்த வலி,
தெளிவைத் தேடியக் குழப்பம்,
சிறிதும் பெரிதுமாய் மலர்கள்,
அத்தனையும் பகிர்ந்துத் தொடுத்து,
நான் மாலையாக்க - விழையும்
பல பொழுதில் -

தெறித்து விழும்
வெறுப்பில் - காய்ந்து கொள்ளும், 
அசிரத்தையானதொரு தருணத்தில்,
மறைக்க முற்படும் முகசுழிப்பில்,
எங்கோ சிலாகித்து ரசித்திருக்கும்
உன் அலைபாயும் மனதில்,
சுள்ளென விழும் வார்த்தையில்,
காய்ந்து உதிர்கின்றன, - நான்
சேர்த்து வைத்த மலர்கள்!

உதிர்ந்ததில் காய்ததில் 
துவண்டு சுருள்வது மாலை
மட்டும் அல்ல -
இம்மனதும்தான் அன்பே!





Friday 17 October 2014

மழை‬

மெல்லிய சிணுங்கலாய்ச் சாரல்
இதம் தரும் வார்த்தைகளாய் காற்று
மெதுவே தழுவி - பின் சட்டென்று
எழும் மோகமாய்ப் பெரும்மழை!
மண்ணுக்கும் விண்ணுக்குமான
காதலில் நனைகிறது பூமி!
‪#‎மழை‬

Wednesday 15 October 2014

கலைந்த வெட்கம்!

விரிந்த இளம் பச்சையில்
போர்த்திய ஆடைக் கொண்டு
உறங்கிக்கொண்டிருந்த மலைமகள்
மனிதர்களின் வரவால்
தூக்கம் கலைந்தெழுந்து
அவசரமாய் அள்ளி உடுத்தியதில்
கரும்பச்சையாய் சாயம் போனது
கிழிசலைத் தைத்து உடுத்திய
அவள் வெட்கம் - தன்
மரங்களை இழக்கும் முன்! 



Photo Courtesy: Erode Kathir

Tuesday 7 October 2014

கற்கள் வீச பழகவில்லை!


alone, beautiful, girl, lonely, sad 
 தேடி தினம் உயிர்ப்பித்த
அத்தனை அன்பும் 
சலிப்புற்ற அவ்வேளையில் 
ஏனோ அந்த ஒற்றைவார்த்தையில்
வீழ்ந்துவிட்டதே -
ஏதுமற்ற தனிமையை
ஓர் ஏகாந்தத் தனிமையாக்கி
தினம் விழும் கற்களை
மாலைகளாக்கி - வலிகளை
விழுங்கி வாழ்கிறதே
அட நானும்தான்
நினைத்துக்கொள்கிறேன்
இது என்ன பிறவியென?

எழும் நினைவுகளை
நிறுத்திக் கொல்கிறேன்,
வார்த்தைகளைப் பூட்டி வைக்கிறேன்
வலிகளை எனதாக்கிக் கொள்கிறேன்
உணர்வுகளை உறைய வைக்கிறேன்
உன் வாழ்வு சிறக்கட்டுமென!
 

நான் கற்கள் வீச 
பழகவில்லை, அன்பே,
மௌனம் பழகிக்கொள்கிறேன்,
நீ மறந்துபோக ஏதுவாக,
இதுவே இறுதியென! 



 

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!